search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை பொருட்களை விற்பனை செய்த கும்பல் சிக்கியது
    X

    கைதான விஜய், சூர்யா.

    புகையிலை பொருட்களை விற்பனை செய்த கும்பல் சிக்கியது

    • மதுரை-ராமநாதபுரத்தில் மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்த கும்பல் சிக்கியது.
    • 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரையில் போதை தரும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பள்ளி மாணவர்களும் கஞ்சா, போதை மாத்திரை மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்தி வருவது சமீப காலமாக தெரிய வந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து போதைபொருட்களை விற்பனை செய்யும் கும்பலை கண்டறிந்து கைது செய்ய மதுரை தெற்குவாசல் போலீஸ் கமிஷனர் சண்முகம் ஆலோசனையின் பேரில் கீரைத்துறை போலீசார் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சந்தான போஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் நேற்று இரவு வாழைத்தோப்பு ஜங்சன் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி அதிலிருந்த ஒரு வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர்.

    அப்போது சீட்டுக்கு அடியில் ஒரு பையில் 7 கிலோ 920 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் ஆட்டோவில் வந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அதிரடி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஆட்டோவில் புகையிலை பொருட்களை கடத்தியவர் சிந்தாமணி ராஜாமணி நகரை சேர்ந்த நல்லுசாமி மகன் விஜய் (23) என்பதும், அவர் அனுப்பானடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த சூர்யா (23) என்பவருடன் சேர்ந்து புகையிலை பொருட்களை கடத்தி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

    மதுரையில் புகையிலை பொருட்களுக்கு நல்ல கிராக்கி இருப்பதால் அவற்றை வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்து நல்ல வருமானம் பெற முடிவு செய்து விஜய் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    அவருக்கு சிந்தாமணியை சேர்ந்த சண்முகவேல் மனைவி மணிமேகலை (23), காமராஜபுரம் ஜோசப் நகர் சுப்பிரமணி மனைவி முனீஸ்வரி (53) என்பவரும் பெங்களூர் சென்று புகையிலை பொருட்களை வாங்கி வந்து கொடுத்து வந்தனர்.

    அவற்றை விஜயும், சூர்யாவும் மதுரை மாவட்டத்தில் விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும் ராமநாதபுரத்தை சேர்ந்த பட்டாகத்தி பாலாஜி என்பவருடன் சேர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திலும் விற்பனை செய்து வந்துள்ளனர். அவர்கள் ஆட்டோவில் புகையிலை பொருட்களை மறைத்து கொண்டு சென்று விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்துதள்ளனர்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை சட்ட விரோதமாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக விஜய், சூர்யா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    மேலும் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் யார்? யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×