என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கொத்தமங்கலம் வனப்பகுதி போலிபள்ளம் பகுதியில் வனத்துறை சார்பில் கட்டை அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது.
    • வனத்துறையினர் வலைகள் மற்றும் மான் கறி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, பவாளிசாகர் உள்பட 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கடி, மான் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த வனப்பகுதியில் ஒரு சிலர் அனுமதியின்றி நுழைந்து மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி வருகிறார்கள். வனத்துறை அதிகாரிகளும் அடிக்கடி ரோந்து சென்று வன விலங்குகளை வேட்டையாடும் கும்பலை பிடித்து அபராதம் விதிப்பது மற்றும் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். ஆனாலும் சிலர் வனப்பகுதியில் புகுந்து மான் உள்ளிட்டவைகளை வேட்டையாடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் கொத்தமங்கலம் வனப்பகுதி போலிபள்ளம் பகுதியில் வனத்துறை சார்பில் கட்டை அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. அந்த குட்டையில் மான்கள் தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் பவானிசாகர் வன சரகத்துக்குட்பட்ட கொத்தமங்கலம் காப்பு காடு வனப்பகுதியில் வன சரகர் சிவகுமார், வன காப்பாளர் மற்றும் வனப்பகுதி பணியாளர்கள் ரோந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது கொத்தமங்கலம் வனப்பகுதி போலி பள்ளம் பகுதியில் 4 பேர் நைலான் வலைகளுடன் சுற்றி கொண்டு இருந்தனர். இதையடுத்து வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சத்தியமங்கலம் அடுத்த புதுப்பீர் கடவு பகுதியை சேர்ந்த சின்னசாமி (44), கார்த்திகேயன் (21), திருப்பூரை சேர்ந்த சதீஸ்குமார் (23), வெங்கடேஷ் (28) என்பதும், நைலான் வலைகள் மூலம் மான்களை வேட்டையாடியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் அவர்களிடம் இருந்து வலைகள் மற்றும் மான் கறி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர். 

    • வீட்டில் உள்ள அறையில் பீரோ திறக்கப்பட்டு துணிமணிகள் பொருட்கள் சிதறி கிடந்தன.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் சரோஜா (71). கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் ஜெகதீஷ் இறந்து விட்டார். சரோஜா வீடு அருகே அவரது மகள் வீடும் உள்ளது. சரோஜா வீட்டில் தனியாக வசித்தாலும் இரவு நேரத்தில் மகள் வீட்டில் சாப்பிட்டு தூங்குவது வழக்கம்.

    அதைபோல் நேற்று இரவும் வழக்கம்போல் மகள் வீட்டில் சாப்பிட்டு அங்கேயே தூங்கிவிட்டார். இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கீழே கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் ரோட்டில் இருந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சரோஜா வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் பீரோ திறக்கப்பட்டு துணிமணிகள் பொருட்கள் சிதறி கிடந்தன.

    பீரோவில் இருந்த வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது. பணம், நகை இல்லாததால் தப்பியது. நள்ளிரவில் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் சி.சி.டி.வி. பொருத்தப்பட்டிருந்ததால் முகம் தெரியாமல் இருப்பதற்காக கால் மிதியடியை கேமிராவில் மேல் போட்டு முடிவு உள்ளனர்.

    இதுகுறித்து கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதேப்போல் கோபி ஈஸ்வரன் கோவில் எதிரே உள்ள பானுமதி என்பவர் வீட்டில் ஆளில்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். ஆனால் பணம், நகை, வெள்ளி பொருட்கள் எதுவும் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று விட்டனர்.

    இது குறித்தும் கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர் மழையால் ராஜ பாளையம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் 6-வது மைல் நீர்த்தேக்க ஏரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
    • வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து செயல்பட்டு ஆங்காங்கே மலைப்பாதையில் சிக்கியிருந்த பக்தர்களை பத்திரமாக கீழே இறக்கினர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக விருதுநகர் நகர் பகுதியில் நேற்று மாலை தொடங்கிய சாரல் மழை இன்று காலை வரை விடிய, விடிய பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

    இன்று காலையில் தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

    மாவட்டத்தின் பிற பகுதிகளான சாத்தூர், சிவகாசி, இருக்கன்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜ பாளையம், வத்திராயிருப்பு, பிளவக்கல் அணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2-வது நாளாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பெய்தது.

    வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் வெம்பக் கோட்டை நீர்த்தேக்க அணை இன்று அதிகாலை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் வட்டாட்சியர் பாண்டீஸ்வரி முன்னிலையில் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் இருக்கன்குடி நீர்த்தேக்கத்தை அடையும். இதன் காரணமாக ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள பேயனாறு, அய்யனார் ஆறு மற்றும் காட்டாற்றுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் ராஜ பாளையம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் 6-வது மைல் நீர்த்தேக்க ஏரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.


    ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குளங்கள், கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. வத்திராயிருப்பு பகுதியிலும் தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிளவக்கல் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து கணிசமாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அங்குள்ள மரிச்சு கட்டு பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள கூமாபட்டி, முதலியார்பட்டி, கொளூர்பட்டி, தெற்கு தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர் வீடுகளில் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். பல இடங்களில் மரங்கள் வேரோடு முறிந்துவிழுந்தன. மின்தடை ஏற்பட்டது.

    அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்மழை பெய்து வருகின்றன. 2 நாட்களாக கொட்டித்தீர்த்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள 80 சதவீத நீர்நிலைகளில் தண்ணீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் பெய்த கனமழையால் கண்மாய்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் வயல்களில் புகுந்து நெற் பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மலை ஏறினர். மாலையில் சதுரகிரி மலை பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. இதனால் பக்தர்கள் அவசர அவசரமாக மலையில் இருந்து இறங்கினர். ஆனாலும் கனமழையால் மலைப் பாதையில் உள்ள மாங்கனி ஓடை, எலும்போடை, சங்கிலிபாறை, பிளாவடி கருப்பசாமி பகுதியில் உள்ள ஓடைகளில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    இதையடுத்து வனத்துறை யினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து செயல்பட்டு ஆங்காங்கே மலைப்பாதையில் சிக்கியிருந்த பக்தர்களை பத்திரமாக கீழே இறக்கினர்.

    தொடர் மழையால் காட்டாற்றுகளில் வெள்ளம் அதிகரிக்கவே சதுரகிரி மலைக்கோவிலில் இருந்த 200 பக்தர்கள் கீழே இறங்க பக்தர்கள் அனுமதி மறுத்தனர். அவர்கள் கோவிலிலேயே தங்க வைக்கப் பட்டனர். இன்று காலை வரை மழை நிற்காததால் பக்தர்கள் கோவிலிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் மலைப் பாதையில் உள்ள மாங்கனி ஓடை அருகே சிக்கியிருந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோரை இன்று காலை நிலை அலுவலர் பால நாகராஜ், வனச்சரக அலுவலர் பிரபாகரன், வனவர் அபிஷேக்குமார் தலைமையிலான வீரர்கள் கயிறு கட்டி மீட்டு அடிவாரத்திற்கு பத்திரமாக கொண்டு வந்தனர். மழை நின்ற பின்பு சதுரகிரி மலையில் உள்ள பக்தர்கள் கீழே இறங்க அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருச்சுழி-149.50, ராஜபாளையம்-136, காரியாபட்டி-81, ஸ்ரீவில்லிபுத்தூர்-153.90, விருதுநகர்-126.80, சாத்தூர்-203, சிவகாசி-171, பிளவக்கல்-142, வத்திராயிருப்பு-144.80, கோவிலாங்குளம்-167.40, வெம்பக்கோட்டை-180, அருப்புக்கோட்டை-124, மொத்த மழை அளவு-1779.40 மி.மீ. ஆகும்.

    சிவகங்கை மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் மழை பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மானாமதுரை, இளையாங்குடி பகுதிகளில் லேசான மழை பெய்தது. இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    • அடர்ந்த வனப்பகுதிக்குள் வேட்டையாடும் கும்பல் வந்து விலங்குகளை வேட்டையாடுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
    • அதிர்ச்சி அடைந்த வனத்துறை ஆர்வலர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தெங்குமரஹாடா வனப்பகுதி உள்ளது. தெங்குமரஹாடா மாயற்றை மையமாக கொண்டு பவானிசாகர் வனப்பகுதியில், நீலகிரி வனப்பகுதியும் உள்ளது.

    இந்த அடர்ந்த வனப்ப குதியில் மாவோயிஸ்ட் மற்றும் நக்சலைட் நட மாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்கும் வகையில் நக்சல் ஒழிப்பு பிரிவு போலீசார், அதி விரைவு படை போலீசார் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த அடர்ந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், காட்டு முயல் ஆமை, முதலைகள் போன்ற வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    அவ்வப்போது அடர்ந்த வனப்பகுதிக்குள் வேட்டையாடும் கும்பல் வந்து விலங்குகளை வேட்டையாடுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று தெங்குமரஹாடா மாயாற்று அடர்ந்த வனப்பகுதியில் அதிவிரைவு படை போலீசார் சிலர் வனப்பகுதியில் இருந்து ஆமையை எடுத்து வந்து கத்தியால் ஆமையை அறுத்து சமைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடை ந்த வனத்துறை ஆர்வலர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். சம்பவம் நடந்த பகுதி ஈரோடு மாவட்ட எல்லை வனப்பகுதியும், நீலகிரி மாவட்ட எல்லை வனப்பகுதியில் அமைந்துள்ளதால் அந்த வீடியோவில் இருக்கும் வீரர்கள் யார் என்று உடனடியாக தெரியவில்லை.

    இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறை அலுவலர் சுதாகர் விசாரணை நடத்தி வருகிறார்.

    • பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ராமர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    • தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி குன்றி அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் ராமர் (35). இவர் வெளியூரில் போர் போடும் வண்டிக்கு வேலைக்கு சென்று வந்தார். ராமரிடம் அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் நானும் உன்னுடன் வேலை வருகிறேன் எனக்கு முன் பணம் வாங்கித் தருமாறு ராமரிடம் கேட்டுள்ளார்.

    இதையடுத்து ராமர் தான் வேலை பார்க்கும் போர்வெல் நிறுவனத்திற்கு கண்ணனை அழைத்து சென்று முன் பணம் வாங்கிக் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட கண்ணன் வேலைக்கு சரியாக வராமல் வேறு வேலைக்கு சென்றுவிட்டார்.

    இதனால் கண்ணன் பெற்ற முன் பணத்தை ராமர் போர்வெல் நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளார். பின்னர் ராமர் முன் பணத்தை கொடுக்குமாறு கண்ணனிடம் கேட்டுள்ளார். இத்தொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்று விட்டு ராமர் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது கண்ணன் வீட்டிற்கு சென்று நீ கொடுக்க வேண்டி பணத்தை நான் கொடுத்துவிட்டேன் எனக்கு பணத்தை எனக்கு கொடு என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கண்ணனின் தம்பி மாதேஷ் (30) மது போதையில் ராமர் வீட்டின் முன்பு நின்று கொண்டு தகாத வார்த்தையில் ராமரை பேசியுள்ளார். என் அண்ணன் பணத்தை திருப்பி தரமாட்டான். என்ன வேண்டுமாலும் செய்துகொள் எனக் கூறியுள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த மாதேஷ், ராமரை சாலையின் நடுவே தள்ளிவிட்டு கீழே கிடந்த கல்லை எடுத்து தலையில் அடித்துள்ளார். இதில் ராமர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார்.

    உடனடியாக பகுதி மக்கள் ராமரை ஜிப்பின் மூலம் மீட்டு குன்றி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ராமர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாதேசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆத்திரமடைந்த 4 பேர் கொண்ட கும்பல் சேதுராமனை தாக்கினர்.
    • தாக்குதல் காட்சிகள் அனைத்தும் ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளில் பதிவானது.

    ஈரோடு:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன் அமராவதி, நாகப்பட்டியை சேர்ந்தவர் சேதுராமன் (27). இவர் ஈரோடு பகுதியில் தங்கியிருந்து சூரம்பட்டி நால் ரோட்டில் உள்ள ஓட்டலில் கடந்த 2 வருடங்களாக பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு ஓட்டலுக்கு 4 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் கடையில் அமர்ந்து சாப்பிடும் நேரம் முடிந்து விட்டதால் பார்சலில் மட்டும் உணவு வழங்க முடியும் என சேதுராமன் கூறியதாக தெரிகிறது.

    இது தொடர்பாக சேதுராமனுக்கும், அந்த 4 பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 4 பேர் கொண்ட கும்பல் சேதுராமனை தாக்கினர். மேலும் அதில் ஒருவர் கீழே கிடந்த தேங்காயை எடுத்து சேதுராமன் மீது வீசினார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். காயமடைந்த சேதுராமன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் காட்சிகள் அனைத்தும் ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளில் பதிவானது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த கும்பல் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    • ஐ.சி.சி.யின் முடிவை நான் மதிக்கிறேன். ஆனால் அனுமதியை பெற தொடர்ந்து போராடுவேன்.
    • நான் எந்த தரப்பின் பக்கமும் நிற்கவில்லை. நான் ஒரு முதிர்ச்சியடைந்த மனிதன், நான் விரும்பும் எதையும் என்னால் செய்ய முடியும்.

    பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா, அணிந்திருந்த 'ஷூ'வில் சுதந்திரம் அனைவருக்குமானது. எல்லா உயிர்களும் சமமானது என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது.

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அவர் அந்த வாசகத்தை வைத்துள்ளார். ஐ.சி.சி. விதிமுறைப்படி எந்தவொரு அரசியல் குறித்தான பதிவையும் வீரர்கள் அணிந்திருக்க கூடாது.

    இதையடுத்து அந்த வாசகம் இடம் பெற்ற ஷூவை கவாஜா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணியக்கூடாது என்று ஐ.சி.சி. தெரிவித்தது.

    இதுகுறித்து "கவாஜா கூறும்போது, ஐ.சி.சி.யின் முடிவை நான் மதிக்கிறேன். ஆனால் அனுமதியை பெற தொடர்ந்து போராடுவேன்" என்றார்.

    மேலும் அவர் கூறும்போது, "அனைத்து உயிர்களும் சரிசமம் என நான் கூறியதில் எந்தத் தவறும் இல்லை; அரசியலும் இல்லை. நான் எந்த தரப்பின் பக்கமும் நிற்கவில்லை. நான் ஒரு முதிர்ச்சியடைந்த மனிதன், நான் விரும்பும் எதையும் என்னால் செய்ய முடியும், ஆனால் ஐசிசி எனக்கு அபராதம் விதித்துக் கொண்டே இருக்கும்.

    சில சமயங்களில் விளையாட்டிலிருந்து விலக்கி வைக்கும். நான் சொன்னதில் நிற்கிறேன். நான் என்றென்றும் நிற்பேன். முடிந்தவரை செய்ய முயற்சிப்பேன். ஏற்கனவே ஐசிசி அனுமதித்த முன்னுதாரணங்கள் உள்ளன என்று நினைக்கிறேன். இந்த நடவடிக்கையை நியாயமற்றது" என்றார்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • கவுந்தப்பாடி பகுதியில் பரபரப்பு நிலவியது.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பூமாண்ட கவுண்டனூரைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி (63). இவரது மனைவி தமயந்தி. இவர்களுக்கு பூரணி (28) என்ற மகளும், பிரவீன் என்ற மகனும் உள்ளனர்.

    கவுந்தப்பாடி அடுத்த சின்னியம் பாளையத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (53). இவரது மனைவி பூங்கொடி (51). இவர்களின் மகன் மதன்குமார் (29).

    இந்த நிலையில் பூரணி கல்லூரியில் படிக்கும் போது மதன்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு பூரணியும், மதன்குமாரும் வீட்டிற்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். தொடர்ந்து இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    இதற்கிடையில் பூரணியிடம் அவரது பெற்றோர் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட்டு மாதம் பூரணியை பிரசவத்திற்காக கோபி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

    அப்போது குழந்தை மற்றும் பூரணியை பார்ப்பதற்காக அவரது பெற்றோர் வந்தனர். அப்போது பூரணியை பார்க்கக் கூடாது என்று மதன்குமாரும் அவரது தாயார் பூங்கொடியும் திருப்பி அனுப்பி விட்டதாகவும், குழந்தையை பார்க்க சென்ற பூரணியின் உறவினர்களை திருப்பி அனுப்பிவிட்டதாக தெரிகிறது. இதற்கிடையில் சின்னியம்பாளையத்தில் உள்ள பூரணியில் பக்கத்து வீட்டுக்காரர் கிருஷ்ணமூர்த்திக்கு போன் செய்து பூரணிக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லை அதனால் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரி கொண்டு செல்கிறோம் என்று கூறியதாக தெரிகிறது.

    கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு பூரணியை கொண்டு சென்று அங்கு பரிசோதித்த உடன் அங்கிருந்து அதே ஆம்புலன்சில் கோபி சத்தி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அங்கிருந்து கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பூரணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளது என்று கவுந்தப்பாடி போலீசில் பூரணியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து கோபி வருவாய் கோட்டாட்சியர் பிரிய தர்தர்சினி தலைமையில் விசாரணை நடந்தது. மேலும் கோபி டி.எஸ்.பி தங்கவேல் விசாரணை நடத்தினார். பின்னர் பூரணி உடல் பிரேத பரிசோதனை பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது.

    பிரேத பரிசோதனை முடிவில் பூரணி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மதன்குமார் தனது குடும்பத்தினருடன் தலைமறைவானார்.

    இதுகுறித்து பூரணியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் திரண்டு வந்து தலைமறைவாக இருக்கும் மதன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கோபி அடுத்த ஒத்தக்குதிரை பகுதிகளில் பதுங்கி இருந்த பூரணியின் கணவர் மதன்குமார், மாமனார் யுவராஜ், மாமியார் பூங்கொடி ஆகியோரை கவுந்தப்பாடி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோபி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

    பின்னர் மதன்குமார் மற்றும் யுவராஜா ஆகியோர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். பூங்கொடி கோவையில் உள்ள பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் கவுந்தப்பாடி பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • எல்லா இடங்களுக்கு உள்ளேயும் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர்.
    • வெள்ளத்தில் சில இடங்களில் வலை வீசி மீன்களை பிடித்து வருகின்றனர்.

    சென்னையில் மிச்சாங் புயலின் தாக்கத்தால் கொட்டித் தீர்த்த பெரும் மழையின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    வீடுகள், கடைகள் என எல்லா இடங்களுக்கு உள்ளேயும் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர்.

    சென்னை வெள்ளம் தொடர்பாக பல்வேறு காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி காண்போரை கலங்க வைத்து வருகின்றன.

    இது ஒரு புறம் இருக்க சென்னை வெள்ளத்தில் சில இடங்களில் வலை வீசி மீன்களை பிடித்து வருகின்றனர்.

    இது சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    சென்னை அடையாறு ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மீனவர் ஒருவர் வலைவீசி மீன்களை பிடித்தார். அப்போது இதுவரை இல்லாத வகையில் 20 கிலோ எடை கொண்ட மீன் சிக்கியது. இதனை பிடித்த மகிழ்ச்சியில் அதனை படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை ரோகித் பரிதாபமாக இறந்தான்.
    • குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்ய கூடாது என்று கூறி கோஷமிட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மொடக்குறிச்சி அடுத்த வேளாங்காட்டு வலசு, வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி திவ்யா (26). இவர்களுக்கு 2½ வயதில் ரோகித் என்ற மகனும் உள்ளார்.

    இந்நிலையில் குடும்பத் தகராறில் நேற்று இரவு திவ்யா எலி மருந்தை குடித்து தனது மகன் ரோகித்துக்கும் எலி மருந்தை கொடுத்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை ரோகித் பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் விஜயகுமார் மற்றும் அவரது உறவினர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் திரண்டனர். குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்ய கூடாது என்று கூறி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    தொடர்ந்து அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு உள்ளனர். இந்நிலையில் திவ்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • சம்பவத்தன்று வீட்டில் மது அருந்த சென்ற அங்குராஜ் அதன் பிறகு வெளியே வரவில்லை.
    • ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ராஜகாடு முதல் வீதியை சேர்ந்தவர் அங்குராஜ் (53). கோவையில் பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி திலகவதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் அங்குராஜ் கடந்த சில நாட்கள் முன்புதான் ஈரோடு மாவட்டம் பவானி சாகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்துள்ளது. திலகவதியும், 2 மகள்களும் அவரது அம்மா வீட்டில் வசித்து வந்தனர். அங்குராஜ் மட்டும் ராஜாகாடு பகுதியில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் மது அருந்த சென்ற அங்குராஜ் அதன் பிறகு வெளியே வரவில்லை. இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் அடித்துள்ளது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் திலகதிக்கு தகவல் தெரிவித்தனர். திலகவதி மற்றும் உறவினர்கள் வீட்டின் கதவு உடைத்து உள்ளே சென்றபோது தங்கராஜ் தூக்குபோட்டு அழுகிய நிலையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணி சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த மாதம் 15, 16-ந் தேதிகளில் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான மதன் குமார் குடும்பத்தினர் அதன் பிறகு குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர்.
    • சொத்து, பணம் உள்ளிட்டவைகளை தந்தால் மட்டுமே உங்களது மகளை பார்க்க முடியும் என பூரணி வீட்டாரிடம் கூறி விட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பி.மேட்டுப்பாளையம் அடுத்த பூமாண்ட கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பூரணி (வயது 29). இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த போது ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை காதலித்து உள்ளார்.

    வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த நிலையில் பூரணியின் வீட்டாரை பார்க்க விடாமல் மதன் வீட்டார் தொடர்ந்து தடுத்து வந்து உள்ளனர்.

    மேலும் சொத்து, பணம் உள்ளிட்டவைகளை தந்தால் மட்டுமே உங்களது மகளை பார்க்க முடியும் என பூரணி வீட்டாரிடம் கூறி விட்டனர். இந்நிலையில் பூரணி கர்ப்பமானார். அப்போதும் அவரைப் பார்க்கவிடாமல் மதன்குமார் வீட்டார் தடுத்து விட்டனர்.

    பூர்ணிக்கு குழந்தை பிறந்தது. குழந்தையையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி திடீரென பூரணிக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் சிறிது நேரத்தில் பூரணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் பூரணி பெற்றோர் மகளை பார்க்க சென்றபோதும் மகன் குமார் குடும்பத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தி பார்க்க விடாமல் செய்துவிட்டனர்.

    இதனை அடுத்து பூரணி வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.டி.ஓ. உத்தரவின் பேரில் பூரணியின் உடல் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    பிரதே பரிசோதனையில் பூரணி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதன் பிறகு கடந்த மாதம் 15, 16-ந் தேதிகளில் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான மதன் குமார் குடும்பத்தினர் அதன் பிறகு குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர்.

    இந்நிலையில் இன்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு பூரணி பெற்றோர் மற்றும் உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து திடீரென முற்றுகையிற்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பூரணி பெற்றோர் கூறும்போது, எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவள் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது. எனது மகள் சாவில் மதன்குமார் குடும்பத்தினருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

    கிட்டத்தட்ட மதன்குமார் குடும்பத்தினர் தலைமறைவாகி இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. போலீசார் அவர்களை பிடிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு எனது மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தலைமறைவாக உள்ளவர்களை தனிப்படை அமைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். எஸ். பி. அலுவலகத்தில் திடீரென கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பூரணி உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பூரணி உறவினர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.

    ×