என் மலர்
அரியலூர்
அரியலூர் அருகே உள்ள வெளி பிதுங்கி கிராமத்தை சேர்ந்தவர் செங்கமலம் (வயது 60), விவசாயி. இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு செல்வராஜ், சந்திரஹாசன் என 2 மகன்கள் உள்ளனர்.
இருவருக்கும் திருமணமாகி விட்டது. செல்வராஜ் கூலி வேலை செய்து வருகிறார். சந்திரஹாசனும், செங்கமலமும் விவசாயம் செய்து அதில் விளையும் பொருட்களை விற்பனை செய்து வந்தனர். இதனால் செல்வராஜின் மனைவி மங்கையர்க்கரசி, செங்கமலத்திடம் நீங்கள் இருவர் மட்டும் விவசாயம் செய்து பங்கு போட்டுக்கொள்கிறீர்கள். எனவே எங்களுக்கு உண்டான நிலத்தினை பிரித்து தந்தால் நாங்களும் விவசாயம் செய்வோம் என கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இது குறித்து மங்கையர்க்கரசி செல்வராஜிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் சந்திரஹாசனிடம் சென்று தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவரது தந்தை சந்திரஹாசனுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ் அருகில் கிடந்த கட்டையால், தந்தை என்றும் பாராமல் செங்கமலத்தை தாக்கியுள்ளார். இதில் அவரது தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு செங்கமலம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அரியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் மகனே தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்:
அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு பள்ளிகளில் படிப்பதை தவிர்த்து வருவதாகவும், புறக்கணிப்பதாகவும் தொன்று தொட்டே குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதற்கு நேர்மாறாக அனைவருக்கும் முன்னுதாரணமாக சில அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் அரியலூர் கலெக்டர் அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்தது பொது மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-
அரியலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருபவர் லட்சுமி பிரியா. கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட இவர் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவரது கணவர் அருண்ராய் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அப்போது அவருக்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். இதில் அவர் குடல்வால் நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. டாக்டர்கள், உடனடியாக அவருக்கு லேப்ராஸ்கோப்பி மூலம் குடல்வால் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். டாக்டர்களின் அறிவுரையின்படி கலெக்டர் லட்சுமிரியா, அரசு ஆஸ்பத்திரியிலேயே அறுவை சிகிச்சை செய்யுமாறு கூறினார்.
இதைத்தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை செய்த டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கலெக்டரை அரசு அதிகாரிகள், பொதுமக்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, கலெக்டராக இருக்கும் ஒருவர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொள்வது அரிதான நிகழ்வாக உள்ளது. கலெக்டர் லட்சுமி பிரியா அறுவை சிகிச்சை செய்து கொண்டது அவர் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளது என்றனர்.
அரசு திட்டங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அதிநவீன வசதிகள் குறித்து மக்களிடம் பேச்சோடு நின்று விடாமல் தாங்களே களம் இறங்கி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொண்ட கலெக்டருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.
புதுக்கோட்டை கலெக்டராக இருந்த எஸ்.ஜே.சிரு-வின் மனைவி புதுக்கோட்டை அரசு ராணியார் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். கடலூரில் கலெக்டராக பணிபுரிந்த ககன்தீப்சிங் பேடியும் அவரது மனைவியை பிரசவத்திற்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருந்தார். அவர்கள் வரிசையில் அரியலூர் கலெக்டர் லட்சுமி பிரியாவும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியை தேர்வு செய்துள்ளார்.
அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை செய்து கொண்ட கலெக்டரின் செயல் மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. இதே போல் மற்ற அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கடைப்பிடித்தால் அரசு மருத்துவமனைகளின் தரம் உயரும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அகேயுள்ள பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்த சாமி மகன் ராமாமிர்தம் (வயது 65). இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
அவர்களுக்கு திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர். ராமாமிர்தம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்தார். பின்னர் வயது முதிர்வு காரணமாக மீண்டும் பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு வந்துவிட்டார்.
இதற்கிடையே இவருடைய பாக நிலம் மற்றும் மனைகளை இவரது தம்பி இளை பெருமாள் மகன் சரவணன் ஆண்டு அனுபவித்து வந்துள்ளார். அவரிடம், நான் இனி எனது நிலத்தில் விவசாயம் செய்து கொள்கிறேன் என ராமாமிர்தம் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் சரவணனின் தந்தை இறந்தபோது ராமாமிர்தம் துக்க காரியத்திற்கு செல்லாமல் ஒதுக்கியதாகவும் தெரிகிறது. இதனால் சரவணனுக்கும், ராமாமிர்தத்திற்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு குடும்பத்தினருக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பெரிய கிருஷ்ணாபுரம் கோவில் அருகேயுள்ள ஆலமரத்தின் கீழ் ராமாமிர்தம் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த சரவணன் ராமாமிர்தத்திடம் தகராறு செய்தார். இதில் இருவருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சரவணன் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் ராமாமிர்தத்தின் தலையில் சரமாரியாக தாக்கினார்.
இதில் மண்டை உடைந்து ராமாமிர்தம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் நித்யா சம்பவ இடத்திற்கு சென்று ராமாமிர்தத்தின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் ஆண்டிமடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






