என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஆண்டிமடம் அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்வம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஜெயங்கொண்டம்:

    ஆண்டிமடம் அருகே உள்ள நெட்டலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ராமதாஸ்(52),நேற்று முன்தினம் மாலையில் யாரும் இல்லாத நேரத்தில் இவரது வீட்டின் பின்பக்கத்திலிருந்து தீக்காயத்துடன் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிசென்று பார்த்தனர். அங்கு ராமதாஸ் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் அலறி துடித்துக்கொண்டிருந்தார்.

    பின்னர் ராமதாசின் மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். உடன் பலத்த காயம்பட்ட ராமதாசை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த ராமதாஸ் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    ராமதாசுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடப்பிரச்சனை இருந்து வந்தாகவும் அதனால் ராமதாஸ் மனம் உடைந்து மண்ணெண்னை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
    ஜெயங்கொண்டம் அருகே அம்மன் சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகில் உள்ள மேலணிக்குழி கிராமத்தில் செல்லியம்மன் கோவிலில் உள்ளது.இதில் அதே கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் (62) என்பவர் பூசாரியாக இருந்து பூஜை செய்து வருகின்றார். இவர் தினந்தோறும் 5 மணி முதல் 7 மணி வரை கோவிலை திறந்து வைப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். தற்போது இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    நேற்று காலை வழக்கம் போல் பூசாரி ராமலிங்கம் பூஜை செய்ய வந்துள்ளார். அப்போது அந்த கோவிலின் முன்பக்க இரும்புகேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கோவிலின் தர்மகர்த்தா சாமியப்பன் (60) என்பவருக்கு தகவல் கொடுத்தார். அவர் மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கென்னடி மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் மேலணிக்குழி சம்பவ இடத்திற்க்கு வந்து விசாரணை நடத்தியதில் கோவிலில் கர்ப்பகிரகத்தில் இருந்த அம்மன் சிலை திருட்டு போய் இருப்பதும், திருடுபோன ஒன்றரை அடி உயரமுள்ள சுமார் 25 கிலோ எடை கொண்ட அம்மன் சிலை வெண்கலமா, ஐம்பொன்னா என்றும், திருடி சென்ற மர்ம நபர்களையும் மீன்சுருட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
    ஆண்டிமடம் அருகே ரூ.4 ஆயிரம் கடன் தகராறில் வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் சூரக்குழியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (27). இவரிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விளந்தை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கவுசிக்(21) என்பவர் ரூ.4ஆயிரம் கடன் பெற்றிருந்தார்.

    கடனை திருப்பி கொடுக்காததால் நேற்று முன்தினம் பணத்தை கேட்டுள்ளார். கொடுக்க மறுக்கவே ராஜசேகர் கவுசிக்கை திட்டி தாக்கியதில் காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் சப்-இன்ஸ்பெக்டர் கலிய பெருமாள் வழக்குபதிவு செய்து ராஜசேகரை கைது செய்து விசாரித்து வருகிறார்.
    ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ மேல் நிலைப்பள்ளியில் டெங்கு மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ மேல் நிலைப்பள்ளியில் டெங்கு மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு பள்ளி தலைமையாசிரியர் சகாயராஜ் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

    தேசிய மாணவர் படை துறை அலுவலர் மணிமேல்கோத்ரா மற்றும் ஹவ்தார் சுப்ராய் பட்டேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியானது பள்ளியில் துவங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. பேரணியில் பள்ளியில் தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணி திட்டம், சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம், பசுமைப்படை மற்றும் நுகர்வோர் மன்றங்களை சேர்ந்த மாணவர்கள் டெங்கு மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில்ஏந்தி கோஷமிட்டவாறு சென்றனர்.

    முன்னதாக தேசிய பசுமைப்டை ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் வரவேற்றார். இறுதியில் பள்ளி தாளாளர் தாமஸ்லூயிஸ் நன்றி கூறினார்.
    அரியலூர் அருகே கலியுக வரதராஜபெருமாள் கோவில் தெற்கு வாசலில் ஆண் குழந்தை கிடந்தது. அந்த குழந்தையை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அரியலூர்:

    அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள் கோவில் தெற்கு வாசலில் நேற்று காலை 7 மணியளவில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள், இது குறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த குழந்தையை கைப்பற்றி விசாரித்த போது அது பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை என்பது தெரியவந்தது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் குழந்தையை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்குபேட்டரில் குழந்தையை வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

    மேலும் இந்த குழந்தையின் தாய்-தந்தை யார்? என்பன உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தொட்டில் குழந்தை திட்டத்தில் இந்த குழந்தை சேர்க்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    அரியலூர் அருகே நள்ளிரவில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி விடிய விடிய தவித்த கபடி வீரர்களை 13 மணி நேர போராட்டதிற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் அருகே உள்ள அரங்கோட்டை கிராமத்தில் கொள்ளிடம் ஆறு செல்கிறது. தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் இந்த ஆறு ஓடுகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் இளைஞர்கள் சார்பில் கபடி போட்டி நடைபெற்றது.

    இதில் பங்கேற்பதற்காக தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்புரம்பியம் கிராமத்தை சேர்ந்த கபடி வீரர்கள் பிருதிவிராஜ், அஜித், சிபிராஜ், பிரகாஷ் மற்றும் சரவணன், பிருத்திவி ராஜன், தினேஷ் ஆகிய 7 பேர் நேற்று மதியம் ஸ்ரீபுரந்தானுக்கு புறப்பட்டனர். சாலை வழியாக செல்ல வேண்டுமென்றால் நீண்ட நேரமாகும் என்பதால் கொள்ளிடம் ஆற்றை கடந்து செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி அரங்கோட்டை கிராமம் கொள்ளிடம் ஆற்று பகுதிக்கு வந்ததும் 7 பேரும் தாங்கள் கொண்டு வந்த பொருட்களுடன் ஆற்றில் இறங்கி கடக்க முயன்றனர். இதில் முதலில் சரவணன், பிருதிவிராஜன், தினேஷ் ஆகிய 3 பேரும் , அவர்களுக்கு பின்னால் பிருதிவிராஜ், அஜித், சிபிராஜ், பிரகாஷ் ஆகிய 4 பேரும் சென்றனர்.

    தற்போது பெய்த மழையினால் அப்பகுதியில் உள்ள வயல்களில் தேங்கியிருந்த தண்ணீர் வடிகால் வழியாக கொள்ளிடம் ஆற்றில் கலந்து கொண்டிருப்பதால் ஆற்றில் அவ்வப்போது தண்ணீரின் வரத்து அதிகரித்து வருகிறது. அதுபோல் நேற்று எப்போதும் இல்லாத அளவுக்கு தண்ணீர் அதிக அளவு சென்றது. இதனால் ஆழம் தெரியாததால் ஆற்றை கடந்து சென்ற 7 பேரும் பாதி வழியில் நின்றனர்.

    பின்னர் சரவணன், பிருதிவிராஜன், தினேஷ் ஆகிய 3 பேரும், நாங்கள் முதலில் சென்று, ஆற்றில் தண்ணீர் வரத்து, ஆழம் எப்படி உள்ளது என்று பார்த்து கூறுகிறோம். அதன் பிறகு நீங்கள் வாருங்கள் என்று 4 பேரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 3 பேர் மட்டும் ஆற்றை கடந்து சென்றனர்.

    ஆற்றின் நடுவே சென்ற போது தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் ஆற்றை கடக்க முடியாமல் நடுவழியிலேயே நின்றனர். மேலும் பாதி தூரத்தில் வந்து நின்ற 4 பேரிடம் , நீங்கள் வர வேண்டாம், திரும்பி செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். அவர்கள் கூறியபடி 4 பேரும் கரைக்கு திரும்ப முயன்றனர்.

    இதனிடையே ஆற்றில் காட்டாற்று வெள்ளம் போல் திடீரென தண்ணீரின் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக 3 பேர் நடு ஆற்றிலும், 4 பேர் பாதி தூரத்திலும் நின்று தத்தளித்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அவர்கள் தங்களை காப்பாற்றுமாறு சத்தம் போட்டு பொதுமக்களை அழைத்தனர்.

    இதனை பார்த்த பொது மக்கள் உடனடியாக 7 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. உடனடியாக கும்பகோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் இரவு 11 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்து நவீன உபகரணங்களுடன் பாதி தூரத்தில் நின்ற 4 பேரையும் மீட்டனர்.

    நடு ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த 3 பேரையும் தண்ணீர் இழுத்து சென்றது. இருப்பினும் அவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு அரங்கோட்டையில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் ஆற்றில் உள்ள ஒரு மேடான பகுதியில் ஏறி நின்று விட்டனர்.

    அவர்களது நிலைமை என்ன ஆனது என்று தெரியாததால் பொதுமக்கள், தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    இந்த நிலையில் தப்பிய 4 பேரில் 2 பேர், ஒரு மோட்டார் சைக்கிளில் சாலை வழியாக அரங்கோட்டைக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது 3 பேரும் மேடான பகுதியில் தவித்து கொண்டிருப்பது தெரிய வந்தது. உடனே தங்களது ஊர் கிராமமக்கள் மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அரங்கோட்டை கொள்ளிடம் ஆற்று பகுதிக்கு விரைந்து வந்து, நவீன உபகரணங்களுடன் 3 பேர் நின்ற மேடான பகுதிக்கு செல்ல முயன்றனர். ஆனால் அங்கு செல்ல முடியவில்லை. இதனால் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மீட்பு பணி முயற்சி கைவிடப்பட்டது.


    இதனிடையே அங்குள்ள ராமநல்லூர் ஊராட்சிக்கு கொள்ளிடம் ஆற்றை கடந்து செல்லும் வகையில் எந்திர படகு ஒன்று தமிழக அரசால் வழங்கப்பட்டிருந்தது. அதனை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் சிலர் மேடான பகுதிக்கு சென்று அங்கு தவித்து கொண்டிருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

    மேடான பகுதியை சுற்றி ஆகாய தாமரைகள், செடி, கொடிகள் வளர்ந்திருந்தன. இருப்பினும் பல்வேறு சிரமத்திற்கிடையே சென்று 3 பேரையும் போலீசார்-தீயணைப்பு வீரர்கள் மீட்டு இன்று அதிகாலை 5.30 மணியளவில் கரைக்கு அழைத்து வந்தனர். அதன் பிறகு தான் பொது மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மேலும் தீயணைப்பு வீரர்கள், போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட 3 பேருக்கும் உடனடியாக உணவு வழங்கப்பட்டது. கரைக்கு அழைத்து வந்ததும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் இந்த மீட்பு பணி நடைபெற்றது. நேற்று மாலை 4 மணியளவில் சிக்கிய 3பேரும் 13 மணி நேரத்திற்கு பிறகு இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று காலை கொள்ளிடம் ஆற்றில் உள்ள மேடான பகுதியை ஜெயங்கொண்டம் ஆர்.டி.ஓ. டீனா குமாரி, டி.எஸ்.பி. கென்னடி, ஜெயங் கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் எந்திர படகு மூலம் சென்று பார்வையிட்டனர். மேலும் ஆற்றில் தண்ணீர் அதிகம் செல்வதால் பொது மக்கள் யாரும் ஆற்றை கடந்து செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

    அரியலூர் மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகன விதிமுறைகளை மீறிய 379 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக செல்லுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்பட வாகன விதிமுறைகளை மீறியதாக 379 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை போலீசார் அபராதமாக வசூலித்தனர். தொடர்ந்து இனி வரும் காலங்களில் இதே போன்று வாகன விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
    ×