search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடோன் தீப்பற்றி எரியும் காட்சி
    X
    குடோன் தீப்பற்றி எரியும் காட்சி

    பூந்தமல்லி அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

    3 குடோன்களுக்கும் தீ பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் பல அடி உயரத்துக்கு கரும்புகை எழுந்தது. பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்ததால் துர்நாற்றமும் வீசியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கத்தில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் குடோன் நடத்தி வருபவர் யோகேஸ்வரன். அருகருகே மேலும் 5 குடோன்கள் உள்ளன. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் குடோனுக்கு வரவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் குடோனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதியில் கரும்புகை ஏற்பட்டது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீஸ்நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    ஆனால் எல்லை பிரச்சினை காரணமாக மாங்காடு, நசரத்பேட்டை போலீசார் தீவிபத்து ஏற்பட்ட இடத்துக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் ஏராள மானோர் குவிந்தனர்.

    இதன் காரணமாக பூந்தமல்லி, மதுரவாயலில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்களால் குடோன் இருந்த பகுதிக்கு உடனடியாக செல்லமுடிய வில்லை.

    இதற்கிடையே அங்கிருந்த 3 குடோன்களுக்கும் தீ பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் பல அடி உயரத்துக்கு கரும்புகை எழுந்தது. பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்ததால் துர்நாற்றமும் வீசியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

    சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் குடோன்களில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. தீவிபத்து ஏற்பட்ட போது தொழிலாளர்கள் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×