என் மலர்
காஞ்சிபுரம்
ஆலந்தூர்:
நங்கநல்லூரை சேர்ந்தவர் சாய் ஸ்ரீ வத்சன். தாம்பரத்தில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
வேளச்சேரியில் உள்ள நீச்சல் குளத்தில் ஸ்ரீ வத்சன் நீச்சல் பயிற்சி பெற்று வந்தார். தந்தையுடன் சென்று அவர் பயிற்சி பெறுவது வழக்கம். இன்று காலையிலும் வழக்கம் போல பயிற்சிக்கு சென்றார்.
நீச்சல் அடித்துக் கொண்டு இருந்த போது, சாய் ஸ்ரீ வத்சன் முதுகு வலிப்பதாக கூறி உள்ளார். இதையடுத்து அவரை கரையேறுமாறு தந்தை கூறினார். குளத்தில் இருந்து வெளியே வந்த போது ஸ்ரீவத்சனுக்கு மயக்கம் ஏற்பட்டது.
உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு ஸ்ரீவத்சனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பயிற்சியின் போது உயிரிழந்த ஸ்ரீவத்சன் காஞ்சீபுரம் மாவட்ட அளவில் நீச்சல் பயிற்சியில் 2-ம் இடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போரூர்:
கோயம்பேடு பஸ்நிலைய போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் கலைவாணன். கடந்த 18-ந் தேதி இவர் கோயம்பேடு 100 அடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது பட்டாசு ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி விசாரித்தார். போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி லாரியில் இருந்த ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசு பண்டல்களை போலீஸ்காரர் கலைவாணன் எடுத்து சென்று விட்டார்.
இது குறித்து லாரி உரிமையாளர், கோயம்பேடு உதவி கமிஷனரிடம் புகார் அளித்தார். விசாரணையில் போலீஸ்காரர் கலைவாணன், லாரி டிரைவரை மிரட்டி பட்டாசு பண்டல்களை எடுத்து சென்றது தெரிந்தது.
இதையடுத்து போலீஸ்காரர் கலைவாணனை சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மாமல்லபுரம்:
சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ், சாப்ட்வேர் என்ஜினீயர். நேற்று மதியம் காரில் நண்பர் பிரவீனுடன் பாண்டிச்சேரி சென்றார். கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மரத்தின் மீது மோதியது.
இதில் காரை ஓட்டிச் சென்ற ஹரீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். பிரவீன் காயங்களுடன் உயிர் தப்பினார்.
வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வண்டலூர் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா 2.7 ஹெக்டேர் பரப்பளவில் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பூங்காவில் 200 வகையான தாவரங்கள் நடப்பட்டு 40 வகையான வண்ணத்துப்பூச்சிகள் வருகை புரிந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது, குறிப்பிட்ட பருவகாலங்களில் மட்டுமே இவை வருகை தரும். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வார்தா புயலால் வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் இல்லம் வெகுவாக பாதிக்கப்பட்டு முற்றிலும் சேதம் அடைந்த நிலையில், வெவ்வேறு காலகட்டங்களில் படிப்படியாக வண்ணத்துப்பூச்சி பூங்கா சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.
தற்போது வண்ணத்துப்பூச்சி பூங்கா சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் பூங்காவிற்குள் புதிதாக செடிகள் நடப்பட்டு உள்-அரங்கமும் சீரமைக்கப்பட்டுள்ளது. வண்ணத்துப்பூச்சிகள் மீண்டும் வர தொடங்கியுள்ளதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வண்டலூர் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகன் சுசீந்தரன் (வயது 20). காஞ்சீபுரத்தை அடுத்த ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். இந்த நிலையில் சுசீந்தரன் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் இறந்துவிட்டார். அதே நினைவில் கடந்த 12-ந் தேதி் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் கடந்த வியாழக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தற்கொலை குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சென்னை:
வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதும். இங்குள்ள புலி, சிங்கம், கரடி, முதலைகள் போன்ற விலங்குகளை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகிறார்கள்.
வண்டலூர் பூங்காவில் நுழைவு கட்டணம் பெரியவர்கள், குழந்தைகளுக்கு தனித்தனியாக வசூலிக்கப்படுகிறது. மேலும் பார்வையாளர்கள் கொண்டு வரும் கேமராவுக்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கேமரா வசதியுள்ள செல்போன்களுக்கு கேமரா கட்டணம் வசூலிக்கப்படுவதாக பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பார்வையாளர்களில் சிலர் கூறியதாவது:-
வண்டலூர் பூங்காவுக்கு செல்ல நுழைவு கட்டணம் செலுத்தி வாங்கினோம். உள்ளே செல்ல முயன்றபோது அங்கிருந்த காவலாளிகள் கேமராவிற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் கேமரா இல்லை என்று தெரிவித்தோம். ஆனால் கேமரா வசதியுள்ள செல்போனை எடுத்து செல்வதால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதைகேட்க அதிர்ச்சியாக இருந்தது. கேமராவுக்கும், செல்போன் கேமராவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று பூங்கா நிர்வாகத்துக்கு தெரியவில்லையா? செல்போன் கேமராவில் ஒரளவுக்குதான் விலங்குகளை ‘ஜூம்’ செய்து படம் பிடிக்க முடியும். கேமரா போன்று படம் பிடிக்க முடியாது.
நாங்கள் ‘செல்பி’ மட்டும் தான் எடுக்கிறோம். அதற்காக செல்போனுக்கு கேமரா கட்டணம் வசூலிக்கப்படுவது எப்படி முறையாகும்?. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #VandalurPark
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி கரூர் மாணிக்கம் இல்லத் திருமண விழா நடந்தது. இதில் கே.பி.முனுசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
டி.டி.வி. தினகரனின் செயல்பாடுகள் சூதாட்டம் ஆடுவது போன்று உள்ளது. அப்பாவி தொண்டர்களை ஏதேனும் சொல்லி, ஏமாற்றும் நிலையில் உள்ளார். ஆனால் தொண்டர்களை ஏமாற்ற முடியாது.

நம் நாடு பல்வேறு மதங்கள் கலாச்சாரங்கள் சார்ந்தது. அந்த உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் நடத்தப்பட வேண்டும். சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு எந்த மாதிரி நடவடிக்கைகளை எடுக்கின்றது என பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒரு காலத்தில் பெண்களை இந்த சமூகம் பாரபட்சமாக நடத்தியதுண்டு. அப்போது பெண்கள் பாலியல் தொல்லை குறித்து வெளியே சொல்வதற்கு வாயப்பில்லாமல் இருந்தது. மேலும் வெளியில் சொன்னால் மானம் மரியாதை போய் விடும் என்ற பயமும் இருந்தது. ஆனால் இப்போது மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #kpmunusamy #dinakaran #metoo
சென்னை நங்கநல்லூர் ரகுபதி தெருவை சேர்ந்தவர் ராஜா (48). கூலி தொழிலாளி. நேற்று இரவு மது அருந்தி விட்டு அங்குள்ள சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அங்கு நின்ற நாய் ஒன்று அவரை பார்த்து குரைத்தது. அவர் விரட்டினார். ஆனால் அந்த நாய் அவரை விடவில்லை. தொடர்ந்து பார்த்து குரைத்து கொண்டே இருந்தது. அவர் சத்தம்போட்டு விரட்டினாலும் போகவில்லை.
நாய் ஆக்ரோசமாக ராஜாவைவிடாமல் குரைத்ததால் ஆத்திரம் அடைந்தார். அருகில் கிடந்த கம்பியை எடுத்து சரமாரியாக தாக்கினார். இதில் நாய் சுருண்டு விழுந்து இறந்தது.
இதுபற்றி புளூகிராஸ் அமைப்புக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். பழவந்தாங்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நாயை அடித்து கொன்றதாக ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
மலேசியாவில் இருந்து நேற்று இரவு 11.45 மணிக்கு ஒரு விமானம் சென்னை வந்தது.
இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சென்னை விமானநிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது காசிம்(30), இஸ்மாயில் (35) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
எனவே 2 பேரையும் தனியாக அழைத்துச் சென்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களுடைய சூட்கேஸ்களும் சோதனை செய்யப்பட்டன.
அப்போது சூட்கேசில் இருந்த எமர்ஜென்சி விளக்கை திறந்து பார்த்தனர். அதில் ஒரு கிலோ 200 கிராம் எடைகொண்ட தங்க கட்டிகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.36 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று அதிகாலை சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது (34) என்பவரின் சூட்கேசை சந்தேகத்தில் திறந்து பார்த்தனர்.
அதில் இருந்த ரகசிய அறையில் அமெரிக்க, யூரோப் டாலர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.18 லட்சத்து 50 ஆயிரம். இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வேளச்சேரி கன்னிகாபுரத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே குப்பைத் தொட்டியில் கடந்த 17-ந் தேதி பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை இறந்து கிடந்தது.
இது குறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குழந்தையை கொன்று வீசியது வேளச்சேரி கன்னிகாபுரத்தை சேர்ந்த தாய் வசந்தி என்பது தெரிந்தது.
அவருக்கு உடந்தையாக தாய் விஜயா, போரூரை சேர்ந்த காதலன் ஜெபராஜ் இருந்தது தெரிந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
குழந்தையை கொன்றது குறித்து வசந்தி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த போது எனக்கும் ஜெபராஜூக்கும் காதல் ஏற்பட்டது. நெருங்கி பழகியதால் நான் கர்ப்பம் அடைந்தேன். இதனை வீட்டுக்கு தெரியாமல் மறைத்தேன். 7 மாதத்துக்கு பின்னர் நான் கர்ப்பமாக இருப்பது வீட்டுக்கு தெரிந்தது.
இதனை தாய் விஜயா கண்டித்தார். மேலும் திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றால் அக்கம் பக்கத்தினர் என்ன நினைப்பார்கள் என்று கூறி இதனை வெளியில் தெரியாமல் மறைக்க முடிவு செய்தார்.
இதையடுத்து என்னை வீட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. கடந்த மாதம் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை அறிந்தால் உறவினர்கள் கிண்டல் செய்வார்கள் என்று நாங்கள் நினைத்தோம்.
எனவே குழந்தையை கொன்று குப்பைத் தொட்டியில் வீச முடிவு செய்தோம். இதுபற்றி காதலன் ஜெபராஜுக்கு தெரிவித்தோம். அவரும் இதற்கு ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து கடந்த 16-ந்தேதி குழந்தையை தண்ணீர் வாளிக்குள் அமுக்கி கொன்றோம். பின்னர் குழந்தையின் உடலை குப்பைத் தொட்டியில் வீசினோம். போலீசாரிடம் சிக்கமாட்டோம் என்று நினைத்தோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தாம்பரம்:
கிழக்கு தாம்பரம் ஆனந்தா நகரில் வசித்து வருபவர் ஜான்காட்வின் (வயது 26) சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. ஜான் காட்வினுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து வற்புறுத்தினர். ஆனால் அவர் திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று கூறி வந்தார்.
இந்த நிலையில் ஜான் காட்வின் தனது பெற்றோருக்கு கடிதம் அனுப்பி விட்டு மாயமாகி விட்டார். அந்த கடிதத்தில் ‘‘எனக்கு திருமணம் செய்ய ஆசை இல்லை. திருமணத்துக்கு வற்புறுத்துவதால் நான் பிரிந்து செல்கிறேன். பரலோகத்தில் சந்திப்போம்’’ என்று எழுதப்பட்டு இருந்தது. இது குறித்து சிட்லபாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மதுராந்தகத்தில் எஸ்.டி. உகம்சந்த் படத்திறப்பு நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய துறையை பயன்படுத்தி ஒப்பந்ததாரர் அடிப்படையிலே தன்னுடைய உறவினருக்கு காண்ட்ராக்டை கொடுத்திருக்கிறார். ஏறக்குறைய ரூ. 3 ஆயிரம் கோடிக்கு மேலே அதிலே ஊழல் நடைபெற்றிருக்கிறது.
இதை உடனடியாக விசாரிக்க வேண்டும். இதற்குரிய தண்டனையை அவருக்கு வழங்கிட வேண்டும் என்று அமைப்புச் செயலாளர் அந்த வழக்கை தி.மு.க. சார்பில் தொடுத்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் இதையெல்லாம் அடிப்படையாக வைத்து முகாந்திரம் இருக்கிறது என்று சொல்லி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது.
அடுத்த வினாடியே அவர் முதல்-அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து இருக்க வேண்டும். அந்த வழக்கை சந்திக்காமல், உளுந்தூர்பேட்டையிலே போய் அவர் இதை திசை திருப்புகிற வகையில் நாங்களும் தி.மு.க. மீது வழக்கு போடுவோம் என்கிறார்.
எங்கள் மீது வழக்கு போடுங்கள், நாங்கள் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம். எத்தனையோ வழக்குகள் எங்கள் மீது போடப்பட்டதுண்டு. எம்.ஜி.ஆரே எங்கள் மீது வழக்கு போடவில்லையா? சர்க்காரியா கமிஷனை மறந்திருப்பீர்களா?
சென்னை மாநகரத்திலே 9 மேம்பாலங்கள் நான் மேயராக இருந்தபோது கட்டப்பட்டது. ஆட்சி மாறிய பிறகு ஜெயலலிதா முதல்-அமைச்சராக வந்ததற்கு பிறகு அதற்காக வழக்கு போட்டார்.
வழக்கு போட்டது மட்டுமல்ல, இரவோடு இரவாக தலைவர் கலைஞர் வீட்டிலே தூங்கிக் கொண்டிருந்தபோது காவல் துறையைச் சேர்ந்த அதிகாரி உள்ளே புகுந்து தரதரவென இழுத்து வந்த அந்தக் கொடிய காட்சிகள் எல்லாம் பார்த்து உலகமெங்கும் இருக்கக் கூடிய தமிழர்கள் அத்தனைபேரும் வேதனைப் பட்டார்கள்.
பாலம் வீக்கென்று சொன்ன ஜெயலலிதா, அதே பாலத்தின் மேல்தான் தொடர்ந்து கோட்டைக்கு போய் கொண்டும் வந்து கொண்டும் இருந்தார். பாலம் வீக்கென்று சொல்லி நம் மீது வழக்கு. வழக்கு போட்டு ஐந்து வருடங்கள் ஆகி விட்டது. ஐந்து வருடமாக ஒரு சார்ஜ்சீட் பைல் பண்ண முடிந்ததா?.
தலைவரை கைது செய்தீர்கள். என்னை கைது செய்தீர்கள், பொன் முடியை கைது செய்தீர்கள், கோ.சி.மணியை கைது செய்தீர்கள். இப்படி பலபேரை கைது செய்து சிறையில் வைத்தீர்கள். வழக்கு போட்டதற்கு பிறகு அதே அ.தி.மு.க. ஆட்சி ஒரு சார்ஜ் சீட் பைல் செய்ததா என்றால், கிடையாது.
2ஜி, 2ஜினு ஒரு பிரச்சனையை கிளப்பினார்ளே. எவ்வளவு திட்டமிட்டு பிரசாரம் நடந்தது. அது என்ன ஆனது? நீதிமன்ற தீர்ப்பில் எந்த முகாந்திரமும் இல்லை. அத்தனை பேரும் விடுதலை. இதுதான் தி.மு.க. நாங்கள் எத்தனையோ முறை சிறைக்குப் போய் இருக்கிறோம். ஆனால் இவர்களைப் போல கொள்ளையடித்து விட்டு போகவில்லை.
இதே எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு தி.மு.க. தலைமைச் செயலகம் கட்டியதில் ஊழல் என்கிறார். அதை இன்றைக்கு நாங்கள் போய் நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கி விட்டோம். அந்த வழக்கு போடப்பட்டதற்கு பிறகு இதுவரையிலே 7 வருடம் ஆயிற்று. இதுவரையில் அதுபற்றி விசாரணை நடந்ததா? கிடையாது.
ஆனால் விசாரணைக் கமிஷன், அதற்கு ஒரு அலுவலகம், 3 கார்கள், போலீஸ் ஏறக்குறை 10 கோடி ரூபாய் அந்த நீதிபதிக்கே செலவு. இதைக் கண்டித்து உயர்நீதிமன்றம் என்ன செய்தது என்றால், அந்த கமிஷனையே கலைத்து விட்டது.
ஆனால் முதல்-அமைச்சராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் என்ன சொல்கிறது? ஆதாரங்கள் இருக்கிறது, அடிப்படை ஆதாரங்கள் இருக்கிறது. எனவே இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறது. அதை எதிர்த்து நியாயமாக எடப்பாடி என்ன செய்திருக்க வேண்டும்?
சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று தடை வாங்கியிருக்க வேண்டும். வாங்குவேன் என்று சொன்னார். இதுவரைக்கும் வாங்கவில்லை. ஆனால், வாங்குவதற்கு நாம் தடை போட வேண்டும். அதை வாங்கினால் எங்களையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று சொல்லி, நம்முடைய ஆர்.எஸ்.பாரதி சார்பில் கேவியட்டும் போட்டு வைத்துள்ளோம்.
எங்களுக்கு தைரியம் இருக்கிறது. தெம்பு இருக்கிறது, நாங்கள் கேவியட் போடுகின்றோம். தலைமைச் செயலக வழக்கில் எங்களுக்கு ஸ்டே கொடுத்துள்ளார்கள். அதை எதிர்த்து அப்பீலுக்கு செல்லும் தைரியும் உங்களுக்கு இல்லை. ஆனால் உளுந்தூர்பேட்டையில் வந்து புலம்பிக் கொண்டு போயிருக்கிறீர்கள்.
18 எம்.எல்.ஏ. தீர்ப்பு வரட்டும். வந்ததற்கு பிறகு தான் இருக்கிறது கதை. ஏதோ ஆட்சியில் இருக்கிறோம். பதவியில் இருக்கிறோம். அதிகாரம் இருக்கிறது என்கிற திமிரில் இப்படி எல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். இதற்கெல்லாம் முடிவு கட்டக்கூடிய காலம் வரப் போகிறது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin #Edappadipalaniswami






