என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் மீது ஆள் கடத்தல், கொலை, நிலம் அபகரிப்பு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன. போலீசார் தேடுவதை அறிந்ததும் ஸ்ரீதர் வெளிநாடு தப்பி சென்றுவிட்டார்.
இதுவரை அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதனால் ஸ்ரீதரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
இதற்கிடையே சட்ட விரோதமாக பறித்த ஏராளமான சொத்துக்களை அவர் மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் ஸ்ரீதர் சேர்த்து வைத்து இருப்பது தெரிந்தது. அவற்றை அமலாக்க துறையினர் முடக்கி உள்ளனர்.
கடந்த வாரம் லண்டனில் இருந்து வந்த ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமாரிடம் காஞ்சீபுரம் போலீசார் ஏற்கனவே 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சந்தோஷ் குமார் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது போலீசார் ஒரு ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தனர்.
அப்போது அரசு வக்கீல் வாதிட்டபோது ‘‘சந்தோஷ்குமாரிடம் இருந்து லேப்டாப், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். அதில் பல ஆதாரங்கள் உள்ளன. எனவே அவரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்த அவசியமாகிறது என்று’ தெரிவித்தார்.
இதனை ஏற்று நீதிபதி, சந்தோஷ்குமாரிடம் 14 நாட்கள் தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை காஞ்சீபுரம் போலீசார் விசாரணை நடத்தலாம் என்று உத்தரவிட்டார்.
அதன்படி இன்று காலை சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் சந்தோஷ்குமார் ஆஜரானார். அவரிடம் விசாரணை அதிகாரி மணிமாறன் விசாரணை நடத்தினார்.
இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, கோர்ட்டு உத்தரவுப்படி சந்தோஷ் குமாரிடம் விசாரணை நடக்கிறது. சனி, ஞாயிறு நீங்கலாக 14 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இந்த விசாரணை முடிவில் ஸ்ரீதர் பற்றிய முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.
பரங்கிமலையைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவரது பெட்ரோல் பங்கின் ஒரு பகுதி அரசு புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பெட்ரோல் பங்கை மூடுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தாம்பரம் ஆர்.டி.ஓ. (வருவாய் கோட்டாட்சியர்) ரவிச்சந்திரன், ஆலந்தூர் தாசில்தார் தனசேகரன், வருவாய் ஆய்வாளர் முத்தழகன் ஆகியோர் பெட்ரோல் பங்குக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பெட்ரோல் பங்கை தடையின்றி நடத்த வேண்டும் என்றால் 3 பேருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று மோகன சுந்தரத்திடம் அவர்கள் கேட்டனர்.
இதன்படி நேற்று இரவு தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து 1 லட்சம் ரூபாயை வாங்கி கொள்வதாக 3 பேரும் தெரிவித்து இருந்தனர். ஆனால் லஞ்சம் கொடுக்க மனமில்லாத மோகனசுந்தரம் இதுபற்றி சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு தலைமை அலுவலகத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் 3 பேரையும் பொறி வைத்து பிடிக்க திட்டமிடப்பட்டது.
இதையடுத்து நேற்று இரவு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் மோகனசுந்தரம் ரசாயன பவுடர் தடவிய பணத்தை தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வைத்து 3 பேரிடமும் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், தாசில்தார் தனசேகரன், ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன், வருவாய் இன்ஸ்பெக்டர் முத்தழகன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பெட்ரோல் பங்கை தொடர்ந்து நடத்துவதற்காக இவர்கள் 3 பேரும் ரூ.10 லட்சம் வரையில் பேரம் பேசியதாகவும் முதல் கட்டமாக ரூ.1 லட்சம் பணத்தை வாங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
ஒரே நேரத்தில் 3 அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கைதான சம்பவம் சென்னையில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த அதிரடி வேட்டை அரசு அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலந்தூர்:
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சங்கீதா (வயது 40).
இவர் ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். சங்கீதாவின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறில் பிரிந்து சென்று விட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. தனியார்ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த போது அவருக்கு ரத்த புற்று நோய்இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்தநிலையில் உரிய சிகிச்சை பெற பணம் இல்லாமல் சங்கீதா கஷ்டப்பட்டார். சேர்த்து வைத்திருந்த பணம்-நகை முழுவதையும் சிகிச்சைக்காகவே செலவு செய்தார்.
பணம் காலியானதால் அவரால் புற்றுநோய்க்கு தொடர்ந்து சிகிச்சை பெற முடியவில்லை. இதனால் நோயின் தீவிரம் அதிகமானது. கவனிக்க உறவினர்கள் அருகில் இல்லாததாலும் அவரது நிலைமை மேலும் மோசம் அடைந்தது.
இதையடுத்து சங்கீதாவை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிருக்கு போராடும் சங்கீதாவை அவரது தம்பி ஒருவர் கவனிப்பதாக தெரிகிறது. அவரும் போதிய பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.
சங்கீதாவுக்கு தேவையான பண உதவி மற்றும் புற்றுநோய்க்கான சரியான சிகிச்சை கிடைத்தால் மட்டுமே அவர் பழைய நிலைக்கு வர முடியும்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மாநில அளவில் 17 நலவாரியங்களில் சுமார் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.
அரசின் நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இனிவரும் காலங்களில் உறுப்பினர்கள் அனைவரும் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு தங்களது உறுப்பினர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை எண்ணையும் அவசியம் பதிவு செய்ய வேண்டும்.
எனவே காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த அமைப்பு சாரா மற்றும் கட்டுமான நல வாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் தங்களது பதிவு அடையாள அட்டை நகலுடன் ஆதார் அடையாள அட்டை நகலையும் வரும் ஜூலை 31-ந்தேதிக்குள் காஞ்சீபுரம் ரங்கசாமிகுளம் அருகில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இதுகுறித்து 044-27230279 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தாம்பரம்:
குரோம்பேட்டையில் கண்ணாடியை உடைத்து காருக்குள் வைத்திருந்த ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் லேப்-டாப் கொள்ளையடிக்கப்பட்டது.
கொல்கத்தாவை சேர்ந்தவர் சுந்தர் மான்டெல் (48). டாக்டராக இருக்கிறார்.இவர் தனது மகளை சென்னையில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் சேர்க்க வந்திருந்தார்.
மகளை கல்லூரி விடுதியில் சேர்த்து விட்டு நேற்றுஇரவு கொல்கத்தாவுக்கு விமானம் மூலம் திரும்பினார். அதற்காக வாடகை கார் மூலம் விமான நிலையம் செல்லும் வழியில் குரோம்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் டிரைவருடன் சாப்பிட சென்றார்.
அப்போது மர்ம நபர்கள் காரின் பின்புற கதவின் கண்ணாடியை உடைத்து உள்ளே பையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்டிளயடித்து சென்று விட்டனர்.
இதே போன்று குரோம்பேட்டையில் மற்றொரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. செங்கல்பட்டை சேர்ந்தவர் சுந்தரமாணிக்கம் (45). கட்டுமான தொழில் அதிபரான இவர் நேற்று தனது விலை உயர்ந்த காரில் குரோம்பேட்டை வந்து இருந்தார்.
அங்குள்ள ஒரு ‘ஷோரூம்’ முன்பு காரை நிறுத்திவிட்டு கைகடிகாரம் வாங்க சென்றார். அப்போது இவரது காரின் பின்புற கதவின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த விலை உயர்ந்த லேப்டாப் மற்றும்அதில் வைத்திருந்த ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
இது குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார்கள்.
சோழிங்கநல்லூர்:
சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி எழில் நகரில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் ஏழுமலை. இவரது மகன் அரங்கநாதன்.
குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஏழுமலை குடும்பத்தினருக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் செம்மஞ்சேரி போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரை அரங்கநாதன் தாக்க முயன்றதாக தெரிகிறது.
இதையடுத்து அரங்கநாதனை போலீசார் கைது செய்து எழில்நகரில் உள்ள போலீஸ் பூத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த அரங்கநாதனின் தந்தை ஏழுமலை மற்றும் உறவினர் மற்றொரு ஏழுமலை ஆகியோர் போலீஸ் பூத் மீது கல்வீசி தாக்கினர். மேலும் அங்கிருந்த பொருட்களை அரங்கநாதன் சேதப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து அரங்கநாதன், அவரது தந்தை ஏழுமலை, உறவினர் ஏழுமலை ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கூடுவாஞ்சேரி:
வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் அழகேசன் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் ஜீவா (39). தொழில் அதிபர். இவர் தனக்கு சொந்தமான லாரி, வேன், கார் மற்றும் டிராக்டரை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று இரவு கொளப்பாக்கம் சின்னம்மன் கோவில் தெருவில் 5 வாலிபர்கள் மதுகுடித்து கொண்டு இருந்தனர். இதனை அவ்வழியே வந்த ஜீவா மற்றும் அவரது உறவினர் சங்கர் ஆகியோர் கண்டித்தனர்.
இதில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மது போதையில் இருந்த வாலிபர்கள் ஜீவாவை சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்தனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சங்கருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். உடனே போதை வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
படுகாயம் அடைந்த சங்கருக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 5 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஆலந்தூர்:
தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. டெல்லியில் இருந்து நேற்றிரவு சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார்கள். குற்றவாளிகளை கண்டு பிடிக்க சி.சி.டி.வி. கேமராவில் அந்த நிகழ்வு பதிவு ஆகியிருக்கும் என்றால் அங்குள்ள கேமராக்களும் வேலை செய்யவில்லை.
ஆனால் காவல் துறை மானிய கோரிக்கையின் போது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பேசும்போது தமிழகத்தில் குற்றங்கள் குறைந்து இருக்கிறது, சட்டம்- ஒழுங்கு சீராக இருக்கிறது என்று பேசுகின்றனர்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசுகிறார். தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பது பற்றி ஏன் பேச வில்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கேட்கிறார்.
எதிர்க்கட்சியை விட மத்திய அரசுக்குதான் பயங்கரவாதம் பற்றி தெரிய வரும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு துறை இருக்கிறது.
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து மாநில அரசிடம் எடுத்துரைத்து அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை.
சென்னையில் குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. தமிழக அரசு எந்த செயல்பாடும் இல்லாமல் உள்ளது. குடிநீர் பிரச் சினை உள்ளிட்ட மக்கள் பிரச்சினையில் அரசு எவ்வித ஆர்வமும் காட்டவில்லை.
மு.க.ஸ்டாலின் நீர்நிலைகளை தூர்வாரி வருகிறார். அரசு எதுவும் செய்யவில்லை.
பெங்களூர் சிறையில் சசிகலாவிற்கு சலுகை விவகாரம் குறித்து கர்நாடக அரசின் நடவடிக்கையை பொறுத்து இருந்து பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கு காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், கேளம்பாக்கத்தில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.5 கோடி ஆகும். விஜயலட்சுமி அவரது நிலத்தை பார்க்க சென்றபோது அந்த நிலத்தை யாரோ 34 பிளாட்டுகள் போட்டு அதில் 27 பிளாட்டுகளை விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.
இது குறித்து விஜயலட்சுமி காஞ்சீபுரம் நில அபகரிப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின்பேரில் காஞ்சீபுரம் நில அபகரிப்பு சிறப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சக்கரவர்த்தி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு நில அபகரிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்–இன்ஸ்பெக்ட்ர் மாதவன் மற்றும் போலீசார் நில அபகரிப்பில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்டவர்களில் ஒருவரான சாக்ரடீஸ் (வயது 43) என்பவர் நாகப்பட்டினம் மாவட்டம் சேத்தூர் கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சாக்ரடீசை கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் அவர் கோர்ட்டு உத்தரவின் பேரில் செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அப்போது விமானத்தில் பயணம் செய்த மயிலாடுதுறையை சேர்ந்த ஹமானுல்லாவுக்கு (70) திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இது குறித்து விமான ஊழியர்கள், சென்னையில் உள்ள விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர் விமானம் தரையிறங்கியதும் ஹமானுல்லாவை மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். அவர் ஏற்கனவே இறந்து இருப்பது தெரிந்தது.
இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் இருந்து டெல்லி வழியாக நியூயார்க் செல்லும் விமானம் 256 பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட தயாராக இருந்தது. அதில் எரிபொருள் நிரப்பும் பகுதி அருகே கோளாறு இருப்பதை விமானிகள் கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த விமானம் புறப்படுவது ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த பயணிகள் விமான ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
இன்று காலை டெல்லி செல்லும் 140 பயணிகள் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். நியூயார்க் செல்லும் பயணிகள் இன்று இரவு புறப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த படப்பை அருகே உள்ள காவனூர் காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் சபரீஷ் (வயது 6). வடமேல் பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் ஆண்டு படித்து வந்தான்.
பள்ளி வளாகத்தில் குப்பை கொட்டுவதற்காக 10 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் பெய்த மழையினால் பள்ளம் முழுவதும் மழை நீரால் நிரம்பி இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை விளையாட்டு நேரத்தில் சபரீஷ் உள்பட மாணவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாடினர். அப்போது சபரீஷ் பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் விழுந்தான்.
ஆசிரியர்கள் அவனை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் சபரீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவரின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
ஆனால் அங்கு பள்ளி நிர்வாகத்தினர் யாரும் இல்லை. ஆத்திரம் அடைந்த அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.
இந்த நிலையில் மாணவன் பலியானது தொடர்பாக பள்ளி முதல்வர் ராபர்ட், உடற்கல்வி ஆசிரியர் அசோக்குமார் ஆகிய 2 பேரையும் மணிமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா அணியின் செயல் வீரர்- வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் வருகிற 23-ந்தேதி காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டையில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் கழக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம், அவைத்தலைவர் இ.மதுசூதனன், முன்னாள் நிதி அமைச்சர் சி.பொன் னையன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செம்மலை, ராஜகண்ணப்பன், மா.பா.பாண்டியராஜன், டாக்டர் வ.மைத்ரேயன் எம்.பி.
முன்னாள் வாரிய தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன், மனோஜ்பாண்டியன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார்கள்.
இதற்காக முத்தியால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கூட்டம் நடைபெறும் இடத்தை வ.மைத்ரேயன் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவருடன் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா அணி நிர்வாகி முத்தயால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார் உள்பட பலர் இருந்தனர்.






