search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா சாலை சந்திப்பில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்
    X
    அண்ணா சாலை சந்திப்பில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்

    அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றத்தால் கடும் நெரிசல்- வாகன ஓட்டிகள் அவதி

    வாலாஜா சாலை வழியாக வருவோர் நேரடியாக அண்ணா சிலை அருகே வலது புறமாக திரும்பி சென்ட்ரல் நோக்கி செல்ல முடியாது.

    சென்னை:

    சென்னை அண்ணா சாலையில் அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் எல்.ஐ.சி. கட்டிடத்தை தாண்டியதும் தாராபூர் டவர் எதிரே இடது புறமாக திருப்பி விடப்பட்டுள்ளன.

    இந்த வாகனங்கள் இடது புறத்தில் உள்ள டேம்ஸ் சாலை வழியாக சென்று வலது புறத்தில் இருக்கும் பிளாக்கர்ஸ் ரோடு வழியாக அண்ணாசாலையை சென்றடையும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுப்பேட்டை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் இந்த வழியேதான் அண்ணா சாலையை சென்றடைய முடியும் என்பதால் இருபுறமும் வரும் வாகனங்கள் ஒரே இடத்தில் சந்தித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    வாலாஜா சாலை வழியாக வருவோர் நேரடியாக அண்ணா சிலை அருகே வலது புறமாக திரும்பி சென்ட்ரல் நோக்கி செல்ல முடியாது. இந்த வழியாக வரும் வாகனங்கள் அண்ணா சிலை சந்திப்பில் இடது புறம் திரும்பி 50 மீட்டர் தூரத்திலேயே யூ திருப்பம் போட்டு சிம்சன் நோக்கி செல்கின்றன.

    இதுபோன்ற சூழலில் சிம்சன் வழியாக வருவோர், நேராக எல்.ஐ.சி. செல்வதிலும் வாலாஜா சாலைக்கு இடது புறம் திரும்புவதிலும் சிரமங்கள் ஏற்படுகின்றன.

    தேவி தியேட்டர் வளாகத்தில் இருந்து எழும்பூர் அல்லது சென்ட்ரல் நோக்கி செல்பவர்கள் அண்ணா சாலையை குறுக்காக கடந்தால்தான் தாராபூர் டவர் அருகே திரும்ப முடியும். அண்ணா சாலையில் வாகனங்கள் சென்று கொண்டே இருப்பதால் இந்த சந்திப்பில் வாகனங்கள் மோதிக் கொள்ளும் நிலையே காணப்படுகிறது.

    சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த போக்குவரத்து மாற்றங்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.

    இதன் காரணமாக அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்து அதிகாரிகள் இதுபற்றி வாகன ஓட்டிகளுடன் ஆலோசித்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×