search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் தீக்குளிப்பு"

    • ஆம்புலன்சில் அவரை ஏற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • வாலிபர் தீ வைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்குள் ஓடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். இதில் கலெக்டர் கலந்து கொண்டு மக்களிடம் குறைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக்கொள்வார். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள மனுப்பெட்டியில் மக்கள் மனுக்களை போட்டு செல்கின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் மக்கள் தங்களது மனுக்களை கலெக்டர் அலுவலக மனுபெட்டியில் போட்டு சென்றனர். போலீசாரும் அங்குள்ள நுழைவு வாயில் பகுதியில் நின்று கொண்டு மக்களை முழுமையாக சோதனை செய்து அதன் பின்னர் உள்ளே அனுமதித்துக் கொண்டு இருந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் எதிரே தாமிரபரணி ஆற்றங்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பூங்கா கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இருந்து சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஓடி வந்தார்.

    அவர் திடீரென ஓடி வந்து கொண்டு இருக்கும் போதே தனது கையில் வைத்திருந்த பாட்டிலை திறந்து அதில் இருந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் அவரது உடலில் தீப்பற்றி எரிய தொடங்கிய நிலையில் நுழைவு வாயிலை கடந்து கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஓடிச் சென்றார். அதனை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து அலறி ஓடினர். உடனே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஓடி வந்து அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை தலையில் ஊற்றி தீயை அணைத்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் நெல்லையை அடுத்த மருதகுளம் கிராமத்தை சேர்ந்த சங்கரசுப்பு (வயது36) என்பதும், இடப்பிரச்சினை தொடர்பாக போலீசார் விசாரணையை தாமதப்படுத்தியதால் தீக்குளித்ததாகவும் கூறினார். மேலும் அவர் கூறுகயைில், எங்கள் குடும்பத்தினருக்கும், எங்களது பெரியப்பா குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சினை இருந்து வந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக எனக்கு சொந்தமான 1 ஏக்கர் இடத்தை உறவினர்கள் பறித்துக் கொண்டனர். இதுகுறித்து மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் புகார் அளித்தும் நியாயம் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனையில் நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தீக்குளித்தேன் என்றார்.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தின் விசாரணை அதிகாரிகள் நேரில் வரவழைக்கப்பட்டு உடனடியாக அந்த புகார் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    பின்னர் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் அவரை ஏற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சுமார் 30 சதவீத தீக்காயத்துடன் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இசக்கிமுத்து என்ற கூலி தொழிலாளி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதன்பின்னர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து 4 நுழைவு வாயில் கதவுகள் மூடப்பட்டு பிரதான வாயில் மற்றும் அஞ்சலகம் வாயில் வழியாக மட்டும் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த 2 வாசல்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, மக்களை முழுமையாக சோதனை செய்த பிறகே அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் வாலிபர் தீ வைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்குள் ஓடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×