search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    பெண் போலீசை பணி செய்ய விடாமல் தடுத்தவர் மீது வழக்கு

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தபோது பெண் காவலரை பணி செய்ய விடாமல் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் சமீப காலமாக பெண் போலீசாரின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. பஸ்நிலையங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண் போலீசார் பணியில் ஈடுபடும்போது குடிமகன்கள், திருநங்கைகள் போன்றவர்களால் கடும் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.

    திண்டுக்கல் பஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிபோதையில் திருநங்கை ஒருவருடன் தகராறில் ஈடுபட்டபோது அதனை படமெடுத்த பெண் போலீசாரை அவர் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தபோது பெண் காவலரை பணி செய்ய விடாமல் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாகனம் செல்ல அனுமதிக்காத இடத்தில் சென்ற அவரை தடுத்ததால் தகாத வார்த்தைகளால் பேசி காவலரை தாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனைதொடர்ந்து அங்கிருந்தவர்கள் அதனை புகைப்படமாக எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.

    இதனையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் யார் என தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பெண் காவலருடன் தகராறில் ஈடுபட்டவர் கரூரை சேர்ந்த விக்னேஷ்(30) என தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தான் காவல்துறை உயர்அதிகாரியின் உறவினர் எனக்கூறிக்கொண்டு பெண் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

    யாராக இருந்தாலும் பணியில் இருக்கும்போது பெண்காவலரை மிரட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனிடையே மிரட்டலுக்கு ஆளான பெண் காவலரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அழைத்து சிறப்பாக பணிசெய்ததற்காக வெகுமதி அளித்து பாராட்டினார்.

    Next Story
    ×