search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் 100 பஸ்களை இயக்கி வெள்ளோட்டம்
    X

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் 100 பஸ்களை இயக்கி வெள்ளோட்டம்

    • சுமார் 88 ஏக்கரில் ரூ.394 கோடி செலவில் நவீன வசதிகளுடன் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.
    • தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து புதிய பஸ்நிலையம் திறப்பு விழாவுக்கு தயார்நிலையில் உள்ளது.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. சுமார் 88 ஏக்கரில் ரூ.394 கோடி செலவில் நவீன வசதிகளுடன் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே சமீபத்தில் பெய்த மழையின்போது கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தின் முன்பகுதியில் தண்ணீர் அதிக அளவு தேங்கியது. இதனால் அப்பகுதியில் மழைநீர் வெளியேற சாலையின் குறுக்கே கல்வெட்டு அமைக்கப்பட்டது. தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து புதிய பஸ்நிலையம் திறப்பு விழாவுக்கு தயார்நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்கி பார்க்கும் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. அரசு விரைவு பஸ்கள், மாநகர பஸ்கள் என சுமார் 100 பஸ்கள் அனைத்தும் வெளியில் இருந்து புறப்பட்டு கிளாம்பாக்கம் புதிய நிலையத்திற்குள் வந்தது. பின்னர் அனைத்து பஸ்களும் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்பட்டு சிறிது நேரம் கழித்து புறப்பட்டு சென்றன. பஸ்கள் நிறுத்தும் இடங்களில் அந்தந்த ஊர்களின் பெயர் பலகைகள் இருந்தன. பஸ்கள் உள்ளே வந்து பின்னர் வெளியே செல்லும் போது ஏற்படும் இடையூறுகள் மற்றும் போக்குவரத்து நெரிசல், தேவையான கூடுதல் வசதிகள் குறித்து டிரைவர், கண்டக்டர்களிடம் அதிகாரிகள் கேட்டறிந்தனர். இந்த வெள்ளோட்டம் பார்க்கும் நிகழ்ச்சி நாளையும் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. அங்கு மேலும் செய்யப்பட வேண்டிய வசதிகள் மற்றும் போக்குவரத்தில் உள்ள பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய பஸ்களை இயக்கி ஒத்திகை நடைபெற்றது. நாளையும் இது நடைபெறும் என்றார்.

    Next Story
    ×