என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீதிமன்ற கட்டிடத்தினை சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தகில்ரமானி மற்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தனர்.
பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மீது அவரின் கீழ் பணியாற்றும் காவல் துறையினர் குற்றச்சாட்டுகள் வைத்துள்ளனர். அவர்களை இப்படித்தான் விசாரணை செய்ய வேண்டும், இப்படித்தான் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும். மனித உரிமைகளை மீறக் கூடாது. அவர் மீது கூறப்படுவது மிகப்பெரிய குற்றச்சாட்டு, பொன்.மாணிக்கவேல் என்பதால் அவர் மீது விசாரணை நடத்தாமல் இருக்க முடியாது. அவர் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்.
விசாரணையின் போது தமிழக அரசு தனது நிலைப்பாட்டினை எடுத்துரைக்கும்.
மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தகில் ரமானி பேசியதாவது:-
புதிய சார்பு நீதிமன்ற கட்டிடம் அமைப்பின் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது.

வழக்கு தொடுத்தவர்கள் பயன்பெறும் வகையில் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டிய உதவிகளை உயர்நீதிமன்றம் செய்து கொடுக்கும். இதனால் வழக்கு தொடுத்தவர்கள் பயன் பெறுவர். புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதன் மூலம் இளம் வழக்கறிஞர்கள் நிறைய அனுபவங்களை பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் விமலா, பவானி சுப்பராயன், மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா, மாவட்ட நீதிமன்றம்-2 நீதிபதி கருணாநிதி, மற்றும் நீதிபதிகள் கீதாராணி, பாக்கியஜோதி, மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி.
காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், நிர்வாகிகள் வி.சோமசுந்தரம், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், காஞ்சி பன்னீர்செல்வம், அத்திவாக்கம் ரமேஷ், அக்ரி நாகராஜன், படுநெல்லிதயாளன், அதிமுக வழக்கறிஞர் அணி கே.ரவிச்சந்திரன், ஜி.எம்.சி. ஜீவரத்தினம்
பார் அசோசியேசன் தலைவர் கார்த்திகேயன், செயலாளர் சுப்பிரமணி, லாயர் அசோசியேசன் தலைவர் பார்த்தசாரதி, செயலாளர் கார்த்திகேயன்,
அட்வகேட் அசோசியேசன் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சத்தியமூர்த்தி, மூத்த வழக்கறிஞர்கள் டி.சி.வரதராஜன், டோமேசன், ஒய்.தியாகராஜன், கேதார் நாத், தாங்கி பழனி, துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #CVShanmugam #PonManickavel
இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜி.எஸ்.எல்.வி-எப் 11 ராக்கெட் மூலமாக ஜி.சாட்7ஏ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கடந்த 35 நாட்களில் 3-வது செற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான செயலியை தமிழக அரசிடம் வழங்கி உள்ளோம். அவர்கள் பயன்படுத்துவதை பொறுத்து அதை இன்னும் மேம்படுத்த முயற்சி செய்வோம். மங்கள்யான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #ISRO #ISROChairman
108 திவ்ய தேசங்களில் புகழ் பெற்ற காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள்கோவில், அஷ்டபுஜம் பெருமாள் கோவில்களில் நேற்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன், காஞ்சீபுரம் உதவி ஆணையர் ரமணி, கோவில் செயல் அலுவலர்கள் குமரன், கவிதா உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவிலில் உள்ள புகழ் பெற்ற பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
இதேபோல் 108 திவ்யதேசங்களில் ஒன்றான மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சொர்க்க வாசல் திறப்பையொட்டி குலசேகரஆழ்வார் ராமானுஜா அறக்கட்டளை சார்பில் வைணவ பக்தர் கிருஷ்ணராமானுஜர் தாசர் விழாவில் கலந்து கொண்ட 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சங்கர் செய்திருந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆதிலட்சுமி சமேத ஆதிகேசவபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பள்ளிப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வரதநாராயண சாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழும் திருவள்ளூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதே போல திருவள்ளூர் பூங்காநகரில் உள்ள ஜலநாராயண சாமி கோவில் மற்றும் பேரம்பாக்கம் கமலவள்ளி சமேத வைகுண்ட பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து நேற்று இரவு ஒரு விமானம் துபாய் செல்ல தயாராக இருந்தது.
இந்தநிலையில் பயணி ஒருவர் அனுமதி இல்லாமல், வெளிநாட்டு பணம் கொண்டு செல்வதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் இந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகளிடம் சோதனை செய்தனர்.
சோதனை நடந்தபோது, ஒருவருடைய நடவடிக்கை வித்தியாசமாக இருந்தது. அவரை தனியாக அழைத்துச் சென்று அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அவருடைய பை மற்றும் உள்ளாடையில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் நோட்டுகளை மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய பணத்தில் அதன்மதிப்பு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.
அந்த பயணியின் பெயர் அப்துல்லா (38). ராமநாதபுரத்தை சேர்ந்தவர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஆலந்தூர்:
பழவந்தாங்கல் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள குடிநீர் குழாய்களில் நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை.
கடந்த சில தினங்களாக இந்த தெருவில் உள்ள சிந்தடிக் டேங்குகளிலும் தண்ணீர் திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இந்த பகுதி பெண்கள் இன்று காலை 9 மணி அளவில் பழவந்தாங்கல் ரெயில்வே சுரங்கப்பாதையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் இந்த வழியாக கிண்டி, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. வேலைக்கு செல்வோரும், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் அவதிக்குள்ளாயினர்.
தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். மெட்ரோ குடிநீர் அதிகாரிகளும் வர வழைக்கப்பட்டனர். அவர்களிடம் பெண்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
உடனே தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக இந்த பகுதியில் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போரூர்:
காஞ்சீபுரம் அருகே உள்ள பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் மாணிக்கம் (வயது 22).
கடந்த 29-ந் தேதி மாணிக்கம் காஞ்சீபுரம் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் நண்பர்களுடன் மது அருந்தினார். அப்போது அருகே இருந்தவர்களுடன் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து விஷ்ணு காஞ்சி போலீசார் மாணிக்கத்தை விசாரணைக்காக அழைத்து சென்றனர். விசாரணையின்போது திடீரென மாணிக்கம் மயங்கி சுருண்டு விழுந்தார்.
உடனடியாக அவரை சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் தாக்கியதில் மாணிக்கம் உயிர் இழந்து விட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துபாயில் இருந்து இன்று அதிகாலை 2.15 மணிக்கு ஒரு விமானம் வந்தது.
இதில் சென்னை வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த 2 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒன்றரை கிலோ எடை கொண்ட இந்த தங்கத்தின் மதிப்பு 49 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இன்று காலை 3.30 மணிக்கு சென்னையில் இருந்துஇலங்கை சென்ற விமானத்தில் பயணி ஒருவரிடம் வெளிநாட்டு பணம் இருப்பதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த முகமது ஹாரிப் என்பவரின் பையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள குவைத்தினார், யூரோ பணம் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலையில் காஞ்சிபுரம் வந்தார். அங்குள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். பின்னர் காஞ்சி சங்கர மடத்திற்கு சென்ற அவர் விஜயேந்திரரை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து வழக்கருத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிப்பட்டார்.

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு எடுத்த நடவடிக்கை, நடந்த நிவாரணப் பணிகள் பாராட்டும்படி இருந்தன. தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 11 லட்சத்து 17 ஆயிரம் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான இலவச திட்டங்களை அரசு வழங்கி வருகிறது.
அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏழை மாணவர்களின் பெற்றோர்களின் ஆங்கில வழி கல்வி ஆசை இதன் மூலம் நிறைவேறும்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #TNGovtSchools #Sengottaiyan
போரூர்:
போரூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் சப்ளை செய்து வந்த மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து ஏராளமான போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் குமரேசன் அளித்த தகவலின்படி, போரூர் பைபாஸ் சாலை அருகே நேற்று இரவு நைஜீரியாவைச் சேர்ந்த சிகு சைமன் ஒபானா (30) என்பவரை போரூர் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
அவனிடமிருந்து 450 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவன் நெதர்லாந்து நாட்டில் இருந்து போதை மாத்திரைகளை வரவழைத்து ஓட்டலில் அறை எடுத்து தங்கி அதை சென்னை, கோவா, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டாளிகள் மூலம் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.
சென்னையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை சப்ளை செய்யப்பட்டு இருக்கிறது. கைதான சிகு சைமனுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தூத்துக்குடி செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கலை, இலக்கியம், அரசியல் ஆகியவற்றில் புகழ்பெற்று கொடிகட்டி பறந்தவர் கலைஞர் கருணாநிதி. அவரது சிலையை திறக்க அன்னை சோனியா காந்தி, அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் வந்து பெருமை சேர்த்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி.
சிலை திறப்பு விழாவின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து அறிவித்துள்ளார். இதை முழுமனதுடன் வரவேற்கிறோம்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க விடாமல் தடுப்பதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வாதாடி, இந்த ஆலையை மூடுவதற்கு நிரந்தர தடை பெற வேண்டும்.
இந்த ஆலையை மூடுவதற்காக நடந்த மக்கள் போராட்டத்தில் 13 பேர் உயிர்தியாகம் செய்துள்ளனர். அதை அவமதிக்கும் வகையில் மீண்டும் ஆலை திறக்கப்படுவதை முழு மூச்சுடன் அரசு தடுக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். இன்று தமிழகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்று இருப்பதற்கு காங்கிரசும், அன்றைய மத்திய காங்கிரஸ் அரசிடம் இருந்து பல்வேறு திட்டங்களை பெற்று செயல்படுத்திய தி.மு.க.வும் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
கடந்த நான்கரை வருடங்களாக மத்தியில் ஆட்சி செய்யும் மோடியின் பா.ஜனதா அரசு தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar #MKStalin
ஆலந்தூர்:
கருணாநிதியின் முழு உருவச்சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வருகை தர உள்ளனர்.
அவர்களை வரவேற்று விமானநிலையத்தில் இருந்து கத்திபாரா பாலம் வரை காங்கிரஸ் கட்சியினர் பேனர்கள் வைத்து உள்ளனர். அனுமதி பெறாமல் பேனர்களை வைத்ததாக கூறியும் அதை அகற்ற கோரியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இன்று போராட்டம் நடத்தினார்.
ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பரங்கிமலை தாபால் நிலையம் அருகே ரோட்டில் பிளாட்பாரத்தில் அமர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன், ஆலந்தூர் பகுதி செயலாளர் சீதாபதி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் கோவிந்த ராஜூ மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் வந்தனர். போலீசாரிடம் அனுமதி பெற்று பேனர்கள் வைத்ததாக காங்கிரசார் தெரிவித்தனர். அதையடுத்து டிராபிக் ராமசாமியுடன் போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். #TrafficRamasamy #soniagandhi #karunanidhi
கோவையில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் திடீரென்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது 35 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் காணப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது சூட்கேஸை பரிசோதனை செய்தபோது அதில் 14 தங்க கட்டிகள் இருந்தன. அதன் எடை 1.6 கிலோ ஆகும். அதன் மதிப்பு சுமார் ரூ.52.5 லட்சம்.
விமானத்தின் கழிவறையில் கவரில் தங்க கட்டிகள் இருந்ததாகவும் அதை தனது சூட்கேசில் வைத்து எடுத்து வந்ததாகவும் அந்த பயணி தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






