search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த கபடி வீரர்கள் 13 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு
    X

    காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த கபடி வீரர்கள் 13 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு

    அரியலூர் அருகே நள்ளிரவில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி விடிய விடிய தவித்த கபடி வீரர்களை 13 மணி நேர போராட்டதிற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் அருகே உள்ள அரங்கோட்டை கிராமத்தில் கொள்ளிடம் ஆறு செல்கிறது. தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் இந்த ஆறு ஓடுகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் இளைஞர்கள் சார்பில் கபடி போட்டி நடைபெற்றது.

    இதில் பங்கேற்பதற்காக தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்புரம்பியம் கிராமத்தை சேர்ந்த கபடி வீரர்கள் பிருதிவிராஜ், அஜித், சிபிராஜ், பிரகாஷ் மற்றும் சரவணன், பிருத்திவி ராஜன், தினேஷ் ஆகிய 7 பேர் நேற்று மதியம் ஸ்ரீபுரந்தானுக்கு புறப்பட்டனர். சாலை வழியாக செல்ல வேண்டுமென்றால் நீண்ட நேரமாகும் என்பதால் கொள்ளிடம் ஆற்றை கடந்து செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி அரங்கோட்டை கிராமம் கொள்ளிடம் ஆற்று பகுதிக்கு வந்ததும் 7 பேரும் தாங்கள் கொண்டு வந்த பொருட்களுடன் ஆற்றில் இறங்கி கடக்க முயன்றனர். இதில் முதலில் சரவணன், பிருதிவிராஜன், தினேஷ் ஆகிய 3 பேரும் , அவர்களுக்கு பின்னால் பிருதிவிராஜ், அஜித், சிபிராஜ், பிரகாஷ் ஆகிய 4 பேரும் சென்றனர்.

    தற்போது பெய்த மழையினால் அப்பகுதியில் உள்ள வயல்களில் தேங்கியிருந்த தண்ணீர் வடிகால் வழியாக கொள்ளிடம் ஆற்றில் கலந்து கொண்டிருப்பதால் ஆற்றில் அவ்வப்போது தண்ணீரின் வரத்து அதிகரித்து வருகிறது. அதுபோல் நேற்று எப்போதும் இல்லாத அளவுக்கு தண்ணீர் அதிக அளவு சென்றது. இதனால் ஆழம் தெரியாததால் ஆற்றை கடந்து சென்ற 7 பேரும் பாதி வழியில் நின்றனர்.

    பின்னர் சரவணன், பிருதிவிராஜன், தினேஷ் ஆகிய 3 பேரும், நாங்கள் முதலில் சென்று, ஆற்றில் தண்ணீர் வரத்து, ஆழம் எப்படி உள்ளது என்று பார்த்து கூறுகிறோம். அதன் பிறகு நீங்கள் வாருங்கள் என்று 4 பேரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 3 பேர் மட்டும் ஆற்றை கடந்து சென்றனர்.

    ஆற்றின் நடுவே சென்ற போது தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் ஆற்றை கடக்க முடியாமல் நடுவழியிலேயே நின்றனர். மேலும் பாதி தூரத்தில் வந்து நின்ற 4 பேரிடம் , நீங்கள் வர வேண்டாம், திரும்பி செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். அவர்கள் கூறியபடி 4 பேரும் கரைக்கு திரும்ப முயன்றனர்.

    இதனிடையே ஆற்றில் காட்டாற்று வெள்ளம் போல் திடீரென தண்ணீரின் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக 3 பேர் நடு ஆற்றிலும், 4 பேர் பாதி தூரத்திலும் நின்று தத்தளித்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அவர்கள் தங்களை காப்பாற்றுமாறு சத்தம் போட்டு பொதுமக்களை அழைத்தனர்.

    இதனை பார்த்த பொது மக்கள் உடனடியாக 7 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. உடனடியாக கும்பகோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் இரவு 11 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்து நவீன உபகரணங்களுடன் பாதி தூரத்தில் நின்ற 4 பேரையும் மீட்டனர்.

    நடு ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த 3 பேரையும் தண்ணீர் இழுத்து சென்றது. இருப்பினும் அவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு அரங்கோட்டையில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் ஆற்றில் உள்ள ஒரு மேடான பகுதியில் ஏறி நின்று விட்டனர்.

    அவர்களது நிலைமை என்ன ஆனது என்று தெரியாததால் பொதுமக்கள், தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    இந்த நிலையில் தப்பிய 4 பேரில் 2 பேர், ஒரு மோட்டார் சைக்கிளில் சாலை வழியாக அரங்கோட்டைக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது 3 பேரும் மேடான பகுதியில் தவித்து கொண்டிருப்பது தெரிய வந்தது. உடனே தங்களது ஊர் கிராமமக்கள் மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அரங்கோட்டை கொள்ளிடம் ஆற்று பகுதிக்கு விரைந்து வந்து, நவீன உபகரணங்களுடன் 3 பேர் நின்ற மேடான பகுதிக்கு செல்ல முயன்றனர். ஆனால் அங்கு செல்ல முடியவில்லை. இதனால் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மீட்பு பணி முயற்சி கைவிடப்பட்டது.


    இதனிடையே அங்குள்ள ராமநல்லூர் ஊராட்சிக்கு கொள்ளிடம் ஆற்றை கடந்து செல்லும் வகையில் எந்திர படகு ஒன்று தமிழக அரசால் வழங்கப்பட்டிருந்தது. அதனை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் சிலர் மேடான பகுதிக்கு சென்று அங்கு தவித்து கொண்டிருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

    மேடான பகுதியை சுற்றி ஆகாய தாமரைகள், செடி, கொடிகள் வளர்ந்திருந்தன. இருப்பினும் பல்வேறு சிரமத்திற்கிடையே சென்று 3 பேரையும் போலீசார்-தீயணைப்பு வீரர்கள் மீட்டு இன்று அதிகாலை 5.30 மணியளவில் கரைக்கு அழைத்து வந்தனர். அதன் பிறகு தான் பொது மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மேலும் தீயணைப்பு வீரர்கள், போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட 3 பேருக்கும் உடனடியாக உணவு வழங்கப்பட்டது. கரைக்கு அழைத்து வந்ததும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் இந்த மீட்பு பணி நடைபெற்றது. நேற்று மாலை 4 மணியளவில் சிக்கிய 3பேரும் 13 மணி நேரத்திற்கு பிறகு இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று காலை கொள்ளிடம் ஆற்றில் உள்ள மேடான பகுதியை ஜெயங்கொண்டம் ஆர்.டி.ஓ. டீனா குமாரி, டி.எஸ்.பி. கென்னடி, ஜெயங் கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் எந்திர படகு மூலம் சென்று பார்வையிட்டனர். மேலும் ஆற்றில் தண்ணீர் அதிகம் செல்வதால் பொது மக்கள் யாரும் ஆற்றை கடந்து செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×