என் மலர்
நீங்கள் தேடியது "water demand"
ஆலந்தூர்:
பழவந்தாங்கல் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள குடிநீர் குழாய்களில் நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை.
கடந்த சில தினங்களாக இந்த தெருவில் உள்ள சிந்தடிக் டேங்குகளிலும் தண்ணீர் திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இந்த பகுதி பெண்கள் இன்று காலை 9 மணி அளவில் பழவந்தாங்கல் ரெயில்வே சுரங்கப்பாதையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் இந்த வழியாக கிண்டி, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. வேலைக்கு செல்வோரும், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் அவதிக்குள்ளாயினர்.
தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். மெட்ரோ குடிநீர் அதிகாரிகளும் வர வழைக்கப்பட்டனர். அவர்களிடம் பெண்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
உடனே தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக இந்த பகுதியில் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.