என் மலர்tooltip icon

    அரியலூர்

    செந்துறை அருகே மின்சார தாக்கி வீட்டில் உள்ள பொருள்கள் சேதம் அடைந்ததால் கிராமம் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்திற்கு உட்பட்ட மருவத்தூர் கிராமத்தில் நேற்று மெயின் லைனில் மின் இணைப்பு அருந்து விழுந்ததால் வீட்டில் உள்ள தொலைக்காட்சி பெட்டிகள் சார்ஜ் ஏறிய அலைபேசி மற்றும் மின் விளக்குகள் அனைத்தும் புகைந்தது.

    ஆத்திரம் அடைந்த கிராமம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த செந்துறை காவல் உதவி ஆய்வாளர் பிரகஸ்பதி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்பு விரைந்து வந்த மின் நிலைய உயர் அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் மின்சார ஊழியர்கள் இது மாதிரியான பிரச்சினைகள் இனி வராது என பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் செயங்கொண்டம் - அரியலூர் சாலையில் ஒருமணி நேர போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    செந்துறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் பட்டை, நாமம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ் நாடு சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட குழு கோவிந்தசாமி  தலைமையில், சத்துணவு மற்றும் அங்க ன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த ஓய்வூதிய தொகையை வழங்க வேண்டும். அடுத்த வருடம் (2018 முதல்) பொங்கள் போனஸ் 500 வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம்,

    அகவிலைப்படி, மருத்துவப்படி, குடும்ப நலந்தி, ஈமக்கிரியை செலவு நிதி, இலவச பஸ்பாஸ், மருத்துவ காப்பீடு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.  என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் பட்டை மற்றும் நாமம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தொழிலதிபரை தாக்கி காரையும் அதில் இருந்த பணத்தையும் மர்ம நபர்கள் எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர். அந்த கார் அரியலூர் அருகே மீட்கப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    நாகப்பட்டினம் மாவட்டம்  குற்றாலம் அருகே உள்ள திருவாவடுதுறையை சேர்ந்த ஜெகபர் அலி மகன் முகமது பகத் (வயது 26). தொழிலதிபரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது சொகுசு காரில் கதிராமங்கலம் அருகே குணதலைப்பட்டி  பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3பேர், காரை வழிமறித்து முகமது பகத்தை சரமாரி தாக்கினர். பின்னர் காரையும், அதில் இருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பி விட்டனர்.

    இது குறித்து முகமது பகத்,  பந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் காரை கடத்தியவர்களை பிடிக்க  திருவிடைமருதூர் டி.எஸ்.பி. வெங்கடேசன், தலைமையில் இன்ஸ்பெக்டர் பகவதிசரணம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி காரை கடத்தி சென்ற மர்மநபர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம்  நாச்சியார் பேட்டை அருகே மர்மமான முறையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடையார் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த டேப் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்தது. தொடர்ந்து அந்த கார் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தியதில் முகமது பகத்துக்கு சொந்தமான கார் என்பது தெரியவந்தது. அதனை கடத்திய மர்ம நபர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
    அரியலூர் அருகே வயலில் நாற்று நட்டுக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே வயலில் நாற்று நட்டுக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    அரியலூர் மாவட்டம் பொய்யூர் கருப்பூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பெண்கள் 9 பேர் நேற்று திருமானூர் அருகே கீழகாவட்டாங்குறிச்சியில் உள்ள ஒருவரது வயலில் நேற்று மதியம் நாற்று நடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வேளையில் அந்த பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    அப்போது மின்னல் தாக்கியதில் வயலில் நாற்று நட்டுக்கொண்டிருந்த மணி மனைவி உண்ணாமலை (வயது 48), செல்வராஜ் மனைவி செந்தமிழ்ச்செல்வி (40), அண்ணாதுரை மனைவி அஞ்சலை (50) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அருகில் இருந்த பொன்னரும்பு, அன்னக்கொடி, செல்வி ஆகியோர் காயமடைந்தனர்.

    கீழப்பழுவூர் மற்றும் திருமானூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான பெண்கள் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர் மாவட்டம், கூடலை ஆத்தூர் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் கண்ணுசாமி (வயது50). இவர் திருமானூர் அருகே உள்ள விளாங்குளம் கிராமத்தில் வயலில் நாற்று நடுவதற்கு வந்திருந்தார். நேற்று பகல் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் அவர் ஒரு மரத்தில் ஒதுங்கி நின்றார்.

    அப்போது மின்னல் தாக்கியதில் கண்ணுசாமி பரிதாபமாக இறந்தார். 
    அரியலூர் அருகே அ.தி.மு.க. தொண்டர் ரெயில்வே பாலத்தின் கீழ் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த தளவாய் அருகே உள்ள சிலப்பனூர் கிராமம். இங்குள்ள ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் நேற்றிரவு ஆண் பிணம் ஒன்று கிடந்தது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் தளவாய் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். அப்போது அங்கு 42 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்தார். இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த கிடந்த தொழிலாளியின் பெயர், ஊர் விவரம் தெரியவில்லை. எப்படி இறந்தார் என்றும் தெரியவில்லை. அவர் இறந்து கிடந்த இடம் அருகே வி‌ஷப்பாட்டில் கிடந்தது. இதனால் அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.

    மேலும் அவரது கையில் எம்.ஜி.ஆர். மற்றும் இரட்டை இலை பச்சை குத்தியிருந்தார். இதனால் அவர் அ.தி.மு.க. தொண்டர் எனவும் தெரியவந்துள்ளது.

    மேலும் அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவி அனிதா தற்கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தலைமை செயலர், டி.ஜி.பி., அரியலூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
    திருச்சி:

    அரியலூர் மாணவி அனிதா தற்கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசின் தலைமை செயலர், டி.ஜி.பி., அரியலூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

    ஆதிதிராவிடர் மக்களின் நலன்சார்ந்த திட்டங்கள் மற்றும் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராசாமணி, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் திருச்சி மாவட்டத்தில் அனைத்துத்துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் ஆதிதிராவிட மக்களுக்கான மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு சென்று சேர்ந்துள்ளது என்பது குறித்தும், மாநகராட்சி பகுதிகளில் பணியாற்றி வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆணைய துணைத்தலைவர் முருகன் கேட்டறிந்தார்.

    ஆய்வுக்கூட்டத்துக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், “நீட் தேர்வு விவகாரத்தில் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதாவின் மரணம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணை போதுமானதாக இல்லை. இது குறித்து மேலும் விவரங்களை கேட்டறிய அரியலூர் மாவட்ட கலெக்டர், அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு, தமிழக டி.ஜி.பி., தமிழக தலைமை செயலாளர் ஆகியோரை அடுத்த மாதம் 12-ந் தேதி டெல்லியில் ஆணையத்தின் முன்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென சம்மன் அனுப்பி உள்ளோம்“ என்று கூறினார்.
    கல்லூரி மாணவியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 6 வாலிபர்கள் செல்போனை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் அந்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    தஞ்சை மாவட்டம் தாராசுரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் தங்கசாமி. இவரது மகன் தினேஷ்(20). இவர் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் சுவாதியுடன் படிப்பு சம்மந்தமான ப்ராஜக்ட் தயாரிப்பதற்காக தா.பழூர் அருகில் உள்ள கோட்டியால் கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    காரைக்குறிச்சி கப்பிரோடு அருகே செல்லும்போது அவ்வழியே இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் இருவரையும் வழிமறித்து அவர்களிமிருந்த செல்போன்களை பறித்துக் கொண்டு இருவரையும் தாக்கி விட்டு சென்றனர்.

    இது குறித்து தா.பழுர் காவல் நிலையத்தில் தினேஷ் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து செல்போன்களை பறித்து சென்ற இடங்கண்ணி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன்(26), ராஜ்மோன்(19), காரைக்குறிச்சியை சேர்ந்த ராஜா(23), வெங்கடேஷ் (24), மிக்கேல்பட்டியை சேர்ந்த ஜார்ஜ்(23), பேட்டிலாஸ்(25) ஆகிய 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம் அருகே நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த பெண் உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்டார். அவரது மகள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது முட்டுவாச்சேரி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 85). இவரது மனைவி மங்களம் (70). விவசாய குடும்பத்தை சேர்ந்த இந்த தம்பதிக்கு கலைச்செல்வி, இந்திரா காந்தி என்ற மகள்களும், ராஜேந்திரன், ரவிச்சந்திரன், ஆசைத்தம்பி என்ற மகன்களும் உள்ளனர்.

    இதில் மகள் இந்திராகாந்தி தவிர மற்ற அனைவரும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். இந்திராகாந்திக்கு திருமணமாகி தனது கணவருடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். கலைச்செல்விக்கும் திருமணமாகி பின்னர் கணவரை பிரிந்தார்.

    எனவே அவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அனைவரும் சாப்பிட்ட பின்னர் மகன்கள் 3 பேரும் அருகில் உள்ள கொட்டகை வீட்டிற்கு தூங்க சென்றனர்.

    கணேசன், மங்களம், மகள் கலைச்செல்வி ஆகிய 3 பேரும் தொகுப்பு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மங்களம் மற்றும் அவரது மகள் கலைச்செல்வி மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்தனர்.

    உடல் முழுவதும் தீ பரவியதால் பதறி எழுந்த மங்களமும், கலைச்செல்வியும் வலியால் துடித்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டனர். இந்த சத்தம் கேட்டு மற்றொரு அறையில் படுத்திருந்த கணேசன் மற்றும் அக்கம் பக் கத்தினர் திரண்டு ஓடிவந்தனர். இதைப்பார்த்ததும் தீ வைத்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    ஆனால் அதற்குள் மங்களம் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். அவரது மகள் கலைச்செல்வி உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவர் அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த பயங்கர சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் கலைச்செல்வி கணவரை பிரிந்து வந்ததால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொடூர செயல் நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    அரியலூரில் ஏட்டு மனைவி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த உறவினரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்தவர் பரமசிவம். இவர் கீழப்பழூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மைதிலி. இவர்களுடன் பரமசிவத்தின் உறவினர் அண்ணாதுரை என்பவர் வீட்டில் தங்கியிருந்து தோட்ட வேலைகளை செய்து வந்தார்.

    இந்த நிலையில் பரமசிவத்திற்கு மனைவி மைதிலியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அண்ணாத்துரையும் பரமசிவமும் சேர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு மைதிலியை வீட்டில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் பரமசிவம் வேலைக்கு சென்று விட்டார்.

    அண்ணாத்துரை சென்னைக்கு சென்று அங்குள்ள கோர்ட்டில் சரண் அடைந்தார். உடனே அரியலூர் போலீசார் சென்னைசென்று மனு கொடுத்து அண்ணாதுரையை மீட்டு அரியலூர் கூட்டி சென்று விசாரணை நடத்தினர். அப்போது அண்ணாத்துரை நானும் பரமசிவமும் சேர்ந்து தான் மைதிலியை கொலை செய்தோம் என்று கூறினார்.

    இதைத் தொடர்ந்து அரியலூர் போலீசார் பரமசிவத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அண்ணாத்துரையை சென்னை போலீசில் ஓப்படைக்க அழைத்து சென்றனர். அப்போது அண்ணாத்துரை தப்பி ஓடி விட்டார். அவரை அரியலூர் போலீசார் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அண்ணாத்துரை சென்னையில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. உடனே அரியலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் தலைமையில் போலீசார் சென்னைக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த அண்ணாத்துரையை கைது செய்தனர். பின்னர் அவர் அரியலூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    9 ஆண்டுகளுக்கு பின்பு கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    உடையார்பாளையம் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் அருகே உள்ள கீழவெளி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவர் அரியலூரில் வேளாண்மை பொறியியல் துறையில் ஜீப் டிரைவராக பணியாற்றி கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.

    இவரது மனைவி சந்தானம். முருகன், ராமச்சந்திரன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். முருகன் வேளாண்மை படித்துவிட்டு தற்காலிகமாக பணியாற்றி வருகிறார். ராமச்சந்திரன் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

    அன்பழகன் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் தனக்கு சொந்தமான வயலில் விவசாயம் செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வயலுக்கு சென்றார்.

    பிற்பகலில் விவசாய பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்புற கதவு கடப்பாரையால் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அன்பழகன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த உடைகள் அனைத்தும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.

    மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து அன்பழகன் உடையார்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    அரியலூரில் அரசு பஸ் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அரியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் புதிய மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் குமரசாமி. அரசு போக்குவரத்து கழக ஊழியர். இவரது மகன் ஜோதி பிரகாஷ், என்ஜினீயரிங் படித்து விட்டு வேலைக்கு செல்ல இருந்தார். அரியலூர் சிங்கார தெருவை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டபாணியின் மகன் பாரதி.

    ஜோதிபிரகாசும், பாரதியும் நண்பர்கள். நேற்றிரவு இருவரும் அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். மின்நகர் அருகே செல்லும் போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதின.

    இதில் 2பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். உடனே அவர்களை பொது மக்கள் மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதிபிரகாஷ் இறந்தார். பாரதி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து அரியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×