என் மலர்tooltip icon

    சென்னை

    • பெரும்பாலான சட்டம்-ஒழுங்கு சீரழிவுகளுக்கு மூலக் காரணமாக விளங்குவது மது என்று சொன்னால் அது மிகையாகாது.
    • வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ்நாடு அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்திற்குட்பட்ட பண்ணை வீட்டில் பணிபுரிந்து வந்த தந்தை மகன்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக சென்ற குடிமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த சண்முகவேல் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் மூர்த்தி மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் பணிபுரிந்து வருவதாகவும், இவர்களுக்கிடையே நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் மூர்த்தி அவர்களை அவரது மகன் தங்கபாண்டியன் தாக்கியதாகவும் இதுகுறித்து அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் காவலர் அழகுராஜா ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று அவர்களை விலக்கிவிட்டு, காயமடைந்த மூர்த்தியை மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டியன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்துவிட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வந்துள்ளது பேரதிர்ச்சியை அளிக்கிறது. இந்தக் கொலைக்கு மூலக் காரணம் மது என்றும் கூறப்படுகிறது.

    கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பட்டப்பகலில் படுகொலைகள், கொள்ளைகள், போதைக் கலாச்சாரம், பாலியல் துன்புறுத்தல்கள் என சட்டம் ஒழுங்கு சீரழிவுகள் தமிழ்நாட்டில் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலான சட்டம்-ஒழுங்கு சீரழிவுகளுக்கு மூலக் காரணமாக விளங்குவது மது என்று சொன்னால் அது மிகையாகாது. இதன் காரணமாக, வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ்நாடு அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

    மொத்தத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. காவல் துறையினரையே தாக்கும் துணிச்சல் ரவுடிகளுக்கு ஏற்படுகிறது என்றால், அந்த அளவுக்கு மென்மையானப் போக்கினை தி.மு.க. அரசு கடைபிடிக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாடு கொலை நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு முழுக் காரணம் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைதான். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும். கொலைவெறித் தாக்குதலுக்கு மூல காரணமாக விளங்கும் மதுவை ஒழிக்க வேண்டிய கடமையும் திமுக அரசிற்கு உண்டு.

    மாண்புமிகு முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தனிக் கவனம் செலுத்தி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டிக் கொலை செய்த குற்றவாளிகள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற குற்றச் செயல்கள் நிகழாமல் இருக்கவும் உயிரிழப்புகளுக்கு மூலக் காரணமாக விளங்கும் மதுவை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    • வெள்ளி விலை மூன்றாவது நாளாக உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்சிழமை சவரனுக்கு 40 ரூபாயும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 600 ரூபாயும், நேற்று சவரனுக்கு 80 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,040-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,400-க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,200-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை மூன்றாவது நாளாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 127 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    06-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,040

    05-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,960

    04-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360

    03-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

    02-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    06-08-2025- ஒரு கிராம் ரூ.126

    05-08-2025- ஒரு கிராம் ரூ.125

    04-08-2025- ஒரு கிராம் ரூ.123

    03-08-2025- ஒரு கிராம் ரூ.123

    02-08-2025- ஒரு கிராம் ரூ.123

    • மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது.
    • பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அமைச்சர்களும் கலைஞர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணி தொடங்கி நடைபெற்றது.

    ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் நோக்கி அமைதி பேரணியில் தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றனர்.

    இதையடுத்து மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    அண்ணா நினைவிடத்தை தொடர்ந்து கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகளும் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

    • கருணாநிதி உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து கலைஞர் நினைவிடம் நோக்கி சென்ற அமைதி பேரணியில் ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றனர்.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் கருணாநிதியின் சிலைகளுக்கும், உருவப்படத்திற்கும் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

     

    சென்னையில் அண்ணா சாலையில் ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவருடன் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மு.க. தமிழரசு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    அதன் பிறகு ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து கருணாநிதியின் நினைவிடம் நோக்கி அனைவரும் நடந்து சென்றனர்.

    இந்த அமைதிப் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், மு.க.தமிழரசு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர்கள் கனிமொழி எம்.பி., ஆ.ராசா, ஐ.பெரியசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன்,

    அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், ஆவடி நாசர், பெரிய கருப்பன், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, தயாநிதி மாறன் எம்.பி., மாவட்ட கழக செயலாளர் நே.சிற்றரசு, மயிலை த.வேலு, அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், ஆர்.டி.சேகர், மாதவரம் சுதர்சனம், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா,

    சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, தி.நகர் ஜெ.கருணாநிதி, ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, பரந்தாமன், பல்லாவரம் இ.கருணாநிதி, எபிநேசர், ஐட்ரீம் மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. மீ.அ.வைத்தியலிங்கம், தமிழ்மணி, பகுதி செயலாளர் மதன் மோகன்,

    துணை மேயர்கள் மகேஷ் குமார், தாம்பரம் கோ.காமராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், சந்திரன், குணாளன், தி.நகர் ஏழுமலை, பம்மல் வே.கருணா நிதி, பல்லாவரம் இ.ஜோசப் அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன், பட்டூர் ஜபருல்லா,

    தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் தமிழ் மாறன், திருவல்லிக்கேணி வி.பி.மணி, அண்ணா நகர் ராமலிங்கம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன், வர்த்தக அணி செயலாளர் பாண்டிச் செல்வம் உள்பட ஏராளமான நிர்வாகிகள் அமைதிப் பேரணியில் நடந்து சென்றனர்.

    1½ கி.மீ. தூரம் நடை பெற்ற இந்த பேரணி மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தை அடைந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதே போல் அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

    அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் மரியாதை செலுத்தினார்கள்.

    • எழுத்துப்பூர்வமாக இல்லாமல் விடுப்பு எடுப்பது அங்கீகரிக்கப்படாத விடுப்பாக கருதப்படும்.
    • வருகைப் பதிவேடு விவரங்களை சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு அனுப்பிய பிறகு அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது.

    சென்னை:

    மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்று அழைக்கப்படக்கூடிய சி.பி.எஸ்.இ. நிர்வாகம், தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    * சி.பி.எஸ்.இ. தேர்வு துணை சட்ட விதி 13 மற்றும் 14-ன்படி, மாணவர்கள் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தகுதி பெற குறைந்தபட்சம் பள்ளிகளில் 75 சதவீத வருகைப் பதிவு கட்டாயம் ஆகும். மருத்துவ அவசரநிலைகள், தேசிய அல்லது சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பது, பிற தீவிர காரணங்களுக்காக செல்வது போன்றவற்றுக்கான ஆவணங்கள் இருந்தால் மேலும் 25 சதவீத தளர்வு வழங்கப்படும். இதனை அனைத்து பள்ளிகளும் முறையாக பின்பற்ற வேண்டும்.

    * வருகைப் பதிவு 75 சதவீதம் கொண்டிருப்பதன் அவசியம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எழுத்துப்பூர்வமாக இல்லாமல் விடுப்பு எடுப்பது அங்கீகரிக்கப்படாத விடுப்பாக கருதப்படும்.

    * சி.பி.எஸ்.இ. பள்ளிகளை திடீரென்று ஆய்வு மேற்கொள்ளும் போது முறையான விடுப்பு பதிவுகள் இல்லாமல் இருப்பதை கண்டறிந்தால், அந்த மாணவர் பள்ளிக்கு வராதவர், போலியானவர் என்பதாக கருதப்படும். அத்தகைய மாணவர்களை சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்காது. மேலும் வருகைப் பதிவுகளை முறையாக பராமரிக்காத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே வருகைப் பதிவேடு விவரங்களை சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு அனுப்பிய பிறகு அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது.

    * வருகைப்பதிவு தினமும் புதுப்பிக்கப்பட்டு, வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளியின் தகுதிவாய்ந்த அதிகாரியால் கையொப்பமிடப்பட்டு, சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு கிடைக்க செய்யவேண்டும்.

    * மாணவர்கள் அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருப்பதையும், வருகைப்பதிவு விவரத்தையும் சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு பதிவு செய்யப்பட்ட விரைவு தபால், மின்னஞ்சல் மூலமாக பள்ளிகள் தெரிவிக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பற்றி போலிச் செய்தி பரப்பப்படுகிறது.
    • பள்ளிக்கல்வித்துறை சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வுக்கு சென்றதாகவும், அப்போது போதையில் இருந்த ஆசிரியருக்கு முதல் உதவி அளித்ததாகவும், பள்ளியின் நுழைவு வாயில் அருகே போதை மாத்திரை விற்றுக்கொண்டிருந்தவர்களை எச்சரித்ததாகவும் சமூக வலைத்தளத்தில் செய்தி பரவி வருகிறது.

    இதனை பலரும் கேலி, கிண்டல் செய்து பகிர்ந்து வருகின்றனர். இதையடுத்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பற்றி போலிச் செய்தி பரப்பப்படுகிறது. இதனை சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீது பள்ளிக் கல்வித்துறை சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • கொரட்டூர் வடக்கு, ஸ்ரீனிவாசபுரம், என்ஆர்எஸ் ரோடு, மேட்டூ தெரு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (08.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    கொரட்டூர்: கொரட்டூர் வடக்கு, ஸ்ரீனிவாசபுரம், என்ஆர்எஸ் ரோடு, மேட்டூ தெரு, பெருமாள் கோவில் தெரு, லேக்வியூ கார்டன், டிவிஎஸ் நகர், சந்தோஷ் நகர், அன்னை நகர், அலையன்ஸ் ஆர்க்கிட் ஸ்பிரிங், லட்சுமிபுரம், ஐயப்பா நகர், செந்தில் நகர் 1 முதல் 17-வது தெரு வரை, தில்லை நகர்.

    பொன்னேரி டிவிசன்: தேர்வாய் கண்டிகை மற்றும் சிப்காட், கரடிபுத்தூர், அமரம்பீடு, தாணிப்பூண்டி, பாஞ்சாலை, வாணிமல்லி, பெரியபுலியூர், கோபால் ரெட்டி கண்டிகை, என்.எம்.கண்டிகை, கண்ணன்கோட்டை, பூதூர், சிறிய மற்றும் பெரிய பொம்மத்திகுளம்

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் ராயல சீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்றி நிலவுகிறது. இதன்காரணமாக, இன்று கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 3 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு!
    • எதிலும் தமிழ்நாடு முதலிடம் எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்!

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தலைவர் கலைஞர் -

    முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு!

    தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு!

    அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் "எல்லார்க்கும் எல்லாம்" – "எதிலும் தமிழ்நாடு முதலிடம்" எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்! என்று கூறியுள்ளார். 

    • ராமதாஸ் வருகிற 17-ந்தேதி பட்டானூரில் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.
    • வரும் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி தரப்பை சேர்ந்த வடிவேல் ராவணன் அறிவித்துள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவரது மகன் டாக்டர் அன்புமணி இடையே பா.ம.க.வில் கட்சி அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.

    இரு தரப்பினரும் பொதுக்குழுவை கூட்டப் போவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் பா.ம.க.வை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், பாமகவின் தலைமை அலுவலகம் என்று அன்புமணி அலுவலகத்தின் முகவரியை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருந்தது. இது ராமதாஸ் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதனையடுத்து ராமதாஸ் வருகிற 17-ந்தேதி பட்டானூரில் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். ராமதாசுக்கு போட்டியாக வரும் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி தரப்பை சேர்ந்த வடிவேல் ராவணன் அறிவித்துள்ளார். இருவரும் பொதுக்குழுவை அறிவித்ததால் பாமகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாமக பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. ராமதாஸ் நியமித்த பாமக மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், தன்னைத் தானே தலைவர் என்று சொல்லி செயல்படுகிறார் அன்புமணி. அவரின் தலைவர் பதவிக்காலம் கடந்த மே மாதத்துடன் முடிந்துவிட்டது. பொதுக்குழுவை கூட்டடுவதற்கு கட்சி நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது. ஆகவே மாமல்லபுரத்தில் ஆக.9ம் தேதி நடக்கும் பாமகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முரளிசங்கர் தொடர்ந்த வழக்கு விரைவில் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.

    • சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
    • பாடகி சின்மயி 500 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் உடன் போராட்டக்களத்திற்கு வந்தார்.

    சென்னை மாநகராட்சி தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 6 ஆவது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நகரின் பல இடங்களில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.

    இந்நிலையில், இன்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    ரிப்பன் மாளிகையின் முன்னால் போராடிக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு அவசரமாக தண்ணீர் தேவைப்பட்ட நிலையில், பாடகி சின்மயி 500 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் உடன் போராட்டக்களத்திற்கு வந்தார்.

    தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், தங்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும் என்ற தூய்மை பணியாளர்களின் கோரிக்கைக்கு சின்மயி ஆதரவு தெரிவித்தார்

    • தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
    • ஆதாரங்கள் இல்லாத நிலையில் சோதனை நடத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.

    திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

    டாஸ்மாக்கில் நடந்ததாக கூறப்படும் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். சோதனையின்போது தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வீடு, அலுவலகத்துக்கு 'சீல்' வைத்தனர். இதை எதிர்த்து இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் ஜுன் 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர்.

    மேலும், சோதனை தொடர்பாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரமும் இல்லை. எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் சோதனை நடத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர். மேலும், கைப்பற்றிய ஆவணங்கள், லேப்டாப், செல்போன்களை திரும்ப ஒப்படைக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யாத அமலாக்கத் துறைக்கு ரூ.30,000 அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    ஏற்கனவே 2 முறை அவகாசம் வழங்கிய பின்னரும் பதில் மனுத் தாக்கல் செய்யாதது சரியான நடவடிக்கை அல்ல என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமலாக்கத் துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

    ×