என் மலர்
செய்திகள்

உடையார்பாளையம் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 5 பவுன் நகை-பணம் கொள்ளை
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் அருகே உள்ள கீழவெளி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவர் அரியலூரில் வேளாண்மை பொறியியல் துறையில் ஜீப் டிரைவராக பணியாற்றி கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.
இவரது மனைவி சந்தானம். முருகன், ராமச்சந்திரன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். முருகன் வேளாண்மை படித்துவிட்டு தற்காலிகமாக பணியாற்றி வருகிறார். ராமச்சந்திரன் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
அன்பழகன் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் தனக்கு சொந்தமான வயலில் விவசாயம் செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வயலுக்கு சென்றார்.
பிற்பகலில் விவசாய பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்புற கதவு கடப்பாரையால் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அன்பழகன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த உடைகள் அனைத்தும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.
மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து அன்பழகன் உடையார்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.






