search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகளில் விளையாட்டு பாட வேளையை கடன் வாங்காதீர்கள்
    X

    விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பரிசு வழங்கினார்.

    பள்ளிகளில் விளையாட்டு பாட வேளையை கடன் வாங்காதீர்கள்

    • சிறப்பு விருந்தி னர்களாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
    • தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட அளவில் முடிந்ததை தொடர்ந்து இனி அடுத்து சென்னையில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளன.

    தஞ்சாவூர்:

    முதலமைச்சர் கோப்பை போட்டியில் தஞ்சாவூர் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

    விழாவில் தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டேனியல் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசினார்.

    விழாவில் சிறப்பு விருந்தி னர்களாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் களம் நமதே என்ற வீடியோ வெளியிடப்பட்டது. தொடர்ந்து முதலமைச்சர் கோப்பைக்கான லோகோவும் வெளியி டப்பட்டன.

    நிகழ்ச்சியில் முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    முதலமைச்சர் கோப்பை க்கான விளையாட்டு போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெற்றது.

    நான் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்ற உடனே முதல் கையெழுத்து போட்டது தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி திட்டத்திற்கு தான். மாண வர்கள் ,மாணவிகள், பொது மக்கள், அரசு ஊழியர்கள் , மாற்று திறனாளிகள் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை போட்டியில் மாவட்ட அளவில் 1979 விளையாட்டு வீரர் , வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

    இவர்களுக்கு ரூ.39 லட்சம் மதிப்பில் இன்று பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்குவதை பெருமை கொள்கிறேன்.

    முதலமைச்சர் கோப்பை போட்டியை ஒரு முன்னெடுப்பு இயக்கமாக மாற்றி உள்ளோம்.

    திறமையானவர்கள் எந்த இடத்திலும் இருப்பார்கள். அதனை கருத்தில் கொண்டு ஒரு ஊராட்சி கூட விடுபடாமல் முதலமைச்சர் கோப்பை போட்டியை நடத்தி உள்ளோம்.

    பொதுவாக போட்டி என்றால் கிரிக்கெட், வாலிபால், கால்பந்து என்று இல்லாமல் இந்த முதலமைச்சர் கோப்பை போட்டியில் கபடி, சிலம்பம் உள்பட 15 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட அளவில் முடிந்ததை தொடர்ந்து இனி அடுத்து சென்னையில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதில் 27500 வீரர்- வீராங்கனைகள் விளையாட உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 674 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

    இந்த மாதம் 30 ஆம் தேதி மாநில அளவிலான போட்டிகள் தொடங்க உள்ளது. சென்னையில் மாற்றுத்திறனாளி வீரர்- வீராங்கனைகள் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எண்ணிக்கை 164. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் 180 மாற்றுத்திறனாளி வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

    களம் நமதே என்ற வீடியோவில் 50 சதவீதம் தஞ்சாவூர் பகுதியில் தான் எடுக்கப்பட்டது.

    அடுத்ததாக சென்னையில் ஏசியா ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது.

    பள்ளிகளில் விளையாட்டு பாட வேளைகளை மற்ற பாடங்களுக்கு கடன் வாங்காதீர்கள். முடிந்தால் மற்ற பாட வேளைகளை விளை யாட்டு பாட வேளைக்காக கடன் கொடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விழாவில் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி, தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவன், கூடுதல் கலெக்டர் சுகபுத்திரா, எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், அண்ணாதுரை, முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவி உஷா புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட கூடைப்பந்து பயிற்றுனர் பாபு நன்றி கூறினார்.

    Next Story
    ×