search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் இனி கிடையாது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழக அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் இனி கிடையாது

    • வரும் கல்வியாண்டில் இந்த இரு வகுப்புகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறாது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, ஆசிரியர் சங்க தலைவர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை விட ஆங்கில வழியில் படிக்கும் மெட்ரிகுலேசன் பள்ளியில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதற்கு முக்கிய காரணம் ஆங்கில வழி கல்விதான்.

    இதை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2018-ம் ஆண்டு புதிதாக எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    இதற்காக 2,381 பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன தொடக்கக் கல்வித் துறையிலிருந்து ஆசிரியர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு பெற்றோர் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் அதிகம் பேர் சேர்ந்தனர் .

    இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் இந்த இரு வகுப்புகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறாது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வகுப்புகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

    இதனால் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, ஆசிரியர் சங்க தலைவர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஏனென்றால் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் இருக்கும்போது அரசு பள்ளியில் மட்டும் மூட வேண்டிய அவசியம் என்ன? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

    அங்கன்வாடிகளில் ஏற்கனவே மழலையர் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதனை முறைப்படுத்தி, மேம்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளுக்கு குழந்தைகளை மாற்றி எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் துவங்கப்பட்டன. தற்போது மீண்டும் சமூகநலத்துறை வசம் மழலையர் வகுப்புகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

    பள்ளிக் கல்வித்துறையின் இந்த திடீர் நடவடிக்கை காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

    Next Story
    ×