search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரிசி
    X
    அரிசி

    தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் 1,000 மெட்ரிக் டன் அரிசி- அடுத்த வாரம் அனுப்பப்படுகிறது

    இலங்கைக்கு சென்னை மற்றும் தூத்துக்குடியில் இருந்து தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    ரூ.80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பில் 50 மெட்ரிக் டன் பால் பவுடர், ரூ.28 கோடி மதிப்பில் 137 வகையான மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து அரிசி, மருந்து உள்ளிட்ட பொருட்களை பொட்டலமிடும் பணிகள் நடைபெற்றன. இன்று மாலை சென்னை துறைமுகத்தில் இருந்து முதற்கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கைக்காக நிதிகளை திரட்டும் பணிகளிலும் தமிழக அரசு ஈடுபட்டு உள்ளது.

    இலங்கைக்கு சென்னை மற்றும் தூத்துக்குடியில் இருந்து தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வருகிற 24, 28 மற்றும் 31ந்தேதிகள் என 3 தவணைகளாக அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதையொட்டி மதுரை மாவட்டத்தில் இருந்து ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி சேகரிக்கப்பட்டுள்ளது. மதுரையை அடுத்த பனையூர், சிந்தாமணி ஆகிய பகுதிகளில் உள்ள 12 அரிசி ஆலைகளில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக இதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

    இந்த அரிசிகளை இலங்கைக்கு அனுப்புவதற்காக பொட்டலமிடப்பட்டு அங்கிருந்து தூத்துக்குடிக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.

    பின்னர் தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    Next Story
    ×