என் மலர்
ஈரோடு
- பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் நிலையங்களை ஒப்படைத்து வருகின்றனர்.
- கோபிசெட்டி பாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் உள்ள 7 போலீஸ் நிலையங்களில் மொத்தம் 291 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர்.
கோபி:
தேர்தல் நடைபெறும் போது உரிமம் பெற்ற துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கு உத்தரவிடப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் நிலையங்களை ஒப்படைத்து வருகின்றனர்.
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் உள்ள 7 போலீஸ் நிலையங்களில் மொத்தம் 291 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கோபி, கவுந்தப்பாடி, திங்களூர், நம்பியூர், கடத்தூர், வரப்பாளையம், சிறுவலூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இதுவரை 111 பேர் தங்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.
- தமிழகத்தில் பா.ஜ.க. டெபாசிட் வாங்கினாலே பெரிய விஷயம்.
- தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் 3 நாட்களில் வெளியிடப்படும்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். தமிழக மக்களை ஏமாற்றி டெபாசிட்டாவது வாங்கி விடலாம் என முயற்சிக்கின்றார். இதன் காரணமாக அவர் அடிக்கடி இங்கே வந்து கொண்டிருக்கின்றார். மோடிக்கு சவால் விடுகின்றேன். முடிந்தால் அவர் தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று போட்டியிட்டு டெபாசிட் வாங்கட்டும். அப்போது அவரை பிரதமராக ஏற்றுக்கொள்கிறேன்.
சி.ஏ.ஏ. சட்டம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தூக்கி எறியப்படும். மோடி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை, மோடியை பற்றி மற்றவர்கள் பேசுவதிலும் அர்த்தம் இல்லை.
உக்ரைனில் ஆட்டோ பாம் போட தயாராக இருப்பதாகவும், மோடி பேசியதால் அவர்கள் நிறுத்திவிட்டதாக ஒரு புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். மோடியின் மொத்த உருவமே பித்தலாட்டம், பொய் புரட்டு தான்.
மத்திய அரசு திட்டங்களை தான் தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருவதாக மோடி கூறுகிறார். திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை ஜெயலலிதா செய்தார். கடந்த 3 ஆண்டு காலமாக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு நிறைய செய்திருக்கின்றார். பெண்களுக்கு அவர் செய்திருக்கும் திட்டங்கள் மற்ற மாநிலங்களும் அவரை பார்த்து பின் தொடர்ந்து வருகின்றன. அவ்வளவு பெரிய சாதனைகளை மூன்றாண்டு காலத்திற்குள் முதலமைச்சர் செய்திருக்கின்றார்.
போதை கலாச்சாரம் என்பது அரங்கசாமி அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து புழக்கத்தில் இருக்கிறது. இதைத்தடுக்க அ.தி.மு.க. தவறி விட்டது. தற்பொழுது நடவடிக்கை எடுக்கும் காரணத்தினால் நிறைய பேர் பிடிபட்டு கொண்டிருக்கிறார்கள்.
இது எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால் குஜராத்தில் இருந்தும், மோடியின் நண்பரான அதானியின் துறைமுகத்தில் இருந்து தான் இந்தியா முழுவதும் போதைப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணி வெற்றி பிரகாசமாக இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க. டெபாசிட் வாங்கினாலே பெரிய விஷயம். தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் 3 நாட்களில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காட்டு யானைகள் தாக்கி விவசாயிகள் உயிரிழப்பதை தடுக்க பழைய ரெயில்வே தண்டவாளங்களை பயன்படுத்தி வேலிகள் அமைக்க வேண்டும்.
- விவசாய சங்கத்தின் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து வணிகர் சங்கங்களும் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி கிராமம் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. தாளவாடி மக்களின் பிரதான தொழிலே விவசாயம் தான். இங்குள்ள விவசாயிகள் தென்னை, வாழை, மக்காச்சோளம் போன்றவற்றை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர்.
தாளவாடி அருகே வனப்பகுதி உள்ளதால் அடிக்கடி வனவிலங்குகள் கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள நீர் குட்டைகள் வறண்டு போய் உள்ளன.
இதனால் கடந்த சில நாட்களாக தண்ணீர் உணவைத் தேடி காட்டு யானைகள் கிராமத்துக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் தாளவாடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இரவு நேரங்களில் தங்கள் தோட்டத்தில் காவலில் இருப்பது வழக்கம்.
இந்த நேரங்களில் சில சமயம் யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து இரவு நேரம் காவலில் இருக்கும் விவசாயிகளை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதில் சில விவசாயிகளும் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தாளவாடி அருகே திகனாரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாக்கையா (வயது 62) என்பவர் தனது மக்காச்சோளம் காட்டில் இரவு நேர காவலில் இருந்தபோது அவரது தோட்டத்துக்குள் வந்த காட்டு யானை மாக்கையாவை மிதித்து கொன்றது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தாளவாடி விவசாயிகள் ஒன்று திரண்டு விவசாயி மாக்கையா உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வனத்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இருப்பது போல் வனப்பகுதியை விட்டு யானை வெளியேறும் இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும், காட்டு யானைகள் தாக்கி விவசாயிகள் உயிரிழப்பதை தடுக்க பழைய ரெயில்வே தண்டவாளங்களை பயன்படுத்தி வேலிகள் அமைக்க வேண்டும், யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க அகழி வெட்ட வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கம் அறிவித்திருந்தது.
விவசாய சங்கத்தின் இந்த அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து வணிகர் சங்கங்களும் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று தாளவாடி பகுதியில் 350-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஓசூர் ரோடு, அண்ணா நகர், சாம்ராஜ்நகர் ரோடு, சக்தி ரோடு, தலமலை ரோடு போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
இருப்பினும் வழக்கம் போல் மருந்தகங்கள், ஆஸ்ப த்திரிகள் செயல்பட்டன. அதே போன்று பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாளவாடி பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அணைக்கு வினாடிக்கு 26 கனஅடியாக நீர் குறைந்து வருகிறது.
- காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 60.69 அடியாக குறைந்துள்ளது. கடந்த 8 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 8 அடிவரை சரிந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 26 கனஅடியாக நீர் குறைந்து வருகிறது.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300 கனஅடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று ஆயிரம் கனஅடியாக குறைத்து திறக்கப்பட்டுள்ளது. காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39. 19 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.02 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.22 அடியாகவும் குறைந்து உள்ளது.
- விபத்தில் காருக்குள் இருந்த 6 பேர் சிக்கிய நிலையில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- விபத்து காரணமாக திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியை சேர்ந்த குமார் (60), மூலக்கிணறு பகுதியை சேர்ந்த செல்வம் (60), சவந்தரராஜ் (60), இண்டியன்பாளையம் பகுதியை சேர்ந்த சென்னைய்யன் (55), காஞ்ச நாயக்கனூர் பகுதியை சேர்ந்த செல்வம் (50), ஈரோட்டை சேர்ந்த மனோகர் (50) ஆகியோர் இன்று காலை 6 மணி அளவில் ஆம்னி வேனில் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தாளவாடி மலை 27-வது கொண்டை ஊசி வளைவில் கார் திரும்பி கொண்டிருந்தபோது எதிரே தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி கரும்பு லோடுகளை ஏற்றி கொண்டு வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது கரும்பு லோடு உடன் கவிழ்ந்தது.
இதில் காரில் இருந்த 6 பேரும் சிக்கிக்கொண்டு அலறினர். விபத்து குறித்து தாளவாடி மற்றும் ஆசனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 மருத்துவ குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் போலீசார், மருத்துவ குழுவினர் மற்றும் பொதுமக்கள் காரில் சிக்கிக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு காரில் படுகாயம் அடைந்த மூலகிணறு பகுதியை சேர்ந்த செல்வம், சவுந்தர்ராஜ் மற்றும் ஈரோட்டை சேர்ந்த மனோகர் ஆகியோரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
இந்த விபத்தில் நம்பியூரை சேர்ந்த குமார், இந்தியன் பாளையம் பகுதியை சேர்ந்த சென்னைய்யன், காஞ்ச நாயக்கனூர் பகுதியை சேர்ந்த செல்வம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் திம்பம் மலைப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. ஈரோடு-கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் படுகாயமடைந்த 3 பேரும் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த கோர விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
- சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகள் மாக்கையா தோட்டத்திற்கு வந்தனர்.
- மாக்கையா குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திகினாரை ஆதிதிராவிடர் வீதியை சேர்ந்தவர் மாக்கையா (65). விவசாயி. இவருக்கு திகினாரை கிராமத்தில் 4 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. தோட்டத்தில் 2 ஏக்கரில் வாழை, 2 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.
இவரது தோட்டம் திகினாரை வனப்பகுதியையொட்டி உள்ளதால் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடக்கூடாது என்பதற்காக விவசாய தோட்டத்தில் இரவு நேரங்களில் காவலில் இருப்பது வழக்கம். அதைபோல் மாக்கையா மக்காசோள தோட்டத்தில் நேற்று இரவு நேரத்தில் காவலில் இருந்து உள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறி காட்டுயானை ஒன்று மாக்கையா தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. சத்தம் கேட்டு வெளியே வந்த மாக்கையா யானை மிதித்துள்ளது. இதில் மாக்கையா சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்நிலையில் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகள் மாக்கையா தோட்டத்திற்கு வந்தனர். அப்போது யானை தோட்டத்தில் இருந்து வனப்பகுதிக்கு சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மாக்கையாவை சென்று பார்த்தபோது அவர் யானை மிதித்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் மாக்கையா தோட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்தனர்.
மேலும் இதுகுறித்து தாளவாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் மார்ட்டின் லூதர் மற்றும் போலீசார் வந்தனர்.
அடிக்கடி யானைகள் ஊருக்குள் புகுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் வனப்பகுதியையொட்டி உள்ள அகலிகளை ஆழப்படுத்த வேண்டும். வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
மாக்கையா குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் விவசாயிகள் மாக்கையா உடலை எடுக்க விடாமல் அங்கு திரண்டு உள்ளனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
- மாநகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பிருந்தா வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
- கழிவுநீர் ஓடை செல்ல தடையாக இருக்கும் கான்கிரீட் தளங்களையும் இடித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வழியாக எல்லை மாரியம்மன் கோவில் வரை உள்ள சாலையில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினர்.
இதே போல் ஆர்.கே.வி. சாலையில் இருந்து மணிக்கூண்டு வரை இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் பன்னீர்செல்வம் பார்க் அருகில் உள்ள பிருந்தா வீதி, வேலா புக்ஸ் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் ஜவுளி கடைகள், பர்னிச்சர் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன.
இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் சாலையில் வாகனங்கள் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. இதையடுத்து இன்று மாநகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பிருந்தா வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
கச்சேரி வீதி, முத்துரங்கம் வீதி, சிவா சண்முகம் வீதி, அண்ணாச்சி வீதி, நேதாஜி வீதி, மணிக்கூண்டு, கொங்கலம்மன் கோவில் போன்ற பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை இன்று ஈரோடு மாநகராட்சி துணை ஆணையாளர் பாஸ்கர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
இதேபோல் கழிவுநீர் ஓடை செல்ல தடையாக இருக்கும் கான்கிரீட் தளங்களையும் இடித்து வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் குழுவினர், தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உடன் உள்ளனர். ஒருசில நாட்களுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
- மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 63.33 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 7 அடி வரை சரிந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 28 கனஅடி நீர் குறைந்து வருகிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரத்து 300 கன அடி திறக்கப்பட்டுள்ளது.
காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் 3 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.22 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.06 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.27 அடியாகவும் குறைந்து உள்ளது. மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- வெயில் நேரம் தொடங்கி விட்டதால் மக்கள் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
- உடலில் நீர் சத்து குறையாத வகையில் தினமும் 4 லிட்டர் வரை நீர் அருந்த வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொடர்ந்து 100 டிகிரி மேல் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.
நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 103 டிகிரி வெயில் பதிவானது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை வாட்டி வதைக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் இந்த நேரத்தில் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மதிய நேரம் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.
இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு பகுதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு போன்றவை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வெப்ப காற்றுடன் வெயில் கொளுத்துவதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். இரவு நேரங்களில் வீடுகளில் மின்விசிறி இயங்கினாலும் வெப்பம் காரணமாக புழுக்கம் ஏற்பட்டு அவதி அடைந்து வருகின்றனர்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளநீர், மோர் ஆகியவற்றை அதிக அளவில் பருகி வருகின்றனர். இதனால் இது தொடர்பான வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதேபோல் தர்பூசணி பழ வியாபாரமும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வெயில் நேரம் தொடங்கி விட்டதால் மக்கள் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். உடலில் நீர் சத்து குறையாத வகையில் தினமும் 4 லிட்டர் வரை நீர் அருந்த வேண்டும். குளிர்பானங்கள், துரித உணவுகளை தவிர்த்து நீர் மோர் மற்றும் நீர் சத்துள்ள காய்கறிகளை உணவில் அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போதைய வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் இன்னும் மே மாதத்தில் என்ன செய்யப் போகிறோம் என ஈரோடு மக்கள் புலம்பி வருகின்றனர்.
- அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
- கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 7 அடி வரை சரிந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 64.08 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 7 அடி வரை சரிந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 17 கனஅடியாக நீர் குறைந்து வருகிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2300 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது. மீண்டும் இன்று முதல் காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 3,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39. 34 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.10 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.34 அடியாகவும் குறைந்து உள்ளது.
- உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
- வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சேஷன் நகர் பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு, வாழை தென்னை, மஞ்சள் பயிர் செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் விவசாயி விஜயகுமார் (48) என்பவர் தோட்டத்தில் புகுந்து வாழை மரத்தை சேதம் செய்தது.
இதை கண்ட விவசாயி அக்கம் பக்கத்து விவசாயிகள் உதவியுடன் யானையை விரட்டினர். 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை வனப்பகுதியில் விரட்டப்பட்டது. யானையால் 200 வாழைகள் சேதம் ஆனது.
வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் தொடர்ந்து வனவிலங்குகள் விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி தொடர்ந்து தோட்டத்துக்குள் புகுந்து சேதம் செய்து வருவது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மேற்கு ராஜ வீதி வழியாக வடக்கு நோக்கி வரும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது.
- பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் தென் மாவட்டங்களுக்கும், அதேபோல் அங்கிருந்து வரும் லாரிகள் வட மாநிலங்களுக்கும் சென்று வருகிறது. இதனால் எப்போதும் சென்னிமலை நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்டு.
சென்னிமலை பஸ் நிலையத்தை கடந்து பெருந்துறை மற்றும் வெள்ளோடு ரோடு வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தெற்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி வழியாக குமரன் சதுக்கத்தை அடைந்து செல்லும் வகையில் ஒரு வழி பாதையாக உள்ளது. அதேபோல் குமரன் சதுக்கம் வழியாக பஸ் நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் வடக்கு ராஜ வீதி மற்றும் கிழக்கு ராஜ வீதி வழியாக செல்லும் வகையில் ஒரு வழி பாதையாக உள்ளது.
ஆனால் சென்னிமலை முருகன் கோவிலுக்கு கார்களில் வரும் பக்தர்கள் வடக்கு ராஜ வீதி மற்றும் தெற்கு ராஜ வீதி வழியாக பார்க் ரோட்டை அடைந்து முருகன் கோவிலுக்கு செல்லாமல் குமரன் சதுக்கத்தில் இருந்து ஒரு வழிப்பாதையாக உள்ள மேற்கு ராஜவீதி வழியாக நுழைகின்றனர்.
இதனால் மேற்கு ராஜ வீதி வழியாக வடக்கு நோக்கி வரும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் நூற்றுக்கணக்கான கார்களில் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வருவது உண்டு. அப்போது ஒரு வழிப்பாதையான மேற்கு ராஜ வீதி வழியாக கார்கள் நுழைவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
தினமும் காலை நேரங்களில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள் மேற்கு ராஜ வீதி வழியாக செல்லும்போது மலைக்கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் எதிரே வருவதால் மேற்கொண்டு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மாலை நேரத்திலும் இதே பிரச்சனை தான் ஏற்படுகிறது.
சென்னிமலை போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திலேயே மேற்கு ராஜ வீதி இருப்பதால் குமரன் சதுக்கத்தில் இருந்து மேற்கு ராஜ வீதி வழியாக கார்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் எதுவும் செல்லாமல் இருக்க போலீசார் அங்கு கண்காணித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மேலும் கனரக வாகனங்கள் நகருக்குள் வரால் இருக்க புற வழி சாலை ரிங் ரோடு அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






