search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேகத்தடை அமைக்ககோரி நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் மனு கொடுத்த பொது நலச்சங்கத்தினர்.
    X
    வேகத்தடை அமைக்ககோரி நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் மனு கொடுத்த பொது நலச்சங்கத்தினர்.

    பேட்டை பகுதியில் ஆபத்தான வளைவுகளில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

    பேட்டை பகுதியில் விபத்தை தவிர்க்க ஆபத்தான வளைவுகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
    நெல்லை:
     
    நெல்லை மாநகர பகுதியில் உள்ள மிக முக்கிய பிரச்சினைகளில்  போக்குவரத்து நெரிசல் ஒன்று ஆகும்.

    பழைய பேட்டையில் தொடங்கி நயினார்குளம், எஸ்.என்.ஹைரோடு, வண்ணாரப்பேட்டை, சமாதானபுரம் வரையிலும், இதேபோல் சுத்தமல்லியில் தொடங்கி பேட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் , ரொட்டிக் கடை, செக்கடி நிறுத்தங்கள் அதனை தொடர்ந்து வழுக்கோடை வரையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் சாலையோர ஆக்கிரமிப்புகள் தான் என்று சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.  சாலையோரத்தில் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்பு, விளம்பர பதாகைகளின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினந்தோறும் போக்குவரத்து நெருக்கடியில் வாகன ஓட்டிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

     குறிப்பாக பேட்டை ரொட்டிக் கடை பஸ் நிறுத்தம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கிறது. இந்த பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு சாலை ஆபத்தான வளைவு கொண்டதாக அமைந்துள்ளது.

    இருபுறமும் இருந்து வரும் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அதிவேகத்தில் வருவதால் அடிக்கடி இந்த பகுதிகளில் விபத்துக்கள் நேரிடுகிறது.

    எனவே இந்த ரொட்டிக்கடை பஸ் நிறுத்தத்தில் உள்ள வளைவு பகுதி, தலைமை அஞ்சல் அலுவலகம் அருகில் இருபுறமும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக நெல்லை மாவட்ட பொதுஜன பொது நல சங்கத்தின் தலைவர் அயூப் இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும், நேரடியாக மனு கொடுத்தும் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி வந்துள்ளார்.  

    ஆனால் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறுகிறார். இன்றும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் பொதுநல சங்கத்தின் தலைவர் அய்யூப், நிர்வாகிகள் செய்யது முகமது சேட், மகேஷ், மைதீன், சுல்தான் ஆகியோர் மனு கொடுத்தனர்.

    எனவே பெரிய விபத்து நடப்பதற்கு முன்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×