search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரத்த அழுத்தம்
    X
    ரத்த அழுத்தம்

    ரத்த அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்கும் வழிமுறைகள்- டாக்டர் சவுந்தரராஜன் விளக்கம்

    காலையில் வெறும் வயிற்றில் எடுத்து பார்க்கும் பரிசோதனைகள் தான் துல்லியமாக இருக்கும். எனவே ரத்த அழுத்த பரிசோதனை செய்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பரிசோதியுங்கள்.
    சென்னை:

    இன்று உலக உயர்ரத்த அழுத்த தினம். உயர் ரத்த அழுத்தத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாள்பட்ட நோயாக தொடரும் இந்த பிரச்சினை வந்தாலே ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

    இந்த நோய் வராமல் தடுப்பது எப்படி? வந்தவர்கள் தப்பிப்பது எப்படி? என்பது பற்றி பிரபல சிறுநீரகத்துறை பேராசிரியர் டாக்டர் சவுந்தரராஜன் கூறியதாவது:-

    சராசரி மனிதனின் ரத்த அழுத்தத்தின் அளவு 12080 இது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்.

    ஒல்லியாக இருப்பவர்களுக்கு சற்று குறைவாக இருக்கும். உடல் எடையைப் பொறுத்து ரத்த அழுத்தம் மாறுபடும். பொதுவாக 13090 மேல் இருந்தால் உயர் ரத்த அழுத்தம் எனப்படும். ஆனால் தற்போது 12585 மேல் இருந்தாலே உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது.

    ரத்த அழுத்தம் வருவதற்கு காரணம் மரபு வழி ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு போன்றவையால் வரலாம், நாளமுள்ள சுரப்பிகள் மூலம் வரலாம், உடல் பருமன் அதிகமாக இருந்தாலும் வரலாம், முக்கியமாக மன அழுத்தம் இருந்தால் ரத்த அழுத்தம் வரும்.

    கடல் அலை போல் காலையில் இருந்து மாலை வரை அவ்வப்போது ரத்த அழுத்தம் மாறுபட்டு கொண்டே இருக்கும்.

    காலையில் வெறும் வயிற்றில் எடுத்து பார்க்கும் பரிசோதனைகள் தான் துல்லியமாக இருக்கும். எனவே ரத்த அழுத்த பரிசோதனை செய்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பரிசோதியுங்கள்.

    தமிழக அரசு எடுத்துள்ள சர்வேப்படி நகர்ப்புறங்களில் 33 சதவீதம் பேருக்கும், கிராமப்புறங்களில் 2 சதவீதம் பேருக்கும் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. 10ல் 3 பேருக்கு ரத்த அழுத்தமும், 5ல் ஒருவருக்கு சிறுநீரக கோளாறும் இருப்பதாக கண்டறிந்துள்ளார்கள்.

    ரத்த அழுத்தம் வருவதற்கு முக்கிய காரணம் உடலில் இருக்கும் உப்பு சத்துதான். நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் சுமார் 20 கிராம் உப்பு சேர்க்கிறோம். இது தவறு.

    நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்புக்கும் ரத்த அழுத்தத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு.

    மேலும் பேக்கரி பொருள்கள் சிப்ஸ், பிரெட் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும் ஊறுகாய் போன்ற பொருள்களும் ரத்த அழுத்தம் உருவாக முக்கிய காரணமாகும்.

    முடிந்த அளவு நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைத்து உடல் நலம் பேண வேண்டும். மேலும் வேலை பளு, கோபம், எரிச்சல், மன அழுத்தம், புகை பழக்கம் போன்றவையும் ரத்த அழுத்த மாறுபாட்டிற்கான காரணங்கள்.

    ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உடல் எடையை குறைப்பது மிக அவசியம். உணவில் உப்பின் அளவையும் குறைத்து கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரைகள், நவதானியங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    காலை, மாலை இருவேளைகளிலும் யோகா, உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. மனதிற்கு பிடித்த பாடல்கள் கேட்கலாம்.

    ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டால் வாழ்நாள் முழுவதும் தினந்தோறும் ரத்த அழுத்த மாத்திரை எடுத்துக் கொள்வது அவசியம். ரத்த அழுத்ததால் சிறுநீரகம், கண், இதயம், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.

    மேலும், திடீர் இதய அடைப்பு மற்றும் வாத நோய், சிறுநீரக செயலிழப்பு வருவதற்கு முக்கிய காரணம் ரத்த அழுத்தம். ஆகவே ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொண்டு உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும்.

    இப்போது குறைந்த விலைலேயே ரத்த அழுத்தம் பார்க்கும் கருவியும், உடல் எடை பார்க்கும் கருவியும் கிடைக்கிறது. அதை வீட்டிலேயே வாங்கி வைத்து அடிக்கடி சோதித்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×