search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலினை முதல்வராக்க காங்கிரஸ் ஒத்துழைக்கும்- திருநாவுக்கரசர்
    X

    முக ஸ்டாலினை முதல்வராக்க காங்கிரஸ் ஒத்துழைக்கும்- திருநாவுக்கரசர்

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்த தமிழக முதல்வராக்க காங்கிரஸ் ஓத்துழைக்கும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Congress #Thirunavukkarasar #MKStalin
    ஆலந்தூர்:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தூத்துக்குடி செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கலை, இலக்கியம், அரசியல் ஆகியவற்றில் புகழ்பெற்று கொடிகட்டி பறந்தவர் கலைஞர் கருணாநிதி. அவரது சிலையை திறக்க அன்னை சோனியா காந்தி, அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் வந்து பெருமை சேர்த்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி.

    சிலை திறப்பு விழாவின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து அறிவித்துள்ளார். இதை முழுமனதுடன் வரவேற்கிறோம்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மோடி மறைமுகமாக இயக்கும் எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வரும். அடுத்து தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார்.


    இதற்கு காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்பு கொடுக்கும். எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட்டு வெற்றியை குவிக்கும்.

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க விடாமல் தடுப்பதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வாதாடி, இந்த ஆலையை மூடுவதற்கு நிரந்தர தடை பெற வேண்டும்.

    இந்த ஆலையை மூடுவதற்காக நடந்த மக்கள் போராட்டத்தில் 13 பேர் உயிர்தியாகம் செய்துள்ளனர். அதை அவமதிக்கும் வகையில் மீண்டும் ஆலை திறக்கப்படுவதை முழு மூச்சுடன் அரசு தடுக்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். இன்று தமிழகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்று இருப்பதற்கு காங்கிரசும், அன்றைய மத்திய காங்கிரஸ் அரசிடம் இருந்து பல்வேறு திட்டங்களை பெற்று செயல்படுத்திய தி.மு.க.வும் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    கடந்த நான்கரை வருடங்களாக மத்தியில் ஆட்சி செய்யும் மோடியின் பா.ஜனதா அரசு தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar #MKStalin
    Next Story
    ×