search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி என் மீது வழக்கு போட்டால் சந்திக்கத் தயார்- முக ஸ்டாலின் சவால்
    X

    எடப்பாடி பழனிசாமி என் மீது வழக்கு போட்டால் சந்திக்கத் தயார்- முக ஸ்டாலின் சவால்

    எடப்பாடி பழனிசாமி தன் மீது வழக்கு போட்டால் சந்திக்கத் தயார் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். #DMK #MKStalin #Edappadipalaniswami
    காஞ்சீபுரம்:

    மதுராந்தகத்தில் எஸ்.டி. உகம்சந்த் படத்திறப்பு நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய துறையை பயன்படுத்தி ஒப்பந்ததாரர் அடிப்படையிலே தன்னுடைய உறவினருக்கு காண்ட்ராக்டை கொடுத்திருக்கிறார். ஏறக்குறைய ரூ. 3 ஆயிரம் கோடிக்கு மேலே அதிலே ஊழல் நடைபெற்றிருக்கிறது.

    இதை உடனடியாக விசாரிக்க வேண்டும். இதற்குரிய தண்டனையை அவருக்கு வழங்கிட வேண்டும் என்று அமைப்புச் செயலாளர் அந்த வழக்கை தி.மு.க. சார்பில் தொடுத்தார்.

    சென்னை உயர்நீதிமன்றம் இதையெல்லாம் அடிப்படையாக வைத்து முகாந்திரம் இருக்கிறது என்று சொல்லி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது.

    அடுத்த வினாடியே அவர் முதல்-அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து இருக்க வேண்டும். அந்த வழக்கை சந்திக்காமல், உளுந்தூர்பேட்டையிலே போய் அவர் இதை திசை திருப்புகிற வகையில் நாங்களும் தி.மு.க. மீது வழக்கு போடுவோம் என்கிறார்.

    எங்கள் மீது வழக்கு போடுங்கள், நாங்கள் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம். எத்தனையோ வழக்குகள் எங்கள் மீது போடப்பட்டதுண்டு. எம்.ஜி.ஆரே எங்கள் மீது வழக்கு போடவில்லையா? சர்க்காரியா கமி‌ஷனை மறந்திருப்பீர்களா?

    சென்னை மாநகரத்திலே 9 மேம்பாலங்கள் நான் மேயராக இருந்தபோது கட்டப்பட்டது. ஆட்சி மாறிய பிறகு ஜெயலலிதா முதல்-அமைச்சராக வந்ததற்கு பிறகு அதற்காக வழக்கு போட்டார்.

    வழக்கு போட்டது மட்டுமல்ல, இரவோடு இரவாக தலைவர் கலைஞர் வீட்டிலே தூங்கிக் கொண்டிருந்தபோது காவல் துறையைச் சேர்ந்த அதிகாரி உள்ளே புகுந்து தரதரவென இழுத்து வந்த அந்தக் கொடிய காட்சிகள் எல்லாம் பார்த்து உலகமெங்கும் இருக்கக் கூடிய தமிழர்கள் அத்தனைபேரும் வேதனைப் பட்டார்கள்.

    பாலம் வீக்கென்று சொன்ன ஜெயலலிதா, அதே பாலத்தின் மேல்தான் தொடர்ந்து கோட்டைக்கு போய் கொண்டும் வந்து கொண்டும் இருந்தார். பாலம் வீக்கென்று சொல்லி நம் மீது வழக்கு. வழக்கு போட்டு ஐந்து வருடங்கள் ஆகி விட்டது. ஐந்து வருடமாக ஒரு சார்ஜ்சீட் பைல் பண்ண முடிந்ததா?.

    தலைவரை கைது செய்தீர்கள். என்னை கைது செய்தீர்கள், பொன் முடியை கைது செய்தீர்கள், கோ.சி.மணியை கைது செய்தீர்கள். இப்படி பலபேரை கைது செய்து சிறையில் வைத்தீர்கள். வழக்கு போட்டதற்கு பிறகு அதே அ.தி.மு.க. ஆட்சி ஒரு சார்ஜ் சீட் பைல் செய்ததா என்றால், கிடையாது.

    2ஜி, 2ஜினு ஒரு பிரச்சனையை கிளப்பினார்ளே. எவ்வளவு திட்டமிட்டு பிரசாரம் நடந்தது. அது என்ன ஆனது? நீதிமன்ற தீர்ப்பில் எந்த முகாந்திரமும் இல்லை. அத்தனை பேரும் விடுதலை. இதுதான் தி.மு.க. நாங்கள் எத்தனையோ முறை சிறைக்குப் போய் இருக்கிறோம். ஆனால் இவர்களைப் போல கொள்ளையடித்து விட்டு போகவில்லை.

    இதே எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு தி.மு.க. தலைமைச் செயலகம் கட்டியதில் ஊழல் என்கிறார். அதை இன்றைக்கு நாங்கள் போய் நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கி விட்டோம். அந்த வழக்கு போடப்பட்டதற்கு பிறகு இதுவரையிலே 7 வருடம் ஆயிற்று. இதுவரையில் அதுபற்றி விசாரணை நடந்ததா? கிடையாது.

    ஆனால் விசாரணைக் கமி‌ஷன், அதற்கு ஒரு அலுவலகம், 3 கார்கள், போலீஸ் ஏறக்குறை 10 கோடி ரூபாய் அந்த நீதிபதிக்கே செலவு. இதைக் கண்டித்து உயர்நீதிமன்றம் என்ன செய்தது என்றால், அந்த கமி‌ஷனையே கலைத்து விட்டது.

    ஆனால் முதல்-அமைச்சராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் என்ன சொல்கிறது? ஆதாரங்கள் இருக்கிறது, அடிப்படை ஆதாரங்கள் இருக்கிறது. எனவே இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறது. அதை எதிர்த்து நியாயமாக எடப்பாடி என்ன செய்திருக்க வேண்டும்?

    சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று தடை வாங்கியிருக்க வேண்டும். வாங்குவேன் என்று சொன்னார். இதுவரைக்கும் வாங்கவில்லை. ஆனால், வாங்குவதற்கு நாம் தடை போட வேண்டும். அதை வாங்கினால் எங்களையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று சொல்லி, நம்முடைய ஆர்.எஸ்.பாரதி சார்பில் கேவியட்டும் போட்டு வைத்துள்ளோம்.

    எங்களுக்கு தைரியம் இருக்கிறது. தெம்பு இருக்கிறது, நாங்கள் கேவியட் போடுகின்றோம். தலைமைச் செயலக வழக்கில் எங்களுக்கு ஸ்டே கொடுத்துள்ளார்கள். அதை எதிர்த்து அப்பீலுக்கு செல்லும் தைரியும் உங்களுக்கு இல்லை. ஆனால் உளுந்தூர்பேட்டையில் வந்து புலம்பிக் கொண்டு போயிருக்கிறீர்கள்.

    18 எம்.எல்.ஏ. தீர்ப்பு வரட்டும். வந்ததற்கு பிறகு தான் இருக்கிறது கதை. ஏதோ ஆட்சியில் இருக்கிறோம். பதவியில் இருக்கிறோம். அதிகாரம் இருக்கிறது என்கிற திமிரில் இப்படி எல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். இதற்கெல்லாம் முடிவு கட்டக்கூடிய காலம் வரப் போகிறது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin #Edappadipalaniswami
    Next Story
    ×