என் மலர்tooltip icon

    சென்னை

    • புத்தகங்கள் பறிமாற்றத்தை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்து வருகிறோம்.
    • தினமும் ஒரு மணி நேரம் புத்தகம் வாசிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    சென்னையில் 49வது புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பின்னர் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் அரசின் முயற்சியால் புத்தகக் கண்காட்சி நடக்கிறது. புத்தக வாசிப்பை ஊக்குவிக்க திராவிட மாடல் அரசு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

    சென்னை புத்தகக் காட்சிக்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம், தமிழ்நாடு அரசு வழங்குகிறது. தமிழகத்தில் பழைய நூலகங்கள் மற்றும் நூல்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

    ரூ.218 கோடி செலவில் மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம்தான் நான் நினைத்து நினைத்து பெருமைப்படக்கூடிய ஒன்று.

    திருச்சியில் காமராஜர் அறிவுலகம், கோவையில் பெரியார் அறிவுலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை புத்தகக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    அறிவுப்புரட்சிக்கு முக்கியமானது புத்தகங்கள். என்னை சந்திக்க வருவோர் அளித்த சுமார் 4 லட்சம் புத்தகங்கள் இளைஞர்கள் படிப்பு வட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.

    தமிழ்நாடு மட்டுமல்ல இலங்கை உள்ளிட்ட தமிழ் மக்கள் வசிக்கும் பல நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புத்தகங்கள் பறிமாற்றத்தை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்து வருகிறோம்.

    புத்தகக்காட்சிக்கு இன்னும் அதிகமான மக்கள் வர வேண்டும்; அறிவை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; அவ்வகையில் புத்தகக்காட்சி செயல்படுவது பாராட்டுக்குரியது.

    புத்தகக்காட்சி அரங்குகளை பார்வையிட கட்டணம் வசூலிக்காதது வரவேற்கத்தக்கது; 13 அரங்குகளோடு தொடங்கப்பட்ட புத்தகக்காட்சி இன்று 1000 அரங்குகளோடு 49ஆம் ஆண்டை எட்டியுள்ளது.

    தினமும் ஒரு மணி நேரம் புத்தகம் வாசிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியல் களத்தில் இது ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
    • மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சுப்புரத்தினம், பாலகங்காதரன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளர்களான சுப்புரத்தினம் மற்றும் பாலகங்காதரன் ஆகியோர் இன்று தங்களை அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

    அரசியல் களத்தில் இது ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இவர்கள் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களாகவும், அவரது அணியின் முக்கிய நிர்வாகிகளாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் விலகியது, ஓபிஎஸ் அணிக்குப் பலவீனமாக அமையலாம் எனக் கருதப்படுகிறது.

    உட்கட்சிப் பூசல்கள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த தெளிவற்ற நிலை காரணமாகவே இவர்கள் இந்த முடிவை எடுத்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • விஜய் படம் அரசியல் ஆக்கப்படுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.
    • இந்த உலகமே மதிக்கும் மிகப்பெரிய ஜனநாயகன் நமது பிரதமர் நரேந்திர மோடி.

    பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்த உலகமே மதிக்கும் மிகப்பெரிய ஜனநாயகன் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.. ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்பிற்குரிய ஜனநாயகனும் நமது பாரதப் பிரதமர் அவர்கள் தான்..

    ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும் பாரத பிரதமரையும் குறை சொல்லி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்...

    நேற்றைய தினம் வழக்காடு மன்றத்திலேயே இந்த சென்சார் சர்டிபிகேட் க்கும் மத்திய அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது.. அவசரநிலை பிரகடனத்தின் போது கருத்து சுதந்திரத்தில் கழுத்தை நெரித்த காங்கிரஸ் இன்று ஜனநாயகம் திரைப்படத்திற்காக பொங்கிக் கொண்டிருக்கிறார்கள்...

    கலையில் இருந்து அரசியலை விலக்கி வைப்போம் என்று காங்கிரஸ் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை... திரைப்படங்களை நேரடியாக தடை செய்த வரலாறு காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு..

    இது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம்... எல்லாவற்றிற்கும் மேலாக திமுகவின் இளங்கோவன் அவர்கள் திரைத்துறைக்கு அழுத்தம் தருவதால் அரசியலில் வென்று விட முடியாது என்று சொல்கிறார்..

    அதுவும் உதயநிதி எவ்வளவு திரைத்துறையினருக்கு அழுத்தம் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதும்.. திரையரங்குகள் கிடைக்க செய்வதில் கூட இவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் உலகம் அறிந்த உண்மை... சட்ட ரீதியாக CBFC..

    செயல்படுகிறது அதன் நடைமுறையை அரசியலாகி கொண்டு இருக்கிறார்கள்... விஜய் அரசியலுக்கு வருவது தவறல்ல ஆனால் அவர் படம் அரசியல் ஆக்கப்படுவது தான் வேடிக்கையான வேடிக்கை...

    சட்ட ரீதியாக சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் ஒரு வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு அதன் பின்பு அழுத்தம் கொடுப்பது சரியான நடைமுறை அல்ல... சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு பின்பு

    ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் தினத்தை நாங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்....

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நாளை காலை 9 மணிக்கு இபிஎஸ்-ஐ சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    • ஜனவரி 23ம் தேதி அன்று என்டிஏ கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவிப்பு.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை காலை ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் நாளை காலை 9 மணிக்கு இபிஎஸ்-ஐ சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    ஜனவரி 23ம் தேதி அன்று என்டிஏ கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • முதலமைச்சர் மு.ஸ்டாலின் ஒப்புதலுடன் நடந்த ஒரு திட்டமிட்ட அடக்குமுறை மட்டுமே.

    முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் இன்று இரண்டு ஆசிரியர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பகுதி நேர ஆசிரியர்கள், கடந்த 14 கல்வி ஆண்டுகளாக, மாதம் வெறும் ₹12,500 ஊதியத்தில், பணி நிரந்தரப்படுத்தப்படாமல் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்கள், கடந்த 14 நாட்களாக, சம வேலைக்கு, சம ஊதியம் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திமுக தனது 2016 தேர்தல் அறிக்கையிலும், 2021 தேர்தல் அறிக்கையிலும் ஆசிரியர்களின் ஊதியச் சீரமைப்பு மற்றும் சம ஊதியம் குறித்து வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மாணவர்கள், தங்கள் பெற்றோர்களின் உழைப்பிலும், ஆசிரியப் பெருமக்கள் அக்கறையிலும் சாதனை செய்யும்போது, வெட்கமே இல்லாமல் திமுக ஸ்டிக்கர் ஒட்டிப் பெருமை பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களின் வாழ்க்கை, பல ஆண்டுகளாகக் கேள்விக்குறியாய் இருப்பதை, தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.

    நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் ஆசிரியப் பெருமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு ஊதியம் வழங்க மாட்டோம் என்று அச்சுறுத்துவது, முதலமைச்சர் மு.ஸ்டாலின் ஒப்புதலுடன் நடந்த ஒரு திட்டமிட்ட அடக்குமுறை மட்டுமே.

    திமுக அரசு, கல்வியை மதிப்பதில்லை என்பதையே இது நிரூபிக்கிறது. சமத்துவம், சமூகநீதி என்றெல்லாம் வெறும் வாய்வார்த்தையில் நாடகமாடும் முதலமைச்சர், உண்மையில் ஆசிரியப் பெருமக்களுக்குக் கொடுப்பது அநீதியும் அச்சுறுத்தலும் தான்.

    பகுதி நேர ஆசிரியர்களின் நீண்டகால வலி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஆகியவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஆசிரியப் பெருமக்களுக்குச் செய்துள்ள துரோகத்தையே காட்டுகிறது.

    ஆசிரியர்களை அடக்கி, அச்சுறுத்தி, அவர்களின் உரிமைகளை நசுக்கும் திமுக அரசின் செயல்பாடுகள், தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு கருப்புப் புள்ளி. ஆசிரியர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவது, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையே படுகுழியில் தள்ளுவதற்குச் சமம்.

    ஆசிரியர்களுக்கு மரியாதையும் பாதுகாப்பும் வழங்கும்போது மட்டுமே, சமூகம் முன்னேறும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் ஆசிரியர்களை குற்றவாளிகளாக நடத்தும் திமுக அரசின் இந்த அடக்குமுறையையும், அத்துமீறலையும், தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். விரைவில் இதற்கான பதிலும் திமுகவுக்குக் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்போது இருக்கும் ஊதியத்தையும் பிடித்தம் செய்து, ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது அராஜகமானது.
    • ஆசிரியர்களின் குடும்பங்களின் நலன் கருதியும், கொடுத்த வாக்குறுதிப்படி சம ஊதியம் வழங்க மனமில்லையா?

    14வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசை கண்டித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    சம ஊதியம் வழங்க மனமில்லாமல் தெருவிலிறங்கிப் போராடவிட்டு, இருக்கும் ஊதியத்தையும் பறிக்கும் திமுக அரசு!

    "சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும்" என்று தேர்தல் வாக்குறுதி எண் 311-ல் முழங்கிவிட்டு, நான்கரை ஆண்டுகளாக வழங்காமல் ஏமாற்றி, இடைநிலை ஆசிரியர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளி, குண்டுக்கட்டாகக் கைது செய்வதோடு, தற்போது போராடும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாது எனத் திமுக அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று கொடுத்த வாக்குறுதி எண் 181-ஐ வீசி எறிந்ததோடு, தற்போது இருக்கும் ஊதியத்தையும் பிடித்தம் செய்து, ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது அராஜகமானது.

    பல கோடி செலவழித்து "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று நாடக விழா நடத்தத் தெரிந்த திமுக அரசுக்கு, சம ஊதியம் வழங்கப் பணமில்லையா? பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம் என்று முழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, அரசுப்பள்ளி மாணவர்களின் நலன் கருதியும், இடைநிலை ஆசிரியர்களின் குடும்பங்களின் நலன் கருதியும், கொடுத்த வாக்குறுதிப்படி சம ஊதியம் வழங்க மனமில்லையா?

    போராடும் ஆசிரியர்களை முடக்கும் சர்வாதிகாரப் போக்கைக் கைவிட்டு, உடனடியாக ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுத்து, சம ஊதியம் வழங்கி, மாணவர்கள் நலன் காக்க முனைய வேண்டும் எனத் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.
    • அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது.

    விஜய் நடிப்பில் நாளை வெளியாக இருந்த படம் 'ஜன நாயகன்'. படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் சான்றிதழ் வழங்குவதற்கு சென்சாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.

    மனுவை விசாரித்த கோர்ட் வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தது.

    இதைத் தொடர்ந்து ஜனநாயகன் படத்திற்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. ஜனநாயகன் பட விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல். நமது அரசியல் சார்பு, விருப்பு வெறுப்புகளைத் தாண்டி கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் இதைக் கண்டிக்க வேண்டும்

    ஒரு திரைப்படம் என்பது பல கோடி ரூபாய் முதலீட்டில் நூற்றுக்கணக்கானவர்களின் கடின உழைப்பில் உருவாகிறது.

    அதை இப்படி முடக்க நினைப்பது படைப்புச் சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது. அதுவும் அரசியல் காரணங்களுக்காக முடக்கப்படுவது இன்னும் ஆபத்தானது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது. இதை நாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது

    நான் தணிக்கை குழு உறுப்பினராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அதன் செயல்பாடுகளை நான் நன்கு அறிவேன். என்னளவில் இந்த தொழில்நுட்ப யுகத்தில் தணிக்கை வாரியம் என்பது காலாவதியாகிப் போன ஒரு அமைப்பு. ஒரு திரைப்படத்தை ஏற்பதும், மறுப்பதும் மக்கள் கையில் தான் இருக்கிறது.

    ஒரு திரைப்படத்தை நாம் தணிக்கை செய்துகொண்டிருக்கிற அதே நேரத்தில், பல்லாயிரக்கணக்கான தணிக்கை செய்யப்படாத வீடியோக்கள், காட்சிகள் தொலைக்காட்சி, யுடியூப், சமூக வலைத்தளங்கள் மூலம் பரவிக்கொண்டிருக்கிறது. இதை பல கோடிப்பேர் பார்க்கின்றனர். இந்தச் சூழலில் திரைப்படத்தை மட்டும் தணிக்கை செய்வதால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே நிதர்சனம்.

    பெண்களை ஆபாசமாகப் பேசுவது, சித்தரிப்பது, இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவது தணிக்கை விதிகளின் படி தவறானது. ஆனால் இவை இல்லாமல் வெளிவருகிற படங்கள் மிகவும் குறைவு. தணிக்கை வாரியம் இம்மாதிரியான விஷயங்களில் பெரும்பாலும் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை. சான்றிதழை மறுப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஆகவே தணிக்கை வாரியம் என்பது கலைக்கப்பட வேண்டியது. அதுவரை அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
    • எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

    ஆங்கிலேயர் ஆட்சியின்போது கடந்த 1905-ம் ஆண்டில் கட்டப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம், 121 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடம் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தொன்மை வாய்ந்ததாகும். 144 ஆண்டுகள் கடந்தும் இந்த கட்டிடம் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நிலையத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மறு சீரமைப்பு பணியில் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைக்கப்பட உள்ளது. இரு பகுதியிலும் விரிவாக்கம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 1 லட்சத்து 35 ஆயிரத்து 406 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ரெயில் நிலைய கட்டிடம் அமைய உள்ளது. பிரதான நுழைவு வாயில், பின்புற நுழைவு வாயில் ஆகிய இரு பகுதியிலும் 3 மாடி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.

    பயணிகள் வருகை, புறப்பாடுக்கான பொது தளம், அடுக்குமாடி வாகன காப்பகங்கள், பார்சல்களை கையாள பிரத்யேக பகுதி, அனைத்து நடைமேடைக்கும் (பிளாட்பார்ம்) எளிதாக செல்லும் வசதி, பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கும் நடைமேடையில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்லும் வசதி என அனைத்து வசதிகளும் அமைக்கப்பட உள்ளன.

    தற்போதுள்ள கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. பயணிகள் காத்திருப்பு பகுதியில் இருந்து நடைமேடைகளுக்கு செல்ல லிப்ட், எஸ்கலேட்டர் ஆகிய வசதிகளும் அமைய இருக்கின்றன. எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. அந்த வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன், எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதனையடுத்து, ஜி.கே.வாசன் எழுதிய கடிதத்தை பெற்றுக்கொண்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் கொடுத்துள்ளார்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம் என அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பெயர் சூட்டப்பட்டது நினைவு கூரத்தக்கது.

    • அமெரிக்க வாழ் தமிழர்கள் இணைந்து தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்காக டபுள் டக்கர் பேருந்தை வழங்கியுள்ளனர்.
    • இம்மாத இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு டபுள் டெக்கர் பேருந்து வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

    சென்னை:

    போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், எரிபொருள் சேமிப்பை அதிகரிக்கவும் சென்னையில் டபுள் டக்கர் பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் ஏறி சென்னை மாநகர சாலைகளின் இருபுறமும் உள்ள அழகை ரசித்தபடியே பயணம் செய்தவர்களின் அனுபவம் மறக்க முடியாத ஒன்றாகும்.

    இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் சென்னையில் டபுள் டக்கர் பஸ் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி இந்த பஸ் சேவை தொடங்கியது.

    முதற்கட்டமாக சென்னை அடையாறில் இருந்து மாமல்லபுரத்திற்கு டபுள் டக்கர் பஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சிகப்பு நிறம் கொண்ட டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் சென்னை அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடந்தது.

    இந்நிலையில் அமெரிக்க வாழ் தமிழர்கள் இணைந்து தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்காகப் புதிய குளிர்சாதன வசதி கொண்ட டபுள் டக்கர் (இரட்டை அடுக்கு) பேருந்தை வழங்கியுள்ளனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அமெரிக்கப் பயணத்தின் போது விடுத்த வேண்டுகோளை ஏற்று, அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் இந்தப் பேருந்துக்கான நிதியைத் திரட்டி வழங்கினர்.

    இந்த பேருந்து சேவைக்கு தயாராக உள்ளது. இதனால் இம்மாத இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு டபுள் டெக்கர் பேருந்து வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

    இந்தப் பேருந்து சென்னை நகரின் முக்கியச் சுற்றுலாத் தலங்களுக்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படும்.


    • பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலந்தூரில் உள்ள ரேஷன் கடையில் தொடங்கி வைத்தார்.
    • பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப்பணத்தை பெற்றக்கொண்ட மக்கள் முதலமைச்சருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

    தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் ரொக்கப்பரிசு வழங்காத நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் அறிவிக்கப்பட்டது.

    அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகத்தின் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களுடன் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

    பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது. அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரொக்கப் பரிசும் சேர்த்து மொத்தம் ரூ.6 ஆயிரத்து 936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலந்தூர் கண்டோன் மென்ட் நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஒரு முழுநீள கரும்பு, ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணத்தை வழங்கிய போது அவருக்கு மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்தப் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கல்! #வெல்வோம்_ஒன்றாக! என்று பதிவிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணத்தை பெற்றவர்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    • தெற்கு ரெயில்வே ஏற்கனவே 34 சிறப்பு ரெயில்களை அறிவித்தது.
    • ரெயில்களில் எல்லாம் இடங்கள் நிரம்பிவிட்டதால் மேலும் 10 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடச் சொல்லும் பொதுமக்கள் வசதிக்காக தெற்கு ரெயில்வே ஏற்கனவே 34 சிறப்பு ரெயில்களை அறிவித்தது.

    குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வசிக்கும் தென் மாவட்ட பகுதி மக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வசதியாக அறிவிக்கப்பட்ட இந்த ரெயில்களில் எல்லாம் இடங்கள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன.

    ஒரு சில ரெயில்களில் ஏசி படுக்கைகள் மட்டும் குறைந்த அளவில் உள்ளன. இதேபோல கோவை மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில்களும் நிரம்பி விட்டதால் கூடுதலாக 10 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த சிறப்பு ரெயில்களில் 8 ரெயில்கள் தென் மாவட்டங்களுக்கு விடப்பட்டுள்ளது. சென்னை-திருநெல்வேலி இடையே 6 ரெயில்களும், சென்னை-தூத்துக்குடி இடையே 2 ரெயில்களும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதே போல சென்னை சென்ட்ரல்-போத்தனூர் இடையே 2 சிறப்பு ரெயில்களும் அறிவிக்கட்டு இருக்கிறது.

    கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ள 10 சிறப்பு ரெயில்களில் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 8 ரெயில்களுக்கு இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது.

    அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களில் 2 ரெயில்கள் பகல் நேரத்தில் அமர்ந்து செல்லக் கூடிய கூடியது. திருநெல்வேலி-தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் 13 மற்றும் 20-ந் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு பகல் 2 மணிக்கு வந்து சேர்கிறது. இந்த ரெயில் அன்று பிற்பகல் 3 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலிக்கு அதிகாலை 2 மணிக்கு சென்றடைகிறது.

    இந்த சிறப்பு ரயிலில் ஏசி சேர் கார், சாதாரணமாக உட்கார்ந்து செல்லக்கூடிய இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதி இதில் இல்லை. இதே போல 14-ந் தேதி திருநெல்வேலி-செங்கல்பட்டு இடையே பகல் நேர சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது.

    திருநெல்வேலி-தாம்பரம் இடையே 12 மற்றும் 19-ந் தேதி பகல் நேர படுக்கை வசதி சிறப்பு ரெயிலும் இயக்கப்படுகிறது.

    சென்னை சென்ட்ரல்-தூத்துக்குடி இடையே 12 மற்றும் 19-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. தூத்துக்குடி-சென்ட்ரல் இடையே 13 மற்றும் 20-ந் தேதி இயக்கப்படும் சிறப்பு ரெயில் அரக்கோணம், காட்பாடி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை வழியாக செல்கிறது.

    இந்த 8 ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சிறப்பு ரெயில்களில் முன்பதிவு செய்ய ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்தனர். ஆன்லைன் வழியாகவும், ஏஜென்சி மூலமாகவும் டிக்கெட்டை பெறுவதில் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஒரு சிலர் மட்டுமே ரெயில் நிலையங்களில் அதிகாலையிலேயே வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்றனர்.

    தெற்கு ரெயில்வே இந்த ஆண்டு தென் மாவட்டங்களுக்கு அதிக ரெயில்களை இயக்கி வருவது சிறப்பாகும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் ரெயில்களில் எப்படியாவது பயணம் செய்ய டிக்கெட் எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

    ஒரே நாளில் சேரும் வகையில் பகல் நேர ரெயில்கள் விடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தற்போது ‘ஜன நாயகன்’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சென்சார் போர்டு மூலம் மோடி தடுக்கிறார்.
    • ஜனநாயகனை ஒடுக்குவதன் மூலம் தமிழர்களை மீண்டும் பிரதமர் மோடி அவமானப்படுத்தியுள்ளார்.

    விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகாது என பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததே காரணம் என்றும் இதற்கு பின்னால் அரசியல் காரணம் உள்ளதாகவும் கூறி பலரும் விமர்சித்து வருகின்றனர்.

    அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறுகையில், அதிகாரத்தின் முன்பு கலை மண்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது. சினிமா மற்றும் கருத்துக்களை கட்டுப்படுத்தும் ஆயுதமாக சென்சார் வாரியம் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் பாஜக ஆர்எஸ்எஸ்ன் பிரச்சாரங்கள் 'கலாச்சாரம்' என்ற பெயரில் திணிக்கப்படுகின்றன. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மிரட்டல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ED, CBI, IT-ஐ தொடர்ந்து தற்போது சென்சார் வாரியம் கூட எதிர்ப்புகளை மௌனமாக பயன்படுத்தப்படுகிறது. சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை, சினிமாவுக்கு அரசியல் அமைப்பு பாதுகாப்பு தேவை என்று தெரிவித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து, ராகுலின் பழைய பதிவை மேற்காள் காட்டி அவரது வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தி, பிரதமர் மோடி தமிழ் சினிமாவை அடக்குவதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் பெருமையையும் அவமதிக்க வேண்டாம் என்று எச்சரித்திருந்தார்.

    ஆனால், தற்போது 'ஜன நாயகன்' படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சென்சார் போர்டு மூலம் மோடி தடுக்கிறார். ஜனநாயகனை ஒடுக்குவதன் மூலம் தமிழர்களை மீண்டும் பிரதமர் மோடி அவமானப்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்.


    கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், மெர்சல் படத்தில் தேவையின்றி தலையிட்டு தமிழர்களின் பெருமிதங்களை சிதைக்காதீர்கள் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×