என் மலர்
ஈரோடு
- 2 தீ விபத்தையும் சேர்த்து லட்சக்கணக்கில் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் சி.என்.கல்லூரி அருகே கோவிந்தராஜன் தோட்டத்தை சேர்ந்தவர் சேகர் (52). இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு திருமணமான 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை சேகரும், அவரது மகனும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் இருந்த குமாரி இன்று காலை சுமார் 6 மணியளவில் காய்கறி வாங்க வெளியே சென்றிருந்தார். அவர் அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது வீட்டில் இருந்து கரும்புகை வந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில் வீட்டிற்குள் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் மேத்யூ (47). இவர் கிருஷ்ணம்பாளையம் சாலையில் மேத்யூ டிரஸ் மேக்கர்ஸ் என்ற பெயரில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் வேலை முடித்து விட்டு மேத்யூ கடையை பூட்டி விட்டு சென்றார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் மேத்யூவின் டெய்லர் கடையில் இருந்து புகை வெளி வந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கடையில் இருந்த 3 தையல் மிஷின்கள், தைத்து வைக்கப்பட்டிருந்த துணிகள் மற்றும் தைக்காமல் வைத்திருந்த துணிகள் என பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 தீ விபத்தையும் சேர்த்து லட்சக்கணக்கில் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
- பொதுமக்களிடையே ஆன்மீகம் அதிகரித்தால் நாடு நன்றாக இருக்கும்.
- வெளிநாட்டில் இருந்து சாமி சிலைகள் கொண்டு வரவேண்டும்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று முன்னாள் சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- ஆன்மீகம் அதிகமானால் குற்றம் களையும். வீடுகளில் அமைதி ஏற்படும். தமிழகத்தில் உள்ள சைவ வைணவ கோவில்களின் பழங்கால சொத்துகள் மூலம் ரூ.28 கோடி வருமானம் வருகிறது. இதில் ஒரு கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை திருப்பி கோவிலுக்கு வழங்க வேண்டும்.
12 ஆயிரம் அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கூட கொடுக்க முடியவில்லை. 22 ஆயிரத்து 600 ஏக்கர் காலி இடத்தில் கடந்த 8 மாதத்தில் மட்டும் வாடகை பாக்கி ரூ.151 கோடி உள்ளது. பழமையான தொன்மையான 5 ஆயிரம் கோவில்களை புதுப்பிப்பதாக திருப்பணி செய்ததாக கூறுகின்றனர். இதில் கமிஷன் அடிக்கிறார்கள்.
திருப்பணி என்ற பெயரில் பழமையான கல்வெட்டுகள் அழிந்து விட்டது. பழனியில் 16-ம் நூற்றாண்டிற்கு முன்பான கல்வெட்டுகளை அழிந்து விட்டது. திருப்பணி என்ற பெயரில் தொன்மையை அழித்துக்கொண்டு வருகின்றனர்.
திருப்பணியை இந்து சமய அறநிலையத்துறை செய்ய தகுதி இல்லை. கோவில் புதுப்பிக்கும் பணியை மாநில ஆர்க்காலஜி துறை தான் செய்யவேண்டும். கோவில்களில் அனைத்தையும் செய்பவர்கள் அர்ச்சகர்கள். இவர்களை காப்பாற்றவில்லை என்றால் கோவில்கள் காலியாகிவிடும்.
இன்னும் 15 வருடத்தில் 26 ஆயிரம் கோலில்களில் அர்ச்சகர்கள் இருக்க மாட்டார்கள். அர்ச்சகர்களை காப்பாற்ற சம்பளம் கொடுக்க வேண்டும். வசதி இல்லாத 1500 ஆண்டுகளுக்கு முன்பான 10 ஆயிரத்து 652 தொன்மையான கோவில்கள் அனைத்தும் கேட்பாரற்று இருக்கிறது.
பொதுமக்களிடையே ஆன்மீகம் அதிகரித்தால் நாடு நன்றாக இருக்கும். இல்லையென்றால் சீரழியும். சைவ வைணவர்களின் ஒன்றுமை உடைந்து நொறுக்கி உள்ளது. 2012-ம் ஆண்டு மட்டும் அமெரிக்காவில் இருந்து 2 ஆயிர்து 622 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் 2012-ம் ஆண்டு முன்பு ஏன் இந்தளவு சிலைகள் மீட்க முடியவில்லை. அமெரிக்க போலீசாருடன் ஒத்துழைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசுடன் பேசி மீதமுள்ள சிலைகளை மீட்க வேண்டும்.
உச்சக்கட்ட நேர்மையான அதிகாரிகளை பணியமர்த்த வேண்டிய துறையாக உள்ளது. ஆர்வம் குறைவான அதிகாரிகளை உயர் பதவிகளில் பணியமர்த்தப்பட்டதால் 2020 ல் இருந்து பல முக்கிய வேலைகளை செய்யவில்லை.
கடந்த மாதம் கோவில்களில் இருந்து ரூ.28.49 கோடி எடுத்துள்ளனர். விளம்பரத்திற்கு நான் அடிமை கிடையாது. வெளிநாட்டில் இருந்து சாமி சிலைகள் கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னிமலைக்கு வரவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது.
- மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு, நடிகர் வடிவேல் நேரில் அஞ்சலி செலுத்தும் எண்ணம் இல்லாமல் இருந்தாலும், ஒரு அறிக்கை விட்டு இருக்கலாம்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடிகர் ரஞ்சித் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது:- 2024-ம் வருடம் அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும், இயற்கை பேரிடம் இல்லாத ஆண்டாக புதிய ஆண்டு இருக்க வேண்டும், கொங்கு மண்டலம் ஆன்மீக பூமி, விவசாயம் நிறைந்த பூமி. புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் வழிபட்டு இந்த புத்தாண்டினை தொடங்கி உள்ளோம்.
சென்னிமலைக்கு வரவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. சென்னிமலை புண்ணிய பூமி, கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய தலம், வரும் ஆண்டில் விவசாயம் செழிக்க வேண்டும்.
அரசியல் இல்லாமல் யாரும் இல்லை. நான் நல்ல வாக்காளர், நல்ல ஆட்சி அமைய பாடு பட வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள் சிறப்பாக பணியாற்றினார்கள். நான் அரசியல்வாதி தான். நல்ல ஆட்சி ஆட்சி அமைய வாக்களிப்பேன்.
இதுவரை எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு, நடிகர் வடிவேல் நேரில் அஞ்சலி செலுத்தும் எண்ணம் இல்லாமல் இருந்தாலும், ஒரு அறிக்கை விட்டு இருக்கலாம். அவர்களுக்குள் என்ன மன கசப்பு என தெரியவில்லை.
விஜய் அரசியலுக்கு வருவது நல்லது தான். தவறு இல்லை. அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும். நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
- வீடியோ காட்சிகளை பார்த்த அண்ணா நகர் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
- யானைகள் தண்ணீர் குடிக்க இங்கும் அங்கும் ரோட்டை கடப்பது வாடிக்கையான ஒன்றுதான்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், புலி, சிறுத்தை, காட்டெருமை, கழுதைப்புலி, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று மாலை சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் புலி மற்றும் யானை ஒரே நேரத்தில் ரோட்டை கடந்து சென்றது. இதை அந்த வழியாக வந்த வாகன ஒட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார். பின்னர் அவர் அந்த வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ காட்சிகளை பார்த்த அண்ணா நகர் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பொதுவாக இந்த பகுதியில் யானை நடமாட்டம் இருப்பது சகஜம் தான். ஆனால் புலி நடமாட்டம் இருப்பதை கண்டு மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து பவானி சாகர் வனத்துறையினர் கூறும்போது,
பவானிசாகரில் இருந்து அண்ணாநகர் செல்லும் வழியில் 2 பக்கமும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வப்பொழுது யானைகள் தண்ணீர் குடிக்க இங்கும் அங்கும் ரோட்டை கடப்பது வாடிக்கையான ஒன்றுதான்.
ஆனால் புலி நடமாட்டம் மிகவும் அரிதான ஒன்று. எனவே இந்த பகுதி மக்கள் இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம். அதேபோல் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
- குட்கா பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
- போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவ்வப்போது கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கடந்த ஒரு வாரமாக பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
பல்வேறு கடைகளில் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த 21 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.99 ஆயிரத்து 567 மதிப்புள்ள 67.95 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குட்கா விற்பனை செய்த கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
- யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.
- அகழிகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியை விட்டு வெளியேறும் ஒற்றை காட்டு யானை கிராமங்களுக்குள் புகுந்து விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. பல நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை விவசாய தோட்டத்தில் காவலில் இருந்த விவசாயியை யானை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட முதியனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (36). விவசாயி. அதே பகுதியில் 3 ஏக்கர் நிலத்தில் ராகி பயிரிட்டு இருந்தார். அது அறுவடைக்கு தயாராக இருந்தது.
இந்த பகுதி வனப்பகுதியையொட்டி இருப்பதால் அவ்வப்போது யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராமுவும் தினமும் இரவில் தனது விவசாய தோட்டத்தில் காவலில் ஈடுபட்டு வந்தார். அவருடன் அவர் வளர்க்கும் நாயும் இரவு நேரத்தில் அவருடன் காவலில் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ராமு தனது விவசாய தோட்டத்தில் காவலில் இருந்துள்ளார். இன்று அதிகாலை நேரம் ராமு நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை ராமு ராகி தோட்டத்துக்குள் புகுந்தது. யானை தோட்டத்துக்குள் புகுந்ததை பார்த்த அவரது நாய் குரைத்தது.
இதைக்கேட்டு திடுக்கிட்டு எழுந்த ராமு யானை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த ஒற்றை காட்டு யானை ராமுவை தாக்கி மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் யானை அங்கிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. ராமுவின் நாய் நீண்ட நேரம் குரைத்துக் கொண்டிருந்ததால் அக்கம் பக்கத்தில் காவலில் இருந்த விவசாயிகள் அவர் தோட்டத்துக்கு வந்தனர்.
அப்போது ராமு யானை தாக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவரது உறவினர்கள் ராமுவின் உடலை பார்த்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ராமு வளர்த்த நாயும் அவர் உடல் அருகே சோகத்துடன் நின்று கொண்டிருந்தது.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்துக்கு வரவில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். வனப்பகுதியையொட்டி அமைக்கப்பட்டுள்ள அகழிகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொதுமக்கள், அனைத்து வியாபாரிகள், தொழில் சங்கத்தினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
- விஜயகாந்த் படத்திற்கு பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பு.புளியம்பட்டி:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் மொட்டை அடித்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள், அனைத்து வியாபாரிகள், தொழில் சங்கத்தினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதன்படி இன்று காலை புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சத்தியமங்கலம் சாலை, கோவை சாலை, பவானி சாகர் சாலை, நம்பியூர் சாலையில் உள்ள அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புளியம்பட்டி டவுன் பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேப்போல் புளியம்பட்டி தினசரி மார்க்கெட் வாரச்சந்தை கடைகளும் இன்று ஒரு நாள் அடைக்கப்பட்டுள்ளது. தினசரி மார்க்கெட்டில் 120-க்கும் மேற்பட்ட கடைகளும், புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 500-க்கும் மேற்பட்ட கடைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்தன.
மேலும் விஜயகாந்த் படத்திற்கு பொதுமக்கள், தே.மு.தி.க. தொண்டர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
- வீடியோ மற்றும் புகைப்படக் காட்சிகளில் வரும் நபர்கள் சிறப்பு இலக்குப் படையைச் சார்ந்தவர்கள் என சந்தேகிப்பதாக செய்திகள் வெளிவந்தன.
- தமிழ்நாடு காவல்துறையைச் சார்ந்தவர்களோ இல்லை என்பதும் அச்சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்பதும் தெரியவந்தது.
ஈரோடு :
வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள மங்களப்பட்டி வனப்பகுதியில் ஆமையைக் கொன்று சமைப்பதாக உள்ள வீடியோ மற்றும் புகைப்படக் காட்சிகளில் வரும் நபர்கள் சிறப்பு இலக்குப் படையைச் சார்ந்தவர்கள் என சந்தேகிப்பதாக 17.12.2023-ம் தேதி Facebook, Twitter, Whats-app உள்ளிட்ட சமூகவலை தளங்களில் செய்திகள் வேகமாகப் பரவின மற்றும் சில நாளிதழ்களிலும் செய்திகள் வெளிவந்தன.
இது குறித்து விசாரணை செய்ததில் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் சிறப்பு இலக்குப் படையைச் சார்ந்தவர்களோ அல்லது தமிழ்நாடு காவல்துறையைச் சார்ந்தவர்களோ இல்லை என்பதும் அச்சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்பதும் தெரியவந்தது.
மேற்குறிப்பிட்ட சம்பவம் நான்கு வருடங்களுக்கு முன்னதாக வேறொரு மாநிலத்தில் நடந்துள்ளதாக தெரிகிறது. அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் சிறப்பு இலக்குப் படையைச் சார்ந்தவர்கள் என்று சந்தேகிப்பதாகக் கூறப்பட்ட செய்தி தவறான செய்தியாகும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.
- பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1800 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 82 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 759 கன அடியாக குறைந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை ப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவர ப்படி அணையின் நீர்மட்டம் 83.09 அடியாக உள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 82 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 759 கன அடியாக குறைந்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1800 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கன அடியாக நீர் அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது. குடிநீ ருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 2 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் குண்டேரி பள்ளம் அணை பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 38.99 அடியாக உள்ளது. இதே போல் வரட்டு பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியில் தொடர்ந்து 17 நாட்களாக இருந்து வருகிறது.
இது ஒரு புறம் இருக்க பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 30 அடியாக இருக்கும் பெரும்பள்ளம் அணையின் நீர்ம ட்டம் இன்று காலை நிலவரப்படி 3.51 அடியாக குறைந்து உள்ளது.
- இளங்கோவனின் மகன் திருமகன் காலமானதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
- திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈ.வெ.ரா. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்தார். உடல்நலக்குறைவால் அவர் ஜனவரி மாதம் 4-ந்தேதி காலமானார்.
இதனால் பிப்ரவரி 27-ந்தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு 43,923 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட மேனகா 10,827 வாக்குகளும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஆனந்த் 1432 வாக்குகளும் பெற்றனர்.

2019-ல் நடந்த மக்களை தேர்தலில் தேனி தொகுதியில் ஓ. பன்னீர் செல்வம் மகனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் தோல்வியை சந்தித்த ஒரு வேட்பாளர் இவர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் அவர்கள் சாலை மறியலுக்கு முயன்றனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குரும்பபட்டி செம்மேடு பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் சின்னத்தம்பி (வயது 40). வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் அன்பழகன் (30). இவர்கள் 2 பேரும் கூலித் தொழிலாளர்கள்.
இன்று காலை மோட்டார் சைக்கிளில் இவர்கள் இருவரும் வேலைக்கு சென்று கொண்டு இருந்தனர். பைக்கை அன்பழகன் ஓட்டிச் செல்ல பின்னால் சின்னத்தம்பி அமர்ந்திருந்தார். மேட்டுப்பட்டி அருகே இவர்கள் வந்த போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் அவர்கள் சாலை மறியலுக்கு முயன்றனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சாணார்பட்டி போலீசார் விரைந்து வந்தனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்த 2 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இருந்தபோதும் அவர்கள் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த அன்பழகனுக்கு அழகுநாச்சி என்ற மனைவியும், நவீன்குமார் (11), கோபி (6) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சின்னத்தம்பிக்கு லதா என்ற மனைவியும், அருண்குமார், அஜய்குமார், தேவி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
- ஆந்தை அலறும் சத்தம் கேட்பதாக அப்பகுதி மக்கள் மண்டப உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.
- உடனடியாக சத்திய மங்கலம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பழைய மார்க்கெட் பகுதியில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. பூட்டி இருந்த மண்டபத்தில் இருந்து ஆந்தை அலறும் சத்தம் கேட்பதாக அப்பகுதி மக்கள் மண்டப உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் சென்று பார்த்த போது ஆந்தை ஒன்று உள்ளே நடமாடிக் கொண்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் உடனடியாக சத்திய மங்கலம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் திருமண மண்டபத்தில் நடமாடிய ஆந்தையை மீட்டு புளியங்கோம்பை வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். இது அரிய வகை ஆந்தை என வனத்துறையினர் தெரிவித்தனர்.






