என் மலர்
செங்கல்பட்டு
- தொல்லியல்துறை ஊழியர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
- மழை இல்லாததால் வெள்ளம் வெளியேறி வருகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பகுதியில் மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது.
இதனால் புராதன சின்னங்களான, கடற்கரை கோவில், அர்ச்சுனன்தபசு, ஐந்துரதம், கிருஷ்ணர் மண்டபம், முற்றுப்பெறாத பெரிய சிற்பக்காட்சி பாறை, புலிக்குகை உள்ளிட்ட பகுதிகள் மழைநீர் தேங்கியது. தொல்லியல்துறை ஊழியர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலையோர பக்கிங்காம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அருகில் உள்ள சிற்பக்கூடங்கள் நீரில் மூழ்கியது. அங்குள்ள இறால் பண்ணைகளும் மூழ்கி உள்ளன. தற்போது மழை இல்லாததால் வெள்ளம் வெளியேறி வருகிறது.
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரைசாலையில் சமீபத்தில் நான்கு வழி சாலைக்காக போடப்பட்ட புதிய சாலை சேதமடைந்தது. இதனால் அவ்வழியே கல்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி செல்லும் அரசு பஸ்களும், தனியார் வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தன. போர்க்கால அடிப்படையில் சாலைகள் சீரமைக்கபட்டு இன்று காலையில் இருந்து அவ்வழியே வாகனங்கள் சென்று வருகிறது.
மாமல்லபுரத்தில் மூன்று நாட்களுக்கு பிறகு இன்று இயல்பு நிலை திரும்பி வருவதால் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல வரும் நிலை உருவாகி உள்ளது.
- அடையாறு ஆற்றில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
- அடையாறு ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தாம்பரம்:
வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக இடைவிடாது பெய்த கனமழையின் காரணமாக தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முக்கிய ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகிறது.
ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று காலை நிலவரப்படி 1650 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் அடையாறு ஆற்றில் கலந்து வருகிறது. மேலும் படப்பை அருகில் உள்ள மணிமங்கலம் பெரிய ஏரியில் இருந்து உபரிநீர் அதிக அளவு வெளியேறி அதுவும் அடையாறு ஆற்றில் கலக்கிறது. இதேபோல் சுற்றி உள்ள ஆதனூர் ஏரி, சிக்கனா ஏரி, பெருங்களத்தூர் ஏரி, இரும்புலியூர் உள்ளிட்ட சிறிய ஏரிகளும் நிரம்பி அதில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட சுற்றப்புற பகுதியில் பெய்யும் மழைநீர் பாப்பன்கால்வாய் வழியாக பெருக்கெடுத்து அடையாறு ஆற்றுக்கு வந்து கொண்டு இருக்கிறது.
இதன் காரணமாக அடையாறு ஆற்றில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இருகரைகளையும் தொட்டபடி பரந்து விரிந்து செல்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படாத நிலையில் மழைநீர் மற்றும் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் கலப்பால் அடையாறு ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மிச்சாங் புயல் காரணமாக அதிகனமழை பெய்யும்போது சுற்றி உள்ள சிறிய ஏரிகள் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் வரும்போது அடையாறு ஆற்றில் மேலும் கூடுதலாக வெள்ளம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அடையாறு ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக அடையார் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினால் முதலில் பாதிக்கப்படுவது மணிமங்கலம், முடிச்சூர், வரதராஜபுரம், அன்னை அஞ்சுகம் நகர், பழைய பெருங்களத்தூர், அன்னை சத்யாநகர் உள்ளிட்ட பகுதிகள் தான். ஆனால் அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் தற்போது வரை இந்த பகுதிகளில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை.
சமீபத்தில் அடையாறு ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டு தூர்வாரப்பட்டதால் எந்த பாதிப்பும் இன்றி முழு கொள்ளளவில் கரைபுரண்டு வெள்ளம் சென்றாலும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அடையாறு ஆற்றில் மழை வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் 133 ஏக்கர் பரப்பளவில் ரூ.11கோடி மதிப்பில் வரதராஜபுரம் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பணிகள் இன்னும் முழுமையடையாததால் தற்போது அடையாறு ஆற்றில் வழக்கம் போல் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
- மாணவர்கள் தண்ணீரில் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
- உத்திரமேரூர் ஏரி நிரம்பி நெல்வாய் மதகு வழியாகவும் மதுராந்தகம் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி மதுராந்தகம் ஏரி, இந்த ஏரியில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.
ஏரி தூர்வாரும் பணி 50 சதவீதம் நிறைவுற்று தற்போது மழை பெய்து வருவதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வந்தவாசி, செய்யார், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் செய்யாற்றில் இருந்தும் உத்திரமேரூர் ஏரி நிரம்பி நெல்வாய் மதகு வழியாகவும் மதுராந்தகம் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.
ஏரியில் கட்டுமான பணியின் காரணமாக ஏரியின் கரையை உடைத்து நீர் கிளியாற்றின் வழியாகவும் வெளியேற்றி வருகின்றனர்.
தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை பரவலாக கனமழையாக பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு 1000 மி.கன அடி நீர் வருகிறது. தற்பொழுது, விநாடிக்கு 750 மில்லியன் கன அடி நீர் வெளியேறி கிளியாற்றின் வழியாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்து உள்ளது.
அங்குள்ள தனியார் பள்ளியை சுற்றியிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இடுப்பளவு நீரில் தங்களது வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்குள்ள தனியார் பள்ளியை சுற்றி தண்ணீர் தேங்கி வருவதால் மாணவர்கள் தண்ணீரில் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உத்திர மேரூர் ஏரி நிரம்பி நெல்வாய் மதகு வழியாகவும் மதுராந்தகம் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.
- தனியார் பள்ளியை சுற்றி தண்ணீர் தேங்கி வருவதால் மாணவர்கள் தண்ணீரில் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி மதுராந்தகம் ஏரி, இந்த ஏரியில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.
ஏரிதூர்வாரும் பணி 50 சதவீதம் நிறைவுற்று தற்போது மழை பெய்து வருவதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வந்தவாசி, செய்யார், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் செய்யாற்றில் இருந்தும் உத்திர மேரூர் ஏரி நிரம்பி நெல்வாய் மதகு வழியாகவும் மதுராந்தகம் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.
ஏரியில் கட்டுமான பணியின் காரணமாக ஏரியின் கரையை உடைத்து நீர் கிளியாற்றின் வழியாகவும் வெளியேற்றி வருகின்றனர்.
தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை பரவலாக கனமழையாக பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு 1000 மி.கன அடி நீர் வருகிறது. தற்பொழுது, விநாடிக்கு 750 மில்லியன் கனஅடி நீர் வெளியேறி கிளியாற்றின் வழியாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்து உள்ளது.
அங்குள்ள தனியார் பள்ளியை சுற்றியிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இடுப்பளவு நீரில் தங்களது வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்குள்ள தனியார் பள்ளியை சுற்றி தண்ணீர் தேங்கி வருவதால் மாணவர்கள் தண்ணீரில் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
- சிலர் ஆர்வமாக அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
மாமல்லபுரம்:
ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மாகாணத்தின் சபாநாயகர் நகமோட்டா டகாஷி, சபை செயலாளர் ஒகாவா மோடோஷி மற்றும் எம்.பி.க்கள் உள்ளிட்ட 9பேர் கொண்ட குழுவினர், தமிழக அரசுடன் தொழில் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்காக சென்னை வந்தனர். பின்னர் அவர்கள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர்.
அவர்களுக்கு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், சுற்றுலா அலுவலர் சக்திவேல் ஆகியோர் கழுத்தில் மாலை அணிவித்து தமிழ் பாராம்பரிய முறைப்படி மேள தாளத்துடன், புலியாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் என கலை நிகழ்ச்சியுடன் கடற்கரை கோவிலுக்கு அழைத்து சென்றனர். இந்த கலை நிகழ்ச்சியை ஆர்வத்துடன் பார்த்து ரசித்து அவர்களிடம் நடனமாடும் முறையை பற்றி கேட்டறிந்தனர். பின்னர் உற்சாகத்துடன் கலைஞர்களிடம் இருந்த கரகத்தை வாங்கி தலையில் வைத்து மேளதாளம் வாசிக்க கரகாட்டம் ஆடி மகிழ்ந்தனர். சில எம்.பி.க்கள் குத்தாட்டமும் போட்டனர்.
இதை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். சிலர் ஆர்வமாக அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
- புயல் கரையை கடக்கும் 5-ந்தேதி 4 மாவட்டங்களிலும் மிக மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
வங்கக்கடலில் 'மிச்சாங்' புயல் சின்னம் உருவாகி உள்ளது. இந்த புயலானது வரும் 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை நெல்லூருக்கும், மசூலிபட்டனத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் நாளை, நாளை மறுநாள் (ஞாயிறு, திங்கள்) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. புயல் கரையை கடக்கும் 5-ந்தேதி இந்த 4 மாவட்டங்களிலும் மிக மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு 044-27427412, 27427414 எண்ணும், கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077 என்ற எண்ணிற்கும் 9444272345 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
திருவள்ளூர் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறைக்கு 044-27664177, 27666746, 9444317862 எண்ணும், கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077 என்ற எண்ணிற்கும் 9444317862 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ரூ.150 கோடி மதிப்புள்ள நில ஆவணங்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.
- போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் நில ஆவணங்கள் திருட்டு நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியை சேர்ந்தவர் தண்டபாணி. இவருக்கு தேவநேரியில் ரியல் எஸ்டேட் அலுவலகம் உள்ளது. இங்கிருந்த காவலாளியை தாக்கி மர்மநபர்கள் ரூ.150 கோடி மதிப்புள்ள நில ஆவணங்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழைய வண்ணாரப்பேட்டை சேரன், மீஞ்சூர் வசந்தபிரியன், நீலாங்கரை கார்த்திகேயன், வெட்டு வாங்கேணி செந்தில் ஆகியோரை கைது செய்தனர். ஏற்கனவே மாமல்லபுரம் முகமது பாருக் அலி, சம்பத்குமார் ஆகிய இருவரும் திண்டிவனம் கோர்ட்டில் சரண் அடைந்து இருந்தனர். அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் இந்த நில ஆவணங்கள் திருட்டு நடந்து இருப்பது தெரியவந்து உள்ளது.
இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாணவர்கள் புதிய அனுபவமாக நினைத்து மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
- சிற்பங்களை தொட்டுப்பார்த்து பழமையான சிலையின் வடிவமைப்புகளை உணர்ந்தனர்.
மாமல்லபுரம்:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் புதிய "ஏசி வால்வோ" பஸ் சுற்றுலாவை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதில் முதல் பயணமாக சென்னை பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் அரசு மேல்நிலை பள்ளி, தாம்பரம் காது கேளாதோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் 80 பேரை, கல்வி சுற்றுலாவாக மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க சுற்றுலாத்துறை அழைத்து வந்தது.
அவர்களுக்கு மாற்றுத்திறனாளி கல்வி ஆசிரியர்கள் அவர்களது பாடமொழியில் சிற்பங்களை காண்பித்து அதன் சிறப்பு மற்றும் வரலாற்று விபரங்களை எடுத்து கூறினார்கள். மாணவர்கள் புதிய அனுபவமாக நினைத்து மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் புராதன சின்னம் சிற்பங்கள் இருக்கும் பகுதிக்கு பாறைமேல் நடந்து சென்று அதை உணர்ந்து, சிற்பங்களை தொட்டுப்பார்த்து பழமையான சிலையின் வடிவமைப்புகளை உணர்ந்தனர். இதனை பார்த்து அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
- தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளன.
- வரும் நாட்களில் வெளிநாடுகளில் இருந்து மேலும் ஏராளமான பறவைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கலில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் உள்ளது. இயற்கையான குளிர்ச்சியான சூழ்நிலை, உணவு மற்றும் இனப்பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இங்கு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர்களை தாண்டி ஆண்டுதோறும் ஏராளமான பறவைகள் வருவது வழக்கம்.
வடகிழக்கு பருவமழையால் வேடந்தாங்கல் ஏரிக்கு நீர் வரத்தாலும், பருவமழைக்கு பின்னர் காணப்படும் இயற்கையான குளிர்ச்சியான சூழ்நிலைக்காக அக்டோபர் மாதத்தின் கடைசி வாரத்தில் பறவைகளின் வருகை இருக்கும்.
தொடர்ந்து 6 மாதம் பறவைகள் தங்கி இருக்கும் பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் குஞ்சு பொரித்து மே அல்லது ஜூன் மாதம் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி செல்லும்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பறவைகள் மட்டும் இன்றி மட்டுமின்றி பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, சைபிரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பறவை மற்றும் வாத்து வகை இனங்கள் உள்ளிட்ட 23 அரிய வகை பறவையினங்கள் வரும்.
இந்த நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக வேடந்தாங்கல் ஏரிக்கு வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வரத்தொடங்கி உள்ளன.
இதில் கூழைக்கடா, மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, நத்தக்குத்தி நாரை, கரண்டிவாயன், தட்டவாயன், நீர்காகம், வக்கா, உள்ளிட்ட 8 வகையான பறவைகள் அடங்கும்.
வரும் நாட்களில் வெளிநாடுகளில் இருந்து மேலும் ஏராளமான பறவைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது வந்துள்ள பறவையினங்கள் மரத்தில் கூடுகட்டி உள்ளன. மரங்களில் பறவைகள் கூட்டமாக அமர்ந்து இருப்பதை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தற்போதுவரை வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து வேடந்தாங்கல் வனச்சரக அலுவலர் லெஸ்லி கூறியதாவது:-
வேடந்தாங்கல் ஏரிக்கு வளையப்புத்தூரில் இருந்து வரக்கூடிய நீர்வரத்து கால்வாய் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அருகில் உள்ள மதுராந்தகம் ஏரி பறவைகளுக்கு அதிக அளவிலான மீன் மற்றும் பூச்சி இனங்கள் கிடைக்கும் பகுதியாக இருந்து வந்தது.
தற்போது கடந்த இரண்டு வருடங்களாக மதுராந்தகம் ஏரியில் தூர்வாரும் பணி நடைபெறுவதால் அங்கு தண்ணீர் இல்லை.
எனவே பறவைகளின் உணவு தேவைக்காக 3 மாதத்துக்கு ஒரு முறை 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. வரும் நாட்களில் கூடுதலாக வெளிநாடுகளில் இருந்து கூடுதலாக பறவையினங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.
- 33 ஏரிகள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக 174 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மேலும் 215 ஏரிகள் 75சதவீதத்துக்கு மேலும், 241 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 246 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும், 33 ஏரிகள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன. இந்த தகவலை நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- பெண் பயணிகள் கூட்டம் ஆண்களை விட அதிகம் காணப்படும்.
- பெண் பயணிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லையும் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
சென்னை தாம்பரம் கடற்கரை வழித்தடத்தில் பல்லாவரம் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் பல்லாவரம் பயணிகள் மட்டுமின்றி, பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், திருநீர்மலை, குன்றத்தூர் பகுதி மக்களை இணைக்கும் முக்கிய ரெயில் நிலையமாக உள்ளது.
இப்பகுதியில் தனியார் பல்கலைக்கழகம், கல்லூரிகள், மேல்நிலை பள்ளிகள் அதிக அளவில் இருப்பதால் மாணவ மாணவிகள் பல்லாவரம் ரெயில் நிலையத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பிரசித்தி பெற்ற திருநீர்மலை ரங்கநாதர் கோவிலும் இங்கு உள்ளது.
பெண்கள் அதிக அளவில் வேலை செய்யும் தொழில் கூடங்கள், புதிய குடியிருப்பு அதிக அளவில் இருப்பதால், பல்லாவரம் ரெயில் நிலையத்தில், அதிகாலையில் இருந்து, நள்ளிரவை தாண்டியும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது. பெண் பயணிகள் கூட்டம் ஆண்களை விட அதிகம் காணப்படும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பல்லாவரம் ரெயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றன.
கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஏற்பட்ட மின்தடை, இரவு 9:30 மணிக்கு மேல் தான் மீண்டும், மின்சாரம் வந்தது. அதற்கு முந்தைய வாரத்திலும் இதேப்போல் மூன்று மணி நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், பல்லாவரம் ரெயில் நிலையம் இருளில் மூழ்கி தத்தளிக்கிறது.
இதனால் ரெயில் பயணிகள், குறிப்பாக பெண் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சிலர், பெண் பயணிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லையும் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இதனால் பல்லாவரம் ரெயில் நிலையத்தில் பெண் பயணிகள் பலர், ரெயிலை விட்டு இறங்கியதும் தங்கள் செல்போன்களில் உள்ள டார்ச் லைட்டை ஒளிர செய்து, அந்த வெளிச்சத்தில் நடந்து செல்கின்றனர். அதேப்போல் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் உள்ள கடைகள், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இயங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் பிளாட்பாரத்தில் வருகின்ற ரெயில்கள், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் போன்ற இடங்களுக்கு செல்கிறது என்பதை காட்டும் டிஸ்ப்ளே போர்டில், விளக்குகள் எரியாமல், இருள் அடைந்து விடுவதால், வருகின்ற ரெயில் எங்கு செல்வது செல்கிறது என்பது தெரியாமல், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
படிக்கட்டுகள் இருளடைந்து கிடப்பதால், வயதானவர்கள் படிகளில் ஏறி வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், கடந்த 2016 -ம் ஆண்டு சுவாதி என்ற இளம் பெண் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் உடனடியாக அமைக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. ஆனால் பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த ரெயில் நிலையங்களில், இதுவரையில் சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்படவில்லை.
பல்லாவரம் ரெயில் நிலையத்தில் அடிக்கடி இரவு நேரங்களில் மின்தடை, சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லாததை மர்ம கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. இதனால் இரவு நேரங்களில் ரெயில் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடக்கின்றன. இதனால் பெண் பயணிகள், பீதியில், தினமும் பயணித்து வருகின்றனர்.
எனவே ரெயில்வே நிர்வாகம், உடனடியாக பல்லாவரம் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா அமைப்பதோடு, இரவு நேரங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர காலங்களில் உபயோகிப்பதற்கான இன்வெர்ட்டர் அல்லது ஜெனரேட்டரை அமைக்க வேண்டும். ரெயில் நிலையத்தில், மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை, பாதுகாப்புக்காக பெண் போலீசார் உள்ளிட்ட காவலர்களை, பணியில் அமர்த்த வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- தறிகெட்டு சென்ற கார் அங்கிருந்த மரத்தின் மீது மோதி நின்றது.
- ஆம்னி பஸ்சின் முன்பகுதி மட்டும் சேதம் அடைந்தது.
வண்டலூர்:
மறைமலைநகரை அடுத்த பொத்தேரியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் தீபக்(வயது 23). ஓட்டல் நடத்தி வந்தார். இவர் நேற்று நள்ளிரவு நண்பர்களான மறைமலைநகரை சேர்ந்த பிராகாஷ் என்பவரது மகன் ரூபேஷ்(வயது24) மற்றும் கோகுல்நாத், நவீன், ரோகித் ஆகியோருடன் காரில் கோவளம் நோக்கி சென்றார். காரை தீபக் ஓட்டினார். இவர்களில் ரூபேஷ் வீடு, நிறுவனங்களில் உள்அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்தார்.
நள்ளிரவு 12 மணியளவில் ஊரப்பாக்கம், ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே சென்று கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறக ஓடியது.
இதில் சாலை தடுப்பை தாண்டி எதிர்ப்புறம் சென்ற கார் எதிரே வேந்த ஆம்னி பஸ் மீது பயங்கரமாக மோதியது. மேலும் தறிகெட்டு சென்ற கார் அங்கிருந்த மரத்தின் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் காரில் இருந்த ரூபேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் தீபக், கோகுல்நாத், ரோகித், நீவீன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். ஆம்னி பஸ்சின் முன்பகுதி மட்டும் சேதம் அடைந்தது.
தகவல் அறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த தீபக், கோகுல்நாத் ஆகியோரை மீட்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், நவீன், ரோகித் ஆகியோர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தீபக் பரிதாபமாக இறந்தார்.
தொடர்ந்து கோகுல்நாத், நவீன், ரோகித் ஆகிய 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிவேகமாக காரை ஓட்டியது விபத்துக்கு காரணம் என்று தெரிகிறது.
இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






