என் மலர்
சென்னை
- ஒரு நபரின் சமூகத்தைக் குறிப்பிடும்போது எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
- சாதி சான்றிதழ்களில் எழுத்து பிழைகள் இல்லாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இசை வேளாளர் சாதிச் சான்றிதழ்களை இசை வெள்ளாளர் எனத் தவறான பெயரில் வழங்கப்பட்டு வருவதாக இசை வேளாளர் இளைஞர் கூட்டமைப்பின் நிறுவனர் குகேஷ் சென்னை ஐகோட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், தன் மகளுக்குச் சாதிச் சான்றிதழ் கோரி மாம்பலம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தபோது இசை வேளாளர் என்பதை இசை வெள்ளாளர் எனக் குறிப்பிட்டுச் சாதிச் சான்று வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்,
* ஒரு நபரின் சமூகத்தைக் குறிப்பிடும்போது எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
* தமிழ், ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக எழுத்துப்பிழை இன்றி சாதி சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.
* சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்கக்கூடாது.
* சாதி சான்றிதழ்களில் எழுத்து பிழைகள் இல்லாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும் மனுதாரரின் மகளுக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களில் உள்ள எழுத்துப் பிழைகளை சரி செய்து கொடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
- பயணம் செய்ய வந்த பயணிகள் கடும் அவதிஅடைந்தனர்.
- விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்களால் தாமதம்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு, சிங்கப்பூர் செல்லும் விமானம் புறப்பட்டு செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய 164 பயணிகள் வந்து இருந்தனர்.
ஆனால் திடீரென சிங்கப்பூர் விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப் பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதைப்போல் இன்று காலை 8 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்றது.
மேலும் காலை 11.30 மணிக்கு, சென்னையில் இருந்து மும்பை செல்ல வேண்டிய, ஏர் இந்தியா பயணிகள் விமானம் தாமதமாக, இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மும்பைக்கு புறப்பட்டு சென்றது.
சிங்கப்பூர், டெல்லி, மும்பை விமானங்கள் 3 மணி நேரம் வரை திடீரென தாமதமாக சென்றதால் அதில் பயணம் செய்ய வந்த பயணிகள் கடும் அவதி
அடைந்தனர். அவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, அந்த விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்களால் தாமதமாக விமானங்கள் இயக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
- பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
- மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வருகிற 25-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
வருகிற வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒரு துறையின் பிரச்சனையை 10 நிமிடத்தில் எப்படி பேசமுடியும்.
- அ.தி.மு.க. ஆட்சியில் அனைவருக்கும் பேசுவதற்கு நாங்கள் வாய்ப்பு கொடுத்தோம்.
சென்னை:
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,
* சட்டசபை சபாநாயகர் இன்று நடந்து கொண்ட விதம் ஜனநாயக படுகொலை.
* ஒரு துறையின் பிரச்சனையை 10 நிமிடத்தில் எப்படி பேசமுடியும். ஆக்கப்பூர்வமாக கருத்துகளை கூறுவதற்கு நேரம் கொடுக்க மறுக்கிறார்கள்.
* மக்கள் பிரச்சனை பேசுவதற்கு அனுமதி கொடுக்காதது கண்டிக்கத்தக்கது.
* அ.தி.மு.க. ஆட்சியில் அனைவருக்கும் பேசுவதற்கு நாங்கள் வாய்ப்பு கொடுத்தோம்.
* முறையாகத்தான் அனுமதி கேட்டேன். தவறாக இருந்தால் நீக்கி விடுங்கள் என்று கூறினேன்.
* டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக யாரும் பதில் கூறவில்லை.
* யாரும் பதில் கூறாததால் ரூ.1000 கோடி முறைகேடு புகார் நிரூபணம் ஆகிறது.
* மதுபாட்டிலுக்கு ரூ.10 வீதம் கூடுதலாக விற்பதால் ரூ.5,400 கோடி கிடைக்கிறது என்றார்.
- சென்னை ராயபுரம் - கடற்கரை நிலையம் இடையே மின்சார ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது.
- சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின.
ஆவடியில் இருந்து வந்த புறநகர் மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
சென்னை ராயபுரம் - கடற்கரை நிலையம் இடையே மின்சார ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது.
ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலில் 3-வது பெட்டியில் 2 ஜோடி சக்கரங்கள் தடம் புரண்டது. சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின.
மிதமான வேகத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டதால் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
- இங்கு யாரை பார்த்தும் பயப்பட தேவையில்லை என்றார் சபாநாயகர்.
- எடப்பாடி பழனிசாமிக்கும், சபாநாயகர் அப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று வினாக்கள்-விடைகள் நேரம் முடிந்த பிறகு மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை மீதான விவாதத்தில் பங்கேற்று பேச ஏற்கனவே அ.தி.மு.க. சார்பில் 3 பேரின் பெயரை கொடுத்துள்ளனர்.
அதன்படி, இன்று வினாக்கள்-விடைகள் நேரம் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமி பேச முயன்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, தங்கள் பெயரை குறிப்பிடவில்லை. தங்களின் அனுமதியுடன் அ.தி.மு.க.வை சேர்ந்த 3 பேரை விவாதத்திற்கு கொடுத்துள்ளார்கள். உங்கள் பெயரை கொடுக்காமல் பேச அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ஏன் தங்களை பேச அனுமதிக்க மறுக்கிறீர்கள்? முக்கிய பிரச்சனைக்காக நான் பேசுகிறேன் என்று பேச முயன்றார்.
இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர், நீங்கள் பேசுவதை அனுமதிக்க முடியாது. அவை மரபிலும் இல்லை, விதியிலும் இல்லை. இப்படி திடீரென்று ஒருத்தர் எழுந்து நின்று பேச முடியாது. யார் பெயரை கொடுத்தீர்களோ, அவர்கள் பேசட்டும். அவர்கள் உங்களுடைய கருத்துக்களை பேசட்டும் என்றார்.
உடனே பேசிய எடப்பாடி பழனிசாமி, ஏன் என்னை பேச அனுமதி மறுக்கிறீர்கள்? எங்களை பார்த்து பயமா? என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், இங்கு யாரை பார்த்தும் பயப்பட தேவையில்லை என்றார்.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கும், சபாநாயகர் அப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே அ.தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.முக.உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
- நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
- அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்துடன் பரிசீலிக்கிறார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் மரகதம் குமரவேல், அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? அது எப்போது நிறைவேற்றப்படும் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. முதலமைச்சருடன் பேசி உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்.
அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்து பல அரசு ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்துடன் பரிசீலிக்கிறார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
- கள்ளச்சாராயம் குடித்து 60க்கு மேற்பட்டோர் பலியாகினர்.
- மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி, சங்கராபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 60க்கு மேற்பட்டோர் பலியாகினர்.
கடந்தாண்டு ஜூன் 19-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது. இதில் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னுக்குட்டி, தாமோதரன் ஆகியோர் ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான தாமோதரன், கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜூவுக்கு ஜாமின் வழக்கி உத்தரவிட்டார்.
மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் ஜாமின் வழங்க சி.பி.ஐ. தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னை ஐகோர்ட் ஜாமின் வழங்கி உள்ளது.
- உழைப்பாளர் சிலை அருகே முற்றுகை பேரணியில் ஈடுபட முயன்றவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
- கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சென்னையில் கோட்டையை நோக்கி முற்றுகை பேரணியை அறிவித்த மாற்றுத்திறனாளிகளை முன்கூட்டியே போலீசார் கைது செய்தனர்.
உழைப்பாளர் சிலை அருகே முற்றுகை பேரணியில் ஈடுபட முயன்றவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும் கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதேப்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளையும் போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார். மேலும் அவர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் அதிக மாற்றுத்திறனாளிகளை சேர்த்தது தமிழ்நாடு தான் என்றார்.
- பாரதிதாசன் எழுத்துகளை மேற்கோள்காட்டி பேசாத தலைவர்களே இல்லை.
- அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள், கருத்தரங்குகள் நடைபெறும்.
சென்னை:
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
தமிழ் மொழிக்கு பாவேந்தர். திராவிட இயக்கத்தின் புரட்சிக் கவிஞர். தமிழினத்தின் மறு மலர்ச்சிக் கவிஞர் பாரதிதாசனைப் போற்றும் வகையிலான அறிவிப்பு ஒன்றை தங்களுடைய அனுமதியோடு இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் என்கிற வகையில் மிகுந்த பெருமை அடைகிறேன். மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழை வளர்த்தல் ஒன்று. சாதியை ஒழித்தல் மற்றொன்று என்று கொள்கைப் பாதை வகுத்துத் தந்தவர் புரட்சிக் கவிஞர். மொழி உணர்ச்சி, மொழி மானம், மொழி குறித்த பெருமிதம் ஆகியவற்றின் மொத்த வடிவம்தான் புரட்சிக் கவிஞர்.
1929-ம் ஆண்டே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தவை பாவேந்தரின் பாடல்கள் தான். அத்தகைய பாவேந்தரை தமிழ்நாட்டின் வால்ட் விட்மன் என்று புகழ்ந்து பேசினார் பேரறிஞர் அண்ணா.
முத்தமிழறிஞர் கலைஞர் எங்கே, எப்பொழுது பேசினாலும் அதிலே புரட்சிக் கவிஞரின் பொன்வரிகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். 1990-ம் ஆண்டு பாவேந்தரின் படைப்புக்களை கலைஞர் நாட்டுடைமையாக்கினார். இன விடுதலை, மொழி விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலை, பழமை வாதம் ஒழிப்பு என்று பாவேந்தர் தன் எழுத்துகளை திராவிட இனத்திற்கு கொள்கைப் பட்டயமாக உருவாக்கித் தந்தவராவார்.
இன்றும் தனது எழுத்து வரிகளால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது வரிகளை மேற்கோள் காட்டிப் பேசாத பேச்சாளர்களே இல்லை. அவரது வரிகளை எடுத்தாளாத எழுத்தாளர்களே இல்லை. அவரால் உணர்ச்சி பெறாத தமிழர்களே இல்லை என்று சொல்லத்தக்க வகையில் தமிழர் தம் உணர்விலும், குருதியிலும் கலந்தவர் புரட்சிக் கவிஞர். அவரை எந்நாளும் தமிழினம் வணங்கிப் போற்றும்.
பாவேந்தரின் கவிதைகளில் இனிய இசை நயம் உண்டு. அவை உணர்த்தும் கருத்துகளில் உணர்ச்சிப் புயல்வீசும். எளிமையான சொற்களின் மூலமாக வலிமையான கருத்துக்களைச் சொன்னார். எளிய சொற்கள் அவருடைய கவிதையில் அமையும்போது நிகரற்ற வேகம் கொண்டு நிற்கும் ஆற்றல் மிகுந்த கூரிய கருவிகளாகிவிடும். எனவேதான், அவரது கருத்துக்கள் கவிதைகளாக மட்டுமல்லாமல், கருத்துக் கருவிகளாக இன்றும் இருக்கின்றன. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தனது வாழ்நாளில் பல இளையவர்களை கவிஞர்களாகக் கண்டறிந்து ஊக்கப்படுத்தி தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட அக்கவிஞர்களை பாரதிதாசன் பரம்பரை என்று அழைத்து மகிழ்கின்றோம்.
இத்தகைய பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள், தமிழை உயர்த்திய உயரம் அதிகம். இத்தனை சிறப்பிற்குரிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான பாவேந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்பதை இந்தப் பேரவையில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த ஒரு வார காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்மொழியையும், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெறும்.
1. கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள்
"எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்" என்ற பாவேந்தரின் கவிதை வரிகளை மையப்படுத்தி அனைத்து மாவட்டங்க ளிலும் கவியரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்கள் நடைபெறும். சிறந்த தமிழறிஞர்கள் மற்றும் இளங்கவிஞர்கள் இதில் பங்கேற்பார்கள்.
2. பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது:
தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம்எழுத்தாளர், கவிஞர் ஒருவருக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் என்ற விருது வழங்கப்படும்.
3. தமிழ் இலக்கியம் போற்றுவோம்:
புகழ் பெற்ற தமிழிலக்கிய படைப்பாளிகளின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வரங்கங்கள் நடத்தப்படும்.
4. பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள்:
மாணவர்களிடையே தமிழ்மொழியின் பெருமையை எடுத்துரைக்க பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
5. தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள்:
தமிழ் இசை, நடனம், மற்றும் மரபுக்கலைகளை மையப்படுத்திய கலை நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெறும். இது போன்ற தமிழ் நிகழ்ச்சிகள் மூலமாக பாவேந்தர் பிறந்தநாள் தமிழ் மணக்கும் வாரமாகக் கொண்டாடப்படும்.
தமிழ் வார விழா நமது மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துரைப்பதற்கு ஒரு நல்வாய்ப்பாகும். பாவேந்தரின் கவிதைகளை நாளும் படிப்போம். நானிலம் முழுவதும் அவரின் சிந்தனைகளைப் பரப்புவோம். தமிழ்மொழியை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்.
"வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்" என்றார் பாவேந்தர். அத்தகைய எழுச்சியை இந்த விழாக்கள் மூலம் உருவாக்க வேண்டும்.
"கடல் போலச் செந்தமிழைப் பரப்ப வேண்டும்" என்றார் பாவேந்தர். செந்தமிழைப் பரப்ப இந்த விழாக்கள் பயன்படும்.
"வையம் ஆண்ட வண்டமிழ் மரபே உன் கையிருப்பைக் காட்ட எழுந்திரு" என்றார் பாவேந்தர். தமிழர் தம் அறிவுச் செல்வத்தைக் காட்ட இந்த விழாக்கள் பயன்படும்.
"தமிழை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்" என்றார் பாவேந்தர். அந்தத் தமிழ் உணர்ச்சியை மங்காமல், குன்றாமல் இந்த அரசு காத்திடும்.
பாவேந்தரை கொண்டாடும் விழாவில் அனைவரும் திரளாகப் பங்கேற்று, தமிழின் புகழை உயர்த்துவோம்! உயர்த்துவோம்! என்று கூறி தமிழ் வாழ்க! தமிழினம் ஓங்குக! என்று முழங்கி அமர்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- குரூப் டி பணியாளர்களில் பெரும்பான்மையினர் குத்தகை முறையில் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
- நிரந்தர பணியிடங்களை ஒப்பந்த பணியிடங்களாக மாற்றுவது போன்ற செயல்களில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இனி அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அனைத்து குரூப் டி பணியாளர்களையும் நிரந்தரமாக நியமிக்கக்கூடாது என்றும், ஒப்பந்தம் அல்லது அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் தான் நியமிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தற்காலிக நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், நிரந்தரப் பணியிடங்களையும் ஒப்பந்தப் பணியிடங்களாக தமிழக அரசு மாற்றி வருவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் குரூப் டி பணியாளர்களில் பெரும்பான்மையினர் குத்தகை முறையில் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுவதால் மிகப்பெரிய அளவில் மனிதவளச் சுரண்டல்கள் நடைபெறுகின்றன; இன்னொருபுறம் குத்தகை முறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவதால் அவர்கள் இழைக்கும் தவறுகளுக்கு அவர்களை பொறுப்பேற்கச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலகங்களில் பராமரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.
உயர்கல்வி நிறுவனங்களிலும், சில பொதுத்துறை நிறுவனங்களிலும் மட்டும் நடைமுறையில் உள்ள குத்தகை முறை நியமனங்களை அனைத்துத் துறைகளுக்கும் நீட்டிக்கவும் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் பணியிடங்கள் ரத்து செய்யப்படும் நிலை உருவாகும். இது திமுக அளித்த வாக்குறுதிகளுக்கு எதிரானது ஆகும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்த தற்காலிக பணியாளர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்; மூன்றரை லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும்; இரண்டு லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது மட்டுமின்றி அதற்கு முற்றிலும் மாறாக, இருக்கும் பணியிடங்களை ஒழிப்பது, நிரந்தர பணியிடங்களை ஒப்பந்த பணியிடங்களாக மாற்றுவது போன்ற செயல்களில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இத்தகைய நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுவதில்லை என்பதால் இது சமூகநீதிக்கும் எதிரானது ஆகும்.
எனவே, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் குரூப் டி பணியிடங்களை ஒழித்து விட்டு, குத்தகை நியமனங்களுக்கு அனுமதி அளித்து உயர்கல்வித்துறை மூலம் கடந்த 3-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள 66-ஆம் எண் கொண்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அனைத்துத் துறைகளிலும் குரூப் டி பணியிடங்கள் நிரந்தர அடிப்படையிலேயே நியமிக்கப்படும் என்றும் அரசு அறிவிக்க வேண்டும்.
- எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு பின் அ.தி.மு.க. மூத்த தலைவர்களை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியுள்ளார்.
- முக்கிய பிரச்சனைகளை ஒன்று சேர்ந்து எழுப்புவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் பா.ஜ.க. மாநில தலைவரும் எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். இவர்களது சந்திப்பானது எதிர்க்கட்சி தலைவர் அறையில் சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு பின் அ.தி.மு.க. மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம், கடம்பூர் ராஜூ ஆகியோரை சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
முக்கிய பிரச்சனைகளை ஒன்று சேர்ந்து எழுப்புவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின்பு எடப்பாடி பழனிசாமி- நயினார் நாகேந்திரன் முதன்முறையாக சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






