search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் கமிஷனர் செந்தில்குமார்
    X
    போலீஸ் கமிஷனர் செந்தில்குமார்

    24 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    மதுரை மாநகரில் 5 மாதங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 24 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கமிஷனர் செந்தில்குமார் கூறினார்.
    மதுரை

    மதுரை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரில் சிலரை குண்டர் சட்டத்தில் கைது செய்வது என்று மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
    இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறும்போது,

    “மதுரை மாவட்டத்தில் 32 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 15 பேர் ரவுடிகள், 10 பேர் கஞ்சா வியாபாரிகள், 7 பேர் போக்சோ மற்றும் திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள்” என்று தெரிவித்தார்.
    தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் குண்டர் சட்டம்  கொண்டு வரப்பட்டது. அப்போது சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வது உள்பட பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறி வந்தன. எனவே குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் வகையில் வலுவான சட்டத்தை கொண்டு வர எம்ஜிஆர் விரும்பினார். அதன்படி கொண்டுவரப்பட்டது தான் இந்த சட்டம்.

    குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகளை குண்டர் சட்ட பிரிவுகள்; 16, 17, 22, 45 ஆகியவற்றின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க முடியும். இந்த சட்டத்தின்படி ஒருவர் கைது செய்யப்பட்டால், அவர் சிறையில் 12 மாதங்கள் தொடர்ந்து ஜெயில் வாசம் அனுபவிக்க வேண்டியது வரும். அவரிடம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ள தேவையில்லை. பிணையும் வழங்கப்படாது.

    இந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்படும் ஒருவர், தன்மீது குற்றமில்லை என்று நிரூபிக்க விரும்பினால் கைதானவர் சார்பில் வக்கீல் வைத்து வாதாட இயலாது. அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான், முறையீட்டு குழுவை அணுக வேண்டும்.

    குண்டர் சட்டத்தில் கைதானவர்களின் வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு விசாரணை குழு உயர்நீதிமன்ற நீதிபதி, ஓய்வுபெற்ற நீதிபதி, அமர்வு நீதிபதி ஆகியோரை உள்ளடக்கியது. இந்த குழுவினர் விசாரித்து, சம்பந்தப்பட்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டது சரியா? என்பது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்கும்.

    மாநில அரசு விரும்பும் பட்சத்தில் அவர்களை முன்கூட்டியே விடுவிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. அதேநேரத்தில் குண்டர் சட்டத்தில் கைதாகி விடுவிக்கப்படும் நபர் நிபந்தனைகளை மீறினால், அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கலாம் என்றும் சட்டத்தின் ஷரத்து கூறுகிறது.

    தமிழகத்தின் நகர்ப்புறங்களில் போலீஸ் கமிஷனரும், கிராமப்புறங்களில் மாவட்ட கலெக்டர் மூலம் போலீஸ் சூப்பிரண்டும் குண்டர் சட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் 32 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், ‘மதுரை மாநகரில் நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை குண்டர் சட்டத்தில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர்?’ என்பது தொடர்பாக மாநகர போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், மாலைமலர் நிருபருக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் போது கூறியதாவது:

    “மதுரை மாநகரில் நடப்பாண்டு 24 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 18 பேர் ரவுடிகள், 2 பேர் கஞ்சா விற்பனையாளர்கள், 4 பேர் குற்ற சம்பவங்களுடன் தொடர்பு உடையவர்கள் ஆவர்.

    மதுரை மாநகரில் சட்ட விரோத கும்பல் மீது குண்டர் சட்டம் மட்டுமின்றி 109, 110 குற்றப்பிரிவு சட்டங்களின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி மாநகர அளவில் 109 சட்ட பிரிவின் கீழ் 106 பேரிடம் பிரமாண பத்திரம் கையெழுத்து பெறப்பட்டு உள்ளது. இதில் 6 பேர் சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    அடுத்தபடியாக 110 விதியின் கீழ் 333 பேரிடம் கையெழுத்து பிரமாண பத்திரம் பெறப்பட்டு உள்ளது. இதில் 52 பேர் சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்டு உள்ளனர். மதுரை மாநகரை பொறுத்தவரை 109, 110 சட்டப்பிரிவுகளின் கீழ் 439 பேரிடம் கையெழுத்து பெறப்பட்டு உள்ளது. அவர்களில் 58 பேர் சட்ட விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    மதுரை மாநகரில் சட்டம்- ஒழுங்கு அமைதியை பேணுவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் உள்பட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள்”. 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×