search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழ்நாட்டில் 2 நாட்களில் இரட்டிப்பான கொரோனா தாக்கம்

    சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா நோய்தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. இதையடுத்து ஊரடங்கில் முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பொது இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது சிறிது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

    கடந்த மாத தொடக்கத்தில் 1-ந்தேதி விவரப்படி தமிழகத்தில் பாதிப்பு 47 ஆக இருந்தது. இதே நிலையே தொடர்ந்து நீடித்து வந்தது.

    இந்த நிலையில் தினசரி பாதிப்பு 100-ஐ தாண்டும் நிலையில் உள்ளது.

    நேற்றைய நிலவரப்படி புதிதாக 98 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக செங்கல்பட்டு, சென்னை மாவட்டத்தில் தான் நோய் பாதிப்பு அதிக அளவில் பதிவாகி இருக்கிறது.

    செங்கல்பட்டு பாதிப்பு 46 ஆகவும், சென்னையில் 4 ஆகவும் உள்ளன.

    கோவை, திருவள்ளூர் மாவட்டத்தில் தலா 2 பேர், காஞ்சிபுரம் வேலூரில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மற்ற மாவட்டங்களில் நோய் பாதிப்பு இல்லை.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு 31-ந்தேதி புள்ளி விவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 56 ஆக இருந்தது. ஆனால் தற்போது இது 2 மடங்காக அதிகரித்து உள்ளது.

    இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    சென்னையில் இதுவரை 7 லட்சத்து 52 ஆயிரத்து 533 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 197 பேர் குணமடைந்து உள்ளனர். 268 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 9 ஆயிரத்து 608 பேர் நோய் தொற்றால் இறந்துள்ளனர்.

    சென்னையை பொறுத்தவரை கல்வி நிறுவனங்களில் தான் நோய் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் 25 மாணவர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து பல்கலைக் கழகத்தில் அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்தனர். இதில் இதுவரை 118 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி ஆகி உள்ளது.

    மேலும் 1,500 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதன் முடிவு வரவேண்டி உள்ளது. இதில் 40 மாணவர்களுக்கு கொரோனா உறுதி ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறிய அளவில் அறிகுறிகள் மட்டுமே உள்ளன. அவர்கள் கல்லூரி விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இது குறித்து சுகாதார அதிகாரி ஒருவர் கூறும்போது:-

    கல்வி நிறுவனங்களில் தான் கொரோனா பாதிப்பு உள்ளது. அதனை தாண்டி வெளியே பெரிய அளவில் நோய் தொற்று பரவவில்லை என்றார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஐ.ஐ.டி.யில் 200 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதைத்தொடர்ந்து கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 74 பேர், அண்ணா பல்கலைக்கழகத்தில் 23 பேர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×