search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "statue robbery"

    • கிராம மக்கள் வந்து சேகரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஊனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் சுப்ரமணியம்.

    இவரது வீட்டின் அருகில் பழமையான பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பழமையான ஐம்பொன்னால் ஆனா கிருஷ்ணர் சிலையும், அம்மன் சிலையும் வைத்து வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை இரவு ஆள் நடமாட்டம் இல்லாத வேளையில் கோவிலில் இருந்த சாமி சிலைகள், கோவில் உண்டியல் மற்றும் பூஜை சாமான்கள் ஆகியவைகளை கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டார்.

    இதுகுறித்து கிராம மக்கள் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சுப்ரமணியத்தின் பக்கத்து நிலத்துக்காரரான சேகர் என்கிற சொட்டை சேகர் என்பவர் கொள்ளை சம்பவம் நடந்த நாளில் இருந்து ஆள் தலைமறைவாக இருப்பதால், அவர் கோவிலில் கொள்ளையடித்து இருக்கலாம் என்ற சந்தேகம் கிராம மக்களிடையே எழுந்தது.

    பின்னர் அவரை சந்தேகித்த கிராம மக்கள் அவரை பல்வேறு பகுதிகளில் தேடி வந்துள்ளனர்.

    இந்நிலையில் சேகர் நேற்று இரவு ஊத்தங்கரை பகுதியில் இருந்ததைக் கண்டு அப்பகுதியை சேர்ந்த சிலர் சுப்பிரமணியத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் அங்கு வந்த சுப்பிரமணியம் மற்றும் கிராம மக்கள் வந்து சேகரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் கோவிலில் கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சாமி சிலைகளை மத்தூர் அடுத்த புளியான்டப்பட்டி கிராமத்தில் உள்ள அருணாச்சலம் என்பவரது வீட்டிலும், இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த சேகரின் உறவினர்கள் வீட்டில் அந்த சாமி சிலைகள், பூஜை சாமான்கள் மற்றும் சிலைகளை அவர் கொடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த கிராம மக்கள் சரக்கு ஆட்டோவில் வந்து புளியான்டப்பட்டி கிராமத்தில் அவர் கூறிய வீடுகளுக்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது பூஜை சாமான்கள் மட்டுமே இருந்தது. சிலைகளை காணவில்லை.

    மேலும் சாமி சிலைகளை வேறு எங்கோ மறைத்து வைத்துள்ளதாகவும் சேகர் கிராம மக்களிடம் கூறியுள்ளார். இதனால், சேகரை அழைத்து கொண்டு அவர் தெரிவித்த இடங்களில் சரக்கு ஆட்டோவில் கிராம மக்கள் சென்று சிலைகளை தேடி வருகின்றனர்.

    இது குறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெருமாள் கோவிலில் கொள்ளைபோன 4 ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டன. அதனை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இன்று நேரில் ஆய்வு செய்தார். #Statuesmuggling #PonManickavel

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் பிரசித்தி பெற்ற சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. குரு ஸ்தலமான இங்கு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் தரிசனம் செய்வது வழக்கம்.

    சமீபத்தில் குருப்பெயர்ச்சி விழா இங்கு விமரிசையாக நடந்தது. இந்த கோவிலில் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி மற்றும் சீனிவாச பெருமாள் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் கடந்த 13-ந் தேதி நள்ளிரவில் கொள்ளை போனது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, 2 மர்ம நபர்கள் கோவிலின் கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்து சிலைகளை திருடிச் சென்றது சி.சி.டி.வி. கேமிரா பதிவு மூலம் தெரியவந்தது.

    இது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் சமயநல்லூர் துணை சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் விசாரணையில் இறங்கினர்.

    இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி அருகில் உள்ள கல்யாணிபட்டி பிரிவில் உள்ள ஒரு தோட்டத்தில் 4 சிலைகளும் கேட்பாரற்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

     

    மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் 4 சிலைகளையும் மீட்டு விசாரணை நடத்திய போது இவைகள் குருவித்துறை கோவிலில் திருடு போனது என தெரியவந்தது.

    இது குறித்து சமயநல்லூர் துணை சூப்பிரண்டு மோகன்குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் போலீசாருடன் சென்று சிலைகளை பார்வையிட்டார். பின்னர் 4 சிலைகளும் சோழவந்தான் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அதிகாரிகள் மற்றும் கோவில் ஸ்தபதிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது பெருமாள், சீனிவாச பெருமாள் சிலைகளின் கை சேதமடைந் திருப்பது தெரியவந்தது.

    இதற்கிடையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இன்று காலை சோழவந்தான் போலீஸ் நிலையம் வந்தார். அவர் மீட்கப்பட்ட சிலைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் கோவிலில் சென்றும் ஆய்வு மேற்கொண்டார்.

    சிலை கடத்தல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால் சிக்கி விடுவோமோ என்ற அச்சத்தில் கொள்ளையர்கள் 4 ஐம்பொன் சிலைகளையும் ரோட்டில் வீசிச் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. #Statuesmuggling #PonManickavel

    மதுரை குருவித்துறை பெருமாள் கோவிலில் கொள்ளை போன 4 ஐம்பொன் சிலைகள் நிலக்கோட்டை அருகே மீட்கப்பட்டது. #Statuesmuggling

    நிலக்கோட்டை:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் பிரசித்தி பெற்ற சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் உள்ளது.

    3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் அருகே குருபகவான் கோவிலும் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவிலில் இருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சீனிவாசபெருமாள் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் திருடுபோனது.

    இது குறித்து கோவில் செயல் அலுவலர் செந்தில் குமார் காடுபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 4 தனிப்படைகள் அமைத்து சிலைகளை கொள்ளையடித்த நபர்களை தேடி வந்தனர்.

    உசிலம்பட்டி அருகில் உள்ள கல்யாணிபட்டியை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று விட்டு நேற்று இரவு தனது ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

     


    இரவு 11.45 மணி அளவில் நிலக்கோட்டை அருகில் உள்ள உத்தப்பநாயக்கனூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது சாலை யோரம் ஏதோ மின்னுவது போல் தென்பட்டது.

    உடனே தனது வண்டியை நிறுத்தி விட்டு அருகில் சென்று பார்த்தார். அப்போது அங்கே சாமி சிலைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேசுக்கு தகவல் தெரிவித்தார். அவரது தலைமையில் போலீசார் அங்கு வந்து சிலைகளை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    இது சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் கெள்ளை போன சிலைகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சமயநல்லூர் டி.எஸ்.பி. மோகன் குமாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அவரது தலைமையில் விளாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். விசாரணையில் அந்த சிலைகள் குருவித்துறை பெருமாள் கோவிலில் கொள்ளை போன சிலைகள் என தெரிய வந்தது.

    இதனையடுத்து சோழவந்தான் போலீஸ் நிலையத்துக்கு 4 சிலைகளை போலீசார் எடுத்து சென்றனர்.

    சிலைகளை கடத்தி சென்ற கும்பல் அதனை இப்பகுதியில் மறைத்து வைத்து விட்டு பின்னர் எடுத்து செல்லலாம் என்ற நோக்கத்தில் வைத்து சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சிலைகளின் உண்மைதன்மை குறித்து ஆய்வு நடத்த ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கோவிலுக்கு வருகை தர உள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. #Statuesmuggling

    குருவித்துறை பெருமாள் கோவிலில் பூட்டை உடைத்து 4 ஐம்பொன் சிலைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் சுயம்பு கோவிலாகும். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். சமீபத்தில் குரு பெயர்ச்சி வழிபாடும் இங்கு விமரிசையாக நடை பெற்றது.

    இன்று காலை அர்ச்சகர் ரகு கோவிலுக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    காடுவெட்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கோவிலின் உள்ளே இருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சீனிவாசப் பெருமாள் ஐம்பொன் சிலைகள் கொள்ளை போயிருப்பதாக செயல் அலுவலர் செந்தில் குமார் போலீசில் புகார் தெரிவித்தார்.

    சுமார் 1 அடி முதல் 1½ அடி உயரம் கொண்ட இந்த சிலைகளின் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது அதிகாலை 3 மணிக்கு 2 மர்ம மனிதர்கள் கோவிலின் கதவை கடப்பாறையால் உடைத்து உள்ளே நுழைவது தெரியவந்தது. அவர்கள் கோவிலின் உள்ளே சர்வ சாதாரணமாக நடந்து வந்து அங்கிருந்த உற்சவர் சிலைகளை எடுத்து செல்வதும் கேமிராவில் பதிவாகி உள்ளது. அவர்கள் வடநாட்டு வாலிபர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    கொள்ளையர்கள் மோப்ப நாய் தங்களை கண்டு பிடிக்காமல் இருப்பதற்காக கோவிலை விட்டு வெளியே வந்ததும் சிறுநீர் கழித்து சென்றுள்ளது போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சிலையை திருடிச் சென்ற மர்ம மனிதர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


    செஞ்சி அருகே பகவான் மல்லிநாதர் ஜெயின் கோவிலில் ரூ.1½ கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெரும்புகை கிராமம். இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த பகவான் மல்லிநாதர் ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக சந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஒரு அறையில் பல கோடி மதிப்புள்ள 35 ஐம்பொன் சாமி சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு பூஜை முடிந்ததும் பூசாரி சந்திரன் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் சிலர் இந்த கோவிலுக்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு சாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்றனர். அந்த அறையில் போடப்பட்டுள்ள பூட்டுகளை கடப்பாரையால் உடைத்தனர்.

    பூட்டை உடைத்ததும் அவர்கள் உள்ளே சென்றனர். அங்கிருந்த 6 ஐம்பொன் சிலைகளை எடுத்து சாக்கு மூட்டைகளில் கட்டினர். பின்பு அவற்றை தூக்கி கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இன்று காலை 530 மணிக்கு பூசாரி சந்திரன் கோவில் நடை திறப்பதற்காக வந்தார். அப்போது அங்கு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து அந்த கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையறிந்ததும் கிராம மக்கள் திரண்டு கோவிலுக்கு வந்தனர். அங்கு சாமி சிலைகள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு சென்றனர். அந்த அறையில் இருந்த மல்லிநாதர்-கீர்த்தகரர், தர்மேந்தர், பத்மாவதி, ஜோலாம்பாள், பாசுவநாதர் உள்பட 6 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போய் இருந்தன.

    கொள்ளை போன சாமி சிலைகளின் மதிப்பு ரூ.1½ கோடியாகும். மேலும் இந்த கோவிலில் இருந்த 29 சிலைகள் பத்திரமாக உள்ளன. இதனால் பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் தப்பின.

    இந்த கொள்ளை குறித்து செஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பி ரண்டு ரவிச்சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

    கோவிலில் சாமி சிலைகள் திருட்டுப்போன அறையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கோவிலில் மோப்பம் பிடித்து விட்டு சிறிதுதூரம் ஓடி நின்று விட்டது.


    மேலும் விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் கைரேகைகளை பதிவு செய்தனர். கோவிலின் பூட்டை உடைத்து ஐம்பொன் சாமி சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    பகவான் மல்லிநாதர் ஜெயின் கோவிலில் ரூ.1½ கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கொள்ளை போன சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×