என் மலர்
செய்திகள்

வண்டலூர் அருகே தொழில் அதிபர் அடித்து கொலை
கூடுவாஞ்சேரி:
வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் அழகேசன் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் ஜீவா (39). தொழில் அதிபர். இவர் தனக்கு சொந்தமான லாரி, வேன், கார் மற்றும் டிராக்டரை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று இரவு கொளப்பாக்கம் சின்னம்மன் கோவில் தெருவில் 5 வாலிபர்கள் மதுகுடித்து கொண்டு இருந்தனர். இதனை அவ்வழியே வந்த ஜீவா மற்றும் அவரது உறவினர் சங்கர் ஆகியோர் கண்டித்தனர்.
இதில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மது போதையில் இருந்த வாலிபர்கள் ஜீவாவை சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்தனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சங்கருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். உடனே போதை வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
படுகாயம் அடைந்த சங்கருக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 5 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.






