என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • சிகப்பு ரோஜா மலருக்கு இந்தாண்டும் கடும் கிராக்கி.
    • ஒரு மலரின் விலை ரூ.50 முதல் ரூ.55 என சாகுபடியாளர்கள் தகவல்.

    ஓசூர்:

    உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தப் பெரும்பாலும் பரிசுப் பொருட்களை அளிப்பதுடன், பூக்களை (ரோஜா பூ) கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம்.

    பூக்கள் என்றாலே பெண்களுக்குப் பிடிக்கும். அதுவும் ரோஜா பூக்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அதற்கு ஏற்றார் போல காதலர் தினத்தில் காதலர்கள் முதலில் தன் காதலிக்குக் கொடுப்பது ரோஜா மலர்களேயாகும்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி ரோஜா மலர் உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற பகுதியாகும். இங்கு ரோஜா உற்பத்திக்கு ஏற்ற வகையில் நல்ல சீதோஷ்ண நிலை நிலவுகிறது. ஓசூர், பேரிகை, பாகலூர், கெலமங்கலம், தளி ஆகிய இடங்களில் சுமார் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் ரோஜா மலர்கள் விளைவிக்கப்படுகிறது. குறிப்பாக பேரிகை பகுதியில் மொத்த உற்பத்தியில் 50 சதவிகிதம் ரோஜா மலர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. ரோஜா சாகுபடியாளர்கள் பல லட்சம் செலவில், பசுமைக்குடில்கள் அமைத்தும், தோட்டங்களிலும் மலர்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் விவசாயிகள், ஆண், பெண் தொழிலாளர்கள், ரோஜா மலர் கொள்முதல் செய்வோர், மலர் வியாபாரிகள் என சுமார் 2 லட்சம் பேர் இதில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பகுதியில், தாஜ்மகால், ரோடோஸ், நோப்ளாஸ், கோல்டு ஸ்டிரைக், சவரன், அவலஞ்சர், பேர்னியர், கார்வெட், டிராபிக்கல் அமேசான் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் விளைவிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும், கடந்த ஆண்டுகளில் பலத்த வரவேற்பை பெற்ற தாஜ்மகால் வகை சிகப்பு ரோஜா மலருக்கு இந்தாண்டும் கடும் கிராக்கி ஏற்பட்டு, அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

    ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனபோதிலும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு மட்டுமே அதிகளவில் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு, பருவ நிலை மாற்றம் காரணமாக ரோஜா மலர் உற்பத்தி குறைந்து சுமார் 80 லட்சம் மலர்களே உற்பத்தி ஆனது. அதில் கடந்த 10-ந்தேதி வரை சுமார் 20 லட்சம் மலர்கள் ஏற்றுமதி ஆனது. துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், லெபனான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக மலர் சாகுபடியாளர்கள் தெரிவித்தனர்.

    இந்தாண்டு கடந்த ஆண்டுகளை விட அதிகளவில் மலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

    ஆனால், இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் பருவ நிலை மாற்றம், கடும் பனி மற்றும் குளிர்கால நோய்கள் ரோஜா செடிகளை தாக்கியதால், ரோஜா மலர்கள் உற்பத்தி குறைந்து போனது. குறைந்த அளவிலான மலர்களே ஏற்றுமதி ஆன போதிலும் நல்ல விலை கிடைத்திருப்பதால், ரோஜா மலர் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனிடையே, காதலர் தினத்திற்கு மட்டுமின்றி, சுப நிகழ்ச்சிகள், மகாசிவராத்திரி உள்ளிட்ட மற்ற கொண்டாட்டங்களுக்கும் அதிகளவில் ரோஜா பூக்கள் தேவைப்படுவதால் உள்ளூர் சந்தையில், நல்ல வரவேற்பு கூடுதல் விலை மற்றும் உடனடியாக பணம் கிடைத்து வருவதால் உள்ளூர் விற்பனைக்கு, மலர் சாகுபடியாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் பூ மார்க்கெட்டில் மொத்தமாகவும், சில்லறையாகவும் ஏராளமான ரோஜா பூக்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

    குறிப்பாக, தாஜ்மஹால் ரோஜா, பட்டர் ரோஜா, சிவப்பு, மஞ்சள், வெள்ளை, டபுள் ஷேடு ரோஜாக்கள் என பல வண்ணங்கள் ரோஜாப் பூக்கள் விற்பனைக்கு வந்து உள்ளன.

    நேற்றைய நிலவரப்படி 20 மலர்கள் அடங்கிய கொத்து ரூ.650 முதல் ரூ.700 வரை விற்கப்பட்டது. ரோஜா மலர் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டிருப்பதால், ஒரு மலரின் விலை ரூ.25 முதல் 35 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதன் மூலம், உற்பத்தியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தரமான ஒரு மலரின் விலை ரூ.50 முதல் ரூ.55 என சாகுபடியாளர்கள் கூறினர்.

    • வழக்​க​மான நாட்​களில் 20 பூக்​கள் கொண்ட கட்டு ரூ.150-க்கு விற்​பனை​யாகும்.
    • தாஜ்ம​கால் ரோஜாவுக்கு 80 சதவீதம் ஆர்​டர் கிடைத்​துள்​ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் 4,000 ஏக்கரில் பசுமைக் குடில்களில் ரோஜா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தாஜ்மகால் (அடர் சிவப்பு) நோப்ளாஸ், கோல்ட் ஸ்டிரைக். சவரன், அவலஞ்சர், பெர்னியர் உள்ளிட்ட 22 வகையான ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

    ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினத்துக்காக, வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ரோஜா ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவிலான போட்டி காரணமாக ஓசூர் ரோஜாவுக்கு வரவேற்பு குறைந்தது. மேலும், விமானக் கட்டணம் உயர்வால் விவசாயிகள் ஏற்றுமதியை தவிர்த்து, உள்நாட்டு வர்த்தகத்தில் கவனம் செலுத்துகின்றனர்.

    வரும் 14-ம் தேதி காதலர் தினக்கொண்டாட்டத்துக்காக ஓசூர் பகுதி ரோஜாவுக்கான உள்நாட்டுவர்த்தகம் களைகட்டியுள்ளது. குறிப்பாக, ஜெய்ப்பூர், டெல்லி, மும்பை மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள பல நகரங்களுக்கு ஆன்லைன் வர்த்தகம் மூலம் ஆர்டர் அதிகரித்துள்ளதால், ஓசூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தினசரி 10 லட்சம் மலர்களை அனுப்பி வருகின்றனர்.

    இதுகுறித்து ரோஜா உற்பத்தியாளர் சதீஷ் மற்றும் விவசாயிகள் கூறியதாவது:-

    கார்ப்பரேட் நிறுவனங்கள் ரோஜா பூக்களை கொள்முதல் செய்கின்றனர். தேவை அதிகரித்துள்ள நிலையில், சாகுபடி பரப்பு குறைந்ததால் உற்பத்தி குறைந்துள்ளது. வழக்கமான நாட்களில் 20 பூக்கள் கொண்ட கட்டு ரூ.150-க்கு விற்பனையாகும்.

    ஆனால், தற்போது ஒரு கட்டு ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனையாகிறது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வாகும். உள்நாட்டு வர்த்தகத்துக்கு தினசரி 2 லட்சம் ரோஜா மலர்களை விற்பனைக்கு அனுப்பி வந்தோம். தற்போது தினமும் 10 லட்சம் மலர்கள் அனுப்பி வருகிறோம். குறிப்பாக, தாஜ்மகால் ரோஜாவுக்கு 80 சதவீதம் ஆர்டர் கிடைத்துள்ளது. வெளிநாட்டு ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில், உள்நாட்டில் வரவேற்பும், விலையும் அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • 5 ஊராட்சிகளில் உள்ள 1866 குடியிருப்புகளுக்கு தினசரி வடிவமைக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • 1766 குடியிருப்புகளுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க இயலாது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1766 குடியிருப்புகளுக்கு நாளை (9ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ஓசூர் திட்ட பராமரிப்பு கோட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சுந்தரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், திட்டப் பராமரிப்பு கோட்டம் ஓசூரின் கீழ் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் மற்றும் புளோரோஸிஸ் பாதிப்பு குறைப்பு திட்டம் மூலமாக ஓசூர் மாநராட்சி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி, கெலமங்கலம் பேரூராட்சி, கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகள், தளி ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகள், ஓசூர் ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகள், சூளகிரி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகள், வேப்பனபள்ளி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகள், தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள 5 ஊராட்சிகளில் உள்ள 1866 குடியிருப்புகளுக்கு தினசரி வடிவமைக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 844 சாலையில், கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை அருகே சாலை பணியின் போது புதியதாக பதிக்கப்பட்ட 850 எம்.எல்.ஏ., குடிநீர் குழாய்கள் ஏற்கனவே குடிநீழ் வழங்கும் குழாயில் ஒன்றோடு ஒன்று இணைக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் வருகிற 9ம் தேதி (நாளை) முதல் வருகிற 11ம் தேதி வரை 3 நாட்களுக்கு மட்டும் ஓசூர் மாநகராட்சி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பேரூராட்சிகள், கெலமங்கலம், தளி, ஓசூர், சூளகிரி, வேப்பனபள்ளி ஆகிய ஒன்றியங்களில் உள்ள 1766 குடியிருப்புகளுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க இயலாது.

    எனவே, மேற்கண்ட பகுதிகளில் இம்மூன்று நாட்களுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்தி கொள்ளவும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் தமிழ்நாடு குடிநீழ் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சுந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • நகரில் உள்ள 66 பூத்துகளில் கூடுதலாக 5 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும்.
    • ஊரக வேலை உறுதி திட்டத்தில் 150 நாட்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 1500 பேர் அந்த கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தலைமையில் இணைந்தனர்.

    விழாவில் கே.பி.முனுசாமி பேசியதாவது:-

    அ.தி.மு.க. சுயமரியாதை உள்ள இயக்கம். இந்த இயக்கத்தில் உழைப்பவர்களுக்கு மதிப்பு உண்டு. அதனால் மாற்றுக்கட்சிகளில் இருந்தவர்கள் இன்று அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளீர்கள். இந்த கட்சியில் வாரிசு அரசியல் கிடையாது. நீங்கள் எல்லாம் இந்த இயக்கத்தில் சேர்ந்துள்ளதால் கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க.வின் வாக்கு மேலும் உயரும்.

    நகரில் உள்ள 66 பூத்துகளில் கூடுதலாக 5 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

    அதன்படி குலவிளக்கு திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம், டவுன் பஸ்களில் ஆண்களுக்கும் கட்டணமில்லாத பயணம் திட்டங்களை நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவோம்.

    ஊரக வேலை உறுதி திட்டத்தில் 150 நாட்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மகளிருக்கு ஸ்கூட்டி வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் என 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்க நடவடிக்கை, இல்லத்தரசிகளுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்க நடவடிக்கை, மாற்றுத்திறனாளிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இவ்வாறு தேர்தல் வாக்குறுதிகளாக அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று பேசினார். 

    • பிரதமர் மோடி 100 நாட்கள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி உள்ளார்.
    • தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் உள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்கிற சுற்றுப் பயண யாத்திரையை நேற்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டார்.

    நேற்று இரவு கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் நடந்த பிரச்சார நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    100 நாட்கள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறினார். ஆனால், 100 நாள் வேலை திட்டத்தில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கினர்.

    ஆனால், பிரதமர் மோடி 100 நாட்கள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி உள்ளார்.

    இதே போல், தி.மு.க. தேர்தல் அறிக்கை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிட வலியுறுத்தி செவிலியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால், இப்போது தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி தலைமையில் குழு அமைத்துள்ளனர். அந்த அறிக்கையில் கவர்ச்சி திட்டங்கள் இருக்காது என கனிமொழி கூறியுள்ளார்.

    தமிழகத்தில் நடப்பது போலியான ஆட்சி. கஞ்சா, நவநாகரிக போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக புழுங்குகிறது.

    பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு அகற்றப்பட வேண்டும். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் உள்ளது.

    பாலியல் வன்கொடுமையில் மக்களை காக்கவும், கஞ்சா போதையில் இருந்து மக்களை காக்க தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும். 42-வது மாவட்டமாக இங்கு வந்துள்ளேன். தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகி ஒரு ஆண்டு ஆகிறது. தமிழகத்தில் நல்லாட்சி அமைய இக்கூட்டணி உருவாகி உள்ளது.

    தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி பொங்கலுக்கு பிறகு பெரிய வலுவான கூட்டணியாக உருவாகும். நல்லதே நடக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விஜய் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் இந்தியா முழுவதும் லாட்டரி சீட்டு விற்பவர், அவர் முதலில் தி.மு.க.வில் இருந்தார்.
    • கிராமப்புறத்தில் இருந்த சாதாரண எடப்பாடி பழனிசாமி இன்று பொதுச்செயலாளராக உயர்ந்துள்ளார்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதில் இருந்து விலகி, கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    விஜய், தி.மு.க. தீய கட்சி, த.வெ.க. தூய்மையான கட்சி என்று பேசுகிறார். த.வெ.க. எப்படி தூய்மையான கட்சியாக இருக்க முடியும். அவர்கள் இன்னும் ஆட்சிக்கு வரவில்லை, எப்படி திட்டங்கள் கொண்டு வருவார்கள் என்று தெரியாது. அப்படி திட்டம் கொண்டு வந்தால் அதை ஒழுக்கமாக எவ்வாறு நிறைவேற்றுவார்கள் என்று சொல்ல முடியாது.

    குறிப்பாக விஜய் கட்சி ஆரம்பிக்கும்போதுதன்னுடைய ரசிகர்களுடன் ஆரம்பித்தார். அத்துடன் இருந்திருந்தால் ஒரு தனித்தன்மை உள்ள கட்சி என்று கூறி இருக்கலாம். ஆனால் தற்போது பல்வேறு கட்சிகளில் இருந்து உங்களுடன் வந்துள்ளார்கள். அவ்வாறு வந்துள்ளவர்கள் சந்தர்ப்பவாதிகள். எங்கு வசதியான தலைமை பொறுப்பு கிடைக்கும், அடுத்த தேர்தலில் எப்படி நாம் பதவிக்கு வரலாம் என்று நினைப்பவர்கள் தான் விஜய் உடன் சேர்ந்துள்ளார்கள்.

    விஜய் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் இந்தியா முழுவதும் லாட்டரி சீட்டு விற்பவர், அவர் முதலில் தி.மு.க.வில் இருந்தார். பிறகு விடுதலை சிறுத்தை கட்சிக்கு சென்றார். அங்கு ஒரு பிரச்சனையை உருவாக்கி விட்டு அங்கிருந்து வந்தார். அவர் அ.தி.மு.க.விற்கு வர முயற்சி செய்தார். ஆனால் அ.தி.மு.க.வில் உடனடியாக பதவி கிடைக்காது. உழைப்பவருக்கான கட்சி இது. அதனால்தான் கிராமப்புறத்தில் இருந்த சாதாரண எடப்பாடி பழனிசாமி இன்று பொதுச்செயலாளராக உயர்ந்துள்ளார்.

    இங்கு இருப்பவர்கள் எல்லாம் உழைப்பவர்கள். ஆனால் அங்கு சென்று இருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள். அதுபோல்தான் இங்கிருந்து செங்கோட்டையன் அங்கு சென்றுள்ளார். செங்கோட்டையன் 53 ஆண்டுகள் அ.தி.மு.க.வில் இருந்து எல்லா பதவி சுகத்தையும் அனுபவித்து கொண்டார்.

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு அடுத்து புரட்சி தளபதி விஜய் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? இப்படிப்பட்ட கலவையான மக்கள் தான் அந்த கட்சியில் இருக்கிறார்கள். அது தூய்மை கட்சி இல்லை. கலப்பட கட்சி. ஏன் கலப்பட கட்சி என்றால் இங்கிருந்து செங்கோட்டையன் சென்றுள்ளார்.

    பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஆதவ் அர்ஜுனா சென்றுள்ளார், அதேபோல் பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க.விற்கு வந்த நிர்மல் குமார் அங்கு சென்றுள்ளார். இவ்வாறு எங்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சுற்றுகிற கூட்டம் விஜய்யுடன் வந்துள்ளது. விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நாளை உங்களையும் காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு சென்று விடுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மூத்த மகள் தமிழ்செல்வி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
    • சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மாதம்பதி பகுதியை சேர்ந்தவர் தணிகாச்சலம் (வயது 35), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஐஸ்வர்யா (28). இவர்களுக்கு தமிழ் செல்வி, நிஷா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகள் தமிழ்செல்வி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். இன்று காலை தமிழ் செல்வியை பள்ளிக்கு அனுப்புவதற்கு தாய் ஐஸ்வர்யா, தனது 4 இரண்டாவது மகள் நிஷாவையும் கூடவே அழைத்து சென்றுள்ளார்.

    அப்போது பள்ளி பஸ் வந்த உடன் தமிழ் செல்வியை ஏற்றி விட்டார். அப்போது எதிர்பாராத விதமாக பஸ் சக்கரத்தில் 2 வயது நிஷா சிக்கி உயிரிழந்தார்.

    மகள் பஸ் சக்கரத்தில் சிக்கி இறந்ததை கண்டு தாய் பதறி போய் கதறினார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்களை தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக ஜே.சி.பி. மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.
    • கட்டிடங்களை இடிக்கும்போது சுவர் சரிந்து விழுந்ததில் சீனப்பா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி துவக்க பள்ளியில் பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்களை தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக ஜே.சி.பி. மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.

    இதையடுத்து இன்று காலை அந்த கட்டிடங்களை இடிக்கும்போது சுவர் சரிந்து விழுந்ததில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சீனப்பா (வயது55) என்பவர் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்த சீனப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காயமடைந்த பெண்ணை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • சம்பவம் தொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் மேட்டு தெரு அருகே உள்ள கடையில் பணியாற்றி வரும் 24 வயதுடைய பெண்ணும், நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (வயது26) என்ற வாலிபரும், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சம்பவத்தன்று காலை மதுபோதையில் வந்த அண்ணாமலை கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த தனது காதலியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அந்த பெண்ணின் தந்தைக்கு போன் செய்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ஆத்திரம் அடைந்த அண்ணாமலை தான் மறைத்து வைத்திருந்த சூரி கத்தியால் காதலி கன்னத்தில் வெட்டி கீறினார். இதில் அவர் வலி தாங்காமல் அலறினார். அவர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று உள்ளார்.

    இதனை தொடர்ந்து காயமடைந்த அந்த பெண்ணை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.
    • அப்பெண் திருடுவதற்கு திட்டம் போட்டாரா என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நள்ளிரவில் பெண் ஒருவர் வீடு வீடாகச் சென்று கதவை தட்டி 'அடிப்பட்டு வந்திருக்கேன்.. ஹெல்ப் பண்ணுங்க சார்' என கூச்சலிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அப்பெண் உண்மையாக உத்தரவு கேட்டு வந்தாரா இல்லை திருடுவதற்காக திட்டமா என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இந்நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அப்பெண்ணை கண்டுபிடித்து போலீசார் விசாரித்ததில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் இரு தினங்களாக பர்கூர் பகுதியில் சுற்றி வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
    • சூளகிரி நகரம், கதாமன்தொட்டி, அட்டகுறுக்கி,

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குருபரபபள்ளி, சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குருபரப்பள்ளி, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் சுற்று வட்டார பகுதிகள், சூளகிரி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், கதாமன்தொட்டி, அட்டகுறுக்கி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
    • வீட்டில் பிணமாக கிடந்த மூன்று பேரிpf உடல்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் கற்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவபூபதி (வயது45). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் குறிஞ்சி நகர் பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கி உள்ளார்.

    ஆன்லைன் நெட்வொர்க் ஷேர் மார்க்கெட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு நரேந்திரபூபதி (14) லதீஷ் பூபதி (11) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர்.

    இவர்கள் ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். சிவபூபதி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டில் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரர் போலீசார் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வீட்டில் சிவபூபதி தூக்கில் தொங்கியவாறு கிடந்தார். அருகில், இரண்டு மகன்களும் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

    அவரது மனைவி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று விட்டதால், உயிர் தப்பிவிட்டார்.

    இந்த சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக ஓசூரில் சிவபூபதி வாழ்ந்து வருவதாகவும், ஆன்லைன் வர்த்தகத்தை சொந்த ஊரிலும், சென்னையிலும் அவர் செய்து வந்த நிலையில் அதே தொழிலை ஓசூரில் செய்து வந்துள்ளார்.

    வீட்டில் பிணமாக கிடந்த மூன்று பேரிpf உடல்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    ×