என் மலர்
அரியலூர்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி - குண்டவெளி பகுதி காவெட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ் (வயது 26). இவரது மனைவி மீனா (22). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் 3-வதாக கர்ப்பமடைந்த மீனாவுக்கு மீன்சுருட்டி சுகாதார நிலையத்தில் கடந்த 50 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
வறுமையின் காரணமாக குழந்தையை வளர்க்க முடியாது என்பதால் ராமராஜ் - மீனா தம்பதியினர் தங்களது உறவினரான கடலூர் மாவட்டம் வடலூர் குறவர் தெருவை சேர்ந்த கார்த்தி என்பவரிடம் குழந்தையை யாருக்காவது தத்து கொடுத்து விடலாம் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து கார்த்தி வடலூர் நாயுடு தெருவைச் சேர்ந்த சித்தா டாக்டர் மெகபூர்னிசா (60), அதே பகுதியைச் சேர்ந்த சாரங்கபாணி (57) ஆகியோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கோவை ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (40)-புவனேஸ்வரி தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் குழந்தையை தத்து எடுக்க முடிவு செய்து இருந்தனர். அவர்களது உறவினரான கோவையை சேர்ந்த அய்யாமோகன் என்பவரை மெகபூர்னிசா, சாரங்கபாணி இருவரும் தொடர்புக் கொண்டு குழந்தையை ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்திற்கு விற்றுள்ளனர். அந்த பணத்தில் ராமராஜ் - மீனா தம்பதியினரிடம் ரூ.80 ஆயிரத்தை மட்டும் மெகபூர்னிசா, சாரங்கபாணி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் மீன்சுருட்டி சுகாதார நிலைய மருத்துவர்கள் குழந்தைக்கு 45-வது நாள் தடுப்பூசி போடுவதற்கு ராமராஜ் - மீனா தம்பதியினர் கொண்டு வராததால் டாக்டர்கள் அவர்கள் வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட குழந்தையை கேட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக கூறியதையடுத்து கலெக்டர் மற்றும் சுகாதார துறை உயர் அதிகாரிகளுக்கு டாக்டர்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கலெக்டர் லட்சுமி பிரியா உத்தரவின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் முகமது யூனிஸ்கான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த போது குழந்தை விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து முகமது யூனிஸ்கான் மீன்சுருட்டி போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ராமராஜ், மீனா, சித்தா டாக்டர் மெகபூர்னிசா, சாரங்கபாணி, செல்வராஜ், புலவர் அய்யா மோகன் ஆகிய 6 பேரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து 6பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான கார்த்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே ஓலை யூர் கிராமத்தில் ஏரிக்கரையோரம் மிகவும் பழமையான காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக கருதப்படும் இங்கு ஆண்டு தோறும் திருவிழாவும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கோவில் பூசாரியாக அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் இருந்து வருகிறார். தற்போது மார்கழி மாதத்தையொட்டி தினமும் அதிகாலையிலேயே கோவில் திறக்கப்பட்டு பூஜைகள், ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இரவு கோவில் அடைக்கப்படும்.
இந்த நிலையில் நேற்று இரவு பூசாரி சுப்பிரமணியன் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று அதிகாலை மார்கழி மாதத்தை முன்னிட்டு பக்தி பாடல்கள் இசைப்பதற்காக ரேடியோ செட் அமைக்கும் தொழிலாளி கோவிலுக்கு வந்துள்ளார்.
அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கோவிலின் முன் மண்டப பகுதியில் பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கோவில் தர்மகர்த்தா கலிய பெருமாளுக்கு நேரில் சென்று தகவல் கூறினார்.
இந்த தகவல் கிராமம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. அடுத்த ஒரு சில விநாடிகளில் கோவில் முன்பு பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 2½ அடி உயரம் மற்றும் 1 அடி உயரமுள்ள இரண்டு காளி சிலைகள் கொள்ளை போயிருந்தது.
அந்த சிலைகள் வெண் கலத்தால் ஆனதாகும். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து சாமி சிலைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் தர்ம கர்த்தா கலியபெருமாள் ஆண்டிமடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் நடமாட்டம் அதிக முள்ள, சிறிய கிராமத்தில் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் ஜெயங்கொண்டம் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் ஓய்வூதிய தொகை பெறுவதற்காக ராமலிங்கம், ஜெயங்கொண்டம் கூட்டுறவு வங்கி தனி அலுவலர் ராஜேந்திரனை சந்தித்து விண்ணப்பம் கொடுத்தார். ஆனால் அவர் ஓய்வூதிய தொகை கிடைக்க வேண்டுமென்றால் தனக்கு ரூ.6ஆயிரம் தர வேண்டும் என்று லஞ்சம் கேட்டாராம்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமலிங்கம் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கடந்த 31-1-2013 அன்று, ரசாயனம் தடவிய ரூ.6ஆயிரம் பணத்தை ராமலிங்கத்திடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர். அவர் அந்த பணத்தை ராஜேந்திரனிடம் கொடுத்த அங்கு மறைந்திருந்த போலீசார் ,ராஜேந்திரனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு அரியலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து நீதிபதி ரவி இன்று தீர்ப்பு அளித்தார். அதில் ராஜேந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதே போல் அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டையை சேர்ந்தவர் ராணி. ஆசிரியையான இவர் அங்குள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பள உயர்வு கேட்டு, ஜெயங்கொண்டம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அங்கு பணியாற்றி வந்த ஊழியர் குமார், சம்பள உயர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் தனக்கு ரூ.6ஆயிரம் தர வேண்டும் என்று லஞ்சம் கேட்டாராம்.
இது குறித்து ராணி , திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி கடந்த 31-1-2012 அன்று குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கிலும் அரியலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி ரவி இன்று தீர்ப்பளித்தார். அதில் குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். லஞ்சம் வாங்கிய கூட்டுறவு அதிகாரி- கல்வி அலுவலக ஊழியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்:
அரியலூர் பேருந்து நிலையம் அருகே பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழக மீனவர்கள் இறப்பை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில துணை பொதுச்செயலாளர் வைத்தியலிங்கம், மாநில துணை தலைவர் சின்னதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதில் ஒகி புயலால் கடலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் இறந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலிறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் செந்தில்குமார், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் கோகுல், மாநில ஒன்றிய செயலாளர் சக்திவேல், வெங்கடேசன், தம்பிரமேஷ், கருணாநிதி உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர்:
அரியலூர் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியில் சென்னை குளோபல் மருத்து வமனை நிர்வாகமும், அரியலூர் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய இலவச இருதயநல மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.
இதில் சென்னை குளோபல் மருத்து வமனை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ரவிக்குமார், பாலாஜி, மக்கள் தொடர்பு அலுவலர் சுந்தர சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு இருதயநல சிகிச்சைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.
முகாமில் ரோட்டரி சங்க தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர் அமர்நாத், பொருளாளர் ராமதாஸ், திட்ட தலைவர் தண்டபாணி, திட்ட செயலா ளர் சீனிவாசன் உட்பட அனைத்து பொருப்பாளர் களும் கலந்து கொண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சென்னையில் பள்ளி கல்வி இயக்குனரகம் முன்பு 18-ந் தேதி உண்ணாவிரதம் பள்ளி கல்விதுறை அலுவலர் சங்கம் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிகல்விதுறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் நீதிமணி தலைமையில் நடைபெற்றது. மாநில இணைச்செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி முன்னிலையில் மாவட்ட தலைவர் சதீஷ் வரவேற்று பேசினார்.பொதுச்செயலாளர் சீனிவாசன், பொருளாளர் முருகன், முன்னாள் மாநில தலைவர் ராஜேந்திரபிரசாத், அமைப்பு செயலாளர் குலாம்ரபிக், தலைமைநிலைய செயலாளர் ராம்மூர்த்தி உட்பட அனைத்து பிரிவு பொருப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள ஏழாவது ஊதியகுழுவில் உள்ள முரன்பாடுகளை கலைய வேண்டும், துப்புரவு பணியாளர்களுக்கு கால முறை ஊதியம், பணிவரை முறை, தகுதிக்கான் பருவம் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பதவி உயர்வு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தினால் சென்னை பள்ளிகல்வி இயக்குனரகம் முன்பு வரும் 18ம் தேதி மாநிலம் தழுவிய ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.அரியலூர் மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் இராம.ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அவைத்தலைவர் ஜோசப்சத்தியமூர்த்தி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் கவியரசன் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் எழிலரசன், தங்கஜெயபாலன், தேன்மொழிசம்பந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் ஜேக்கப் உட்பட பலர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு :-
அரியலூர் பஸ் நிலையத்தில் 24 மணிநேரமும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வண்ணம் போலீசாரை நியமிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் தொடர் சாலை விபத்தினை தவிர்க்க சிறந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரியலூர் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி அமைத்திட ஆவண செய்ய வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிவோருக்கு குடியிருப்பு பகுதியை அமைத்து கொடுக்க வேண்டும்.
அரியலூர் மாவட்டத்தில் அனைத்து ஏரி, குளங்களுக்கு வரும் வரத்து வாரி வாய்க்கால்கள் ஆக்கிரமித்துள்ளதால் வரண்டு கிடக்கும் குளங்களை தூர்வார வேண்டும். செந்துறை -ஆர்.எஸ். மாத்தூர் சாலை வேலை ஆரம்பித்து கிடப்பில் போடப்பட்டுள்ளது, அதை உடனே முடிக்க வேண்டும். திருமானூர் ஒன்றியம் முடிகொண்டான் - சேனாபதி சாலை போடப்பட்ட 2 மாதத்திலேயே மிகவும் பழுதடைந்துள்ளது. அந்த சாலையை உடனே சீர் செய்திட வேண்டும். அரியலூர் ஒன்றியம் கடுகூர் - சென்னிவனம் சாலையை உடனே சீர் செய்திட வேண்டும். உட்பட பல்வேறு தீமானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன் நன்றி கூறினார்.






