என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • காதலன் விக்னேசுக்கு போன் செய்து தான் வீட்டை விட்டு வெளியேறி தக்கலை வந்து விட்டதாக தெரிவித்தார்.
    • பெண்ணின் குடும்பத்தினர் காதல் திருமணத்தை ஏற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    தக்கலை:

    குமரி மாவட்டம் பத்மநாபபுரம் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29), லேத் பட்டறை தொழிலாளி. இவருக்கும் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் நாகூர்பாளையம் பகுதியை சேர்ந்த ஜனனிஸ்ரீ (21) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் காதலாக மாற இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஜனனிஸ்ரீக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அப்போது அவர் தனது காதலை தெரிவித்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 27-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனிஸ்ரீ, பஸ் மூலம் தக்கலை வந்துள்ளார்.

    பின்னர் தனது காதலன் விக்னேசுக்கு போன் செய்து தான் வீட்டை விட்டு வெளியேறி தக்கலை வந்து விட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து விக்னேஷ் தக்கலை சென்று ஜனனிஸ்ரீயை சந்தித்தார். பின்னர் அவரை அழைத்துச் சென்று 28-ந் தேதி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து மறுநாள் காதல் ஜோடியினர், தக்கலை போலீஸ் நிலையம் வந்து சரண் அடைந்தனர்.

    அப்போது அவர்கள் ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள ஒரு இந்துக் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், அதனை பதிவு செய்ய இருப்பதாகவும், இதற்கு பெண் குடும்பத்தினர் எதிர்ப்பு இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினர். இதனை தொடர்ந்து இருவரது குடும்பத்திற்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் போலீஸ் நிலையம் வந்ததும் பேச்சுவார்த்தை நடந்தது.

    பெண்ணின் குடும்பத்தினர் காதல் திருமணத்தை ஏற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜனனிஸ்ரீயை போலீசார் காதல் கணவர் விக்னேசுடன் அனுப்பி வைத்தனர். 

    • தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுமா? அல்லது யாருடனாவது கூட்டணி அமைத்து களம் இறங்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
    • நமது கழகத்தின் வெற்றி வாகையை முக்கடல் சங்கமிக்கும் குமரியில் இருந்து ஆரம்பமாகட்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த விஜய், 2-வது மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி எதிர்கொள்ளும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுமா? அல்லது யாருடனாவது கூட்டணி அமைத்து களம் இறங்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இந்த நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று த.வெ.க. கட்சியினர் சுவரொட்டி ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் நகரில் பல இடங்களில் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளது. அதில், 2026-ல் மக்கள் விரும்பும் முதல்வராக பதவியேற்க இருக்கும் எங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் விஜய் அவர்களே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அழைக்கின்றோம்.

    நமது கழகத்தின் வெற்றி வாகையை முக்கடல் சங்கமிக்கும் குமரியில் இருந்து ஆரம்பமாகட்டும் என குறிப்பிட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவன் சக்தீஷ்வர் உடல் பருமனால் அவதியுற்று வந்துள்ளார்.
    • உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து யூடியூபில் தேடியுள்ளார்.

    குளச்சல்:

    குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பர்ணட்டிவிளையை சேர்ந்தவர் நாகராஜன், சுங்கவரி துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சக்தீஷ்வர் (வயது17). இவர் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று என்ஜினீயரிங் கல்லூரியில் சேர தயாராகி வந்தார்.

    இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த சக்தீஷ்வர் திடீரென மூச்சு திணறி மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை பெற்றோர் மீட்டு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

    அதாவது மாணவன் சக்தீஷ்வர் உடல் பருமனால் அவதியுற்று வந்துள்ளார். தற்போது மேற்படிப்பிற்காக கல்லூரிக்கு செல்ல இருந்த நிலையில் உடல் பருமனை பார்த்து சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்யலாம் என நினைத்துள்ளார். எனவே உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து யூடியூபில் தேடியுள்ளார். அதில் கிடைத்த தகவலின்படி கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்து வந்துள்ளார்.

    அதாவது கடந்த 3 மாதங்களாக திட உணவு சாப்பிடாமல் பழச்சாறு மட்டும் குடித்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். தொடர்ந்து பழச்சாறு குடித்து வந்ததால் சளித் தொல்லைக்கு ஆளாகி மூச்சு விட சிரமப்பட்டு உள்ளார்.

    இந்தநிலையில் நேற்று காலையில் அதிக சளி தொல்லையால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, உடல் பருமனை குறைக்க முறையாக அங்கீகாரம் பெற்ற சிறப்பு டாக்டர்களை அணுகி அவர்களின் பரிந்துரை அடிப்படையில் மட்டுமே உடல் பயிற்சி உள்ளிட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர். இதற்கிடையே இறந்த மாணவரின் இரு கண்களையும் பெற்றோர் தானம் செய்துள்ளனர்.

    யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடற்கரையையொட்டி உள்ள வீடுகள் வரை ராட்சத அலைகள் வந்து மோதியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • கடல்சீற்றம் அதிகமாக உள்ள நிலையில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கடலோர காவல்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் நீரோடி வரை 42 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த பகுதிகளில் அமாவாசை தினங்களில் கடல் சீற்றமாக காணப்படும். குறிப்பாக ஆனி, ஆடி மாதங்களில் கடல்சீற்றம் அதிகமாக இருக்கும். தற்போது ஆடி மாதம் பிறந்துள்ள நிலையில் அமாவாசையும் நாளை வருகிறது. இதனால் இன்று மாவட்டம் முழுவதும் கடல் சீற்றமாக காணப்பட்டது.

    கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் ராட்சத அலைகள் எழும்பி யது. ராஜாக்கமங்கலம் துறை அருகே புத்தன் துறை பகுதியில் இன்று காலை 3 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பின. கடற்கரையையொட்டி உள்ள வீடுகள் வரை ராட்சத அலைகள் வந்து மோதியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    அலையின் வேகம் அதிகமாக உள்ளதால் கடற்கரை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவர்களை அலைகள் கடலுக்குள் இழுத்துச்சென்று வருகிறது.புத்தன் துறை பகுதியில் கடற்கரையொட்டி உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி கடற்கரை பகுதிகளில் அச்சத்துடன் நின்றனர். சிலர் உறவினர் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். மேற்கு மாவட்ட பகுதிகளான வள்ளவிளை, தூத்தூர், இரயுமன்துறை பகுதிகளிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. கடற்கரை பகுதியில் உள்ள தடுப்பு மீது வேகமாக மோதியது. சொத்தவிளை, சங்குத்துறை கடற்கரை பகுதியில் கடல் சீற்றமாக இருந்தது. வழக்கத்தைவிட அலைகள் கடற்கரை யொட்டியுள்ள பகுதி வரை வந்து சென்றன. கடல்சீற்றம் அதிகமாக உள்ள நிலையில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கடலோர காவல்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    நாளை ஆடி அமாவாசையையொட்டி கடற்கரை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பதற்காக வருகை தருவார்கள். எனவே அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கடற்கரை பகுதியில் கடலோர காவல் படை போலீசாரும் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.

    • ரூ.14.80 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தேன்.
    • வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் விஜய் வசந்த்.

    கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் நேற்று மற்றும் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு காமராஜர் கல்வி விருது வழங்கும் விழா நேற்று மார்த்தாண்டத்தில் நடைபெற்றது. 

    சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், டாக்டர் தாரகை கத்பட், இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் சூரிய பிரகாஷ் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினோம்.

    நெய்யூர் பேரூராட்சி பாதிரிகோட்டில் ஒரு அங்கன்வாடி அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14.80 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தேன். 

    மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசால் தொடங்கப்பட்ட 100% மானியத்தில் காய்கறி மற்றும் பழச்செடிகளின் தொகுப்புகளை இன்று வழங்கினேன்.

     நேற்று சென்னை திருவேற்காடு நாடார் சங்கம் சார்பில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அவர்களுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எம்.பி. விஜய் வசந்த் CSR நிதி மூலம் வகுப்பறைகள் கட்ட முடிவு செய்து, அதற்கான நிதி சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டார்.
    • ரவுண்ட் டேபிள் இந்தியா என்ற அமைப்பு ரூ.25 லட்சம் செலவில் கட்டிடம் கட்டி தர முன் வந்ததையடுத்து பணிகள் நடைபெற்றது.

    கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை உண்டு உறைவிட அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் தேவை என்ற பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.

    எம்.பி. விஜய் வசந்த் இதற்காக CSR நிதி மூலம் வகுப்பறைகள் கட்ட முடிவு செய்து, அதற்கான நிதி சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டார்.

    கோவையை சேர்ந்த ரவுண்ட் டேபிள் இந்தியா என்ற அமைப்பு ரூ.25 லட்சம் செலவில் கட்டிடம் கட்டி தர முன் வந்ததையடுத்து பணிகள் நடைபெற்றது.

     

    இந்நிலையில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறைகள் இன்று திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா குத்துவிளக்கு ஏற்ற, விஜய் வசந்த் எம்.பி. வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

    மாணவர்கள் பயில இந்த சேவையை செய்ய முன்வந்த ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பிற்கு விஜய் வசந்த் எம்.பி. விழாவில் நன்றி தெரிவித்தார்.

    • ஈசாந்திமங்கலம், காரியாங்கோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ளபகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.
    • ஆரல்வாய்மொழி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

    நாகர்கோவில்:

    செண்பகராமன்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (19-ந்தேதி) நடக்கிறது. எனவே, நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செண்பகராமன்புதூர், தோவாளை, வெள்ளமடம், லாயம், தாழக்குடி, சந்தைவிளை, ஈசாந்திமங்கலம், காரியாங்கோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ளபகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.

    தக்கலை உபமின்நிலையத்துக்கு உட்பட்ட உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மணலி, தக்கலை, பத்மநாபபுரம், புலியூர் குறிச்சி, குமாரகோவில், வில்லுக்குறி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளூர், வீராணி, தோட்டியோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு, மங்காரம், புதூர், சேவியர்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போர்விளை, வெள்ளிக்கோடு, காட்டாத்துறை, சாமியார்மடம், கல்லுவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்டபம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை, மருந்துக்கோட்டை ஆகிய இடங்களிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.

    ஆரல்வாய்மொழி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆரல்வாய்மொழி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும், காற்றாலைகளுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை செண்பகராமன்புதூர், தக்கலை, பழவூர் காற்றாலை பண்ணை மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • அனைத்து துறைகளிலும் தமிழகத்தை பரிணாம வளர்ச்சி காண செய்த கர்மவீரரே...
    • பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தில் அவர் புகழ் போற்றி வணங்குவோம்.

    பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் காமராஜரின் புகழ்போற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கல்வி கண் திறந்து

    ஆலைகள் பல தந்து

    அணைகள் பல உயர்த்தி

    தமிழகத்தை வளர்த்தி

    தலைவர்களில் தலைவனாய்

    பார் போற்றும் முதல்வனாய்

    அனைத்து துறைகளிலும் தமிழகத்தை பரிணாம வளர்ச்சி காண செய்த கர்மவீரரே..

    பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த தினத்தில் அவர் புகழ் போற்றி வணங்குவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

     

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள அவதமணிமண்டபத்தில் கர்மவீரருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் மலர் மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பரிசுகள் வழங்கினார்.

    • அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வரும் சட்டமன்றத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
    • அ.தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்ற சம்பவங்களை எதிர்க்கட்சியினர் பெரிதாக்கி பேசினார்கள்.

    கன்னியாகுமரி:

    அ.தி.மு.க. கொள்கை பரப்பு மாநில துணை செயலாளரும், நடிகையுமான கவுதமி கன்னியாகுமரி வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 4½ ஆண்டு காலத்தில் தமிழக மக்கள் சந்திக்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, விலைவாசி உயர்வு, பாதுகாப்பின்மை போன்ற பிரச்சனைகளுக்கு வருகிற சட்டமன்றத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனால் தான் தீர்வு கிடைக்கும்.

    திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றியடைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் அதிசய பிறவிகள். நடிகர் விஜய்யின் எதிர்கால நடவடிக்கையை பொறுத்து தான் அவர் அரசியலில் வெற்றி பெறுவாரா? என்பது தெரியும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப்பயணம் மக்களின் பிரச்சனைகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளதால் மக்களை தேடி சென்று மக்கள் பிரச்சனைகளை பேசும் பயணமாக மாறி உள்ளது.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வரும் சட்டமன்றத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. கண்டிப்பாக பெரும்பான்மை இடங்களை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றும். அ.தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்ற சம்பவங்களை எதிர்க்கட்சியினர் பெரிதாக்கி பேசினார்கள். ஆனால் இப்போது தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்களை எதிர்க்கட்சியினர் பேசவே இல்லை. வருகிற சட்டமன்றத்தேர்தலில் அ.தி.மு.க. அடையும் வெற்றி தமிழ் மக்களின் வெற்றியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

    • சுற்றுப்பயணத்தின் போது மக்களின் வரவேற்பை ஏற்று அவர்களின் குறைகளை கேட்டிருந்தோம்.
    • மக்களின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டோம்.

    கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் நேற்றும், இன்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

    குறும்பனை முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடற்கரை கிராமங்களில் மக்களை சந்தித்து அவர்கள் குறைகளை கண்டறியவும், தேவைகளை கண்டறியவும் மற்றும் அளித்த வெற்றிக்கு நன்றி கூறவும் பிரச்சார பயணம் இன்று நடைபெற்றது. 

    இன்றைய சுற்றுப்பயணத்தின் போது மக்களின் வரவேற்பை ஏற்று அவர்களின் குறைகளை கேட்டிருந்தோம். மக்களின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டோம்.

     மயிலாடி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டேன்.

    புதூர் அருள்மிகு தேவி ஸ்ரீ ஈஸ்வரி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக மற்றும் கொடை விழா நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டேன்.

    நேற்று கடற்கையோர கிராமங்களின் சுற்று பயணத்தின் போது ஊர் ஆலயங்களில் உள்ள பங்கு தந்தையரை சந்தித்து ஊர் மக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று கொண்டோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நிதின் ராஜ் சரிவர வேலையில்லாமல் இருந்து வந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • திருமணம் முடிந்த 2 மாதத்திலேயே கூடுதலாக ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டனர்.

    நாகர்கோவில்:

    கருங்கல் அருகே திக்கணங்கோடு கிழக்கு தாராவிளை பகுதியை சேர்ந்தவர் ராபின்சன். இவரது மகள் ஜெமலா (வயது 26). இவர் பி.எஸ்.சி. நர்சிங் முடித்துள்ளார். இவரும் இனயம்புத்தன்துறையை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான நிதின் ராஜ் (26) என்பவரும் காதலித்து வந்தனர்.

    இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இருவீட்டு சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. பின்னர் ஜெமலாவும், நிதின் ராஜும் மேல்மிடாலம் அருகே கூண்டுவாஞ்சேரி பகுதியில் வசித்து வந்தனர். நிதின் ராஜ் சரிவர வேலையில்லாமல் இருந்து வந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் ஜெமலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதாக அவரது பெற்றோருக்கு நிதின் ராஜ் உறவினர்கள் போன் மூலமாக தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதுகுறித்து கருங்கல் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். ஜெமலாவின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஜெமலாவின் தாயார் புஷ்பலதா கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில், எனது மகளுக்கும் நிதின் ராஜிக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ரூ.7 லட்சம் பணமும், 50 பவுன் நகையும், வீட்டுக்கு தேவையான பொருட்களும் கொடுத்தோம். திருமணம் முடிந்த 2 மாதத்திலேயே கூடுதலாக ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டனர்.

    எனது மகளை கணவர், மாமனார், மாமியார் கொடுமைப்படுத்தி உள்ளனர். எனது மகள் என்னிடம் எப்படியாவது பணத்தை ரெடி செய்து தருமாறு கூறினார். நான் எனது செயினை அடகு வைத்து ரூ.5 லட்சம் கொடுத்தேன். இனி எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது என்று சமாதானம் செய்தேன். மேல்மிடாலம் பகுதியில் வீடு ஒன்றும் வாங்கி கொடுத்தோம்.

    எனது மகளை அடித்தும் கொடுமைப்படுத்தி உள்ளனர். எனது மகள் கழுத்தில் கயிற்றால் இறுக்கியது போன்ற தடம் உள்ளது. எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே எனது மகள் சாவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெமலாவின் சாவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு அமர்ந்து பேராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெமலா சாவு குறித்து பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார். அவரது கணவர் மற்றும் உறவினரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னதாக கடந்த 28-ந்தேதி திருப்பூரை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா என்பவர் காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக இந்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    • ஈரானில் தமிழக மீனவர்கள் வசிக்கும் தீவு பகுதியில் இன்டர்நெட் வசதி இல்லாததால் குடும்பத்தினருடன் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
    • தமிழக மீனவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளனர்.

    தமிழகத்தின் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஈரானில் தங்கி மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றனர்.

    தற்போது ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் நிலவி வருவதால் ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்தநிலையில் ஈரான் கிஷ் தீவில் வசித்து வரும் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இதுவரை இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் வந்து சந்திக்கவில்லை என மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஈரானில் தமிழக மீனவர்கள் வசிக்கும் தீவு பகுதியில் இன்டர்நெட் வசதி இல்லாததால் குடும்பத்தினருடன் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதுவரை எந்த தூதரக அதிகாரிகளும் நேரில் வந்து தமிழக மீனவர்களை சந்திக்கவில்லை என அங்கிருக்கும் மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

     

    உடனடியாக தங்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரானில் உள்ள தமிழக மீனவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளனர்.

    இந்தநிலையில், ஈரான் நாட்டின் கிஷ் தீவில் சிக்கி உள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும் என்று புதுடெல்லியில் வெளியுறவு துறை இணை செயலாளரை காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் இன்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.

    ×