search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரிசி கடத்தலில் ஈடுபட்ட 113 பேர் கைது
    X

    மதுரை பி.பி.சாவடியில் உள்ள பாண்டியன் கூட்டுறவு சிறப்பங்காடியை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, பண்டகசாலை மேலாண்மை இயக்குநர் பிரியதர்ஷினி உள்ளனர்.

    அரிசி கடத்தலில் ஈடுபட்ட 113 பேர் கைது

    • அரிசி கடத்தலில் ஈடுபட்ட 113 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    • முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    அவனியாபுரம்

    மதுரை பெருங்குடி, வில்லாபுரம் நகர கூட்டுறவு கடன் சங்க நியாய விலை கடையில் கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூட்டுறவு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை பொதுமக்கள் நலன் சார்ந்து மிக நேரடியாக செயல்படக்கூடிய துறையாகும். முதலமைச்சர் நியாய விலை கடைகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் தரமானதாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நியாய விலை கடை களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 35 ஆயிரத்து595 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தில் 1300 க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் உள்ளன.

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளை புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மாவட்டத்திற்கு குறைந்த பட்சம் 75 நியாயவிலைக் கடைகளை புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மதுரையில் தோப்பூர் பகுதியில் புதிய உணவுப் பொருள் சேமிப்பு கிட்டங்கு கட்டப்பட்டு வருகிறது. அரிசி கடத்தல் போன்ற குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11 ஆயிரத்து 121 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 113 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இத்தகைய குற்ற சம்பவங்களுக்கு உறு துணையாக இருக்கும் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை, நிலையூர் மற்றும் திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளிலும் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வுகளின் போது இணைப்பதிவாளர்கள் குருமூர்த்தி (கூட்டுறவு சங்கங்கள்), பிரியதர்ஷினி (பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை) உள்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×