என் மலர்
சென்னை
- விமானத்தில் பயணிப்பதற்காக புறப்பட்ட ஏராளமான பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர்.
- விமான நிலையம் செல்வோர் உடனடியாக தாங்கள் புக் செய்த விமான நிறுவனங்களுக்கு தகவல் கூறியுள்ளனர்.
சென்னை பல்லாவரம் அருகே இன்று காலை ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏராளமான வாகனங்கள் சாலையில் வரிசை கட்டி நின்றன.
இதில், விமானத்தில் பயணிப்பதற்காக புறப்பட்ட ஏராளமான பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர்.
பேருந்து விபத்தால் 3 கி.மீ தூரம் நெரிசல் ஏற்பட, விமான நிலையம் செல்வோர் உடனடியாக தாங்கள் புக் செய்த விமான நிறுவனங்களுக்கு தகவல் கூறியுள்ளனர்.
இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பயணிகளின் வசதிக்காக 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
- அரசு பள்ளிகளில் சுமார் 14,000 சிறப்பாசிரியர்கள் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாக பணி செய்து வருகின்றனர்.
- மேலும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பல்வேறு அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி செய்து வருகின்றனர்.
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்வதும், அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்களை பணிநிலைப்பு செய்வதற்கும் மறுப்பதும் அப்பட்டமான உழைப்புச் சுரண்டல் என்று கூறி உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாகவும், தற்காலிகமாகவும் பணியாற்றி வரும் ஆசிரியர்களையும், பிற பணியாளர்களையும் பணி நிலைப்பு செய்வதற்கு மறுத்து வரும் திமுக அரசு, உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பிறகாவது திருந்துவதற்கு முயல வேண்டும்.
உத்தரப்பிரதேச உயர்கல்வி சேவைகள் ஆணையத்தில் 1989 முதல் 1992 வரை தினக்கூலி ஊழியர்களாக பணியில் சேர்ந்த மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை பணியாளர்கள் 6 பேர் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றியும் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க அம்மாநில அரசு மறுத்து விட்டது. அவர்களில் சிலர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியும் கூட அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து தொடரப்பட்டிருந்த வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் கண்டனமும், அறிவுரைகளும் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்தக் கூடியவை.
பணியாளர்களின் உழைப்பை மத்திய, மாநில அரசுகள் சுரண்டக் கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், வேலை வழங்கும் விஷயத்தில் அரசுகள் வெறும் சந்தைப் பங்கேற்பாளர்கள் அல்ல; மாறாக, அவை அரசியல் சட்டப்படியான வேலை வழங்கும் அமைப்புகள். அரசு அலுவலகங்களில் அடிப்படையான பணிகளை தொடர்ந்து செய்யும் அவர்களின் முதுகில் அரசின் நிதிப்பற்றாக்குறை என்ற சுமையை சுமத்தக்கூடாது.
தற்காலிக பணியாளர்கள் என்ற அடிப்படையில் பணிக்கு சேர்த்து விட்டு, அவர்களிடமிருந்து நிரந்தரமான ஊழியர்களுக்கான வேலைகளை காலம் காலமாக பிழிந்தெடுப்பது பொது நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை சிதைப்பதுடன், அனைவருக்கும் சமமான பாதுகாப்பு என்ற அரசியலமைப்புச் சட்ட உத்தரவாதத்தையும் பாதிக்கிறது என்றும் அறிவுறுத்தினர். அந்த பணியாளர்கள் அனைவரையும் 2002-ஆம் ஆண்டு முதல் பணி நிலைப்பு செய்து, அதன் அடிப்படையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளை வழங்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.
அரசு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 16, 21 ஆகியவற்றின் அடிப்படையில் அனைவருக்கும் சம உரிமை, வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு, வாழும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்பது தான் இந்தத் தீர்ப்பின் நோக்கமாகும். ஆனால், இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது என்பது தான் உண்மை.
தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், தற்காலிக நியமனங்களை மட்டுமே வாடிக்கையாக வைத்திருக்கிறது தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசு. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளனவோ, அவற்றில் பாதி, அதாவது கிட்டத்தட்ட 50% தற்காலிக நியமனங்கள் ஆகும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தொடங்கி, பல்கலைக்கழகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் தனியார் நிறுவனங்கள் வாயிலாக குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பதை புதிய வாடிக்கையாகவும், கலாச்சாரமாகவும் திராவிட மாடல் அரசு மாற்றியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை &அறிவியல் கல்லூரிகளில் 7500க்கும் கூடுதலான கவுரவ விரிவுரையாளர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் சுமார் 14,000 சிறப்பாசிரியர்கள் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாக பணி செய்து வருகின்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பல்வேறு அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி செய்து வருகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஆசிரியர்களும், பணியாளர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று 2021-ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை குப்பையில் வீசி விட்டு, தற்காலிக ஊழியர்களை சுரண்டும் பணியில் திமுக அரசு ஈடுபட்டிருக்கிறது. திமுகவின் இந்த துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது.
தற்காலிக ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் தங்களுக்கு பணிநிலைப்பு வேண்டும் என்று போராடிய போதெல்லாம் அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதையும், அனைவரையும் கைது செய்து சிறையில் அடைப்பதையும் தான் திமுக அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது. அரசுத் துறைகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் விஷயத்தில் அரசுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை படித்தாவது திமுக அரசு தெரிந்து கொள்ள வேண்டும்; பின்பற்ற வேண்டும்.
அரசுத்துறைகளில் பகுதி நேரப்பணிகள், ஒப்பந்தப்பணிகள், தற்காலிக அடிப்படையிலான பணிகள் போன்றவை அதில் ஈடுபடுவோரை சுரண்டுவதுடன், அவர்களின் கண்ணியத்தையும் குலைக்கின்றன. எனவே, தமிழக அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அனைவரையும் பணி நிலைப்பு செய்வதுடன், அவர்கள் பணியில் சேர்ந்த நாளில் இருந்து அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வருகின்ற 25-ந்தேதி வாக்கில், ஒரிசா - மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 24 -ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பது சென்னை தான்.
- சென்னையின் சாலைகளில் பயணம் செய்வதே சாகசமாக மாறியிருக்கிறது.
சென்னை மாநகரம் அதன் 386ம் உருவாக்க நாளை கொண்டாடும் நிலையில் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னையை வாழத்தகுந்த மாநகரமாக மாற்ற சென்னை நாளில் உறுதியேற்போம்!
தென்னிந்தியாவின் தலைநகரமாக வளர்ந்து நிற்கும் சென்னை மாநகரம் அதன் 386-ஆம் உருவாக்க நாளைக் கொண்டாடும் நிலையில், சென்னை மாநகர மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மாநகரமாக பிறக்கவில்லை. பாட்டாளிகள் மற்றும் பூர்வகுடி மக்களின் கிராமங்கள் இணைக்கப்பட்டு, அவர்களின் உழைப்பு தான் இன்றைய சென்னையை உருவாக்கியிருக்கிறது.
சென்னப்ப நாயகர் உள்ளிட்ட சிலரின் நிலங்களை வாங்கி அதில் சென்னை மாநகரத்தை அமைப்பதற்கான அனுமதி பத்திரம் கையெழுத்திடப்பட்ட நாளே சென்னை நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பது சென்னை தான்.
ஆனால், சென்னையை வாழத்தகுதியற்ற மாநிலமாக மாற்றியது தான் இன்றைய ஆட்சியாளர்களின் சாதனை. கோடை வந்தால் வறட்சி, மழை வந்தால் வெள்ளம் என்பது தான் இன்றைய சென்னையின் அடையாளமாக மாறியிருக்கிறது.
அத்தனைக்கும் காரணம் ஆட்சியாளர்களின் அக்கறையின்மையும், அளவில்லாத ஆசையும் தான்.
இந்த நிலையை மாற்றி சென்னையை வாழத்தகுந்த மாநகரமாக மாற்றுவது தான் சென்னை மாநகர மக்களின் இன்றைய தலையாயக் கடமையாகும். இந்தப் பணியை நிறைவேற்றி முடிப்பதற்காக கடுமையாக உழைக்க சென்னை நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சிறப்பு ரெயில் (06029), வரும் செப்டம்பர் 8-ந்தேதி முதல் டிசம்பர் 1-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி செல்லும் சிறப்பு ரெயில் (06191), வரும் செப்டம்பர் 2-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லையில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06030), வரும் செப்டம்பர் 7-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலும் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06029), வரும் செப்டம்பர் 8-ந்தேதி முதல் டிசம்பர் 1-ந்தேதி வரையிலும் (திங்கட்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06190), வரும் செப்டம்பர் 2-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலும் (செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி செல்லும் சிறப்பு ரெயில் (06191), வரும் செப்டம்பர் 2-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலும் (மேற்கண்ட நாட்களில்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
- நலத்திட்டங்களை தருகிறோம் என்ற பெயரில் தி.மு.க. அமைச்சர்கள் பெண்களை ஏளனமாக பேசுவது கண்டிக்கத்தக்கது.
- மூக்கு, காதில் எல்லாம் நகை போட்டிருந்தால் ரூ.1000 கொடுக்கமாட்டோம் என சாத்தூர் ராமச்சந்திரன் பேசி உள்ளார்.
விருதுநகர் மாவட்டம் முள்ளிச்சேவலில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் மனு கொடுக்க வந்தனர்.
அந்த பெண்களிடம், இப்படி நகை போட்டு வந்தால் எப்படி பணம் கிடைக்கும்? நகை அணிந்து வந்தால் உரிமைத்தொகை கிடைக்காது என்று நகைச்சுவையாக அவர் கூறினார்.
இதுதொடர்பாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது:
* நலத்திட்டங்களை தருகிறோம் என்ற பெயரில் தி.மு.க. அமைச்சர்கள் பெண்களை ஏளனமாக பேசுவது கண்டிக்கத்தக்கது.
* விருதுநகர் அருகே உரிமைத்தொகை கேட்ட பெண்களிடம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நாகரிகமற்ற வகையில் பேசி உள்ளார்.
* மூக்கு, காதில் எல்லாம் நகை போட்டிருந்தால் ரூ.1000 கொடுக்கமாட்டோம் என சாத்தூர் ராமச்சந்திரன் பேசி உள்ளார்.
* அரசு பதவியின் மாண்பை மறந்து இதுபோன்ற கேலி கிண்டல்களில் ஒரு அமைச்சர் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது.
* ரூ.1000 உரிமைத்தொகை வாங்குவோர் எல்லாம் நகை போடக்கூடாதா?
* உரிமைத்தொகை கேட்ட பெண்களிடம் நாகரிகமற்ற வகையில் பேசிய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சமீபத்தில் ராமதாஸ் கூட்டிய பொதுக்குழுவில் அவரது மகளான ஸ்ரீகாந்தி கலந்து கொண்டார்.
- 22 பேர் கொண்ட நிர்வாக குழுவில் ஸ்ரீகாந்தியும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பா.ம.க.வில் தந்தை- மகன் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. தனது மகள் வழிப்பேரரான முகுந்தன் பரசுராமனை இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்த நிலையில், அதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் . இதன்பின்னர், கூட்டணி விவகாரம், கட்சி செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அன்புமணி மீது தொடர்ந்து ராமதாஸ் அதிருப்தி அடைந்தார். இதனை தொடர்ந்து அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி உத்தரவிட்டார்.
இப்படியாக, கடந்த பொதுக்குழுவில் ஆரம்பித்த மோதல் சமீபத்தில் நடந்த முடிந்த பொதுக்குழு வரை நீடித்தது. இருதரப்பினரும் தனது ஆதரவாளர்களுன் பொதுக்குழு கூட்டினர். சமீபத்தில் ராமதாஸ் கூட்டிய பொதுக்குழுவில் அவரது மகளான ஸ்ரீகாந்தி கலந்து கொண்டார். அவருக்கு மேடையில் ராமதாஸ் அருகிலேயே இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீகாந்திக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், ராமதாஸ் தரப்பு ஸ்ரீகாந்திக்கு பா.ம.க. நிர்வாக குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 22 பேர் கொண்ட நிர்வாக குழுவில் ஸ்ரீகாந்தியும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, என் குடும்ப பெண்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று சவுமியாவிடம் சொன்னேன். ஆனால் இப்போது நடப்பது உங்களுக்கு தெரியும். பொதுக்குழுவில் சொன்னதுபோல் குடும்ப பெண்கள் கட்சியில் வேண்டாம் என்று சொன்னேன். என்னிடம் கெஞ்சி, கூத்தாடி, வாதாடி தருமபுரியில் போட்டியிட்டார் சவுமியா. தருமபுரி தொகுதியில் முதலில் தான் நிற்பதாக கூறிய அன்புமணி, பின்னர் சவுமியா நிற்பதாக கூறினார். தனது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அரசியலுக்கு வேண்டாம் என்று கூறியதற்கு எதிர்மாறாக அன்புமணி செயல்பட்டதாக ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கொட்டாம்பட்டியில் புதிய பேருந்து நிலையம், 66 பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
- 182 உதவி மருத்துவ அலுவலர்கள், 48 பல் மருத்துவர் பணிக்கு தேர்வானோருக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்து, பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
* ரூ.104.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை திறந்து வைத்தார்.
* கொட்டாம்பட்டியில் புதிய பேருந்து நிலையம், 66 பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
* 4 புதிய நூலக கட்டடங்கள், 49 பொது விநியோக கடைகள் உள்ளிட்ட பல திட்டங்களை திறந்து வைத்தார்.
* தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வான 644 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.
* மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.
* 182 உதவி மருத்துவ அலுவலர்கள், 48 பல் மருத்துவர் பணிக்கு தேர்வானோருக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.
* 324 அறுவை அரங்கு உதவியாளர்கள், 18 உளவியல் உதவி பேராசிரியர்களுக்கான ஆணையை வழங்கினார்.
* 54 வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள், 17 மருந்து ஆய்வாளர்களுக்கு பணி ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- கன்றுக்குட்டிக்கு மிஸ்டர் அலெக்ஸ் என பெயரிட்டு வீட்டில் ஒருவராக வளர்க்க தொடங்கி உள்ளனர்.
- வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
சென்னை:
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 28-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வரும் கன்றுக்குட்டி பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த கன்றுக்குட்டி 3 மாதமாக இருந்த போது நீலாங்கரையில் உள்ள தெருவில் வேகமாக வந்த கார் மோதி காயம் அடைந்துள்ளது. அப்போது விலங்குகள் நல ஆர்வலரான தேஜஸ்வி ரங்கன் என்ற கட்டிட வடிவமைப்பாளர் அந்த கன்றுக்குட்டியை மீட்டு தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் கன்றுக்குட்டிக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளித்து பராமரித்ததால் கன்றுக்குட்டி நன்றாக குணம் அடைந்தது. பின்னர் அந்த கன்றுக்குட்டிக்கு மிஸ்டர் அலெக்ஸ் என பெயரிட்டு வீட்டில் ஒருவராக வளர்க்க தொடங்கி உள்ளனர்.
தேஜஸ்வியின் வீடு அடுக்குமாடி குடியிருப்பில் 28-வது மாடியில் உள்ள நிலையில் அங்கிருந்து கன்றுக்குட்டி தினமும் பங்கிங்ஹாம் கால்வாயின் பரந்த காட்சியை பார்ப்பதாக கூறுகின்றனர்.

கன்றுக்குட்டி குறித்த வீடியோவை சாய் விக்னேஷ் சமூக வலை தளங்களில் பதிவிட்ட நிலையில் அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், அலெக்ஸ் மிகவும் அழகானவர். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என பதிவிட்டிருந்தார். சில பயனர்கள், கேலியான கருத்துக்களை பதிவிட்டனர். ஒருவர், கன்றுக்குட்டி பெரிதாகும் போது லிப்ட் வசதிக்கு என்ன செய்ய போகிறார்? என கேள்வி எழுப்பி இருந்தார்.
- நேற்று கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 230-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.73 ஆயிரத்து 840-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
சென்னை:
இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 19-ந்தேதி கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.9 ஆயிரத்து 235-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.73 ஆயிரத்து 880-க்கும், 20-ந்தேதி கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு ரூ.9 ஆயிரத்து 180-க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73 ஆயிரத்து 440-க்கும், 21-ந்தேதி கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 230-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.73 ஆயிரத்து 840-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9.215-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 73,720-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 128 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 28ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
21-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,840
20-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,440
19-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,880
18-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,200
17-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
21-08-2025- ஒரு கிராம் ரூ.126
20-08-2025- ஒரு கிராம் ரூ.125
19-08-2025- ஒரு கிராம் ரூ.126
18-08-2025- ஒரு கிராம் ரூ.127
17-08-2025- ஒரு கிராம் ரூ.127
- நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386!
- வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்தது சென்னை.
சென்னை மாநகரம் இன்று தனது 386-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386!
சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! வணக்கம் வாழவைக்கும் #சென்னை!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிரிட்டிஷ் அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட 4 இந்திய குடியிருப்புகளை இணைத்து "மெட்ராஸ் மாகாணம்" உருவாக்கப்பட்டது.
- இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1956-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.
தமிழகத்தின் தலைநகராக பரந்து விரிந்து காணப்படும் சென்னை நகருக்கு இன்று 386-வது பிறந்த நாள். அதாவது சென்னை நகரம் உருவாகி இன்றுடன் 386 ஆண்டுகள் ஆகிறது.
இந்தியாவில் வணிகம் செய்ய ஆங்கிலேயர்கள் 1600-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியை தொடங்கினர். அவர்கள் மசூலிப்பட்டினத்தில் முதலில் கம்பெனியை தொடங்கி வணிகம் செய்தனர்.
ஆங்கிலேயர்கள் போலவே டச்சுக்காரர்கள், ஸ்பெயின், போர்த்துகீசியர்கள் ஆகியோரும் இந்தியாவில் வணிகம் செய்தனர்.
அவர்களுக்குள் போட்டிகள் அதிகரிக்கவே ஆங்கிலேயர்கள் புதிய கம்பெனி அமைப்பதற்கு தென் பகுதியில் ஒரு இடத்தை தேடினர். இதற்காக ஆண்ட்ரூ கோகன் மற்றும் பிரான்சிஸ்டே ஆகிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
அப்போது டமர்லா வெங்கடபதி நாயக் மற்றும் அவரது சகோதரர் அய்யப்ப நாயக்கர் என்ற உள்ளூர் நாயக் மன்னர்களிடம் இருந்து கூவம் ஆற்றின் அருகில் மதராசப்பட்டினம் என்ற பகுதி அடங்கிய ஒரு பெரிய இடம் ஆங்கிலேயர்களால் வாங்கப்பட்டது.
1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி இந்த இடத்தை ஆங்கிலேயர்கள் வாங்கியதற்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இந்த நாள் தான் தற்போது சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆங்கிலேயர்கள் வாங்கிய அந்த நிலத்தில் 1640-ம் ஆண்டு ஒரு பெரிய கோட்டையை கட்டத் தொடங்கினர். அப்போது முதல் அந்த பகுதி நகரமாக வளர்ச்சி அடைய தொடங்கியது. இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது.
கோட்டைக்கான கட்டுமான பணிகள் 1653-ம் ஆண்டு வரை நடைபெற்றது. ஆங்கிலேயர்களுக்கு பணி செய்ய வந்தவர்கள், கோட்டை பணியில் ஈடுபட்டவர்கள் என புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றி மக்கள் குடிபெயரத் தொடங்கினர்.
கோட்டைக்கு அருகில் இருந்த திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் மிக பழமையான கிராமங்கள் ஆகும். புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றி உருவான குடியிருப்புகளில் ஆங்கிலேயர்கள் வசித்தனர்.
அந்த பகுதி வெள்ளை நகரம் என அழைக்கப்பட்டது. அதே போன்று கோட்டையை சுற்றி இந்தியர்கள் வாழ்ந்த நகரம் கருப்பு நகரம் என்று அழைக்கப்பட்டது. பொதுவாக கோட்டை அமைந்த பகுதி ஜார்ஜ் நகரம் என்றே குறிப்பிடப்பட்டது.
இதற்கிடையே கோட்டை மற்றும் ஆங்கிலேயர்கள் விரிவுபடுத்திய பகுதி மதராசப்பட்டினத்திற்கு அருகில் இருந்ததால் அப்பகுதி உள்ளூர் மக்களால் மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.
அதே போன்று கோட்டை கட்ட நிலம் வழங்கிய மன்னர் டமர்லா வெங்கடபதி நாயக், அவரின் தந்தை பெயரான சென்னப்ப நாயக் என்பதை நினைவுகூர சென்னப்பட்டினம் என்ற பெயரை அப்பகுதிக்கு சூட்டினார்.
இதனால் புதிதாக விரிவடைந்த நகரத்திற்கு பெயர் மதராசப்பட்டினமா அல்லது சென்னப்பட்டினமா என்ற சந்தேகம் இருந்தது. கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இணைந்து நகரமாக உருவான நிலையில், வடக்கு பகுதி மதராசப்பட்டினம் என்றும், தெற்கு பகுதி சென்னப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.
நாளடைவில் இந்த நகரம் முழுவதுமே மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. மயிலாப்பூர், பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்த சாந்தோம், நெசவாளிகள் வாழ்ந்த சிந்தாதிரிப்பேட்டை மற்றும் சிறிய கிராமங்களை படிப்படியாக மெட்ராஸ் நகரத்துடன் இணைத்து ஆங்கிலேயர்கள் விரிவுபடுத்தினர்.
திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்களும் மெட்ராஸ் நகரத்துடன் இணைந்தது. 1688-ம் ஆண்டு மெட்ராஸ் பகுதிக்கு நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது.
இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது.
அதன்பிறகு பிரிட்டிஷ் அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட 4 இந்திய குடியிருப்புகளை இணைத்து "மெட்ராஸ் மாகாணம்" உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் மெட்ராஸ் மாகாணம் மிகப்பெரிய இடத்தை பெற்றது. மெட்ராஸ் மாகாணத்தை மற்ற நகரங்களுடன் இணைக்க ரெயில் பாதைகள் உருவாக்கப்பட்டன.
மேலும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. காவல்துறையும் ஏற்படுத்தப்பட்டு, நீதிமன்றமும் கட்டப்பட்டது. ஐகோர்ட், சென்னை பல்கலைக்கழகம், மாநில கல்லூரி, சென்ட்ரல் ரெயில் நிலையம் ஆகியவை அப்போதுதான் உருவாக்கப்பட்டன.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1956-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது மெட்ராஸ் மாகாணம் தனி மாநிலம் ஆனது.
அதன் பின்னர் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, மெட்ராஸ் மாகாணம் 1969-ம் ஆண்டு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றப்பட்டது. அதன் தலைநகரமாக திகழ்ந்த மெட்ராஸ் 1996-ம் ஆண்டு சென்னை என பெயர் மாற்றப்பட்டது.
அதன் பிறகு சென்னை நகரம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைய தொடங்கியது. சென்னை நகரின் பரப்பளவு பரந்து விரியத் தொடங்கியது. சென்னையை சுற்றிலும் புதிய பகுதிகள் உருவாக்கப்பட்டு அவை வேகமான வளர்ச்சியை பெற்றன.
அதன் காரணமாக சென்னை தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி என்ற அந்தஸ்தோடு திகழ்கிறது. இதனால் பல்வேறு துறைகளிலும் சென்னை நகரம் முதலிடம் பெற்று சிறப்புடன் திகழ்கிறது.
பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட சென்னையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் சுமூகமான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.
சென்னையில் தற்போது 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். சென்னைக்கு என்று பல்வேறு சிறப்புகள் உள்ளன. கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, போக்குவரத்து, மருத்துவம், அறிவியல், அரசியல், பொழுதுபோக்கு, உணவு என்று அனைத்து வகைகளிலும் சென்னை நகரம் நாட்டின் மற்ற நகரங்களில் இருந்து தனித்துவம் கொண்டதாக திகழ்கிறது.

தென் இந்தியாவின் நுழைவு வாயில் என்று வர்ணிக்கப்படும் சென்னை சில அம்சங்களில் நாட்டின் முதன்மை நகரமாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக ஆலயங்கள் கொண்ட சிறப்பு சென்னைக்கு உண்டு.
மேலும் சிறந்த மருத்துவம் அளிக்கும் நகரமாக சென்னை திகழ்கிறது. நாட்டிலேயே அதிக கார்கள் உற்பத்தியாகும் நகரமாகவும் சென்னை உள்ளது. ஐ.டி. தொழில் தொழில் நுட்பத்திலும் மற்ற நகரங்களுக்கு வழிகாட்டும் இடமாக சென்னை உள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் நிறைந்த இடம் என்ற பெருமையும் சென்னைக்கு உண்டு. சென்னையில் உள்ள பழமையான கட்டிடங்களே இதற்கு சாட்சியாக திகழ்கின்றன.
இந்த நிலையில் சென்னை தினத்தை கொண்டாடும் பழக்கம் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கியது. அதன் பிறகு ஆண்டுக்கு ஆண்டு சென்னை தின கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகிறது.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் தலைநகராக, பேரும் புகழோடும் விளங்கும் சென்னை மாநகரின் பிறந்த நாளை அனைவருமே கொண்டாடி மகிழ்வோம்.






