search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    திருச்சியில் நாளை நடைபெறும் வணிகர் சங்க மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

    வணிகர் சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி செல்கிறார். சென்னையில் இருந்து நாளை காலை 11 மணியளவில் விமானம் மூலம் புறப்படும் மு.க.ஸ்டாலின் 12.30 மணியளவில் மாநாட்டுக்கு சென்றடைகிறார்.
    சென்னை:

    39-வது வணிகர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு வணிகர் சங்கங்களும் நாளை மாநாடு நடத்துகிறது.

    இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே 54 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாக மாநாடு நடத்துகிறார்.

    தமிழக வணிகர் விடியல் மாநாடாக நடத்தப்படும் இந்த மாநாடு நாளை காலை 8.30 மணிக்கு கொடி ஏற்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

    மாநாட்டில் காலையில் பரதநாட்டிய நிகழ்ச்சி, மக்கள் இசை நிகழ்ச்சி, குத்து விளக்கு ஏற்றுதல், மாநாட்டு தலைமை உரை, மாநாட்டு தீர்மானங்கள், கலை நிகழ்ச்சிகள் என மாலை 4 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி செல்கிறார். சென்னையில் இருந்து நாளை காலை 11 மணியளவில் விமானம் மூலம் புறப்படும் மு.க.ஸ்டாலின் 12.30 மணியளவில் மாநாட்டுக்கு சென்றடைகிறார்.

    அங்கு அவரை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வரவேற்று கவுரவிக்கிறார்.

    அதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டில் முதுபெரும் வணிகர்களுக்கு வணிக விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    அப்போது வணிகர்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களையும் சலுகைகளையும் அறிவிப்பார் என தெரிகிறது. லுலு மார்க்கெட் ஒப்பந்தம் குறித்தும் விளக்கம் அளித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த மாநாட்டில் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, அகில இந்திய வணிகர்கள் சம்மேளனம் தேசிய தலைவர் பி.சி.பார்டியா, தேசிய பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் ஆகியோரும் சிறப்புரையாற்றுகிறார்கள்.

    மாநாட்டில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.மூர்த்தி ஆகியோரும் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.

    பல்வேறு மாநில வணிகர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு அனைத்து தொழில் வணிக அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மாநில துணைத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், சென்னை பழைய பொருள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.

    இந்த மாநாட்டுக்காக வியாபாரிகள் நாளை கடைகளுக்கு விடுமுறை அளித்து மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு காலை, மாலை உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதே போல் சென்னையிலும் பல்வேறு வணிகர் சங்க அமைப்புகள் ஒவ்வொரு கட்சித் தலைவர்களை அழைத்து மாநாடு நடத்த ஏற்பாடு செய்து உள்ளன.

    Next Story
    ×