search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வெட்டு குகைக்கோவிலின் நுழைவுவாயில் கதவு பூட்டிகிடக்கிறது.
    X
    கல்வெட்டு குகைக்கோவிலின் நுழைவுவாயில் கதவு பூட்டிகிடக்கிறது.

    பூட்டிக்கிடக்கும் கல்வெட்டு குகை கோவில்

    திருப்பரங்குன்றத்தில் கல்வெட்டு குகை கோவில் மற்றும் சமணர் படுகைகள் பூட்டிக்கிடப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    திருப்பரங்குன்றம்

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடு என பெருமை பெற்றது  திருப்பரங்குன்றம்.

    இது முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் செய்த தலம் என்பதால் மதுரை மட்டுமல்லாது சுற்றியுள்ள சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் இங்கு வந்து திருமணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

    மதுரைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் சுற்றுலாத்தலமாக திருப்பரங்குன்றம் அமைந்துள்ளதால் மதுரைக்கு வருகை தரும்   பக்தர்களும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு அடுத்ததாக செல்லும் இடமாக திருப்பரங்குன்றம் உள்ளது.
     
    அவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகள்,  பக்தர்களை கவரும் வகையில் மலைக்குப்பின் பகுதியில் கோவில் நிர்வாகம் சார்பில் பூங்கா அமைக்கப்பட்டது. இது சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சுற்றுலாத்துறை நிதியின் கீழ் ரூ.3 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டது. 

    இங்கு ஏற்கனவே இருந்த வனப்பகுதி பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு அறிவியல் பூங்கா, சிறுவர் பூங்கா, நடன நீரூற்று, ரோஜா தோட்டம், வாகன காப்பகம், திறந்தவெளி அரங்கம் உள்ளிட்ட பல்வேறு  அம்சங்களுடன் அமைக்கப்பட்டது. 

    இதையடுத்து மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தவிர்க்க முடியாத ஒரு இடமாக தற்போது திருப்பரங்குன்றம் உள்ளது. கோவிலுக்கும் இதனால் கணிசமாக வருவாய்   வருகிறது. 

    இந்த நிலையில் மலைக்கு பின்புறம் அமைந்துள்ள கல்வெட்டு குகைக் கோவில் மற்றும் மலைமீது சுமார் 150 அடி உயரத்தில் உள்ள சமணர் படுகை ஆகியவை தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 

    சுற்றுலா வரும் பயணிகள் இது தொடர்பான தகவல்களை படித்து விட்டு அந்த இடங்களுக்கும் சென்று பார்வையிட வருகின்றனர். ஆனால் அவை பூட்டி கிடப்பதால்  சுற்றுலா பயணிகள், பக்தர்கள்   ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

    தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர். அதேபோல ஆராய்ச்சி மாணவர்களும் இந்த இடத்தை பார்வையிட்டு தெரிந்து கொள்வதற்காக வருகின்றனர். 

    அவ்வாறு வருபவர்கள் கல்வெட்டு குகை கோவில்  பூட்டி கிடப்பதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கினறனர். 

    எனவே ஞாயிற்றுக்கிழமை உள்பட கோடை விடுமுறை காலத்திலாவது இந்த பகுதிகளை திறந்துவைத்து மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன் பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×