search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீன்கடைகளில் திடீர் ஆய்வு
    X

    கம்பம் நகரில் உள்ள மீன்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கம்பத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீன்கடைகளில் திடீர் ஆய்வு

    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மீன் வளர்ச்சி துறை அதிகாரி உள்ளிட்டோர் கம்பத்தில் உள்ள மீன் கடைகளில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 25 கிலோ மதிப்பிலான கெட்டுப்போன மீன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் நகரில் ஓடைக்கரை தெரு, வ.உ.சி திடல் பகுதிகளில் கெட்டுப்போன மீன்கள் மற்றும் ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது.

    இதனை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மீன் வளர்ச்சி துறை அதிகாரி உள்ளிட்டோர் கம்பத்தில் உள்ள மீன் கடைகளில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மணிமாறன், மதன்குமார், சுரேஷ்குமார் மற்றும் வைகை அணை மீன்வளத்துறை மேற்பார்வையாளர் ராஜா ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

    அப்போது கம்பம் ஓடைக்கரை தெரு பகுதியில் உள்ள மீன் கடைகளில் சென்று ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுகிறதா எனவும், கெட்டுப்போன மீன்கள் பதப்படுத்தப்பட்டு விற்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

    ஓடைக்கரை தெருவில் உள்ள5-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த ஆய்வு நடைபெற்றது .அப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 25 கிலோ மதிப்பிலான கெட்டுப்போன மீன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்து இந்த மீன் விற்பனையில் ஈடுபட்ட கடைக்காரர்களை இது போன்ற விற்பனையில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரித்தனர். தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.

    தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் பினாயில் ஊற்றி முற்றிலுமாக அளிக்கப்பட்டது. இதற்கிடையே இன்று நடைபெற்ற இந்த திடீர் ஆய்வானது வெறும் கண்துடைப்பாக நடைபெற்றதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கம்பம் நகரில் பல்வேறு பகுதிகளில் மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலமாக தமிழகம் மற்றும் அண்டை மாநிலமான கேரளா பகுதியில் இருந்து மீன்கள் கொண்டுவரப்பட்டு வீதி வீதியாக சென்று விற்பனையும் நடைபெறுகிறது.

    இவ்வாறு நடைபெறும் விற்பனையில் ஏராளமான கெட்டுப்போன மீன்களே அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இது போன்ற மீன் கடைகள் மற்றும் தெருக்களில் வாகனங்களில் விற்பனை செய்யும் மீன் வண்டிகளையும் சோதனை மேற்கொள்ளவில்லை. ஆகவே இந்த சோதனையானது வெறும் கண்துடைப்பாகவே நடைபெற்றது என குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் கம்பம் நகரில் ஏராளமான ஆட்டு இறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி கடைகள் உள்ளது. இந்த கடைகளிலும் பதப்படுத்தப்பட்ட பழைய இறைச்சிகளை விற்பனை செய்வதாக தொடர்ந்து பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.முதல் நாள் இறைச்சியினை குளிர்சாதன பெட்டியில் வைத்து மறுநாள் விற்பனை செய்கின்றனர். இது போன்று விற்பனை செய்யும் இறைச்சி கடைகளின் மீது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எந்த ஒரு சோதனையும் மேற்கொள்வதில்லை எனவே தேனி மாவட்ட கலெக்டர் இதனை கவனத்தில் கொண்டு இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமும் மட்டுமல்லாது ஆடி முதல் நாள் என்பதால் கம்பம் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் பொதுமக்கள் அதிகளவில் இறைச்சிகள் வாங்க குவிந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×