search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலாஷேத்ராவில் பாலியல் புகார்- ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைப்பு
    X

    கலாஷேத்ராவில் பாலியல் புகார்- ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைப்பு

    • கலாஷேத்ராவில் எழுந்துள்ள பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி, டி.ஜி.பி. மற்றும் டாக்டர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது.
    • கலாஷேத்ரா நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கு புகார்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது

    சென்னை:

    சென்னை திருவான்மியூர் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் பேராசிரியர் ஹரிபத்மன் மீது அடையாறு மகளிர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஹரிபத்மன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேரள மாணவியின் தோழிகள் 5 பேரிடம் விசாரணை நடத்தி போலீசார் பல்வேறு தகவல்களை திரட்டினர். அப்போது 5 மாணவிகளும் ஹரிபத்மனின் பாலியல் லீலைகள் தொடர்பாக சாட்சியம் அளித்தனர். இதனை வாக்குமூலமாக பதிவு செய்த பிறகே ஹரிபத்மன் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    சென்னை மாதவரம் பகுதியில் தோழி வீட்டில் பதுங்கி இருந்த ஹரிபத்மன் நேற்று காலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் கலாஷேத்ராவில் எழுந்துள்ள பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி, டி.ஜி.பி. மற்றும் டாக்டர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது. கலாஷேத்ரா அறக்கட்டளை இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

    கலாஷேத்ரா வளாகத்தில் நடந்த சம்பவங்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளன. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்துவதற்கு ஆலோசனை நடத்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், முன்னாள் டி.ஜி.பி. லத்திகா சரண், டாக்டர் ஷோபா வர்த்தமான் ஆகி யோர் விசாரணை குழுவில் இடம் பெற்று உள்ளனர். பேராசிரியர் ஹரிபத்மன் இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டு உள்ளார்.

    கலாஷேத்ரா நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கு புகார்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஆலோசனை குழுவும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் கலாஷேத்ரா, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முழு ஈடுபாட்டுடன் உள்ளது.

    இவ்வாறு கலாஷேத்ரா அறக்கட்டளை அறிவித்து உள்ளது.

    இதை தொடர்ந்து இந்த குழுவினர் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.

    Next Story
    ×