search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடுகள்
    X
    ஆடுகள்

    தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.69 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    கோவை மாவட்டம் அன்னூர் சந்தையில் இன்று அதிகாலை 5 மணி முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. ஆட்டு சந்தை தொடங்கியதும் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
    சென்னை:

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல இடங்களில் இந்த வாரம் ஆட்டுச்சந்தைகள் நடந்தன.

    இதனால் இந்த வாரம் முழுவதும் ஆட்டுச் சந்தைகள் களை கட்டின. ஆடுகளும் அதிக அளவில் விற்பனையானது.

    சென்னைக்கும் 50 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் ரூ. 69 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னைபுளியந்தோப்பு ஆட்டு தொட்டி, சைதாப்பேட்டை சந்தை, ரெட்டேரி மற்றும் தாம்பரம் சானடோரியம் சந்தை ஆகியவற்றில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆடுகள் விற்பனை சூடுபிடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரம்ஜான் பண்டிகையை யொட்டி சென்னையில் 50 ஆயிரம் ஆடுகள் வரையில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் மட்டும் சுமார் ரூ.40 கோடிக்கு ஆடுகள் வியாபாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நேற்று ஆட்டு சந்தை கூடியது. ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி ஆடு விற்பனை கூடுதலாக நடைபெற்றது.

    நேற்று மட்டும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் சுமார் ரூ. 4 கோடி மதிப்பில் இந்த சந்தையில் விற்பனை செய்யப்பட்டன.

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். நேற்று அதிகாலை 4 மணிக்கு ஆட்டுச்சந்தை தொடங்கியது. இதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

    சேலம் மாவட்டம் சின்னதிருப்பதி, கொங்கணாபுரம், வீரகனூர், நாமக்கல் மாவட்டம் மெட்டாலா ஆகிய இடங்களில் ஆட்டுச்சந்தைகள் இன்று கூடியது. இந்த சந்தைகளில் சுமார் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 26ந்தேதி கால்நடை சந்தை நடைபெற்றது. இதில் ரம்ஜானை முன்னிட்டு தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அன்று ஒரே நாளில் ரூ.1.5 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆனது.

    எட்டையபுரத்தில் கால்நடைச்சந்தை இன்று கூடியது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கால்நடைகளுடன் வியாபாரிகள் நேற்று இரவே வந்தனர். இன்று நடைபெறும் சந்தையில் ரூ.5 கோடிக்கு மேல் கால்நடைகள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

    சுமார் ரூ.1 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இதே போல் அய்யலூர் ஆட்டுச்சந்தையிலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விற்பனை களைகட்டியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். இங்கும் ரூ.1 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆத்துமேடு, புதிய பஸ் நிலையம் மற்றும் பெரிய பேட்டை பாலாற்று பகுதி ஆகிய 3 இடங்களில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடர்ந்து 3 நாட்கள் ஆடு சிறப்பு விற்பனை சந்தை நடைபெற உள்ளது.

    இதில் சுமார் 2 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தனர். இன்று வாணியம்பாடியில் வாராந்திர ஆட்டுசந்தை கூடியது. இதில் ஏராளமானோர் ஆடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர் .

    வேலூர் அடுத்த பொய்கை மாட்டு சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வருகிற செவ்வாய்க்கிழமை ஏராளமான ஆடு, மாடுகள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராணிப்பேட்டை ரெயில் நிலையம் ரோட்டில் உள்ள சந்தையில் நேற்று வாராந்திர ஆட்டுசந்தை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஆடு, மாடுகளை வாங்கிச் சென்றனர். இதனால் சந்தை களைகட்டியது. மொத்தம் ரூ. 2 கோடி ஆடு விற்பனை நடைபெறும்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

    நேற்று நடந்த சந்தையில் ஆயிரக்கணக்கான வியாபாரிகள், ஆடுகளை வாங்க திரண்டு வந்திருந்தனர். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக இன்று கொண்டு வந்திருந்தனர்.

    குந்தாரப்பள்ளியில் இன்று நடந்த சந்தையில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை வந்திருந்தன. வருகிற 3ந் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் நேற்று சுமார் ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக தெரிவித்தனர்.

    கோவை மாவட்டம் அன்னூர் சந்தையில் இன்று அதிகாலை 5 மணி முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. ஆட்டு சந்தை தொடங்கியதும் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். இன்று ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

    Next Story
    ×