என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- உலகிலேயே தேர்தல் வாக்கு திருட்டு நடப்பது நமது இந்தியாவில் தான்.
- தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை நீக்கி மோசடி செய்யும் அரசை அகற்ற நாம் பணியாற்ற வேண்டும்.
நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கையெழுத்து இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார்.
கையெழுத்து இயக்கத்தை விஜய்வசந்த் எம்பி தொடங்கி பேசுகையில், உலகிலேயே தேர்தல் வாக்கு திருட்டு நடப்பது நமது இந்தியாவில் தான், மக்களின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. ராகுல் காந்தி வாக்கு திருட்டு நடந்து இருப்பது தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் இதற்கு பதிலளிக்க வேண்டும். பா.ஜ.க.வினர் பிரிவினையை ஏற்படுத்தி வெற்றி காண நினைக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை நீக்கி மோசடி செய்யும் அரசை அகற்ற நாம் பணியாற்ற வேண்டும். மேலும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அறிவிப்பின்படி பொதுமக்களிடம் 1 கோடி கையெழுத்துகள் வாங்கிடவேண்டும் என்றார்.
இதில் காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், மகேஷ் லாசர், முன்னாள் நகர தலைவர் அலெக்ஸ், மண்டல தலைவர்கள் சிவபிரபு, ஐரின் சேகர், மகளிரணி சோனிவிதுலா, கவுன்சிலர்கள் சந்தியா, அனுஷாபிரைட் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.









