என் மலர்tooltip icon

    சென்னை

    • இமெயில் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் தீவிரபடுத்தப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலைய மேலாளர் அறைக்கு நேற்று வந்த ஒரு மர்ம இ-மெயில் தகவலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும், எந்த நேரத்திலும் வெடித்து சிதறலாம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த இமெயில் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் தீவிரபடுத்தப்பட்டது. பயணிகள் பாதுகாப்பு சோதனையும் அதிகரிக்கப்பட்டது. இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது.

    இந்த பரிசோதனைகள் காரணமாக சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு இன்று புறப்பட்டு செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. ஹாங்காங், பிராங்க் பார்ட், குவைத், துபாய், சார்ஜா, தோகா, மஸ்கட், சிங்கப்பூர், கோலாலம்பூர், லண்டன் உள்ளிட்ட விமானங்கள் சுமார் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டன.

    • உடுமலை பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கார் சிலைகளை திறந்து வைகிறார்.
    • 23-ந்தேதி மாலை கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 22 மற்றும் 23-ந்தேதி திருப்பூர் மாவட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலையை திறந்து வைக்கிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் 22-ந்தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து சாலை வழியாக திருப்பூர் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் வேலம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அரசு மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

    அதை தொடர்ந்து கோவில் வழி புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் மதிய ஓய்வுக்கு பிறகு மாலை திருப்பூரில் இருந்தும் புறப்பட்டு மடத்துக்குளம் சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களில் நடைபெறும் ரோட் ஷோவிலும் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.

    22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு உடுமலையில் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 23-ந்தேதி காலை உடுமலை பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கார் சிலைகளை திறந்து வைகிறார்.

    அதை தொடர்ந்து, நேதாஜி மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    இதன் பிறகு கோவை மாவட்டம் பொள்ளாச்சி செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் பொள்ளாச்சி வட்டம் பொதுப்பணித்துறை நீர்வள தலைமை பொறியாளர் அலுவலகத் தில் அமைக்கப்பட்டுள்ள பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் நடைபெற காரணமாக திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சி.சுப்பிரமணியம், வி.கே.பழனிசாமி கவுண்டர், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோருக்கு திருவுருவச் சிலைகளை திறந்து வைத்து, விவசாய மக்கள் பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக 1348 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தையும் திறந்து வைக்கிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 23-ந்தேதி மாலை கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.

    • தங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு எந்த அளவுக்கு உள்ளது. மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை கணித்து வருகின்றனர்.
    • நடிகர் விஜய் துவங்கிய த.வெ.க. கட்சிக்காக ஆதவ் அர்ஜூனா தனது வாய்ஸ் ஆப் காமென் அமைப்பு மூலம் சர்வே எடுத்து கொடுத்து வருகிறார்.

    சென்னை:

    2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி ஒரு அணியாகவும், அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி மற்றொரு அணியாகவும் தேர்தல் களத்தில் சந்திக்க உள்ளது.

    இது தவிர புதிதாக கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய் இந்த தேர்தலில் களம் இறங்குகிறார். அவர் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவாரா? அல்லது புதிய கூட்டணி அமைப்பாரா? இல்லை தனித்து போட்டியிடுவாரா? என்பதை இன்னும் அவர் தெளிவுப்படுத்தவில்லை.

    ஆனாலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு சென்றால் வெற்றி நிச்சயம். ஆட்சியை பிடித்து விடலாம் என்று தொண்டர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டங்களில் பேசுகிற போது எங்கள் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரப்போகிறது. நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் என்று பேசி வருகிறார். அதுமட்டுமின்றி 234 தொகுதிகளில் 200 தொகுதிக்கு மேல் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் கூறி வருகிறார்.

    அதுமட்டுமின்றி அ.தி.மு.க. கூட்டணியில் சேர வரும் கட்சிகளை ரத்ன கம்பளம் விரித்து வரவேற்போம் என்று அழைப்பும் விடுத்துள்ளார். இதனால் அ.தி.மு.க. கூட்டணிக்கு இன்னும் எந்தெந்த கட்சிகள் வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலமே இருப்பதால் பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் நிலவரங்கள் எப்படி இருக்கிறது? மக்களின் மனநிலை என்ன? என்பதை அறிய தனிநபர் ஏஜென்சிகள் மூலம் 'சர்வே' எடுத்து வருகின்றன.

    தங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு எந்த அளவுக்கு உள்ளது. மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை கணித்து வருகின்றனர்.

    தி.மு.க.வை பொறுத்த வரை ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் உளவுத்துறை மூலம் அவ்வப்போது நிலவரங்களை தெரிந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி சபரீசனின் 'பென்டீம்' நிறுவனம் சட்டசபை தொகுதி வாரியாக சர்வே எடுத்து தெரிந்து கொள்கின்றன.

    அதே போல் நடிகர் விஜய் துவங்கிய த.வெ.க. கட்சிக்காக ஆதவ் அர்ஜூனா தனது வாய்ஸ் ஆப் காமென் அமைப்பு மூலம் சர்வே எடுத்து கொடுத்து வருகிறார்.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் தனியாக ஒரு ஏஜென்சி மூலம் தமிழக தேர்தல் களத்தின் நிலவரங்களை அறிந்து கொள்கிறார்.

    அந்த ஏஜென்சி 3 மாதங்களுக்கு ஒரு முறை அரசியல் நிலவரங்களுக்கு ஏற்ப தேர்தல் நிலவரங்களை கணித்து கொடுத்து வருகிறது. அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும். தி.மு.க.வுக்கு எத்தனை தொகுதி கிடைக்கும். விஜய் தனித்து நின்றால் அது யாருக்கு சாதகமாக அமையும் என்றெல்லாம் தனித்தனியாக புள்ளி விவரத்துடன் சர்வே கொடுக்கப்படுகிறது. அதற்கேற்ப எடப்பாடி பழனிசாமி அரசியலில் காய் நகர்த்தி வருகிறார்.

    • தமிழகத்தில் பெருகி வரும் குற்றங்களைத் தான் திமுக அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றால், பெருகிவரும் குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா?
    • திராவிட மாடல் அரசின் திறனற்ற நிர்வாகத்தால் நோய்களின் தொட்டிலாக தமிழகம் மாறிவருவது மிகக் கொடுமையானது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மத்திய அரசால் வெளியிடப்பட்ட தூய்மை நகரங்கள் பட்டியலில் தேசிய அளவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 40 நகரங்களின் தரவரிசையில் தமிழகத்தின் தலைநகர் சென்னை 38-வது இடத்தையும், மதுரை 40-வது இடத்தையும் பெற்றிருப்பது மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

    தமிழகத்தின் ஒரு நகரம் கூட தூய்மை நகரங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் வராத நிலையில், வருடாவருடம் தூய்மைப்பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவிடுவதாக திராவிட மாடல் அரசு காட்டிய கணக்குகள் எல்லாம் என்ன ஆனது? தமிழகத்தில் பெருகி வரும் குற்றங்களைத் தான் திமுக அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றால், பெருகிவரும் குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா?

    தரம் குன்றி வரும் அரசு மருத்துவமனைகள், குப்பைகளின் கூடாரமாகி வரும் மாநகரங்கள், பராமரிப்பு என்ற பெயரில் நடக்கும் ஊழல் முறைகேடுகள், அவற்றைக் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள் என திராவிட மாடல் அரசின் திறனற்ற நிர்வாகத்தால் நோய்களின் தொட்டிலாக தமிழகம் மாறிவருவது மிகக் கொடுமையானது.

    குப்பைக்காடாக தமிழகத்தை மாற்றிவிட்டு, நாடு போற்றும் நல்லாட்சி என்று இனியொரு முறை கூறுவதற்கு திமுகவின் தலைவர்கள் கூனிக்குறுக வேண்டும்! என்று கூறியுள்ளார். 



    • மதுரை ஜான்சி ராணி பூங்காவில் பூத்த நம் இளைஞரணி, 46-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
    • 2026 சட்டமன்றத் தேர்தலில் நம் கழக அணி, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட ஓரணியில் தமிழ்நாட்டை திரட்டுவோம்.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழர்களை உயர்த்தும் திராவிட இயக்கத் தத்துவங்களை அடுத்தடுத்து வரும் இளம் தலைமுறையின் இரத்த அணுக்களில் ஏற்றும் கொள்கைப் பாசறையாம் தி.மு.க. இளைஞரணி தொடங்கப்பட்ட நாள் இன்று!

    மதுரை ஜான்சி ராணி பூங்காவில் பூத்த நம் இளைஞரணி, 46-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வழிகாட்டலில் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் உருவாக்கப்பட்ட இளைஞரணி எனும் தீரர் படையின் இன்றைய செயலாளராகப் பணியாற்றுவதை எண்ணி பெருமை கொள்கிறோம்.

    தமிழ்நாட்டின் இளைஞர்களை கொள்கை மயப்படுத்தும் இலக்கில் இருந்து சிறிதும் விலகாமல் கட்டுப்பாட்டுடன் கடமையாற்றும் நம் இளைஞரணி, கழகத்தின் நாற்றங்காலாக திகழ்கிறது.

    களப் பணியிலும் - கொள்கை நெறியிலும் இளையச் சமுதாயத்தைத் தயார்படுத்த இளைஞரணி மேற்கொண்டு வரும் பணிகள் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டைக் காத்து நிற்கும்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் நம் கழக அணி, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட ஓரணியில் தமிழ்நாட்டை திரட்டுவோம்.

    தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க, தலைவர் அவர்களிட்ட கட்டளையை நிறைவேற்ற களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம்!

    தமிழ்நாடு வெல்லும்! என்று பதிவிட்டுள்ளார். 

    • த.வெ.க.வுக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக “மை டி.வி.கே.” என்ற புதிய செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
    • பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார்.

    இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25-ந்தேதி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள அவர் அதற்கான பணிகளை முடுக்கி விட்டு உள்ளார்.

    மதுரை மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவதற்காக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வரு கிறார்.

    த.வெ.க.வுக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக "மை டி.வி.கே." என்ற புதிய செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த செயலியை விஜய் இன்று அறிமுகப்படுத்தி வைத்து மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட முடிவு செய்திருந்தார். பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் மை டி.வி.கே. செயலி தொடக்க விழா மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    டி.வி.கே. செயலியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே அதன் தொடக்க விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து வருகிற 24-ந்தேதி புதிய செயலியின் தொடக்க விழா மற்றும் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆகியவை வருகிற 24-ந்தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அன்றைய தினம் புதிய செயலியை தொடங்கி வைத்து மாவட்ட செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.

    • ½ கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் முடிக்க முடியாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
    • திட்டம் முழுமை அடையாததால் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை மட்டுமே தற்போது பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னையில் பறக்கும் ரெயில் திட்டம், 3 கட்டங்களாக திட்டமிடப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக சென்னை கடற்கரை-மயிலாப்பூர் இடையே கடந்த 1984-ம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கியது. 1995-ம் ஆண்டு இதற்கான பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 2-ம் கட்ட பணிகள் மயிலாப்பூர்-வேளச்சேரி இடையே 1998-ம் ஆண்டு தொடங்கி, 2004-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மேலும், 2-ம் கட்ட பணி விரிவாக்கமாக கடந்த 2008-ம் ஆண்டு வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரூ.495 கோடி மதிப்பீட்டில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. இதில், 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரெயில் பாதை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே எஞ்சியிருந்த ½ கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் முடிக்க முடியாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டம் முழுமை அடையாததால் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை மட்டுமே தற்போது பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, 15 ஆண்டுகளுக்கு பின்பு கோர்ட்டு மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு, கடந்த ஆண்டு பணிகள் மீண்டும் தொடங்கியது. அப்போது, ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் தூண்கள் மீது அமைக்கப்பட்ட ரெயில் பாலம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. தற்போது அந்த பாலம் சரிசெய்யும் பணி முடிவடைந்துள்ளது. எஞ்சிய ஒரு சில பணிகள் மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வரும் நவம்பர் மாதம் இந்த பணிகள் முழுமையாக முடிவடையும் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தொிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கும் ரெயில் பணிகள் 85 சதவீதம் முடிந்துள்ளது. ரெயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்ட பின்பு, இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கும். அதன்படி, வரும் நவம்பர் மாதம் இறுதியில் வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • கேகே ரோடு, வெங்கடாபுரம் பள்ளி சாலை, விஜயலட்சுமிபுரம்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (21.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    கீழ்ப்பாக்கம்: பூந்தமல்லி நெடுச்சாலை ஒரு பகுதி, சாஸ்திரி நகர், புல்லா ரெட்டி புரம், ஓசங்குளம், புதிய பூபதி நகர், பிளவர்ஸ் ரோடு, தம்புசாமி தெரு, கெங்கு ரெட்டி சாலை.

    அம்பத்தூர்: கேகே ரோடு, வெங்கடாபுரம் பள்ளி சாலை, விஜயலட்சுமிபுரம், பழைய எம்டிஎச் சாலை.

    • சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.
    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வருகிற 25-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, கடலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • மு.க.முத்து இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது
    • சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

    மு.க.முத்துவின் உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    இந்நிலையில் தனது சகோதரர் மு.க.முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார். மு.க.முத்து மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    மு.க.முத்து இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது. சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

    • மாதிரி வினாத்தாள்களை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது.
    • இந்த மாதிரி வினாத்தாள்களை வாட்ஸ்அப் வழியாக இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள 1,996 பணியிடங்களுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு அனைத்துப் பாடங்களுக்கும், புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்களை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது.

    சென்னையில் இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய - மாநில அரசுகள் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சியளித்து வரும் முன்னணி பயிற்சி நிறுவனம் ஆகும்.

    இந்த அகாடமியில் படித்தவர்கள் தமிழகம் முழுவதும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அரசின் பல்வேறு முக்கிய பணிகளில் பதவி வகித்து வருகின்றனர்.

    ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தின்படி, அனைத்துப் பாடங்களுக்கும் மாதிரி வினாத்தாள்களை ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது.

    முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதும் அனைவரும் முன்பதிவு செய்து, இந்த மாதிரி வினாத்தாள்களை வாட்ஸ்அப் வழியாக இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த மாதிரி வினாத்தாள்களைப் பெற முன்பதிவுக்கு 'PG -TRB MODEL QUESTION PAPER-2025' என்று டைப் செய்து தங்களது 'SUBJECT' மற்றும் முகவரியுடன் 9176055568 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு, 9176055576, 9176055578 என்கிற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
    • சென்னையில் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. அதேவேளையில் இரவு சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.

    நேற்றிரவு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்த மழை காலை வரை நீடித்தது.

    இந்நிலையில் மாலை 4 மணி அளவில் தேனாம்பேட்டை, வடபழனி, மயிலாப்பூர், எழும்பூர், சேப்பாக்கம் உள்ளிட்ட சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

    இதனால் வெப்பம் குறைந்து சென்னையில் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    ×