என் மலர்
கன்னியாகுமரி
- ஆட்சியில் பங்கு என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.
- விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது அவரது தார்மீக உரிமையாகும்.
நாகர்கோவில்:
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நாகர்கோவில் டதி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி படத்திற்கும் மரியாதை செலுத்தினார்.
பின்பு செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலக நாடுகள் எல்லாம் இந்தியாவை உற்று நோக்க பார்க்க வைத்த இரும்பு பெண்மணி மாபெரும் தலைவர், இந்திய தேசத்தை தலைநிமிர செய்த இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழாவை குமரி மாவட்டத்தில் கொண்டாடுவதில் பெருமையாக கருதுகிறோம் . பயங்கரவாதத்தை ஒழிக்க அரும்பாடுபட்டவர் இந்திரா காந்தி. எனவே பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளோம். குமரி மாவட்டம் காங்கிரசின் இதயமாக உள்ளது.
ஆட்சியில் பங்கு என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை தான் முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சி தேசிய கட்சி ஆகும். 2004 முதல் 2014 வரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் நாங்கள் பங்கு கொடுத்துள்ளோம். இதுகாங்கிரஸ் பார்முலா. கிராம கமிட்டி அமைப்பதற்காக அந்த திட்டத்தை முன்னோக்கி எடுத்துச்செல்கிறோம். அதுதான் தலையாய கடமையாக பணி செய்து வருகிறோம்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது அவரது தார்மீக உரிமையாகும். அரசியலமைப்பு சட்டத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், இயக்கம் ஆரம்பிக்கலாம். அவரது கருத்தை சொல்லலாம்.
பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் வரை மணிப்பூரில் கலவரம் இருந்து கொண்டுதான் இருக்கும். எல்லா மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதாவும் அமைதியை சீர்குலைத்து வருகிறது. பிரதமர் பல்வேறு நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார். ஏன் மணிப்பூருக்கு மட்டும் செல்லவில்லை. இது மர்மமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், தாரகை கத்பர்ட், மாவட்ட தலைவர்கள் நவீன்குமார், கே.டி.உதயம், பினுலால்சிங், ஐ.என்.டி.யு.சி.தலைவர் சிவக்குமார், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் டைசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- காமராஜர் படிப்பகத்தில் சிலை நிறுவ கோரிக்கை வைத்த நிர்வாகிகள்.
- தனது சொந்த செலவிலேயே காமராஜர் சிலையை நிறுவினார்.
நாகர்கோவில் பள்ளிவிளையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் படிப்பகத்தில் பெருந்தலைவரின் சிலை நிறுவ வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியினர் மற்றும் படிப்பக நிர்வாகிகள் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி யிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை நிறைவேறும் விதமாக விஜய்வசந்த் எம்பி தனது சொந்த செலவிலேயே காமராஜர் வெண்கல சிலையை நிறுவி அதனை அவரது தலைமையிலேயே திறந்து வைத்தார்.
இந்த விழாவில் நாகர்கோவில் மாநகர மேயர் ரெ. மகேஷ், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவீன் குமார், மாநகராட்சி மண்டல தலைவர் ஜவஹர், காங்கிரஸ் கட்சியின் மண்டல தலைவர் செல்வன், மாமன்ற உறுப்பினர் அனுஷா பிரைட் மற்றும் காங்கிரஸ் திமுக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பரைகோடு அய்யா பதியில் இருந்து விஜய் வசந்த் பாதயாத்திரை
- பூஜித குரு பால பிரஜாதிபதி அடிகளார் தலைமையில் பாதயாத்திரை.
தக்கலை அருகே உள்ள பரைகோடு அய்யா பதியில் அய்யா வைகுண்டசாமி சாமிதோப்பு முதல் திருவனந்தபுரம் வரை கைது செய்து கொண்டு செல்லபட்டதை நினைவு கூரும் வகையில் பூஜித குரு பால பிரஜாதிபதி அடிகளார் தலைமையில் பாதயாத்திரை நடைபெற்றது.

இந்த பாதயாத்திரையில் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி பாதயாத்திரையில் கலந்துகொண்டு அங்குள்ள மக்களுக்கு அய்யா வைகுண்டர் பற்றி பேசினார்.
- மறுநாள் ஜெயன் கடைக்கு சென்றபோது ராஜாசிங் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
- ராஜாசிங் கம்பியை எடுத்து வந்து ஜெயனை சரமாரியாக தாக்கினார்
இரணியல்:
இரணியல் அருகே கண்டன்விளை பாலவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெயன் (வயது 44), கட்டிட தொழிலாளி. கண்டன்விளையை சேர்ந்தவர் ராஜாசிங் (32). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த மாதம் 6-ந்தேதி அந்த பகுதியில் உள்ள ஆலயத்தில் வைத்து தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மறுநாள் ஜெயன் கடைக்கு சென்றபோது ராஜாசிங் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
ஜெயன் மீது ராஜாசிங் இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஜெயன் கட்டிட வேலைக்காக கேரளாவுக்கு சென்றார். வேலைக்கு சென்ற ஜெயன் தற்பொழுது ஊருக்கு வந்துள்ளார்.
நேற்று ஜெயன் கண்டன்விளை மீன் மார்க்கெட் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ராஜா சிங், ஜெயனிடம் தகராறில் ஈடுபட்டார். அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டதுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வீட்டிற்கு சென்ற ராஜாசிங் கம்பியை எடுத்து வந்து ஜெயனை சரமாரியாக தாக்கினார். இதில் ஜெயனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சம்பவ இடத்திலேயே ஜெயன் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து ராஜாசிங் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணமாக கிடந்த ஜெயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஜெயனின் மனைவி ஜெமிலா இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜாசிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை ராஜாசிங்கை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை இரணியல் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட ஜெயனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.
அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கே திரண்டு உள்ளனர். கொலை செய்யப்பட்ட ஜெயனுக்கு ஜெமிலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜாசிங் போலீசாரிடம் கூறுகையில், நானும் கொலை செய்யப்பட்ட ஜெயனும் நண்பர்கள். நாங்கள் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவது வழக்கம். கடந்த மாதம் மது அருந்தி கொண்டிருந்தபோது எனது தாயாரை பற்றி ஜெயன் அவதூறாக பேசினார். இதனால் எனக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவருடன் இருந்த நட்பை துண்டித்தேன். தொடர்ந்து எனது தாயாரை அவதூறாக பேசி வந்தார். நேற்று ஜெயன் அவதூறாக பேசியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொன்றேன் என்றார்.
- மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
- மழையின் காரணமாக ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இன்று அதிகாலை முதலே மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது.
களியக்காவிளை, மார்த்தாண்டம், தக்கலை, இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை 3 மணி முதல் மழை பெய்து வருகிறது. காலையில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது.

நாகர்கோவிலில் இன்று காலை முதலே பெய்த மழையின் காரணமாக பள்ளி செல்லச்சென்ற மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். குடை பிடித்தவாறு மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்றனர்.
மலையோர கிராமங்களான தச்சமலை, கோதையாறு, குற்றியாறு, மூக்கறைகல் பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது. மலையோர கிராமங்களில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியில் குளிப்பதற்கு இன்றும் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் காலை முதலே சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. கடற்கரை பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது.
அஞ்சு கிராமம், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, குருந்தன்கோடு, முள்ளங்கினாவிளை மற்றும் மாவட்டம் முழுவதும் மழை நீடித்து வருகிறது.
அதிகாலை முதலே பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். பள்ளி மாணவ-மாணவிகள் மட்டுமின்றி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்பவர்களும் பாதிக்கப்பட்டனர். இருசக்கர வாகன ஓட்டிகள் மழைக் கோர்ட்டை அணிந்தவாறு அலுவலகங்களுக்கு சென்றனர்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் மழை கொட்டியது. சிற்றாறு-1 அதிகபட்சமாக 46.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
அணைகளில் இருந்து எந்த நேரத்தில் வேண்டு மானாலும் உபரிநீர் திறக்கப்படலாம் என்பதால் கோதை ஆறு, குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மழைக்கு நேற்று மாவட்டம் முழுவதும் 3 வீடுகள் இடிந்து விழுந் துள்ளது. கீரிப்பாறை, தடிக்காரங்கோணம், குலசேகரம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
ரப்பர் மரங்களில் கட்டப் பட்டுள்ள சிரட்டைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப் பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.69 அடியாக இருந்தது. அணைக்கு 519 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 501 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 65.68 அடியாக உள்ளது. அணைக்கு 309 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 510 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாம்பழத்துறையாறு, முக்கூடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.
- கண்ணாடி பாலம் அமைக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
- கண்ணாடி இழை பாலம் ரூ. 37 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி கடலின் நடுவே உள்ள பாறைகளில் சுவாமி விவேகானந்தர் நினைவிடம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளது. இங்குள்ள திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் நினைவிடத்திற்கும் இடையே பாதை ஏற்படுத்தும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
அதன்படி திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் கண்ணாடி இழை பாலம் ரூ. 37 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் இப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடல் சீற்றத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் கடின தன்மை கொண்டதாக கண்ணாடி இழை பாலம் அமைக்கப்படுகிறது.
இதற்காகத் திருவள்ளுவர் சிலை அருகேயும், விவேகானந்தர் பாறையிலும் கம்பிகள் பொருத்தப்பட்டு காங்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கண்ணாடி பாலத்தின் கட்டுமான பணிகளை நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, முன்னாள் அமைச்சரும், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினருமான மனோ தங்கராஜ், நாகர்கோயில் மாநகராட்சி மேயர் ஆர்.மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை நீடித்து வருகிறது.
- பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.69 அடியாக இருந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நேற்று காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலையில் மழை வெளுத்து வாங்கியது.
நாகர்கோவிலில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் இன்றும் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அதிகாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
நாகர்கோவிலில் இன்று காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. கொட்டாரம், மயிலாடி, குலசேகரம், பூதப்பாண்டி, தடிக்காரங்கோணம், இரணியல், குருந்தன்கோடு, களியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை நீடித்தது. பூதப்பாண்டியில் அதிகபட்சமாக 25.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை நீடித்து வருகிறது.
திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவரும் நிலையில் குளிப்பதற்கு தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சிற்றாறு-1 அணையில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்தும் 811 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.69 அடியாக இருந்தது. அணைக்கு 408 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 512 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 65.82 அடியாக உள்ளது. அணைக்கு 250 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து 312 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.
- டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் புறநோயாளிகள் பிரிவு வழக்கம்போல் செயல்பட்டது.
- நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இன்றி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
சென்னையில் அரசு டாக்டர் பாலாஜி தாக்கப்பட்டார். டாக்டர் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் இருப்பதற்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் சார்பில் இன்று டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் டாக்டர்கள் போராட்டம் இன்று நடந்தது. குமரி மாவட்டத்திலும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் புறநோயாளிகள் பிரிவு வழக்கம்போல் செயல்பட்டது. நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இன்றி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை கூடங்கள் வழக்கம்போல் செயல்பட்டது. ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தக்கலை, குழித்துறை அரசு ஆஸ்பத்திரியிலும் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல் மாவட்டத்திலுள்ள 52 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 அரசு ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிக்கு ஆராட்டு விழா.
- சமூக நலக் கூட திட்டத்தை தொடங்கி வைத்த விஜய் வசந்த் எம்.பி.
அஞ்சுகிராமம், மயிலாடி நாஞ்சில் நாடு புத்தனார் கால்வாய் தீர்த்தவாரி மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிக்கு ஆராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் மற்றும் ஆராதனையில் பக்தர்களுடன் பங்கேற்றார்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் புதிய சமூக நலக் கூடம் கட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கூடம் அமைக்கும் பூமி பூஜை விழாவிலும் விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
- காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
- தாராவி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசாரம்.
கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதைத்தொடர்ந்து மும்பையில் தமிழர்கள் அதிகமாக வாழும் தாராவி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருமதி ஜோதி கெய்க்வாட்டுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் விஜய்வசந்த் எம்பி, பிரசாரம் ஆரம்பிக்கும் முன்னர் அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- என்னை விரும்புகின்ற மக்கள் பொழுதுபோக்கு தளத்தில் தலைவர்களை தேடியவர்கள் அல்ல.
- ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது கட்சி ஆரம்பித்தவன் நான்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
என்னை தலைவனாக தேர்வு செய்கிற, என்னை நேசிக்கின்ற, என்னை பின்தொடர்கிற, எனக்கு வாக்கு செலுத்துகின்ற என் மக்கள் யார் என்று பாருங்கள்.
என்னை விரும்புகின்ற மக்கள் பொழுதுபோக்கு தளத்தில் தலைவர்களை தேடியவர்கள் அல்ல. போராட்ட களத்தில் தலைவனை தேடுகின்ற மக்கள் தான் என்னை பின் தொடருவார்கள்.
காற்று அடிக்கும் திசையெல்லாம் பறக்கும் பதர்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள். புயலே அடித்தாலும் நகராமல் அதே இடத்தில் இருக்கும் நெல்மணிகள் எதுவோ அவர்கள் எனக்கு வாக்களிப்பார்கள்.
ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது கட்சி ஆரம்பித்தவன் நான். அவர்கள் இருவரை விட இவர் பெரியவரா? அவர்கள் இருவரை விட இவருக்கு பெரிய கூட்டம் வந்ததா?
கார்த்தி சிதம்பரம் சீமானை வாக்கு வங்கி என்கிறார்.
எனக்காவது வாக்கு வங்கியில் தான் குறையும். உங்களுக்கு வாக்கே கிடையாது.
நானும் கார்த்தி சிதம்பரமும் ஒரே ஊர். நாம் இருவரும் போட்டியிடுவோம். கூட்டணி வைக்கக்கூடாது. யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்.
ஆனால் ஓட்டுக்கு காசு கொடுக்கக்கூடாது. யாருக்கு வாக்கு வங்கி இருக்கிறது என்று அப்போது தெரியும்.
நீங்கள் அத்தனை கட்சி கூட்டணி வைத்தீர்கள். நான் கூட்டணி வைக்க மாட்டேன். ஒன்றரை லட்சத்திற்கும் மேல் நான் வாக்கு வாங்கி உள்ளேன். ஒத்த ரூபா காசு கொடுக்காமல், புது வேட்பாளரை நிறுத்தி, வாக்கு பெற்றேன். யாரு பெரிய கட்சி.
2026-க்கு சரியாக ஒரு ஆண்டு தான் உள்ளது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணும்போது நான் எவ்வளவு ஏறி வந்துள்ளேன். எவ்வளவு தூரம் தொட்டுள்ளேன் என்பதை பார்க்கப்போகிறீர்கள்.
என் கட்சியில் இருந்து விலகிப்போன உறுப்பினர் அட்டையை காட்டுங்கள். உன் கட்சிக்காரனை உட்கார வைத்துக்கொண்டு நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்தார்கள் என்று சொன்னால் எப்படி?
என் கட்சியில் இருக்கும் எல்லோரும் ஒரு கட்சியின் குடும்பத்தின் பிள்ளைகள் தான்.
என்னை பேசாமல் தூக்கம் வராது. என்னை பேசாமல் சோறு கிடைக்காது.
திட்டி திட்டி பேசினாலும் வட்டியில சோறு வைப்பா என்று அய்யா இளையராஜா அம்மா பற்றி பாடிய பாட்டு உள்ளது.
அதுபோல் என்னை திட்டி திட்டி பேசினாலும் நான் வட்டியில சோறு வைக்கிறேன் பல பேருக்கு. போ நல்லா இரு என்று கூறினார்.
- மாணவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கு சொந்த செலவில் ரூ. 14.65 லட்சம் வழங்கியுள்ளேன்.
- அங்கன்வாடி அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 14. 5 லட்சம் ஒதுக்கீடு.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் ரூ.14.65 லட்சம் கல்வி உதவி தொகையை கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து விஜய் வசந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்த கல்வி ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஏழை எளிய மாணவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கு சொந்த செலவில் ரூ. 14.65 லட்சம் வழங்கியுள்ளேன்.
நிதி இல்லாத காரணத்தால் எந்த மாணவரும் தங்கள் கல்வி பயணத்தை பாதியில் நிறுத்தி விட கூடாது என எனது தந்தை மறைந்த வசந்த குமார் அவர்கள் உறுதியுடன் இருந்தார்.
இதற்காக அவர் ஏழை மாணவர்களின் கல்வி செலவிற்காக ஏராளமான உதவிகள் செய்து வந்தார். அவரது மறைவிற்கு பின் அவர் வழியில் எல்லா வருடமும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்து வருகிறேன்.
இந்த வருடமும் 2024- 25 கல்வி ஆண்டில் கல்வி நிதி உதவி வழங்குவதற்கு தகுதியான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பெற்றோரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
அதன் அடிப்படையில் அவர்களின் தகுதியை ஆராய்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடியாக காசோலை வழங்கப்பட்டது.
இந்தியாவின் பிரகாசமான எதிர்காலம் இளைஞர்களின் கரங்களில் உள்ளது. அந்த இளைஞர்களுக்கு சிறந்த கல்வி செல்வதை அளிக்க வேண்டியது நம் அனைவரது கடமை.
எனது தரப்பில் இருந்து என்னால் இயன்ற வரையில் அதை தொடர்ந்து செய்வேன் என உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த்,
அகஸ்தீஸ்வரம் பகுதி பெற்றோர் மற்றும் மக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு ஒரு அங்கன்வாடி அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 14. 5 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.







