என் மலர்
திண்டுக்கல்
- எந்த கட்சி தலைவருக்கு என்ன பெருமை உள்ளது என்பது மக்களுக்கே தெரியும்.
- தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முடியாது.
திண்டுக்கல்:
அ.தி.மு.க பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னையில் நடந்த ஒருவிழாவில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தேசிய ஜனநாயககூட்டணி கதவுகள் திறந்தே இருப்பதாகவும், யார் வேண்டுமானாலும் இங்கு வரலாம் என பேசி உள்ளார். அது நிச்சயமாக அ.தி.மு.க.வுக்காக இல்லை.
எந்த கட்சிக்காக கூட்டணி கதவை திறந்துவைத்துள்ளார் என்பது அவருக்கே வெளிச்சம். பா.ஜ.கவுடன் கூட்டணி கிடையாது என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பலமுறை உறுதியாக தெரிவித்துவிட்டார். இதற்குமேலும் விளக்கம் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை.
காமராஜருடன் மோடியை அண்ணாமலை ஒப்பிட்டு பேசியுள்ளார். ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதனால் எந்த கட்சி தலைவருக்கு என்ன பெருமை உள்ளது என்பது மக்களுக்கே தெரியும்.

தி.மு.க.வில் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வேலைகள் நடந்து வருகிறது. இது ஒன்றும் புதிதல்ல. தி.மு.க.வில் வாரிசு அரசியல் உள்ளது என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே தெரியும். அயோத்தி ராமர்கோவில் விழாவில் பங்கேற்க அ.தி.மு.க.விற்கு அழைப்பு வந்தது உண்மை. இதில் கலந்து கொள்வது குறித்து அப்போது முடிவு செய்யப்படும். தமிழகத்தில் தி.மு..கவுக்கும், பா.ஜ.கவுக்கும் தான் நேரடி போட்டி உள்ளதாக ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முடியாது. மக்களவை தேர்தல் மட்டுமல்ல. எந்த தேர்தல் நடந்தாலும் அது தி.மு.க.வுக்கும், அ.தி.மு.கவுக்கும் இடையேதான் போட்டி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அங்கிட் திவாரி கடந்த 40 நாட்களுக்கு மேலாக மதுரை மத்திய சிறையில் உள்ளார்.
- வழக்கு விசாரணையில் தங்களையும் சேர்க்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணை சூப்பிரண்டாக இருப்பவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு அமலாக்கத்துறையிடம் வந்துவிட்டதாகவும், வழக்கில் இருந்து விடுவிக்க மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்பட்டது.
இதனைதொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி ரூ.20 லட்சத்தை டாக்டர் சுரேஷ்பாபுவிடம் இருந்து அங்கிட் திவாரி வாங்கிக்கொண்டு தப்ப முயன்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் மதுரையில் உள்ள அவருடைய வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்த சில ஆவணங்களையும் கைப்பற்றினர்.
இதனால் அவரை காவலில் எடுத்து விசாரித்துவிட்டு மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அங்கிட் திவாரி தனக்கு ஜாமீன் கேட்டு திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட், மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அவருக்கு ஜாமீன் வழங்க லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே 2 முறை அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நேற்று 3-வது முறையாக ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வருகிற 24-ந்தேதி வரை அவருக்கு காவல் நீட்டிக்கப்படுகிறது.
அங்கிட் திவாரி கடந்த 40 நாட்களுக்கு மேலாக மதுரை மத்திய சிறையில் உள்ளார். அவரிடம் துறைரீதியான விசாரணை நடத்த வேண்டும் என்றும், எனவே காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் அமலாக்கத்துறையினர் திண்டுக்கல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையில் தங்களையும் சேர்க்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகனா அமலாக்கத்துறை தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- காலையில் இடைவிடாது பெய்த மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
- சுமார் ½ மணி நேரத்திற்கு மேல் தீப்பொறியுடன் மின் வயர்கள் எரிந்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த சில நாட்களாக மழையின் தீவிரம் குறைந்து காணப்பட்ட நிலையில் ஒருசில இடங்களில் மட்டும் அவ்வப்போது சாரல்மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் லேசான சாரலுடன் தொடங்கிய மழை பின்னர் கனமழையாக அதிகரித்தது.
சில மணிநேரம் மட்டும் இடைவெளி விட்டு பின்னர் கொட்டித் தீர்த்தது. இதனால் நகரில் உள்ள பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியது. ஓரளவுக்கு பெய்த பிறகு நின்றுவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் விட்டுவிட்டு பலத்த மழையாக பெய்தபடி இருந்தது.
காலையில் இடைவிடாது பெய்த மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விடுமுறை விடாததால் ஏமாற்றத்துடன் மாணவர்கள் நனைந்தபடியே பள்ளிக்கு சென்றனர். ஒருசில தனியார் பள்ளிகளில் மட்டும் விடுமுறை விடப்பட்ட நிலையில் பெரும்பாலான பள்ளிகளில் எந்த அறிவிப்பும் வராததால் மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதேபோல காலையில் வழக்கமாக பணிக்கு செல்லும் தொழிலாளர்களும் கனமழையால் மிகுந்த சிரமம் அடைந்தனர். நகரின் தாழ்வான பகுதியான ஒத்தக்கண் பாலம் பகுதியில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது. இதனால் அந்த சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
இதே போல் ஒய்.எம்.ஆர் பட்டியில் உள்ள உப்புக்கேணி விநாயகர் கோவில் வளாகத்துக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் பொதுமக்களே தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல்-கரூர் சாலையில் புதிய ரெயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் அதிக அளவு தேங்கியதால் பணிகள் நிறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மட்டுமின்றி பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காலைமுதல் இடைவிடாது பெய்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சி 31-வது வார்டுக்கு உட்பட்ட திருமலைசாமிபுரம் 4வது தெருவில் உள்ள மின் கம்பத்தில் திடீரென தீப்பொறி வந்தது. சிறிது நேரத்தில் மின் கம்பம் எரிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அலறினர். சுமார் ½ மணி நேரத்திற்கு மேல் தீப்பொறியுடன் மின் வயர்கள் எரிந்தது. இதனால் அருகில் இருந்த 6 வீடுகளுக்கு தீப்பொறி பரவி வயர்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. பின்னர் அப்பகுதியில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மின் வாரியத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மின் வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- அன்னதானத்தில் சாதாரண நாட்களில் சுமார் 8 ஆயிரம் பேரும், விழா நாட்களில் 30 ஆயிரம் பேர் வரையிலும் உணவருந்திச் செல்கின்றனர்.
- பக்தர்கள் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தங்களால் இயன்ற காணிக்கைகளை வழங்கி வருகின்றனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை மலைக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் மூலம் செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக பழனி கோவிலில் நாள் தோறும் அன்னதான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொறியல், அப்பளம், பாயாசம் ஆகியவற்றுடன் வழங்கப்படும் அன்னதானத்தில் சாதாரண நாட்களில் சுமார் 8 ஆயிரம் பேரும், விழா நாட்களில் 30 ஆயிரம் பேர் வரையிலும் உணவருந்திச் செல்கின்றனர்.
பக்தர்கள் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தங்களால் இயன்ற காணிக்கைகளை வழங்கி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் கியூ.ஆர்.கோடு வசதி உள்ள நிலையில் பழனி கோவிலிலும் இது போன்ற வசதி தொடங்கப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஏனெனில் ரெயில் நிலையம், வணிக வளாகங்கள் போன்றவற்றில் பணப்பரிவர்த்தனை முற்றிலும் குறைந்து கியூ.ஆர். கோடு வசதி மூலமே பணம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களும் குறைந்த அளவு பணம் கொண்டு வரும் சமயத்தில் அன்னதானம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நன்கொடை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தைப்பூசத் திருவிழா நெருங்கி வரும் நிலையில் பழனி மலைக்கோவிலில் கியூ.ஆர்.கோடு மூலம் நன்கொடை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவிலின் பல்வேறு இடங்களில் இது குறித்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல் ரோப் கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கியூ.ஆர். கோடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பைக்கை விக்னேஷ்குமார் ஓட்டி சென்றுள்ளார்.
- பலத்த காயமடைந்த 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
நத்தம்:
மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் கார்த்திக்ராஜா (வயது23). இவர் தனது நண்பர் விக்னேஷ்குமாருடன் சம்பவத்தன்று பைக்கில் நத்தம் வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். பைக்கை விக்னேஷ்குமார் ஓட்டி சென்றுள்ளார்.
இந்நிலையில் பரளிபுதூர் பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி கார்த்திக்ராஜா இன்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கார்த்திக்ராஜாவின் உடல் மதுரைராஜாஜி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்புக்களை தானம் செய்வதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
- விவசாயிகள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வந்தனர்.
- விலங்குகள் புகுவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பூலத்தூர், மங்களம்கொம்பு, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், ஆடலூர், பாச்சலூர், பன்றிமலை, சோலைக்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் காபி சாகுபடி பிரதான தொழிலாக உள்ளது. மேலும் காபிக்கு ஊடுபயிராக மிளகு, வாழை, ஏலக்காய், அவக்கோடா, ஆரஞ்சு, எலுமிச்சை, சவ்சவ், அவரை, பீன்ஸ் உள்ளிட்டவற்றையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் காட்டெருமை அட்டகாசம் அதிகரித்துள்ளது. காட்டெருமைகள் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதேபோல் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளும் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. அவ்வாறு வரும் விலங்குகள், தோட்டத்தின் முன்வேலிகளை எளிதில் உடைத்து விட்டு உள்ளே புகுந்து விடுவதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வந்தனர். இது குறித்து வனத்துறையினரிடம் புகார் அளித்திருந்த போதும் அதனையும் மீறி பயிர்கள் சேதமடைவது தொடர்ந்து வந்தது.
இதையடுத்து விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காக சேலைகளால் வேலி அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே வண்ணத்தில் சேலைகளை கட்டாமல் பல்வேறு நிறங்களில் வயல்களுக்கு சேலையால் வேலி அமைத்துள்ளனர். இரவு நேரங்களில் இதை பார்க்கும் போது கண்ணை கூசும் வகையில் இருக்கும் என்பதால் விலங்குகள் அதன் அருகே வருவதற்கு தயக்கம் காட்டி வேறு இடத்துக்கு சென்று விடும் என விவசாயிகள் தெரிவித்தனர். இருப்பினும் விளை நிலங்களுக்குள் விலங்குகள் புகுவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புத்தாண்டு தினத்தில் காலையில் முருகப் பெருமானை தரிசிக்க முதல் நாளே ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர்.
- சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பழனி:
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெரும்பாலான மக்கள் இறைவழிபாட்டுடன் புத்தாண்டை தொடங்குவது வழக்கம். அதன்படி அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே அதிகரித்து காணப்பட்டது.
புத்தாண்டை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து கால சந்தி, சிறுகாலசந்தி, விழா பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகப் பெருமான் அருள்பாலித்தார்.
புத்தாண்டு தினத்தில் காலையில் முருகப் பெருமானை தரிசிக்க முதல் நாளே ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர். அவர்கள் அதிகாலையில் படிப்பாதை, யானைப்பாதை வழியாக கொட்டும் பனியிலும் நடந்து சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
கடந்த சில நாட்களாகவே பழனியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாட்டு பாடியும் குழுவாக வந்து முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக காணப்பட்டது. இதனால் மலைக்கோவில், ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம் உள்பட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதே போல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில், அபிராமியம்மன், வெள்ளை விநாயகர், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அனைத்து கோவில்களிலும் மார்கழி மாத திருவிளக்கு வழிபாடு நடைபெற்று வரும் நிலையில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
- புத்தாண்டை கொண்டாடும் விதமாக பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு சென்று இயற்கையின் அழகை ரசித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
- இரவு பிரார்த்தனைகளுக்கும் தேவாலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
உலகம் முழுவதும் நாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நட்சத்திர விடுதிகள் மட்டுமின்றி பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் சுற்றுலாவை அனுபவிக்கவும் மற்றும் புத்தாண்டை கொண்டாடவும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டை கொண்டாடும் விதமாக பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு சென்று இயற்கையின் அழகை ரசித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாகவே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களை மகிழ்விக்க விதவிதமான உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் விதவிதமான சாக்லேட்டுகள், கேக்குகள் போன்றவையும் கொண்டாட்டத்தில் இடம்பெற உள்ளன. இது தவிர புத்தாண்டு தினத்தில் இரவு பிரார்த்தனைகளுக்கும் தேவாலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு இடங்களில் சாக்லேட்டுகள் தயார்செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகை சாக்லேட்டுகள் தங்களது சொந்த தயாரிப்பில் தயாரித்து சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் இந்த ஆண்டு புது புது வண்ணமயமான சாக்லேட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக பாதாம் பிஸ்தா உள்ளிட்டவைகளை வைத்து சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் புது விதமாக பிரௌனி வித் சாக்லேட் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர் . இதில் எந்தவித ரசாயனமும் கலக்காமல் சுத்தமாக செய்து வருவதால் சுற்றுலா பயணிகளும் இதனை விரும்பி வாங்கி செல்கின்றனர். சாக்லேட் என்றாலே குழந்தைகளை கவரும் என்பார்கள். தற்போது தயாரிக்கப்பட்டு வரும் சாக்லேட்டுகள் வண்ணமயமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. தங்கள் நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கும் இந்த வகையான சாக்லேட்களை சுற்றுலா பயணிகள் அன்பளிப்பாகவும் வழங்கி வருகின்றனர்.
- கிராமங்களில் காளைகளை தயார்படுத்தும் பணியிலும், காளைகளை அடக்குவதற்காக வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
- கடந்த முறை நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு ஆன்லைனில் பதிவு செய்வதை நிறுத்த வேண்டும்.
திண்டுக்கல்:
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தயார்படுத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு விழா பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையில் தொடங்கி அதன்பிறகு தொடர்ச்சியாக பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதற்காக கிராமங்களில் காளைகளை தயார்படுத்தும் பணியிலும், காளைகளை அடக்குவதற்காக வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலை அடிவாரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து அதனை பராமரித்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வரும் இவர் தற்போது மரக்காளை, வீறிக்கொம்பு காளை, செவலக்காளை என 3 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்.

இந்த காளைகளின் உடல் வலிமைக்காக தவிடு, உளுந்தம்குருணை, பருத்திவிதை, புண்ணாக்கு, பேரிச்சம்பழம் போன்ற ஊட்டச்சத்து உணவுகளை தினந்தோறும் வழங்கி வருகிறார். இதுதவிர காளைகளுக்கு நடைபயிற்சி, நீச்சல்பயிற்சி, ஓட்டப்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் தனது ஜல்லிக்கட்டு காளைகளுக்காகவே தோட்டத்தில் பிரத்யேகமாக பெரியஅளவில் நீச்சல் குளத்தை கட்டி வைத்துள்ளார்.
அந்த காளைகளுக்கு மாடுபிடிவீரர்களை வைத்து சிறந்த முறையில் பயிற்சியும் அளித்து வருகிறார். தினந்தோறும் ஜல்லிக்கட்டு காளையுடன் மாடுபிடி வீரர்கள் அடக்க முற்படுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காளையின் உரிமையாளர் முருகன் தெரிவிக்கையில், இந்த 3 காளைகளையும் எனது குழந்தைகள் போல்தான். எனது குழந்தைகள் தினந்தோறும் சாப்பிட்டார்களா, நல்ல முறையில் விளையாடுகிறார்களா என்பதை கண்காணிப்பதை போல இந்த காளைகளையும் கவனித்து வருகிறேன்.
ஜல்லிக்கட்டு போட்டியின் போது திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு ஊர்களுக்கும் சென்று எனது காளைகள் பரிசுகளை பெற்று வந்துள்ளன. எந்தவித பிரதிபலனும் இல்லாமல் நான் வளர்க்கும் காளைகளை ஜல்லிக்கட்டில் துள்ளிவிளையாடும்போது அந்த மகிழ்ச்சியே எனக்கு போதுமானது. தற்போது ஜல்லிக்கட்டு போட்டிக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த முறை நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு ஆன்லைனில் பதிவு செய்வதை நிறுத்த வேண்டும். அப்போதுதான் அனைத்து மாடுகளும் போட்டியில் பங்கேற்க முடியும்.
மாடுகள் போட்டியில் கலந்து கொள்ள டோக்கன்முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதேபோல ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கும் முன் காளைகளின் உரிமையாளர்களின் கருத்துகளையும் கேட்டறியவேண்டும் என்றார்.
- அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
- சம்மனில் செவ்வாய்கிழமை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டர் சுரேஷ்பாபு சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கினார். இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதற்கு மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சூழலில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது சட்டவிரோத செயல் என்றும், சோதனை என்ற பெயரில் அடையாளம் தெரியாத ஏராளமான பேர் புகுந்து வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை திருடி சென்றுவிட்டனர் என்றும் அமலாக்கத்துறை சார்பில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு பரபரப்பு புகார் மனு அனுப்பப்பட்டது. இந்த புகாரை தமிழக போலீசார் மறுத்தனர்.
இந்நிலையில், அங்கிட் திவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் கடிதம் எழுதியுள்ளனர்.
மேலும், சம்மனில் விரிவான தகவல் இல்லை எனவும் குறிப்பாக யார் அனுப்பிய சம்மன்? எனவும் எங்களுக்கு தெரியவில்லை என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
அந்த சம்மனில் செவ்வாய்கிழமை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
- ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு சென்ற பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
- அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல்:
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிரபாக்கம் அருகே அம்மணம்பாக்கத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் குழுவினர் ஒரு வேனில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நேற்றிரவு புறப்பட்டனர். இன்று காலை 3 மணியளவில் திண்டுக்கல் பைபாஸ் சாலை மீனாட்சிநாயக்கன்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு சென்ற பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் வேனின் முன்பகுதி முழுவதும் உடைந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் அம்மணம்பாக்கத்தை சேர்ந்த திருவேங்கடம்(36), அவரது மகள் ஹரிணி(8), ஜெகதாம்பாள்(50), விநாயகம் (40), கோவிந்தராஜ்(27), ஹரிகரன்(16), சுதர்சன்(17), சுகுமாறன்(37). சங்கரலிங்கம்(31) உள்பட 23 அய்யப்ப பக்தர்கள் படுயாமடைந்தனர்.
அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குபதிவு செய்து வேன் டிரைவர் ராம்கியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
- போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-கோவில்பட்டி ராஜாகுலத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). லாரி டிரைவர். இவரது மனைவி பாண்டீஸ்வரி (33). ராஜேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குடிபோதையில் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ராஜேந்திரன் குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
இதனால் ஆத்திரமடைந்த மனைவி வீட்டில் இருந்த கடப்பாரையால் கணவனை தலையில் அடித்தார். இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ்-இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாண்டியன், ஜெய்கணேஷ் உள்ளிட்ட போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவி பாண்டீஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.






