என் மலர்tooltip icon

    சென்னை

    • விளம்பர மாடல் அரசின் மறைமுக முதலாளியாக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு பட்ஜெட்டில், டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டையே மறந்து ஒதுக்கியது.
    • சாதாரண நிலையில் இருக்கும் பொதுமக்கள் நேரடியாகப் பலன் அடையும் அறிவிப்புகள் ஏதும் அற்றதாகவே இருக்கிறது.

    தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 

    இந்நிலையில், பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் புதிதாக 9 இடங்களில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

    பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, ஈட்டிய விடுப்பு சரண் 15 நாட்கள் வரை பணப்பலன்.

    பத்து லட்சம் வரை மதிப்புள்ள சொத்தைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் பதிவுத் தொகையில் சலுகை என்பது போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம்.

    அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா என்ற பலமான கேள்வி எழாமல் இல்லை. காரணம், இந்த விளம்பர மாடல் அரசின் கடந்த கால வெற்று விளம்பர அறிவிப்புகளே.

    புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரிக் கல்வியின் தரத்தை நிலைநிறுத்த என்ன முன்னெடுப்புகளை எடுக்கப் போகின்றீர்கள்?

    அடிப்படையான சாலை வசதிகளைக் கவனிக்காமல் அன்புச் சோலை போன்ற போலி அக்கறை காட்டும் வெற்று அறிவிப்பு ஏன்?

    கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி வழங்கப்படுவது போல. பள்ளி மாணவர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லையே ஏன்?

    ஆசிரியப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு, வெற்றிடங்களை நிஜமாகவே நிரப்பும் அறிவிப்பா? இல்லை. வழக்கம் போலான விளம்பர மாடல் அரசின் வெற்று அறிவிப்பா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

    அண்ணா பல்கலையைத் தரவரிசையில் மேம்படுத்தும் அறிவிப்பெல்லாம் இருக்கட்டும். முதலில், அண்ணா பல்கலையில் பயிலும் மாணவிகளுக்கு முறையான பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.

    3 பாதிக்கப்படாத வண்ணம் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாட்டு அரசின் அறிவிப்பு குறித்து இந்த நிதி நிலை அறிக்கையில் விளக்கப்படவே இல்லை.

    மாறாக, மக்கள் நலன் சார்ந்த எந்த விளக்கமும் இல்லாமல் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு, பரந்தூர் பகுதி விவசாயப் பெருங்குடி மக்களுக்குச் செய்யப்படும் துரோகமாகவே இருக்கும்.

    விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் வாக்குறுதியான கேஸ் மானியம் ரூ.100 வழங்கப்படும் என்பது என்ன ஆனது என்று தெரியவில்லை. அதே போல, பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு, வாக்குறுதியில் சொன்னது போல முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

    மேலும், ரேஷனில் சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளும் என்ன ஆயின என்றே தெரியவில்லை.

    பொதுமக்களை வெகுவாகப் பாதிக்கும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்படும் மின்சாரக் கட்டணம், மாதம்தோறும் செலுத்தக்கூடியதாக மாற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆனதோ? வெற்று விளம்பர அரசுக்கே வெளிச்சம்.

    அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் குடியிருப்புகள் கட்டுவது இருக்கட்டும். அரசு ஊழியர்களின் லட்சக்கணக்கான குடும்பங்கள் நலன் சார்ந்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் முக்கியக் கோரிக்கையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்துவது. பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை.

    இந்த நிதிநிலை அறிக்கையில் பெரும்பான்மையாக ஏதேதோ அறிவிப்புகள் என்று போலித்தனமே அதிகம் உள்ளது. ஆனால், சாதாரண நிலையில் இருக்கும் பொதுமக்கள் நேரடியாகப் பலன் அடையும் அறிவிப்புகள் ஏதும் அற்றதாகவே இருக்கிறது.

    விளம்பர மாடல் அரசின் மறைமுக முதலாளியாக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு பட்ஜெட்டில், டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டையே மறந்து ஒதுக்கியது.

    இந்த விளம்பர மாடல் அரசோ தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, தமிழ்நாட்டு மக்களின் நலன்களையே மறந்துவிட்டு ஒரு பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. இதுதான் இவர்கள் இருவரும் ஒரே மனநிலை கொண்ட உறவுக்காரர்கள் என்பதற்கான உறுதிப்பாடு ஆகும்.

    மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு, இந்த ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம் மக்கள் கொடுக்கும் மிகப் பெரிய பதிலடியாக 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இருக்கும். இதை இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு விரைவில் உணரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
    • கல்வி, மருத்துவம், வேளாண்மை போன்ற முதன்மைத் துறைகளுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எல்லோருக்கும் எல்லாம் என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக் குறித்த பரப்புரை, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு யாருக்கும் எதுவும் இல்லை என்ற எதார்த்தத்துடன் நிறைவடைந்திருக்கிறது.

    கல்வி, மருத்துவம், வேளாண்மை போன்ற முதன்மைத் துறைகளுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    மாணவர்களுக்கு இலவச கணினி போன்ற சில கவர்ச்சியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் கூட, அவை மக்களை ஏமாற்றும் அறிவிப்புகளாக உள்ளன.

    2025-26ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.

    திமுக அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை என்பதால் மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் ஏமாற்றமே பரிசாகக் கிடைத்திருக்கிறது.

    கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு நிதியமைச்சர் நீண்ட நேரம், அதாவது 2.40 மணி நேரம் உரையாற்றினார்; நிதிநிலை அறிக்கை ஆவணம் மொத்தம் 182 பக்கங்களைக் கொண்டிருந்தது என்றாலும் அதில் திட்டங்களைத் தான் காணவில்லை.

    1. ஐ.நா. அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகளின் அலுவல் மொழிகளிலும் திருக்குறளை மொழி பெயர்க்க இன்னும் 45 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளதாகவும், அதற்கான ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழை கட்டாயப் பயிற்றுமொழியாகவும், கட்டாயப் பாடமாகவும் செயல்படுத்த எந்த அறிவிப்பையும் திமுக அரசு வெளியிடாதது ஏன்?

    2. தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்; அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம் போலவே மத்திய அரசை கைகாட்டி விட்டு தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டது. இது சமூகநீதிக்கு திமுக அரசு இழைத்திருக்கும் பெரும் துரோகம் ஆகும்.

    3. பள்ளிக்கல்வித்துறை தான் மிகவும் முக்கியமானது ஆகும். அத்துறைக்கு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 6%, அதாவது ரூ. 2.14 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், அதில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது ரூ.46,767 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தகாலங்களில் பள்ளிக்கல்வித்துறைக்கான ஒதுக்கீடு சராசரியாக ரூ.4000 & ரூ.5000 கோடி என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டில் ரூ.2725 கோடி தான் உயர்த்தப்பட்டுள்ளது.

    4. பள்ளிக்கல்வித்துறையில் 20 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், 2562 ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போதிய நிதியும், ஆசிரியர்களும் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமானக் கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?

    5. உயர்கல்வித்துறைக்கான நிதி ரூ.1543 கோடி மட்டும் தான் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் அரசு கல்லூரிகளில் 15 ஆயிரம் மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அரசு கல்லூரிகளில் 8 ஆயிரத்திற்கும் கூடுதலான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை.

    6. மருத்துவத் துறைக்கான நிதி ஒதுக்கீடு வெறும் ரூ.1708 கோடி மட்டும் தான் உயர்த்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று வரை ஒரே ஓர் அரசு மருத்துவக்கல்லூரி கூட தொடங்கப்படவில்லை. வரும் ஆண்டிலும் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

    7. மாதம் ரூ.1000 மகளிர் உதவி வழங்கும் திட்டத்தில் பல லட்சம் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல மாதங்களாகக் கூறி வருகிறார். ஆனால், இந்த நிதிநிலை அறிக்கையில் அத்திட்டத்திற்கான நிதி ரூ.87 கோடி மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பெரும் பகுதி நிர்வாகச் செலவினங்களுக்கே சென்று விடும் நிலையில், புதிய பயனாளிகள் எங்கிருந்து சேர்க்கப்படுவார்கள்? என்பதற்கு தமிழக அரசு தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

    8. ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரிக்கப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. ஆனால், நடப்பாண்டில் அத்திட்டத்திற்கு எவ்வளவு கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதே நிதிநிலை அறிக்கையில் கூறப்படவில்லை.

    9. நீர்வளத்துறையின் சார்பில் சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்கான 1.6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட 6&ஆம் நீர்த்தேக்கம் திருப்போரூர் அருகில் 4375 ஏக்கரில் அமைக்கப்படவிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள் ஒன்று கூட அறிவிக்கப்படாதது ஏன்?

    10. பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைக்கும் திட்டம் மட்டும் தான் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல. இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியுள்ளது.

    12. 2025-26ஆம் ஆண்டின் இறுதிக்குள் 40 ஆயிரம் பேருக்கு புதிய அரசு வேலைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆண்டுத் திட்டம் இன்னும் வெளியிடப்படவில்லை; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதன் ஆண்டுத் திட்டத்தை அறிவித்து விட்டாலும் கூட, எந்தப் பணிக்கு எவ்வளவு பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் 40 ஆயிரம் பேருக்கு அரசு வேலை என்பது ஏமாற்று வேலை தான்.

    12. 20 லட்சம் மாணவர்களுக்கு மடி கணினி அல்லது கையடக்கக் கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது அடுத்த இரு ஆண்டுகளில் தான் வழங்கப்படுமாம். திமுக அரசின் பதவிக்காலம் இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் 20 லட்சம் பேருக்கு மடிகணினி வழங்குவது சாத்தியமில்லை; அந்த வகையில் இதுவும் சாத்தியமற்றதாகும்.

    13. சென்னை, கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை விரைவுபடுத்த அறிவிப்புகள் இல்லை. அவற்றுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டது என்பதையே தமிழக அரசு மீண்டும், மீண்டும் கூறி வருகிறது. இதுவும் மக்களை ஏமாற்றும் செயல் தான்.

    இன்னொருபுறம் தமிழக அரசின் நிதிநிலை மிகவும் மோசமடைந்து கொண்டிருக்கிறது. நடப்பாண்டில் வருவாய்ப் பற்றாக்குறை இருக்காது என்றும், ரூ.1000 கோடிக்கும் மேல் வருவாய் உபரி கிடைக்கும் என்றும் தமிழக அரசு கூறி வந்த நிலையில், ரூ.41,634.93 கோடி வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    நிதிப்பற்றாக்குறை ஒரு லட்சம் கோடியைத் தாண்டி விட்ட நிலையில் நிலைமையை சமாளிக்க நடப்பாண்டில் ரூ.1.62 லட்சம் கோடியை தமிழக அரசு கடனாக வாங்க இருக்கிறது. இதனால் 2025-26ஆம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் கடன் ரூ. 9 லட்சத்து 29,959 கோடியாக அதிகரிக்கும். அதற்கான வட்டியாக மட்டும் ரூ.70,753 கோடி செலுத்த வேண்டியிருக்கும்.

    நடப்பாண்டின் முடிவில் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.25 லட்சம் கடன் வாங்கப்பட்டிருக்கும். மொத்தத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கு பயனளிக்காத, கடன்சுமையை மட்டுமே அதிகரிக்கக்கூடிய நிநிநிலை அறிக்கை ஆகும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நீட் தேர்வு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு போன்ற மக்களின் எதிர்பார்ப்பும் மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது.
    • அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

    தமிழக அரசின் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டால் தமிழக மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் வாங்கியுள்ள நான்கு லட்சம் கோடி ரூபாய் கடனை திருப்பி அடைப்பதற்கான திட்டங்கள் இல்லாதது தமிழக அரசை திவால் ஆகி விடும் என்பதில் ஐயமில்லை.

    தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிபடி எரிவாயு சிலிண்டர் விலையில் ரூபாய் 100 குறைக்கப்படும் என்ற அறிவிப்பும், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு ஊதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பும், மாத ஒரு முறை மின் கட்டண கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற வாக்குறுதியும் மாணவர்களின் கல்வி கடன், மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி போன்ற தேர்தல் வாக்குறுதிகளும் நீட் தேர்வு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு போன்ற மக்களின் எதிர்பார்ப்பும் மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது.

    அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

    நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாக உள்ளது. தமிழக மக்களுக்கு பயன்படாத பட்ஜெட்டை தமிழக அரசு அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக பட்ஜெட்டை புறக்கணித்து அ.தி.மு.க., பா.ஜ.க உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
    • ஆயிரம் கோடி ஊழல் செய்த தி.மு.க அரசுக்கு தமிழக பட்ஜெட் தாக்கல் செய்ய தகுதி இல்லை.

    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    அப்போது, மதுபான முறைகேடு குறித்து சட்டசபையில் விவாதிக்கக்கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பட்ஜெட்டை புறக்கணித்து அ.தி.மு.க., பா.ஜ.க உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இந்நிலையில், சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது :-

    டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    ஆயிரம் கோடி ஊழல் செய்த தி.மு.க அரசுக்கு தமிழக பட்ஜெட் தாக்கல் செய்ய தகுதி இல்லை.

    தி.மு.க அரசு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வர் ஸ்டாலின், ரூபாய் இலட்சினை மாற்றி இருப்பதன் மூலம் அவர் பதவியேற்கும் போது எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2026 தேர்தலை கவனத்தில் கொண்டு, வாக்கு வங்கிக்காக இந்த பட்ஜெட்டில் திட்டங்களும், நிதியும், அறிவிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.
    • லஞ்சம், ஊழலை அகற்ற முடியாத தமிழக அரசை புகழ் பாடி, மத்திய அரசை குறை சொல்லும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது.

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தி.மு.க ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு ஆண்டுதோறும் சமர்ப்பிக்கும் பட்ஜெட்டாகவே இந்த பட்ஜெட்டும் அமைந்துள்ளது. அதாவது உயர்கல்வித்துறைக்கு 8,494 கோடியும், கிராம சாலைகள் மேம்பாட்டிற்கு 2,020 கோடியும், 6,100 கி.மீ நீள சாலைக்கு 2,200 கோடியும், 1 லட்சம் வீடுகள் கட்ட 3,500 கோடியும், கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு 6,668 கோடியும் என பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கிய நிதியானது கடந்த ஆண்டுகளில் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தது போல அமைந்து நிறைவேற்ற முடியாத திட்டங்களாக, அறிவிப்புகளாக மட்டுமே அமையும். ஏழை, எளிய மக்களின் நிலம், மனை, பத்திரம், பட்டா சம்பந்தமாக அவர்களுக்கு உரியதை உறுதி செய்வதற்கான அறிவிப்புகள் இல்லை.

    குறிப்பாக கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க அளித்த பழைய ஒய்வூதியத் திட்டம், கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் இன்றைய பட்ஜெட்டில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வகையில் அம்சங்கள் இடம் பெறவில்லை. மிக முக்கியமாக போதைப்பொருட்களை ஒழிக்க, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒடுக்க, சட்டம் ஒழுங்கை கடுமையாக்க முக்கிய அம்சங்கள் இடம் பெறாத பட்ஜெட் இந்த பட்ஜெட்.

    குறிப்பாக நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கான, கடன் சுமையை குறைப்பதற்கான அழுத்தமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

    2026 தேர்தலை கவனத்தில் கொண்டு, வாக்கு வங்கிக்காக இந்த பட்ஜெட்டில் திட்டங்களும், நிதியும், அறிவிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. மக்களை திசை திருப்புவதற்காக, பல்வேறு துறைகளின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்காத, லஞ்சம், ஊழலை அகற்ற முடியாத தமிழக அரசை புகழ் பாடி, மத்திய அரசை குறை சொல்லும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது.

    எனவே நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் தமிழக மக்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்யாத, எதிர்பார்ப்பை நிறைவேற்றாத ஏமாற்றும் பட்ஜெட் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    • வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
    • சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் சி.வி.சண்முகம் கவனமாக பேச வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளை பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது.

    விசாரணையின்போது சி.வி. சண்முகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஆளும் கட்சியை விமர்சிக்க உரிமை உள்ளதாகவும் அதனடிப்படையிலேயே பேசியதாகவும் அரசியல் பழிவாங்கும் வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், விமர்சனம் என்ற பெயரில் மோசமான வார்த்தைகளை சி.வி.சண்முகம் பயன்படுத்துவதாகவும் நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் அதுபோன்ற கருத்துகளை பேசுவதாகவும் தெரிவித்தார்.

    இதனையடுத்து, சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் சி.வி.சண்முகம் கவனமாக பேச வேண்டுமென நீதிபதி கூறினார்.

    எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் என்றாலும் உருவக்கேலி உள்ளிட்டவை கூடாது என நீதிபதி அறிவுறுத்தினார்.

    • ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது.
    • திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால்,

    தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது.

    தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது.

    ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது.

    திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக என்று கூறியுள்ளார். 



    • சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகராட்சிகளில் 50 சார் பதிவாளர் அலுவலகங்கள் ரூ.30 கோடியில் சீரமைக்கப்படும்.
    • வெப்ப அலை செயல் திட்டம் 11 மாநகராட்சிகளுக்கு தனி தலைமையிடமாக உருவாக்கப்படும்.

    சென்னை:

    தமிழக பட்ஜெட்டில் உரையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சைதாப்பேட்டை தாண்டர் நகரில் ரூ.110 கோடியில் புதிதாக 190 குடியிருப்புகள் கட்டப்படும். மக்களின் முதல்வர் திட்டத்தில் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

    சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகராட்சிகளில் 50 சார் பதிவாளர் அலுவலகங்கள் ரூ.30 கோடியில் சீரமைக்கப்படும்.

    வரும் ஆண்டில் 5 லட்சம் பேருக்கு இலவச பட்டா வழங்கப்படும். 4 ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய திட்டம் ரூ.75 கோடியில் செயல்படுத்தப்படும்.

    வெப்ப அலை செயல் திட்டம் 11 மாநகராட்சிகளுக்கு தனி தலைமையிடமாக உருவாக்கப்படும்.

    • தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 16-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    20-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

    அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:

    இதனிடையே இன்று முதல் 17-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் உயரக்கூடும்.

    18-ந்தேதி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.

    இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

    தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக்கூடும்.

    நாளை முதல் 18-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக்கூடும்.

    இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, வடதமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

    16-ந்தேதி மற்றும் 17-ந்தேதி அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும்,

    குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என தெரிவித்தார்.
    • வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, மத்திய சென்னை தொகுதி கூட்டணி கட்சி தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரசாரம் செய்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என தெரிவித்தார்.

    இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    உண்மைக்கு மாறாகவும் தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

    எடப்பாடி பழனிசாமி மனு குறித்து தயாநிதி மாறன் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

    • ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதத்தை எழும்பூர் நீதிமன்றம் விதித்தது.
    • தீர்ப்பை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் பெற்றது தொடர்பான வழக்கில் மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதத்தை எழும்பூர் நீதிமன்றம் விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜவாஹிருல்லாவின் சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது.

    இதனிடையே, தற்போது ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தீர்ப்பை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • மார்ச் 21-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும்.
    • நாளை சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் ஏப்.30 வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

    மார்ச் 17-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடக்க உள்ளது. மார்ச் 21-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும்.

    நாளை சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    ×