என் மலர்
சென்னை
- ஐஏஎஸ் தீரஜ் குமாருக்கு உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கப்ட்டுள்ளது
- ஐஏஎஸ் அமுதாவுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்ட்டுள்ளது
தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகியோர் நியமனம். செய்யப்பட்டுள்ளனர்
தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் ஆகியவற்றை செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் 4 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்யகுமார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம், மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் சத்யகுமாருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
- தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன.
- சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன்காரணமாக, தமிழகத்தில் வடமாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 12-ந் தேதி (திங்கட்கிழமை) வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதில் குறிப்பாக இன்று கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூா், வேலூா், ராணிபேட்டை ஆகிய 8 மாவட்டங்களிலும், நாளை (8-ந் தேதி) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தால் சென்னையில் பல பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் நாற்றம் வீசுகிறது.
- முதலமைச்சருக்கு தூய்மைப் பணியாளர் மீது அக்கறை இருந்தால், அவர்களை பணி நீக்கம் செய்யும் ஆணையை ரத்து செய்ய வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தால் சென்னையில் பல பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் நாற்றம் வீசுகிறது. தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 7-வது நாளாக இன்றும் நீடிக்கும் நிலையில், இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உண்மையாகவே பட்டியலினத்தவர் மீதும், தூய்மைப் பணியாளர் மீதும் அக்கறை இருந்தால், அவர்களை பணி நீக்கம் செய்யும் ஆணையை ரத்து செய்ய வேண்டும். மாறாக தற்காலிக தூய்மைப் பணியாளர்களை அழைத்துப் பேசி பணி நிலைப்பு உள்ளிட்ட அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடைசி மூச்சு வரை பாட்டாளி மக்களுக்காக உழைப்பேன்.
- பா.ம.க.வை பெரிய கட்சியாக உருவாக்கியது நான் தான்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
வன்னியர் சங்கம் சார்பில் பூம்புகாரில் 5 லட்சம் மகளிர்கள் பங்கு பெறும் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டிற்கு வரும் மகளிர் பாதுகாப்பாக வரவேண்டும்.
அன்புமணி நிறைய பொய்களையும் கட்டுக்கதைகளையும் கட்சி தொண்டர்களிடம் பரப்பி வருகிறார். அன்புமணி தைலாபுரத்தில் தன்னை சந்திக்க வந்ததாகவும் நான் கதவை மூடிக்கொண்டு பார்க்க மறுத்ததாக அன்புமணி தெரிவித்துள்ளார். என்னை அவர் சந்திக்கவும் வரவில்லை, நான் கதவையும் அடைக்கவில்லை. நான் ஏன் பேச மறுக்கிறேன்? 46 ஆண்டு காலம் கட்டி காப்பாற்றிய கட்சியை அன்புமணியிடம் ஏன் கொடுக்க வேண்டும்? கட்சி நிர்வாகிகள் யாரையும் என்னை சந்திக்கக்கூடாது என அன்புமணி தெரிவிக்கிறார்.
கட்சிக்கு அங்கீகாரம் இல்லை. சின்னமும் இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் கட்சி அங்கீகாரம் பெற வேண்டும் என்று சொல்லி நான் தலைமை ஏற்கிறேன் என கூறினேன். அதை அன்புமணி ஏற்றுக் கொள்ளவில்லை.
மேலும் கட்சியில் உள்ள பொறுப்பாளர்களை நியமிக்கவும், நீக்கவும் எனக்கு தான் அதிகாரம் உள்ளது. அன்புமணிக்கு அதிகாரம் இல்லை.
பா.ம.க.வை அன்புமணியிடம் கொடுத்துவிட்டு தைலாபுரம் இல்லதில் கதவை சாத்திகொண்டு கொள்ளு பேரன்களிடம் விளையாடுவதை ஏற்க முடியாது. கடைசி மூச்சு வரை பாட்டாளி மக்களுக்காக உழைப்பேன். மக்கள் என் மேல் உயிரை வைத்துள்ளார்கள். வஞ்சனையால், சூதுவால் உறிஞ்சி எடுத்து பா.ம.க.வை அன்புமணி எடுத்து கொள்வேன் என்கிறார்.
பா.ம.க.வினர் தன்னை நிறுவனராக பார்க்க மாட்டார்கள். என்னை கடவுளாக பார்க்கின்றனர். அப்படி பார்த்தவர்களை எனக்கு எதிராக பணத்தை கொடுத்து அவர் பக்கம் வைத்துள்ளார். ராமதாஸ் விதையை போட்டு தண்ணீரை ஊற்றி வளர்க்கவில்லை, வேர்வையை ஊற்றி ஆலமரமாக வளர்த்தேன். அதன் கிளையை வெட்டி கோடாரி செய்து ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார். கட்சியின் வளர்ச்சிக்காக அன்புமணி எதையும் செய்யவில்லை.
பா.ம.க.வை பெரிய கட்சியாக உருவாக்கியது நான் தான். அன்புமணிக்கு எந்த குறையும் வைக்கவில்லை. நல்ல பள்ளியில் பயில வைத்து, எம்.பி.யாக்கி, ராஜ்யசபா உறுப்பினராக்கி, எல்லா பொறுப்புகளையும் ஒப்படைத்தேன்.
தன்னை யாரும் பார்க்கக்கூடாது என்று பணத்தை கொடுத்து வருகிறார். காசு கொடுத்து கட்சிக்காரர்களை பொருளை விலைக்கு வாங்குவது போல் அன்புமணி செய்கிறார். தருமபுரியில் சுப்ரமணி ஓ.கே.எஸ். என்னை சந்திக்க வந்தபோது அவருக்கு தருமபுரி எம்.எல்.ஏ வெங்கடேஷ், ரூ.5 ஆயிரம் கொடுத்து தடுத்தார். இதுபோன்று என்னை சந்திக்க வருபவர்களை சந்திக்க விடாமல் நிறைய வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால் ஓ.கே.எஸ். அந்த பணத்தை எம்.எல்.ஏ. முகத்தில் வீசிவிட்டு என்னை சந்தித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பசுமைப் புரட்சிக்கு வித்திட்டுப் பசியாற்றிய மானுடநோக்கு கொண்ட அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டுப் பிறந்தநாள் இன்று.
- தந்தையின் பணியையும்-புகழையும் போற்றும் சவுமியா சுவாமிநாதனின் பணி சிறக்கவும் வாழ்த்துகள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
பசுமைப் புரட்சிக்கு வித்திட்டுப் பசியாற்றிய மானுடநோக்கு கொண்ட அறிவியலாளர் 'பாரத ரத்னா' எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டுப் பிறந்தநாள் இன்று. தமது அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான எம்.எஸ். சுவாமிநாதனின் பெயரிலான ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு நிலம் வழங்கி, குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணனுடன் இணைந்து, அங்குள்ள ஜெ.ஆர்.டி. டாடா சுற்றுச்சூழல் தொழில்நுட்ப மையத்தைத் திறந்தும் வைத்தார் அன்றைய முதலமைச்சர் கலைஞர்.
அவரது வழியிலான நமது திராவிடமாடல் அரசும், போரூர் வெட்லேண்ட் பார்க், தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி ஆகியவற்றுக்குத் எம்.எஸ். சுவாமிநாதனின் பெயரைச் சூட்டியுள்ளதோடு, பயிர்ப் பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவருக்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்து அவரது நினைவைப் போற்றி வருகிறோம்.
காலநிலை மாற்றம் உட்பட இன்று நாம் எதிர்கொண்டு வரும் பல சவால்களைப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே கணித்து, எச்சரித்த மாபெரும் தொலைநோக்காளரான எம்.எஸ்.சுவாமிநாதனை அடியொற்றி, மேலும் பல மாணவர்கள் சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் என அவரது நூற்றாண்டில் கோரிக்கையாக முன்வைக்கிறேன்!
தந்தையின் பணியையும்-புகழையும் போற்றும் சவுமியா சுவாமிநாதனின் பணி சிறக்கவும் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.
- பள்ளிக்கல்வியில் தமிழ் மொழியை முதல் மொழியாக நிலைநிறுத்துவது அவசியம்.
சென்னை:
மாநில கல்வி கொள்கையை உருவாக்க 2022-ல் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த ஜூலை மாதம் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில், 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது என்றும் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றும் மாநில கல்விக்கொள்கை குழு பரிந்துரைத்தது. மேலும், நீட் தேர்வு கூடாது, நீட் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களை விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும். பள்ளிக்கல்வியில் தமிழ் மொழியை முதல் மொழியாக நிலைநிறுத்துவது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், மாநில கல்வி கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது.
- தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுகிறார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைந்து விட்டது.
கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது.
தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுகிறார். அவர் வருகிற 9-ந்தேதி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக கூறினார்.
- ‘தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ ‘இளைய திராவிடம் எழுகிறது’ ஆகிய 2 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ளார்.
- கலைஞரின் சிலைகளை நினைவுப் பரிசாக உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நினைவு நாளையொட்டி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தை தொடங்கி வைத்து அதன் இலச்சினையை வெளியிட்டார். அதை நக்கீரன் கோபால் பெற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து திராவிட இயக்க இளம் ஆய்வாளர்களை கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுத்து ஊக்குவிக்கும் விதமாக கலைஞர் நிதிநல்கை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் இலச்சினையை அவர் வெளியிட திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு பெற்றுக்கொண்டார். இந்த திட்டத்தின் மூலம் இளம் ஆய்வாளர்கள் 15 பேருக்கு ஆண்டுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 8 நூல்களான தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும், தி.மு.க. வரலாறு, இளைய திராவிடம் எழுகிறது, மாநில சுயாட்சி முழக்கம், திராவிட இயக்க வரலாறு கேள்வி பதில், இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம் ஏன்? இந்தியாவுக்கு வழிகாட்டும் திராவிட மாடல், 'இந்தியாவில் சமூக நீதியும் இட ஒதுக்கீடும்' ஆகிய புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இதில் 'தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்' 'இளைய திராவிடம் எழுகிறது' ஆகிய 2 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கருணாநிதி குறித்த சிறப்பு காணொலியும் ஒளிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அனைவருக்கும் கலைஞரின் சிலைகளை நினைவுப் பரிசாக உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி எம்.பி., ஐ.பெரியசாமி, திருச்சி சிவா எம்.பி., ஆ.ராசா எம்.பி., அந்தியூர் செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா மற்றும் புத்தக எழுத்தாளர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
- தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளைத் திமுக அரசு தொடர்ந்து புறக்கணிப்பது முறையல்ல.
- சேதமடைந்த தடுப்பணைகளை மேம்படுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திருச்சி மாவட்டம் அழகிரிபுரம் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆண்டு சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்ததை சீர்செய்யாமல் அறிவாலயம் அரசு அலட்சியப்படுத்துவதால், பயிர் பாசனத்திற்கு பயன்பட வேண்டிய மழை நீர் வீணாகக் கடலில் கலப்பதாகக் கூறி அப்பகுதி விவசாய பெருமக்கள் ஆற்றில் இறங்கி நின்று போராடும் காணொளி மனதை கனக்க வைக்கிறது.
தரமற்ற முறையில் தடுப்பணையைக் கட்டியது மட்டுமன்றி ஊருக்கே படியளக்கும் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்து அவர்களின் வயிற்றிலடிக்கும் திமுக அரசின் அராஜகத்திற்கு எனது கடும் கண்டனங்கள். ஏற்கனவே பராமரிப்பற்ற அரசு சேமிப்பு கிடங்குகளில் அடுக்கி வைக்கும் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாலும், முறையாக தூர்வாராமல் வறண்டு கிடக்கும் பாசனப் போக்குவரத்தால் பயிர்கள் கருகுவதாலும் ஏகப்பட்ட நஷ்டத்தை சந்தித்து வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளைத் திமுக அரசு தொடர்ந்து புறக்கணிப்பது முறையல்ல.
எனவே, அழகிரிபுரம் விவசாயப் பெருமக்களின் அத்தனை கோரிக்கைகளுக்கும் செவிமடுத்து அவற்றை நிறைவேற்றுவதோடு, தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள தடுப்பணைகளைக் கட்டுவதற்கும், சேதமடைந்த தடுப்பணைகளை மேம்படுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெரும்பாலான சட்டம்-ஒழுங்கு சீரழிவுகளுக்கு மூலக் காரணமாக விளங்குவது மது என்று சொன்னால் அது மிகையாகாது.
- வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ்நாடு அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்திற்குட்பட்ட பண்ணை வீட்டில் பணிபுரிந்து வந்த தந்தை மகன்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக சென்ற குடிமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த சண்முகவேல் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் மூர்த்தி மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் பணிபுரிந்து வருவதாகவும், இவர்களுக்கிடையே நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் மூர்த்தி அவர்களை அவரது மகன் தங்கபாண்டியன் தாக்கியதாகவும் இதுகுறித்து அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் காவலர் அழகுராஜா ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று அவர்களை விலக்கிவிட்டு, காயமடைந்த மூர்த்தியை மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டியன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்துவிட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வந்துள்ளது பேரதிர்ச்சியை அளிக்கிறது. இந்தக் கொலைக்கு மூலக் காரணம் மது என்றும் கூறப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பட்டப்பகலில் படுகொலைகள், கொள்ளைகள், போதைக் கலாச்சாரம், பாலியல் துன்புறுத்தல்கள் என சட்டம் ஒழுங்கு சீரழிவுகள் தமிழ்நாட்டில் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலான சட்டம்-ஒழுங்கு சீரழிவுகளுக்கு மூலக் காரணமாக விளங்குவது மது என்று சொன்னால் அது மிகையாகாது. இதன் காரணமாக, வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ்நாடு அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
மொத்தத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. காவல் துறையினரையே தாக்கும் துணிச்சல் ரவுடிகளுக்கு ஏற்படுகிறது என்றால், அந்த அளவுக்கு மென்மையானப் போக்கினை தி.மு.க. அரசு கடைபிடிக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாடு கொலை நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு முழுக் காரணம் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைதான். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும். கொலைவெறித் தாக்குதலுக்கு மூல காரணமாக விளங்கும் மதுவை ஒழிக்க வேண்டிய கடமையும் திமுக அரசிற்கு உண்டு.
மாண்புமிகு முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தனிக் கவனம் செலுத்தி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டிக் கொலை செய்த குற்றவாளிகள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற குற்றச் செயல்கள் நிகழாமல் இருக்கவும் உயிரிழப்புகளுக்கு மூலக் காரணமாக விளங்கும் மதுவை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
- வெள்ளி விலை மூன்றாவது நாளாக உயர்ந்துள்ளது.
- பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்சிழமை சவரனுக்கு 40 ரூபாயும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 600 ரூபாயும், நேற்று சவரனுக்கு 80 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,040-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,400-க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,200-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை மூன்றாவது நாளாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 127 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
06-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,040
05-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,960
04-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360
03-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320
02-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
06-08-2025- ஒரு கிராம் ரூ.126
05-08-2025- ஒரு கிராம் ரூ.125
04-08-2025- ஒரு கிராம் ரூ.123
03-08-2025- ஒரு கிராம் ரூ.123
02-08-2025- ஒரு கிராம் ரூ.123
- மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது.
- பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அமைச்சர்களும் கலைஞர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணி தொடங்கி நடைபெற்றது.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் நோக்கி அமைதி பேரணியில் தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அண்ணா நினைவிடத்தை தொடர்ந்து கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகளும் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.






