search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    ஏ.டி.எம்.ஐ உடைத்து ரூ.4.90 லட்சம் திருட்டு- கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை கர்நாடகம் விரைந்தது

    ஏ.டி.எம். உடைப்பு கொள்ளை கும்பல் கர்நாடகாவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார், கொள்ளை கும்பலை பிடிக்க கர்நாடகம் விரைந்துள்ளனர்.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள் கோவில் மேட்டில் உள்ள வணிக வளாகத்தில் லட்சுமி விலாஸ் வங்கியின் ஏ.டி.எம். உள்ளது.

    கடந்த 5-ந்தேதி அதிகாலை இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் மர்ம கும்பல் புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து, அதில் இருந்த ரூ.4 லட்சத்து 89 ஆயிரத்தை கொள்ளையடித்தது. மேலும் துப்பறியும் மோப்பநாய் தங்களை காட்டிக்கொடுத்து விடக்கூடாது என்பதற்காக ஏ.டி.எம். மையம் முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்படையினர் வணிக வளாக கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்ததில், அதிகாலை 3 மணி முதல் 5 மணி இடையே 5 பேர் கொள்ளை கும்பல் காரில் அங்கு வந்து ஏ.டி.எம்.ஐ உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது பதிவாகி இருந்தது.

    இந்த கொள்ளை கும்பலை பிடிக்க ஏற்கனவே 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 9 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த 15 தனிப்படைகளும் கொள்ளை கும்பலை சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஏ.டி.எம். உடைப்பு கொள்ளை கும்பல் கர்நாடகாவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார், கொள்ளை கும்பலை பிடிக்க கர்நாடகம் விரைந்துள்ளனர். அங்கு உள்ளூர் போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, கூறுகையில், ஏ.டி.எம். கொள்ளை குறித்து சில ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் 15 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகிறோம். கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் பாதுகாப்பு தொடர்பான வசதிகளை மேம்படுத்த, வங்கி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளோம், என்றார்.
    Next Story
    ×